PDA

View Full Version : சினேக மேகங்கள்.



அமரன்
25-03-2009, 10:06 AM
ஏதோ ஒன்று தழுவ விழிகள் விரிகின்றன. உறக்கம் சுருள்கிறது. கண்ணாடிச்சாளரத்தை மறைத்திருந்த செந்நிறத் திரை சற்றே விலகி இருக்க அந்த விலகலினூடு வைகறையின் மெல்லிய வெளிச்சம் மோகத்துடன் அறைக்குள் பார்வை படர்த்துகிறது. நேராக என் மேனியில் பீச்சுகிறது. அண்மைக் காலங்களில்எத்தனையோ உறக்க உடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அந்த உடைவுகள் தந்திராத ஒருவிதமான திவ்விய உணர்வை இந்த விடியல் தந்தபடி உள்ளது. எந்தமாதிரியான ஒரு அதிகாலைக்காக தினமும் ஏங்குகிறேனோ அந்தமாதிரியான விடியல் வந்த சந்தோசத்துடன்சற்றே கழுத்தை வளைத்து கண்மலர்களால் இணையப்பெட்டியைப் பார்க்கிறேன். நேரம் அஞ்சரை என்றது. கட்டிலை விட்டிறங்கி மாடிப்படிகளில் இறங்கி கூடத்தை வந்தடைகிறேன்.


தோட்டத்துப் பக்கச் சட்டரை மேலே உயர்த்தி வெளிச்சத்துக்கு அழைப்பு விடுகிறேன். கூடத்தின் தலை ரசிகன் போல் கூடத்தை நிரப்பினான். நானோ தோட்டத்தை கண்ணோட்டம் விட்டேன். இளவேனில் காலம் மலர்ந்ததையிட்டு வண்ண நிற ரோஜாக்கள்தாமும் மலர்ந்திருந்தன என் இந்த வைகறை உள்ளம் போலவே. இளஞ்சூரியன் எழுச்சியை என் கண்கள் எதிர்நோக்கரோஜாச் செடிகளோ சூரியன் வருகையில் சிறிதாய் அஞ்சி பனிப்போர்வையை இழுத்துப் போர்த்தி இருக்கின்றன. பனியுடன் சேர்ந்து ஒருவித சோகமும் படர்ந்திருப்பதாக செடிகளின் சோர்வு உறுதிபடப் பேச எங்கிருந்தோ வந்த புளினிக் குருவிகள் செடிகளைக் குலுக்கி உற்சாகம் ஊட்டுகின்றன. மெல்லெனக் கொஞ்சிப்பேசி இதங்கொடுத்து உற்சாகம் கூட்டுகின்றன. செடிகளும் ஊட்டம் பெற்றதாய் ஆட்டம் போடுகின்றன. பனியும் சோர்வும் தோட்டத்தரைகளில் சிதறி விழுகின்றன. சித்திரம் கீறுகின்றன.


ஆகாயம் தரையினை முத்தமிட்டுக் கொள்வதை வேடிக்கை பார்க்கப் பிடிக்காமல் பார்வையை பக்கம் திருப்புகிறேன். செய்றதையும் செய்துவிட்டு வெள்ளையினப் பெண்போல் சலனமின்றி இருக்கிறது வானம். அகமும் புறமும் கொட்டிக்கிடந்த அழகில் மயங்கிக் கிடந்த என்னை கண்ணாடிக் கதவில் தொட்ட கன்னம் சுய நினைவுக்கு கொண்டு வரத்தான் தெரிகிறது நேரம் ஆறரை ஆனது. பொடிசுகளும் நித்திரை விட்டுவர மேலும்சந்தோசம் பூசிக் கொள்கிறது வீடு. பள்ளிக் கிளம்புகை ஆனந்தக் களேபரங்கள் முடிவுக்கு வர வேலை இல்லாமல் இருந்த என் தனிமை போக்கத் தயாராகின்றன வீடும் கணினியும்.


மன்றம் வருகிறேன். இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமோ என்ற பாடலை என் நெஞ்சப் பெட்டியிலிருந்து ஒழுகச் செய்தபடிசில படைப்புகளுக்குப் பதில் போடுகிறேன். ஏதோ ஒன்று கடந்த பல நாட்களாக திறந்து பார்க்கப்படாத என் மின்னஞ்சல்பெட்டியை திறக்கச் சொல்லுது. கை தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்தக் காலைப் பொழுதின் இரகசியக் கதவு மெல்லத் திறக்கிறது. பெட்டிக்குள் இருந்து துள்ளி வருகிறான் இணையத்தூதுவன். என் பழைய நண்பர்கள் மூவர் தூதுவனை அனுப்பி இருந்தார்கள். அவர்களுடன் தூதுவன் மூலம் இணைகிறேன்.

பழங்கதைகள் பேசியதில் மணிகள் துரித கதியில் சிதறி விழுகின்றன. ஒரு தருணத்தில் மூவரும் ஒரு இடத்தில் சேர்ந்து விடச் சோர்ந்து விழுகிறது இருந்த கொஞ்ச நஞ்சச்சோர்வு. அந்த நேரம் பார்த்து உள்ளூர் நண்பனின் தொலைபேசி அழைப்பு. வீட்டில் உள்ளேன் என்று அக்னி அனுப்பிய அலைபேசி சமிக்கை. என்ன இது சினேகம் இன்று என்னுடன் அதிகம் ஸ்னேகிக்கிறது என்ற வியப்பு மேலிட்ட வேளை அலைபேசியில் அயல்நாட்டு தோழன். குலாவியபடிமுற்றும் ஆடை துறந்த சாளரத்துனூடு வெளியே பார்க்கிறேன். மஞ்சள் வெயில் மாலையை நினைவூட்டுகிறது மதியம். துணைக்குப் பசியும். அளாவல்களுக்கும் குலாவல்களுக்கும் தொடரும் போட்டுவிட்டு வயிற்றைக் கவனிக்கிறேன்.

சற்று நேரத்திற்கெல்லாம் சட்டென்று மாறுது வானிலை. வானம் மப்புப் போட மெல்லிய கூதல் காதல் காற்று சாமரம் வீசத் துவங்குகிறது. வருவாய்த்துறையில் இருந்த சொந்த வேலை கூவி அழைக்க வெளியே கிளம்புகிறேன். வாருவாய்த்துறை அலுவலக வாசலில் இன்னொரு நண்பன். மீண்டும் உள்ளுக்குள் ஒரு இன்பப்பிரளயம். சுற்றும் ஓடத் தொடங்குகிறது நட்புநதி. எல்லாம் முடித்து வீடேகினால் கூகிளில் செல்வா.. கூடவே ஆதி, மதி.. மறுபடியும் சகா வட்டாரம். பத்து நிமிடந்தான்.. விடை பெற்ற வேளை செல்வாவின் தொலைபேசி அழைப்பு. பேசிக்கொண்டே தயராகி பேசி முடித்து வெளிக் கிளம்புகிறேன் உள்ளூர் சினேகிதர்களை சந்திக்க.


இளந்தென்றல் சற்று வீரியம் பெறுகிறது. முகத்தில் கூதலை துப்புகிறது. உடலெங்கும் அது வழிகிறது. வானத்தில் கரு மேகங்கள் கூடுகிறன இன்றைய என் நண்பர்கள் சந்திப்புப் போலவே. இரவு மணி பத்து.. செயற்கையாய் அமைந்த ஆற்றங்கரை வனப்பை நண்பர்களுடன் அனுபவித்து விட்டு விடை பெறும் வேளை வானம் மழை பொழிகிறது. என் ஆனந்தத்தை அது மொழிகிறது. ஆனந்த மழையில் நனைந்தபடி வீடேகிறேன்.

இப்படிக் காலை முதல் மாலை முடியும் வரை சினேகங்களில் பிடியில் இன்றைய பொழுது.. இரவு நேர உறக்கமோ தழுவ மறுக்கிறது. இந்தமாதிரியான தருணங்களில்தான் கதைகள், கவிதைகளை எழுதுவது . ஏறத்தாழ ஓராண்டுகளாக இந்த மாதிரி தூக்கம் தர மறுக்கும் இரவுகளில் எழுதியதில்லை. இன்று.. இந்த இரவில் அந்தப் பழக்கம் எழுகிறது. கட்டுக் கதைகளுக்குப் பதிலாக பழங்கதைகள், குறிப்பாக ஸ்னேகிதர்கள் கதைகள் அதி வீச்சுடன் எழுந்தாடுகின்றன. வரும் பொழுதுகளில் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பூமகள்
25-03-2009, 10:23 AM
அதிகாலை துவங்கி.... புல் தூங்கும் வரையிலும்.... நட்பின் பரிமாணத்தையும் வானின் வேட்கையையும் சொல்லிய விதம் கச்சிதம்...

சொக்கிப் போன நான்... எழுந்து அமர்கையில் தொடரென முடித்திருப்பது கூடுதல் இடர்.....

விரைந்து விசாலமாக்க என் வேண்டுகோள்... நட்புகளின் கதை கேட்க கசக்குமா என்ன... சொல்லத்தான் கனக்குமா என்ன??


இனிப்பூறும் எழுத்தாற்றல் கொண்ட அமரண்ணாவின் மற்றொரு சாமர படைப்புக்காக... காத்திருப்போரில் நானும் ஒருத்தியாக...... நட்புப் பூக்களைப் பதியன் செய்யக் காத்திருக்கிறேன்...

தொடருங்கள்...

சிவா.ஜி
25-03-2009, 12:08 PM
முத்தமிட்ட வெள்ளைக்கார வானம், கன்னம் சில்லிடவைத்த கண்ணாடி, புளினிக்குருவி, தோட்டப்பார்வை என சோர்வை உதறிய வைகறையை வர்ணித்து எங்களையும் சோர்வை உதற வைத்துவிட்டீர்களே பாஸ்...

ஆஹா....இந்த நாள் என ஆனந்தம் பாட வைத்த சினேகங்களுக்கு வந்தனம். இன்னும் தொடர்வதற்கு ஆனந்தம். தொடருங்க....நந்தவன நடையைப்போல இளங்காற்று தடவல் சுகத்துடன் உடன் வருகிறோம்.

ஆதவா
25-03-2009, 05:35 PM
ஒரு நாளைய நகர்வை சோர்வின்றி இலக்கியத் தரமாகச் சொல்லுகின்றன எழுத்துக்கள். படிக்கப்படிக்க உள்ளம் விரிந்து லயித்துப் போனேன். இறுக்கி அமரவைக்கும் அமர நடையை லாவகமாகக் கொடுத்திருக்கும் உங்களை முதலில் பாராட்டுகிறேன் அமரன்.

வீரியமிக்க எழுத்து வீச்சுக்களில் உங்கள் பயணத்தை ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

அமரன்
02-04-2009, 08:43 PM
"எட்டு எட்டா மனுச வாழ்வை பிரிச்சுக்கோ" - இது நான் சொல்லலைங்க. நாடறிந்தவர் சொன்னதுங்க. அவர் என்ன நினைத்து சொன்னாரோ தெரியல. ஆனால் எங்கூரில "எட்டு"க்கு அர்த்தம் பல. அண்ணனை ஒரு எட்டுப் பாத்துட்டு வாறேன் என்பாங்க. ஒரு எட்டு வைச்சா கோட்டைத் தாண்டிடலாம் என்பாங்க. நான் காலத்தைச் சொல்லும் எட்டை எடுத்துக்கிறேன். ஆமாங்க.. என் வாழ்வில் கடந்த குறிப்பிட்ட கால அளவை எட்டாக எடுக்கிறேன். முதல் எட்டு என் பிறப்பு முதல் பத்து வயது வரை.

முதல்ல சின்னதா ஒரு சுயபுராணம். ஆயர்பாடி கண்ணனும் நானும் ஒரு விதத்தின் ஒன்றுதாங்க. அது என்னன்னா சூழ இருக்கும் பெண்கள் கூட்டம். பிறந்தது முதலாக பெண்கள் கூட்டத்தில் நான் இருப்பேன். வளர்ந்தபின்னே என்னைச் சுற்றிப் பெண்கள் இருப்பாங்க. ஆக மொத்தத்தில் பெண்களுக்கும் எனக்கும் ஜென்ம பந்தம் உண்டு. இதனால நான் பட்ட கஷ்டங்கள் தனி அத்தியாயம். அது நமக்கு வேணாம். இந்த மாதிரி மங்கையர் மத்தியில் இருந்தே பழக்கப்பட்டதாலயோ என்னவோ என் முதல் சினேகமும் ஒரு பெண்தான்.

நாலு வயது. நர்சரிக்குப் போகத்துவங்கிய பருவம். கிராமத்துப் பெண்கள் இடுப்பில் இருக்கும் தண்ணிக்குடம் போல அம்மாவின் இடுப்பில் கம்பீரமாக அமர்ந்து நர்சரிக்கு போயாச்சு. அம்மா இறங்கச் சொல்றாங்க. நானோ அவுங்க சொல்லச் சொல்ல அவுங்களை இறுகக் கட்டிக்கிறேன். மாட்டேன்னு அழுது அடம்பிடிக்கிறேன். அப்போதான் அவளைப் பார்த்தேன். நேத்து நடந்தது கூட மறந்து போகலாம். ஆனால் சின்னவயசுல நடந்த சில விடயங்கள் அப்படியே பசுமையாக இருக்கும். வெளிர் நீல பார்ட்டி ஃபுரொக்கில் வெண்மேகப் பற்களை காட்டியபடி தலையை ஒரு பக்கம் சாய்த்து என்னையே பார்த்தாள். அவள் மீது என் பார்வை நிலைகுத்தியது.

அம்மா அதனை ஆயுதமாக்கினார். என் அம்மா ஆச்சே. என்னைப் பற்றித் தெரியாமலா இருக்கும். அவளுக்கும் எனக்கும் இடையில் அலையை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். "பார்த்தீங்களா.. சிரிச்சுக் கொண்டு இருக்கிறா. உங்களோடதான் இவவும் படிக்கப் போறா. இவவோட சேர்ந்து விளையாடலாம்.. " அம்மா வைச்ச குறி தப்பவில்லை. அன்று முதல் எட்டு வயது வரை அவள்தான், அவள்மட்டும்தான் என் ஒரே ஒரு நட்பு. அவளுக்கும் எனக்கும் இடையான நட்புக்காலத்தை இனிவருங்காலங்களில் பார்க்கலாம்.

அறிஞர்
02-04-2009, 10:18 PM
அன்று முதல் எட்டு வயது வரை அவள்தான், அவள்மட்டும்தான் என் ஒரே ஒரு நட்பு. அவளுக்கும் எனக்கும் இடையான நட்புக்காலத்தை இனிவருங்காலங்களில் பார்க்கலாம்.
கள்ளம் கபடமற்ற வயதில் இனிய நட்பு..
மறக்க இயலுமா...
எழுத்தால் பலரையும் கட்டிப்போடுகிறீர்கள்.. அமரா..

அமரன்
04-05-2009, 08:37 PM
அம்மாவின் வயிற்றை விட்டிறங்கினாலும் இடுப்பை விட்டிறங்கியதில்லை. கிராமத்துப் பெண்களின் இடுப்பில் இருக்கும் தண்ணீர்க் குடம் போல அம்மாவின் இடுப்பில் அமர்ந்து பயணிப்பது எனக்குப் பிடித்தமானது. என் முகவாயில் ததும்பும் களிப்புத் துளிகளின் தெறிப்புகள் அம்மாவின் முகத்தில் பருவப் பெண்ணின் முகப் பருக்கள் மாதிரி குமிழ்வது காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும். எங்கள் பாசமாலையில் கமழும் நறுமணத்தில் சொக்கிப் போகாத ஊர்மனங்களே இல்லை எனலாம்.

இடுப்பில் நானிருக்க ஒரு கையால் என்னை அணைத்து மறுகையில் என் பையைச் சுமந்தபடி முரணான முறையில் அசைந்து செல்லும் சுகமான சுமைதாங்கியாக அம்மா அசைந்து போவது கொஞ்சக் காலம்தான் நீடித்தது. புதிதாய் முளைத்த சிறகுகளாக என் சினேகிதி முதுகில் புத்தகப்பை பொருந்தி இருக்க, தன் தாயின் விரல்பிடித்து நடந்து அவள்தான் எனக்கும் சிறகு பொருந்தக் காரணமானாள். ஆம்.. என் சுமையை நானே சுமக்கக் கற்றுக் கொடுத்தவள் அந்தக் காந்தக்கண்ணிதான்.

எனது புத்தகப்பை நீல வண்ணம். அவளுடையது ரோசா வண்ணம். இணைந்த கைகளுடன் இருவரும் தெருக்களில் பாடி பறந்து செல்வோம். கொண்டு செல்லும் பானக்களை இருவரும் பரிமாறிக் கொள்வோம். பரிமாறும் தருணங்களில் கதைகள் பலதை கொறிப்பதும் உண்டு. குளங்கரை விளையாட்டில் என்கைதவிர வேறொரு கை அவளை கை சேர்ந்ததில்லை. அதனால் பல சமயங்களில் நாங்களும் விளையாட்டில் சேர்ந்ததில்லை. மறுகரம் மற்றாமல் குளங்கரை விளையாடுவதுதான் எப்படி?

எம் விருப்பத்துக்குரிய குரு என்னக் கடிந்தால் அவள் முகம் கறுக்கும். அவளைக் கடிந்தால் என் முகம் இறுகும். அவளை வைத ஆசிரியையை கல்லால் அடித்த காலங்களும் உண்டு. கெட்ட சொல்லால் அடித்து அம்மாவிடம் அடிபட்ட காலங்களும் உண்டு. அந்தக் காலத்தில் பட்ட அடிகள்தான் என் வாழ்வின் முதலடிகள். ஆம்.. எதையும் தாங்கும் வலிமையை முதன் முதலாகத் தந்தவளும் என் கன்னிச் சினேகிதான். திட்டமிடலுக்குக் கூட அவள்தான் என் முதனிலைப் பள்ளி.

எந்த நேரத்தில் வீட்டிலிருந்து அவள் புறப்படுவாள் என்று சொல்வாள். எந்த நேரத்தில் வீட்டிலிருந்து நான் புறப்பட வேண்டும் என்றும் சொல்வாள். மட்டுமல்லாது எந்த இடத்தில் இருவரும் தடம் மாறி தடச் சேர வேண்டும் என்றும் இடம், நேரம் குறிப்பாள். நாளைக்கு நான் நெல்லி ரசம் கொணர்வேன் என்பாள். அவள் பால் கொண்ட அன்பு ரசத்தால் நானும் நெல்லி ரசம் மொண்டு செல்வேன். "நீ வேற ஏதாவது கிரேஸ் கொண்டு வந்தால் நல்லா இருந்திருக்கும் அல்லவா" என்று செல்லமாய் அவள் கடிவது வெல்லமாய் என் காதில் பாயும். உடனே "மறுநாள் என்ன கொண்டு வருவாய்" என்பேன். கோல்மன்ஸ் கரைசல் என்பாள்.

இப்படி வருவாய் என்று முடித்த கேள்விதான் வருங்காலம் பற்றிய என் உத்தேச திட்டமிடலின் அரிவரி என்றால் அது மிகை அல்ல. இப்படிப் புளிப்புச் சாறுகளை பரஸ்பரம் பரிமாறி வளர்த்த இனிப்புக் காலம் என் எட்டுவயது வரைக்குமே நீண்டது. ஆனாலும் என்வாழ்வில் அது மிக நீண்டது.

எட்டு வயதில் ஊர் விட்டு போக நேர்ந்த போது அவளையும் பௌதிகமாய்ப் பிரிய நேர்ந்தது. அவள் பிரியங்களோ என்னைப் பிரிய மனமின்றி உடன் வந்தன. அடுத்த சினேகங்களை தேர்வு செய்வதில் பெரி"தாய்" உதவின.

பூமகள்
05-05-2009, 02:14 AM
உங்கள் சினேக மேகத்தின் முதல் முகில் தடவிச் சென்ற குளுமையும் சிலிர்ப்பும் நீடிக்கும் முன்னே கரைந்து போக பிரிவுத் துயர் அழுத்திய அந்த வயது நாட்கள் மறக்க இயலாது தான்.. கனத்துப் போன மனம் இன்னும் என்னில்...

என்னிலும் அவ்வகை நினைவலைகளைத் தட்டி எழுப்பி ஏங்க வைத்த பதிவு..

ஆழ் மனக்கண்ணில் இன்னும் தெளிவற்று படிந்திருக்கும் என் பிரியமான தோழமை காலச் சூழலில் பிரிந்த நிகழ்வை நினைவூட்டிவிட்டது...

ஆழ் கடல் அமைதி போல மனம் அமைதியடைந்தாலும் அவ்வப்போது இவ்வகை சினேக அலைகள் நினைவுகளை பின்னோக்கிச் செலுத்தத் தவறுவதில்லை..

அம்மா தூக்கிய அந்த இடுப்புச் சுகம், பின்னாளில் அவள் விரல் பிடித்து நடை பயின்ற ஆரம்பப் பள்ளிக் காலம்.. இவற்றை இத்தனை ரசனையோடு சொல்வதிலிருந்தே எத்தனை ஆழமான ரசனை உங்களில் அன்றிருந்தது என்று விளங்குகிறது..

நட்பூக்கள் இன்னும் மலரட்டும்... எங்கள் முகங்கள் இன்னும் இன்னும் பூக்கட்டும்..

தொடருங்கள் அமர் அண்ணா..

ஆதவா
05-05-2009, 02:57 AM
கொஞ்சம் வேலை.. (கொஞ்சமல்ல ரொம்பவே!) நீங்கள் எழுதுங்கள். பின் வந்து படித்துக் கொள்ளுகிறேன்