PDA

View Full Version : என்றும் மாறாதது!



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-03-2009, 07:08 AM
இனியுமுங்களை வினவுவதற்கில்லை
பழைய பழுத்த அடர் தூசி படிந்த
முன் கழிந்த முன்னோர் சித்தாந்தங்களையெல்லாம்
எக் குப்பையில் கூட்டித் தொலைத்தீர்களென்றோ!

திடுமென திமிறி வளர்ந்த
புராண ராட்சஸ கதைகளை
மண்ணும் பொன்னும் வாரியிறைத்த
அழகிய தேவதைக் கதைகளை
எந்நுலகத்தை தூசி தட்டித் தேடுவதென்றோ!

தூர ஒளிரும் ஈர நிலாவை
வாசலுக்கழைக்கும் வரவேற்ப்புக் கீதங்களை
அறிவிற்கினிய ஆத்திச்சூடிகளை
எக்குழந்தை வாயில் பிடுங்குவதென்றோ!

அகன்று நீண்ட முற்ற வராண்டாக்களை
ஓரமித்து வாசனையொழுக்கும் துளசிச் செடிகளை
கூடிய குழந்தைகளின் கண்ணாமூச்சிக் கானங்களை
குடுகுடுத்த பெருசுகளின் உரலிடிப்போசைகளை
எப்பிரதேசம் போய் விட்டீர்களென்றோ!

மேலான வானம் நீலமென்றும்
கீழான வானம் கரடும் முரடுகளென்றும்
குளிர்ந்து பொழிந்து கொளுத்தும் காலம்
வருடந்தோறும் முப்பருவங்களென்றும்
தன் குறித்த வழமையான ஒரு நேரம் ஒரு ஓரமெழும்
அதே குறித்த வழமையான ஒரு நேரம் ஒரு ஓரம் விழும்
சூரியச் சந்திர அட்டவணைகள்
மற்றும் இப்படியான குறித்த இயற்கை இகழ்வுகளைத் தவிர
எல்லாமும் புதியதாய் புத்தொளிர வேண்டுமென்ற
புத்தாய்வுகள் பூணும் புதிய மாந்தர்களே!

மாறிய காலங்களிலினூடே அம் மாறாத
உங்களுர் பேருந்து நிலைய முதியவரின்
ஏற்ற இறக்க யாசக வார்த்தைகளை
உங்களில் ஒருவரேனுமா செவி மடுத்திருக்கவில்லை
என்பதையன்றி வேறொன்றும் இல்லை
எனக்குங்களிடம்.

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
junaidhasani@gmail.com

இளசு
25-03-2009, 07:22 AM
எல்லாரும் எல்லாவற்றையும் பார்க்கிறோம்.
உங்கள் பார்வை மட்டும் எப்படி வித்தியாசமாய்.. கூர்மையாய்?

பராசக்தி படத்தின் முதல் வசனம்..

மாறாத யாசகக்குரல்..

பழையன கழிதல் தொல்காப்பியனே ஒப்பியது என்றாலும்
நல்லவை பல கழிக்கப்பட்டும்
அல்லவை பல கழிக்கப்படாமலும்
சில கணக்குப்பிழைகள் - காலக்கோளாறு!

பாராட்டுகள் ஜூனைத்!

சுகந்தப்ரீதன்
25-03-2009, 08:30 AM
மாற்றங்கள் மட்டுமே மண்ணில் மாறாதது என்பார்கள்... இங்கே நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கும் பேருந்து நிலைய பெரியவரின் யாசக வார்த்தைகளும் இன்னும் மாறாமலிருக்கிறதே... அப்படியானால் இதுக்கூட மாற்றம்தானோ (சமூகத்தின் எதிர்திசையில்)..??

இளசு அண்ணா சொன்னதைப்போல இப்படியெல்லாம் பார்வை கோணங்களை செலுத்த வேண்டுமென்றால் அவர்களுக்கு சமூகத்தின்மீதான காதல் சற்றுக்கூடுதலாக இருக்க வேண்டும்..!! அது உங்களிடம் எள்ளளவும் குறையவில்லை என்பதைத்தான் உங்களின் கவிதைகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன சுனைத் அண்ணா..!! வாழ்த்துக்கள் தொடருங்கள்...!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-03-2009, 01:54 PM
இரண்டு வருடங்களுக்கு பின்னால் நேற்றுதான் இந்திய மண்ணை மிதித்தேன். குறைந்த கால அளவில் நிறைந்த மாற்றங்கள். ஆனாலும் பேருந்து மற்றும் இரயில் நிலையங்களில் உலாவும் யாசக முதியவர்கள் எண்ணிக்கையில் எந்த குறைவும் இல்லை. கரு பட்டப் பழையதுதான். இருந்தாலும் என் பங்கிற்கென்று எழுதிவிட்டேன் கவிதையை. கருத்திற்கு மிக்க நன்றி இளசு அண்ணா.