PDA

View Full Version : டேக் ஆஃப்...!!



பூமகள்
19-03-2009, 11:27 AM
டேக் ஆஃப்




http://img03.picoodle.com/img/img03/3/3/19/poomagal/f_cheapflightm_517f9cf.jpg


கோவை விமான நிலையம் இரவு 10 மணிக்கு இருள் அப்பிய சுவர்களுக்கு மின் விளக்குகள் கொண்டு வெளிச்சம் ஒட்ட வைத்துக் கொண்டிருந்தது..

வெளிச்சக் கீற்றுகள் உள்ளிருக்கும் தரையைப் பளிங்கு போல் காட்டிக் கொண்டிருந்தது..

மெல்ல தனது பயணச் சுமைகளைத் தள்ளியபடியே வெளி வராண்டாவில் தமக்கான விமான எண் டிஸ்ப்ளேயில் வரக் காத்திருந்தனர்..

இரு பெரிய பைகளுடன் அவ்விருவரும் பயணிகளோடு பயணிகளாக கலந்துவிட்டிருந்தனர்..

அவ்விருவரில் ஒருவர் கருப்பு ஜர்கின் போட்டிருந்தார்.. அவர் அருகிலிருந்த வெளிர் நீல ஜீன் அணிந்தவருக்கு தன் கூரிய கண்களால் சிக்னல் காட்டிய வண்ணம் இருந்தார்..

மார்கழிக் குளிர் ஜீன் அணிந்திருப்பவருக்கு மெல்ல நடுக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.. குளிரில் நடுங்கினாலும் உள்ளே நடக்கப் போகும் நிகழ்வுக்கான ஒத்திகையை மனம் ஒருபுறம் மனத்துக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது..

இரவு 10.30 மணி..

அவர்கள் செல்ல வேண்டிய சிங்கப்பூர் விமானத்தின் எண் டிஸ்ப்ளே போர்டில் வர.. பரபரப்பானது பயணிகள் கும்பல்..

இவர்கள் இருவரும் பயணிகளோடு சக பயணியாக உள்ளே நுழைந்தார்கள்..

வெளிக் காவலரிடம் பாஸ்போர்ட்டும் பயணச் சீட்டையும் காட்டிய பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்..

பயணிகள் தத்தம் பைகள், சூட்கேசுகள் கொண்டு ஒருபுறம் சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்க...

இருவரும் சென்று வரிசையின் கடைசியில் நின்றனர்..

மெல்ல வரிசையின் நீளம் குறைய... இருவரும் தத்தம் பயணப் பொதிகளை சோதனைக்காக வைத்தனர்..

அவை ஸ்கேன் செய்யப்பட்டு தகுந்த லேபில் அணிவிக்கப்பட்டபின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அடுத்த இடத்துக்கு சென்றனர்..


கொடுக்கப்பட்ட டேகுகளை தன் கையடக்க பையின் வாயைச் சுற்றி இறுக்கிவிட்டு.. தன்னுடன் வந்திருக்கும் ஜீன் அணிந்தரின் விவரங்களை ஒரு அட்டையில் எழுதிக் கொண்டிருந்தார் கருப்பு ஜர்கின் அணிந்த நபர்..

ஜீன் அணிந்தவர்.. அங்கும் இங்கும் நோட்டமிட்டபடியே தனக்குள் இருக்கும் படபடப்பை மெல்ல குறைக்க முற்பட்டுக் கொண்டிருந்தார்.. தன் வாழ்க்கையில் இதுவரை நடக்காத நிகழ்வாதலால் மனம் பதைத்தபடியே இருந்தார்..

அடுத்து இமிகிரேசன் கவுண்டர் சென்று தனது அடையாள அட்டையையும் அந்த நபரின் விவரங்கள் தாங்கிய அட்டையும் கொடுத்துவிட்டு.. இருவரின் பாஸ்போர்டையும் காட்டி உள் நுழைந்தார்..

இரவு 11.30 மணி..

வெகு நேர காத்திருப்புக்கு பின் முக்கிய சோதனைக்காக மீண்டும் வரிசையில் நின்றனர்..

சோதிப்பவர்களின் பரஸ்பர ஹிந்தியிலான நகைச்சுவை சம்பாஷனையை ரசித்தபடியே அத்தனை படபடப்பிலும் புன் முறுவல் செய்தார் ஜீன் அணிந்தவர்..

இருவரின் பயணப் பொதிகளையும் ட்ராலியில் தள்ளியபடியே கருப்பு ஜர்கின் போட்ட நபர் ஒருபுறம் செல்ல... ஜீன் அணிந்தவர் அடுத்த கதவிற்குள் நுழைந்தனர்..

இருவரும் சோதிக்கப்பட... கையடக்க பைகள் சோதனையிலிருந்து மீண்டு வந்தன.. அவற்றில் ஒன்றை வைத்துக் கொண்டு வெகு நேரம் யாருடனோ வாக்கி டாக்கியில் அந்த காவலதிகாரி பேசிய வண்ணம் இருந்தார்..

அவர் முகம் மாறியதையும்.. சம்பாஷனைகளையும் அரைகுறை ஹிந்தியில் புரிந்து கொண்ட ஜீன் அணிந்தவர் மனதுக்குள் அழ ஆரம்பித்திருந்தார்..

நடப்பதில் ஏதோ விபரீதம் வந்துவிட்டதை உணர்ந்த அந்த கருப்பு ஜர்கின்காரர்.. காவலர் பேசி வைக்கும் வரை காத்திருந்தார்..

இருவரையும் தனியே அழைத்து மெல்ல காவலர் பேச ஆரம்பித்தார்..

"உங்கள் பையில் என்ன வைத்திருக்கிறீர்கள்... சொல்லுங்கள்" இதை சற்று கடுகடு முகத்துடன் அதட்டலாக ஆங்கிலத்தில் காவலர் கேட்க...

"ஒன்றுமில்லையே.. துணிகளும் புத்தகங்களும் தான்" என்று கருப்பு ஜர்கின்காரர் குழப்பத்துடன் ஆங்கிலத்தில் உரைத்தார்..

"இல்லை.. அதில் விமானத்துக்கு ஊறு விளைவிக்கும் பொருளை வைத்திருக்கிறீர்கள்.. நானே சொல்லிவிடுவேன்.. நீங்களே ஒப்புக் கொண்டு விடுங்கள்.."

சற்று அதிக கடுப்பில் காவலர் சொல்ல..

நடு நடுங்கிப் போன இருவரும்.. எக்கு தப்பாக மாட்டிவிட்டோமே என்று விழி பிதுங்கிப் போயினர்..

"இல்லை சார்.. நாங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை.. தெரியாமல் ஏதேனும் இருக்கலாம்.. என்ன இருக்கிறதென்று சொல்லுங்கள்" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ஜர்கின் காரர் கேட்கவும்.. திபுதிபுவென மற்ற சோதனைப் பிரிவு காவலர்கள் அங்கு கூடவும் சரியாக இருந்தது..

அவர்களில் ஒருவர்.. கருப்பு ஜர்கின் அணிந்தவரை அழைத்து சூட்கேசின் தாழை எடுத்துவிடச் சொல்ல..

அது நீல ஜீன்காரரின் பை என்பதால் அவரை அணுகினார் கருப்பு ஜர்கின்காரர்.

மெல்ல நடுங்கும் கைகளோடு வேர்த்தபடியே பையைத் திறக்க..

அங்கு தேடி அந்த பொருளை அவர்கள் எடுத்தார்கள்..

பார்த்த இருவருக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது...

அது ஒரு முழ நீளத்தில் கூர்மையான ஆயுதமாக அமைந்திருந்தது.. இருவரின் இதயமும் வேகமாக அடிக்க ஆரம்பித்திருந்தது..

இன்னும் சற்று அதிக விசாரணைக்கு உட்படுத்த தனி அறைக்கு அழைத்து வரப் பட்டார்கள்..

முன் செல்லும் காவலர் பின்னே நடுக்கத்தோடே இருவரும் செல்ல.. காவலர் இருவர் அவர்களைப் பின் தொடர்ந்தனர்..

நீல நிற ஜீன்காரர் காவலர் பின் செல்கையில் மயங்கி விழ.. அவரை அவசரமாக விமான நிலையத்தில் இருக்கும் முதலுதவி செய்யும் இடத்துக்கு எடுத்துச் செல்ல ஆவண செய்தார் காவலரில் ஒருவர்..

விசாரணை கருப்பு ஜர்கின் போட்டவருடன் சுமார் 20 நிமிடம் நீடிக்க.... இறுதியில் வேர்வை பூத்த முகத்துடன் தன் கைக்குட்டையைத் துடைத்து விட்ட படி.. வெளியேறினார்..

அறையை விட்டு வெளி வந்த காவலர்.. புன் முறுவலுடன் கருப்பு ஜர்கின் காரருக்கு கை கொடுத்து மன்னிப்பு கேட்டு.. வாழ்த்துகள் சொல்லி அவரை அனுப்பினார்..

நீல ஜீன் அணிந்தவருக்கு முதலுதவி செய்யப்பட்டு மயக்கம் தெளிந்த நிலையில் கருப்பு ஜர்கின் வெளிப்படும் இடத்துக்கு அருகில் அமரச் செய்திருந்தார்கள்..

விசாரணையில் ஈடுபட்ட காவலர், மற்றொரு காவலரின் காதில் ஏதோ சொல்ல.. அவர் ஜீன் அணிந்தவருக்கு அருகில் சென்று அவர் போகலாம் என்று அனுமதி அளித்தார்..

கருப்பு ஜர்கின் காரர், ஜீன் அணிந்தவரைக் கைத்தாங்கலாக பிடித்தபடியே விமானம் ஏற காத்திருப்போரின் வரிசையில் பயணப் பொதிகளுடன் நிற்கலானார்.

அதுவரை நடந்த எதையுமே நம்ப முடியாமல் இருந்த ஜீன் அணிந்தவர்.. ஆச்சர்யம் தாளாமல் அரை மயக்கத்திலேயே குழப்பத்தில் உடன் நின்றிருந்தார்..

நள்ளிரவு 12.10 மணி..

விமானத்தினுள் இருவரும் நுழைய... தமது சன்னலோர சீட்டுடன் ஐக்கியமானார் ஜீன் அணிந்தவர்..

விமானம் கிளம்ப இன்னும் சில நிமிடங்கள் இருக்கையில்.. தனது சஸ்பென்ஸ் தாளாமல் நீல ஜீன் அணிந்தவர்..

"பரத்.., போலீஸ் விசாரணையில் என்ன கேட்டாங்க.. எப்படி தப்பிச்சீங்க??"

புன்னகைத்தபடியே.." அத ஏன் கேக்கற பாலா.. ஏதோ ஆயுதம் கடத்தறோம்.. விமானத்தையே ஓட்டை பண்ணப் போறோம்னு நம்மள நினைச்சிட்டாங்க.. எல்லாம் உன்னால தான்"

அதிர்ச்சி கலந்த குரலில்.. " என்ன..... என்னாலையா.....ஆஆஆஆஅ???????????" என்று தன் கண்கள் விரிய பாலா கேட்க..

"பின்னே.. நீ கொண்டு வந்த கையடக்க சூட்கேசில் தானே அந்த ஆயுதமே இருந்துச்சு.."

"என்ன பரத் சொல்றீங்க.."

"உன்னால நாம ரெண்டு பேரு கம்பி எண்ணியிருப்போம்.. ஏதோ அதிகாரி நல்லவரா இருக்க தப்பிச்சோம்.."

"புரியும்படியாத் தான் சொல்லுங்களேன்.."

"உன் கையடக்க சூட்கேசுல என்ன வைச்சிருந்த சொல்லு முதல்ல"

"கொஞ்சம் துணி.. ஐ பாட் டச்.. தாய் நாவல்... கொஞ்சம் இந்தியப் பணம்" அவ்வளவு தானே வைச்சிருந்தேன் என்று குழப்பத்தோடே பாலா.

"உன் பையில் இருந்தது..... ஒரு பெரிய மைகோதி.. அது எப்படி அதில் வந்துச்சு...?? நான் படிச்சி படிச்சி சொன்னேன்ல கையில் எடுத்து போகும் பையில் இதெல்லாம் இருக்க கூடாதுன்னு..." என்றார் பரத் பல்லைக் கடித்தபடி...

நடுங்கிய படியே... "ஹையோ... அது எங்க உள்ளே இருந்துச்சு... நான் கவனிக்கவே இல்லையே... எங்க வீட்டிலிருந்து உங்க வீட்டுக்கு வருகையில் கொடுத்துவிடப்பட்ட சூட்கேஸ் அது... எங்க பாட்டி ஏதேதோ வைச்சாங்க.. அது சடங்குன்னு சொன்னாங்க...... நான் எடுத்து வைக்காம அப்படியே எடுத்து வந்துட்டேங்க.... என் கண்ணுல அது படவே இல்லைங்க... என்னை மன்னிச்சிருங்க.." கண்களில் கண்ணீர் பொங்க பாலா சொல்ல...

"எனக்கு புரிந்தது பாலா.. அதைத் தான் காவலரிடம் விளக்கினேன்.. அவரும் அந்த மைகோதியை எடுத்து வைச்சிட்டு இனி கவனமாக இருக்கச் சொல்லி அனுப்பிட்டார்" என்று பாலாவை தன் தோளில் சாய்த்து தலை கோதியபடியே சொன்னார் பரத்.

பரத், பாலா இவ்விரு புதுமணத் தம்பதிகளையும் மற்றும் பல பயணிகளையும் ஏற்றிக் கொண்டு பறந்து கொண்டிருந்த விமானம்.. விளக்குகளினால் வரையப்பட்ட எல்லைக்கோடுகளுடன் வெளிச்சக் காடாகத் தெரியும் இலங்கையின் அழகிய வடிவத்தினைக் காட்டியபடி சென்று கொண்டிருந்தது..

(முற்றும்)

சிவா.ஜி
19-03-2009, 11:42 AM
ஒரு புதிய அனுபவத்தை அனுபவித்தவர்களின் படபடப்பையும், நடவடிக்கைகளையும் ரொம்ப அழகா சொல்லியிருக்கம்மா.

முதல் வரி சூப்பர். அருமையான வர்ணனை. அதையடுத்து விமானப்பயணத்தின் எல்லா நிகழ்வுகளையும் கோர்வையா அழகா சொல்லியிருக்க.

கடைசி வரைக்கும் நீண்ட சஸ்பென்ஸ் அசத்தல். அவர்களைப் பற்றி சொல்லும்போதுகூட பாலா பெண் என்பதைக் காட்டாமலிருந்த உத்தியும் அழகு. ஆனால் அவர்களின் நடவடிக்கையிலிருந்து இப்படித்தான் ஏதாவது சிரிப்பாய் நிகழுமென்று யூகிக்க முடிந்தது. ஆனால் அது மைகோதியாக இருக்குமென்று நினைக்கவேயில்லை.

ரொம்ப நாளைக்குபிறகு உன்னோட கதையை வாசித்ததில் மகிழ்ச்சி.

(அப்ப ஊருக்கு போனதும் வேற மைகோதி வாங்கிகிட்டயா?ஹா...ஹா...)

பூமகள்
19-03-2009, 11:46 AM
சிவா அண்ணாவோட பின்னூட்டம் முதலாவதா வந்தாவே ஒரே குஷி தான்..

ரொம்ப சந்தோசம் அண்ணா...

கதையின் சஸ்பென்ஸ் சரியாக மெயிண்டெயின் ஆனதில் மகிழ்ச்சி...

சிரிப்பு வரவழைக்கவே இக்கதை... தக்ஸின் கதைகள் படித்து மனம் ரொம்ப பாரமாகிவிட்டது... அதான் ஆசுவாசப்படுத்த இம்மழலையின் கிறுக்கல்...

(இப்படியா உண்மையை மன்றத்தில் போட்டு உடைப்பது சிவா அண்ணா... :D :D ச்சேச்சே.. அதெல்லாம் கதைக்காக.. நிஜமல்லவே....!! ;) )

மதி
19-03-2009, 12:47 PM
கதை ஆரம்பிக்கும் போதே யூகிக்க முடிஞ்சது...

எனக்குத் தெரிந்து இமிகிரேஷனில் குடும்பத்தினராய் அல்லாதவர் தன் கூட்டாளி பாஸ்போர்டையும் காண்பிக்க இயலாது. அங்கேயே தெரிந்தது இருவரும் புதுமணத் தம்பதியர் என்று.. ஆனாலும் கதை சொன்ன விதம் அருமை. அது என்ன.. அது என்ன...? னு சஸ்பென்ஸ் கடைசி வரைக்கும் காப்பாத்திட்டீங்க..

வாழ்த்துகள்

அறிஞர்
19-03-2009, 07:36 PM
பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் கதை வடிவில்...
சஸ்பென்ஸாக தொடர்ந்தது சிறப்பு.
வாழ்த்துக்கள் பூமகள்..

பூமகள்
20-03-2009, 02:44 AM
கதை எழுதுவதில் ஜாம்பவான்கள் பலர் ஆரம்பத்திலேயே கதையின் போக்கைக் கண்டு பிடித்துவிட்டனர்.. இன்னும் வித்தியாசமான நடை தேவையென்றே தோன்றுகிறது..

எழுத எழுத பழகும் என நம்புகிறேன்..

நன்றிகள் மதி..

--

பயண அனுபவம் என்றால் அது அனுபவக் கட்டுரை ஆகியிருக்குமே அறிஞர் அண்ணா...

இது முழுக்க முழுக்கக் கற்பனைக் கதை...

கொஞ்சம் சஸ்பென்ஸ் வைச்ச காமெடி கதை... (அப்படின்னு நானே சொல்லிக்கிட்டாத்தான் உண்டு... :D :D)

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் அறிஞர் அண்ணா.

samuthraselvam
20-03-2009, 04:14 AM
முதலில் கதையை ஏதோ க்ரைம் கதை மாதிரி பில்ட் அப் பண்ணி இப்படி கடைசில சிரிக்க வச்சிட்டீங்களே பூமகள்.

ஏர்போர்ட் வர்ணனையெல்லாம் அருமையாக இருந்தது.. சஸ்பென்சை கடைசி வரை கொண்டு சென்று மனசை அப்படியே ஜாலி ஆக்கிட்டீங்க..

வாழ்த்துக்கள் பூமகள்...!

பா.ராஜேஷ்
20-03-2009, 06:06 AM
கோவை, ஏர்போர்ட், எல்லாம் படிக்கும் பொழுது ஒரு கணம் ராஜேஷ் குமார் நாவல்தான் படிக்கிறேனோ என ஐயம் ஏற்பட்டது உண்மை. அருமியாயான எழுத்து. வாழ்த்துக்கள் பூமகள்.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
20-03-2009, 11:26 AM
கதையின் சஸ்பென்ஸ் விலகாமல் கடைசிவரை நகர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது. கதை சொல்லும் வழியெங்கும் நிஜங்கள் எடுத்தாளப்பட்டிருப்பது புதிதாக விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் கதை எழுதப்பட்டிருப்பது அருமை. பாராட்டுக்கள்

ரங்கராஜன்
20-03-2009, 12:35 PM
சிவாஜி அண்ணன் சொன்னது போல, இந்த கதையில் நிறைய ப்ளஸ் இருக்கும்.

வர்ணனை நல்லா இருந்தது, விறுவிறுப்பு, பாலா என்ற யூனி செக்ஸ் பெயர், நடக்கும் களம் விமான நிலையம். ஆனா பாருங்க பூமகள் முதல் சில வரிகளிலே உறவுகள் சொன்ன மாதிரி முடிவை கண்டுபிடிச்சிட முடியுது. இதற்கான எனக்கு தெரிந்த காரணம் ஆரம்பத்தில் இருந்து அந்த இரண்டு பயணிகளை குறி வைத்து விட்டீர்கள், அதனால் தான் இந்த முடிவின் யூகம். அதை தவிர்த்து இருந்தால் கதையின் முடிவை யூகிப்பது கஷ்டமாக இருந்து இருக்கும். ஆனால் வார்த்தைகளின் கோர்வைகள் விறுவிறுப்பாக இருந்தது வாழ்த்துக்கள் பூமகள் தொடருங்கள்

பூமகள்
20-03-2009, 01:10 PM
நன்றிகள் லீலுமா..

கதையை க்ரைம் போல் செலுத்தி இறுதியில் சிரிக்க வைக்க வேண்டுமென்பதே என் விருப்பம்...

அவ்வகையில் உங்களுக்கு சிரிப்பு வந்ததிலிருந்து என் குறிக்கோள் ஈடேறியது புலனாகிறது..

பாராட்டுக்கு நன்றி தங்கையே..

---

ஹையோ.... சகோதரர் ராஜேஷ், ராஜேஷ்குமார் அவர்களின் கதைகளோடெல்லாம் ஒப்பிடாதீர்கள்..

நமக்கு அந்த அளவுக்கு எழுத வராதுங்க.. என் எழுத்து உங்களுக்கு பிடித்ததை நினைத்து மகிழ்கிறேன்..

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் பா.ராஜேஷ்.

பூமகள்
20-03-2009, 01:24 PM
சரியாக என் நோக்கத்தைப் பிடித்துவிட்டீர்கள் ஐ.ராசைய்யா அவர்களே..

விமான பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கு இப்படித் தான் இருக்குமென்ற ஒரு உணர்வை ஏற்படுத்தவதும் இக்கதை ஒரு நோக்கம்..

ஊக்கத்துக்கு நன்றிகள் ஐ.ராசைய்யா அவர்களே..

----

தக்ஸ்...

உங்களின் ஆயிரத்தோராவது பின்னூட்டம் என் கதைக்கு வந்ததில் மகிழ்ச்சி...

நீங்கள் சுட்டிய கதையின் குறைகள் எனக்கு புரிகிறது.. இப்படியான பின்னூட்டங்கள் நிச்சயம் என்னை மேலும் மெருகேற்றும்..

ப்ளஸ்.. இருப்பதைச் சொல்லி, மைனசை சொல்லாமல் அதற்கான தீர்வைச் சொல்லிய விதம் அருமை..

மனம் நிறைந்த நன்றிகள் தக்ஸ்... :)

மன்மதன்
20-03-2009, 02:16 PM
சஸ்பென்ஸ் கதைகள்
என்றால் எனக்கு இஷ்டம்...

டேக் ஆஃப் நன்றாக இருந்தது பூ..
பாராட்டுகள்...

சசிதரன்
20-03-2009, 02:35 PM
கதையின் சுவாரஸ்யத்தை கடைசி வரை கொண்டு சென்ருருக்கிறீர்கள்... நல்லா இருந்தது..:)

பூமகள்
23-03-2009, 10:34 AM
மன்மதன் ஜியின் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சி..

நன்றிகள் அண்ணா..

--

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் தம்பி சசி.

அமரன்
24-03-2009, 11:56 AM
ஒரு நிகழ்வை இவ்வளவு அழகாகவும் தத்ரூபமாகவும் படம் பிடிக்க மிகத் தேர்ந்த கலைஞர்களால் மட்டுமே முடியும். நீங்கள் சிறந்த கலைஞர் பூமகள். இலாகவமாக கதையை செலுத்தி பதை பதைக்க வைக்கும் விதத்தில் டேக்காஃப் செய்து விட்டீர்கள். பாராட்டுகள்.

இளசு
24-03-2009, 07:58 PM
அடடே.. அசத்திட்டம்மா..

ஆயுதம் எதுவுமில்லை என யூகித்தாலும்
மைகோதி, புதுமணத் தம்பதி என
இரட்டிப்பு தித்திப்பான முடிச்சுகள்..

ஐராபா அவர்கள் சொன்னதுபோல் விவரணங்களும்
சிவா சொன்னதுபோல் சுவை வர்ணனைகளுமாய்
வெற்றி அம்சங்கள் நிறைந்த நல்ல கதை!

மனதை லேசாக்க எண்ணியதில் முழுவெற்றி உனக்கு பாமகளே!

பறக்கும் என் சிறகு மனம் சொல்கிறது - பாராட்டுகள்!

ஜாக்
25-03-2009, 02:34 AM
ஆரம்பம் முதல் இறுதி பல்ஸ் எகிர வைக்கும் சஸ்பென்ஸ். முடிவு காமெடியாகதான் இருக்கும் என்று யூகிக்கமுடிந்தாலும் அடுத்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்கிற பதபதைப்பு ஏற்ப்படுவதென்னவோ உண்மை

இருந்தாலும் மைகோதியை வைத்து இந்த அளவுக்கு காமடி பன்னி இருக்கும் உங்களை வாழ்த்தியே ஆக வேண்டும். வாழ்த்துகள்!!

இன்னொன்று சொல்ல தோனுது ம்ம் வேண்டாம் விடுங்க....:lachen001:

aren
25-03-2009, 02:48 AM
பூமகள் கதை அருமையாக இருந்தது. நல்ல சஸ்பென்ஸ்.

ஆனால் மைகோதி என்றால் என்ன?

பூமகள்
25-03-2009, 03:24 AM
அமரண்ணாவின் பின்னூட்டம் கிட்டியதே நான் பெற்ற பேறு.. உங்களின் எழுத்துகள் முன் நான் இன்னும் டேக் ஆஃப் ஆகாமல் அல்லவா இருக்கிறேன்...

நன்றிகள் அமர் அண்ணா...

--

ஹை.... பெரியண்ணாவின் பார்வையில் பட்டுவிட்டதா என் கதை.. இதற்கு மேல் என்ன வேண்டும் எனக்கு...??!!

அண்ணலின் மனம் சிறகு விரித்துப் பறந்தது உண்மையெனில் பல்மடங்கு மகிழ்ச்சி எனக்கு.........

நன்றிகள் பெரியண்ணா.... :)

--

சகோதரர் ஜாக்,

உங்கள் வாழ்த்துக்கு(வாத்துக்கு) நன்றிகள் கோடி...

ஏதோ சொல்ல வந்துட்டு சொல்லாம சிரிக்கிறீங்களே.... எதுனாலும் சொல்லுங்க.. நாங்களும் சிரிப்போமில்ல...... ;) :D

--

அரென் அண்ணா...

உங்க பாராட்டு கிட்டியது கண்டு மகிழ்ச்சி... நன்றிகள் அண்ணா..

மைகோதி என்பது நீண்ட கூர்மையான ஊசி போன்ற ஒரு பொருள்.. அதைக் கொண்டு பெண்கள் ஈரக் கூந்தலைச் சிக்கெடுக்கப் பயன்படுத்துவர்...

கூந்தலைக் கோதிவிட மைகோதி உதவும். அதனாலேயே மைகோதி என்ற பெயர் வைத்தனர்..

அரென் அண்ணா.. மைகோதியையே மறந்தாச்சா??? வீட்டில் அண்ணியிடம் கேட்டு பாருங்களேன்.... அவர்களுக்குக் கட்டாயம் நினைவில் இருக்கும்.

ஜாக்
25-03-2009, 03:47 AM
சகோதரர் ஜாக்,
உங்கள் வாழ்த்துக்கு(வாத்துக்கு) நன்றிகள் கோடி...
ஏதோ சொல்ல வந்துட்டு சொல்லாம சிரிக்கிறீங்களே.... எதுனாலும் சொல்லுங்க.. நாங்களும் சிரிப்போமில்ல...... ;) :D
--
இவ்வளவு தூரம் நீங்க கேட்ட பிறகு நான் சொல்லாமல் இருப்பேனா சகோதிரி. உங்கள் கதையை படித்தவுடன் அழகியதீயே படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வந்து சிரித்து சிரித்து வயறு வலித்துவிட்டது

காட்சி விவரம்

பாலா : சித்தப்பு ஒரு நல்ல காதல் கதையாக இருந்தால் ஒன்று சொல்லேன் அருமையான ஃபினசியர் ஒருத்தார் மாட்டி இருக்கிறார்

சித்தப்பு : டைட்டானிக் கதையை அப்படியே கிராமத்து பானியில் உல்டா செய்து மிக அருமையாக சொல்லி கொண்டு இருக்க உண்மை தெரியாமல் வாய் பிலந்து கேட்டு கொண்டு இருக்கிறான் பாலா

பாலா : அருமையான கதை சித்தப்பு ப்டம் கண்டிப்பாக 100 டேஸ் என்று மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் தருவாயில் அவன் பின் மண்டையில் பிரசன்னா அடித்து

பிரசன்னா : ஏன்னா அவன் டைட்டானிக் கதையை உல்டா செய்து சொல்லி கொண்டு இருக்கிறான் அதை போய் இப்படி மாங்கு மாங்கு பாராட்டுரியே என்று சொல்ல*

பாலா சித்தப்புவை பார்த்து : கடைசியில் என்னை கேனையன் ஆக்கிட்ட பார்த்தியா நீ என்று சொல்ல இடம் கலகலப்பாகிறது


கடைசியாக பாலா சொன்ன வசனத்தை அடியேன் சொல்வது நினைத்து பார்த்தேன் அதான் சிரிப்பு வந்துவிட்டது:lachen001::lachen001:

அப்புரம் வாழ்த்தை (வாத்தை) இப்போது சரி செய்துவிட்டேன் சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்:)

பூமகள்
25-03-2009, 05:12 AM
ஹா ஹா..... ரொம்ப காமெடியான ஆளு தான் நீங்க...

ரொம்ப பிடிச்ச ரசிச்ச படம் அழகிய தீயே... அதனை நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள் சகோதரர் ஜாக்....

இதைச் சொல்லவா இத்தனைத் தயக்கம்.... ஆக மொத்தம் கதை காமெடியாக இருந்து உங்களைச் சிரிக்க வைத்ததெனில் மகிழ்ச்சியே.... :)