PDA

View Full Version : பேய்க்காதலி



ஆதவா
16-03-2009, 03:56 PM
பேய்களுக்கும் எனக்குமுண்டான அளவில்லாத காதல் இன்றுவரையிலும் முடிவில்லாத தூரத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. முன்பு சில மாதங்களுக்கு முன்னர் வெறுமை படிந்த அறையில் தனிமையைத் துணைக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த பொழுதுகளில் பேய்களோடுதான் என் காதல் ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு இரவும் என்னோடு புணர்ந்த பேய்கள் மறுநாள் விடிவை நெருங்குவதற்குள் இறந்தோ, அல்லது மறைந்தோ விடுகின்றன. இருளும் இருள் சார்ந்த பொருளும் ஒவ்வொரு தினத்திய பேய்களை உற்பத்தி செய்வதற்காக காத்திருக்கும் பொழுது என் கோரைப்பாய்க்கு அடியில் உலர்ந்து போன காதலும் காத்திருக்கும்.

பேய்களுக்கும் எனக்குமான தொடர்பு மிகச் சிறுவயதிலிருந்து தொடங்குகிறது. அதன் தொடக்கத்தில் என்னை இறுக்க அணைத்துக்கொண்டு இரவுகளில் சுற்றியலையும்.. கனவுகளுக்குப் பதிலாக பேய்கள் நடனமிடுவதை பல நாட்கள் உணர்ந்திருக்கிறேன். திகில் படக் கதாநாயகிகளைப் போன்று இரவில் அலறி விழித்து எனக்கருகே இருக்கும் பொருட்கள் தூரத்தில் ஓடுவதைக் கண்டு பிரமை பிடித்தவன் போல அமர்ந்திருப்பேன். பேய்கள் என்னைக் காதலிக்கத் தொடங்கிய தினங்கள் அவை. அவைகளின் முத்தங்களின் அளவுக்கு எண்ணிக்கை இல்லாமல் போகவே, என் பெற்றோருக்கு இந்நிலையைச் சொல்லவேண்டிய கட்டாயம். தூக்க கலக்கத்தில் அப்பா எழுந்து என்னாச்சுடா என்பார். அவர் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மிக மெல்லிய குரலில் பேசுவதாகவும், அவர் நீட்டும் கரங்கள் என் அருகே நீண்டு என்னைக் குத்துவதாகவும் தோன்றும். அவர் என்னுடைய நிலையை அவர் புரிந்து கொண்டாரா இல்லையா என்று தெரியாது. ஆனால் என்னை பேய்களிடமிருந்து பிரிக்கு உத்தியை நன்கு அறிந்திருந்தார். ஒருவகையில் என் அப்பா ஒரு பேயோட்டிதான். அந்த சிறு அறையில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்குத் தட்டில் கிடந்த திருநீறை எடுத்து என் நெற்றியில் பூசிவிடுவார். "அப்பா, அப்பவும் பேய் போகலைன்னா" என்று சந்தேகத்தோடு கேட்பேன். கையில் புதிய ஏற்பாடு ஒன்றைக் கொடுத்து அந்த விளக்கு வெளிச்சத்தில் படிக்கச் சொல்லுவார். நான் படித்த பள்ளி கிறித்துவப் பள்ளி என்பதால் அருகே இருந்த தேவாலயத்திற்கு தினமும் செல்வது என் வழக்கமாக இருந்தது. அங்கே சுவிசேஷ பாடல்கள் (சுவிசேஷம் என்பது சரியான சொல்லா தெரியவில்லை), குறும் பைபிள்களும், இலவசமாகக் கிடைக்கும்.. அவை பின்னுக்கு என் பேயோட்டும் புத்தகங்களாக இருக்கப் போகின்றன என்பதை அறியவில்லை.

கனவுகளில் நீங்கள் நவீன ஓவியங்களைக் கண்டிருக்கிறீர்களா. மெலிந்த சிவப்பு வர்ணத்தில் நடுவே இருந்து பிம்பம் உடைந்ததைப் போன்ற விரிசல்க்ளுக்கு இடையே பூத்திருக்கும் மரக்கிளைகளில் ஒன்றில் நான் அமர்ந்திருப்பேன். எனக்கு அடுத்த கிளையிலிருந்து ஒழுகும் இரத்தத்தை நக்கிக் குடித்தவாறு பேயொன்று தொங்கிக் கொண்டிருக்கும்.. பார்க்க பயங்கரமான காட்சிதான். இது என் உறக்க காலத்தில் எத்தனை நொடிகள் நீண்டது என்பது தெரியாது. ஆனால் அடுத்த நொடியில் பிம்ப விரிசல்களின் ஒவ்வொரு கீற்றுகளிலும் என் அங்கங்கள் சிதறிக் கொண்டிருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கிட்டத்தட்ட ஓவியங்களை ஒத்திருந்தன பேய்கள் என் காதில் ஓதிய கவிதைகள். இருளும் நிசப்தமும் உடன் ஓடிவரும் சொற்களை மடித்து கவிதைகள் கொட்டின. அவைகளின் ஓங்காரத்தில் கொட்டிய கவிதைகளிலெல்லாம் யாருடைய குருதியோ நிறைந்திருக்கும். (செவ்விழி எனும் என் கனவுக் கவிதையைப் படித்த பழைய நண்பர்களுக்கு நினைவிருக்கலாம்.)

தற்காலிக பேயோட்டிகள்தான் என் வாழ்நாளில் பலநாட்களில் நான் கண்டிருந்தவையாக இருந்தது. பைபிள்கள் காகித அரிப்பில் இரத்தம் தீர்ந்துபோய் இறந்து கிடந்தன, ஆன்மீக முடிச்சுகளை அவிழ்த்து விட்டதால் எந்த புத்தகமும் பேயோட்ட முன் வரவில்லை. பெரும் மரணத்தினிடையே போராடி எழும் மனிதர்களைப் போன்று உறக்கத்தில் எழுந்து, மாளாத் துயரில் அங்கங்கள் வெடித்து இறக்கும் நொடிகளைப் போன்று பேயோடு உறவாடிக் கொண்டிருந்த அந்த இரவுகளை எப்படி மறப்பது? கொஞ்சம் வயது ஆகிவிட்டது. இந்த விஷயத்தை யாரிடம் சொல்லுவது எனும் மானப் பிரச்சனையாக வேறு இருந்தது. பேய்கள் என்னை நிர்வாணமாக்கி நடுச்சாலையில் நிற்கவைத்ததைப் போன்று ஒவ்வொரு இரவுகளிலும் மானம் பறிபோனது.

பின்வந்த நாட்களில் வேறு வழியின்றி எனக்குத் தெரிந்த ஒரு சென்னை தோழியிடம் என் பிரச்சனையைப் பகிர்ந்தேன். சாதாரணமாக யாரிடமும் சொல்லக்கூடாதென்று நினைத்த விஷயங்களை வேறு வழியின்றி சொல்லவேண்டியதாக ஆக்கிவிட்டது.. அந்த தோழியும் ஒரு கிறித்துவள் என்பது குறிப்பிடத்தக்கது. அவளை நேரில் கண்டதில்லையெனினும் அவளே எனக்கு நிரந்தர பேயோட்டியாக இருந்திருக்கிறாள் என்பது அப்பொது தெரியாமல் போய்விட்டது. யோகாக்களில் கவனத்தைச் செலுத்தச் சொன்னாள். பதினைந்து நாட்கள் யோகா என்று "வாழ்க வளமுடன்" வேதாத்திரி மகரிஷியின் யோகசாலைக்குப் பயிலச் சென்றேன்.எனது இரவுகளை மர்மமாக்கிக் கொண்டிருந்த பேய்கள் யோகசாலையில் பயின்ற தியானங்களால் சற்று இரங்கவேண்டியதாக ஆகிவிட்டது. தியானங்களின் ஆற்றலுக்கு என்னைப் பீடித்திருந்தவைகள் மெல்ல மெல்ல அகலத் துவங்கின. பதினைந்தாம் நாளில் என்னோடுண்டான தொடர்ப்பை முற்றிலும் அற்றுவிட்டு வேறு எவரையோ பீடிக்கச் சென்றுவிட்டது பேய்கள்.

இப்பொழுது பேய்கள் இல்லாத இரவுகளைத்தான் ஒவ்வொரு நாளும் கழித்துக் கொண்டிருக்கிறேன். தியானங்களுக்கான பேயோட்டும் வேலை பதினைந்தாம் நாளோடு முடிந்துவிட்டது. என்னைவிட்டு அகன்ற பேய் இப்பொழுது எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை. தூரத்தில் இருக்கும் பொழுதுதான் காதலியின் அருமை புரியும். இரவுக்காதலியாக வலம் வந்த பேய்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றன என்று தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் பேய்களைப் போன்று எனக்கு நவீன ஓவியங்களையும் கவிதைகளையும் புகுத்தியவர்கள் வேறு எவருமில்லை!

அறிஞர்
16-03-2009, 04:06 PM
திகிலோடு எங்களை படிக்க வைத்துவிட்டீர்கள்.
எந்த புத்தகமோ, பொருளோ பேயை ஓட்ட இயலாது.
பார்க்கும் படங்கள், சிந்தனைகளால் ஏற்படும் பாதிப்பு தான் அதிகம். இதை கட்டுபடுத்துவது.. தியானங்கள், ஜெபங்கள்... போன்றவைகள்.
யோகா கற்ற சிலர்... முதலில் நன்றாக இருப்பதாக கூறுகிறார்கள். அதிலே மூப்பு நிலை அடையும்பொழுது... ஒருவிதமான ஆக்கிரமிப்பை உணர்வதாக கூறுகிறார்கள்.
(சில கிறிஸ்தவர்கள் யோகாவை தவிப்பது நல்லது என்றும் கூறுகிறார்கள்)

ஆதவா
16-03-2009, 05:02 PM
மிக்க நன்றி அறிஞரே! எனக்கு அந்த பெண் சொன்ன தகவல்தான் பல பிரச்சனைகளிலிருந்து விடுப்பாக இருந்தது!!

அறிஞர்
16-03-2009, 05:04 PM
மிக்க நன்றி அறிஞரே! எனக்கு அந்த பெண் சொன்ன தகவல்தான் பல பிரச்சனைகளிலிருந்து விடுப்பாக இருந்தது!!
எப்படியோ நல்லா இருந்தா சரிதான்...
பெண்ணிடம் இன்னும் தொடர்பு இருக்கா.. :mini023::mini023::mini023::mini023::mini023:

ரங்கராஜன்
16-03-2009, 05:19 PM
நல்ல திரி ஆதவா, ஆனால் ஒரு சந்தேகம் இது நிஜ சம்பவங்கள் என்ற பகுதியில் இருந்தால் நன்றாக இருக்கும்.

அப்புறம் உன்னுடைய கட்டுரை படித்த பின் எனக்கும் என்னுடைய பால்ய காலம் ஞாபகம் வந்து விட்டது. சின்ன வயதில் நான் உன்னை போல தான் வேண்டாத விஷயங்களை கற்பனை செய்துக் கொண்டு படுக்கையை நனைத்து இருக்கிறேன். அதுவும் பேய் படங்கள் எல்லாம் பார்த்து விட்டால் அவ்வளவு தான் என்னுடைய அம்மா அன்று இரவு செத்தாள் என்னிடம்.

”ம்மா எதோ சத்தம் கேட்குதுமா”

“இல்ல டா தங்கம் தூங்குடா” . கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு

“ம்மா நிஜமாகவே கேட்குதுமா”

“எருமை மாடே தூங்கித் தொலை, பேய் படம் பார்க்காதனு சொன்னா கேட்டாதானே” என்பாள் தூக்க கலக்கத்தில். கண்களை இறுக்க மூடிக் கொண்டு தூங்க முயல்வேன். அவ்வளவு தான் நான் பார்த்த படத்தில் வந்த பேய் என்னை தரத்தர வென்று இழுத்துக் கொண்டு போவும். ஆரம்ப காலத்தில் என்னுடைய நண்பனிடம் இதை பற்றி பேசுவேன், 4 காவது படிக்கும் பொழுது அப்பொழுது அவன் எனக்கு ஒரு விஷயத்தை புரியவைத்தான்.

“டேய் பேய் எல்லாம் நம்பள ஒண்ணும் பண்ணாது டா, நாம இந்து தானே. நேத்து போட்ட அமாவாசை இரவில் படத்தில் பார்த்தியா அது கிறிஸ்டின் பேய் டா அவங்கள தான் பிடிக்கும். பாரு பேய் படம் எல்லாமே கிறிஸ்டின் சமாதியில் தான் இருக்கும்”

“ஆமா டா, நேத்து பார்த்த படத்துல கூட சிலுவ இருந்தது டா”

ஒரு வாரம் தைரியமாக சுற்றினேன், எந்த பயமும் இல்லை, அப்புறம் தான் அந்த விபரிதம் நடந்தது.

அடுத்த வாரம் டிவியில் ”யார்” பேய் படம் போட்டார்கள். அவ்வளவு தான் நடுங்க ஆரம்பித்து விட்டது. அடுத்த நாள் நண்பனிடம்

“டேய் லூசு பார்த்தியாடா இந்து பேய் கூட இருக்குடா”

“ஆமா டா நானே நேத்து பார்த்து பயந்துவிட்டேன்”

“நீ தானடா சொன்ன இந்து பேய் இருக்காதுனு”

“எங்க அப்பா தாண்டா சொன்னாரு”

பேய்களின் பயங்கள் என்னை துரத்த ஆரம்பித்தது, 10 வது படிக்கும் பொழுது கிருஷ்ணகிரி என்னும் இடத்தில் தங்கி படிக்க வேண்டிய சூழ்நிலையில், ஈபி சப்ஸ்டேஷனில் எங்கள் வீட்டுக்கு எதிரே சுடுகாடு பிணங்கள் இரவில் எரிப்பார்கள். அது என்னுடைய பெரியப்பா வீடு அவர்கள் அனைவரும் இரவு 8 மணிக்கு தான் வருவார்கள், அவர்கள் வரும் வரை தனியாக தான் இருப்பேன். பிணங்கள் எரியும், வாடை மூக்கை தொலைக்கும், திடீர் என்று பிணங்கள் ஏந்திரிக்கும், நரம்புகள் சுருங்கி. எனக்கு குலை நடுங்கும், நாளாக நாளாக பழகி விட்டது, மாலை வந்தது டிவி பார்ப்பது போல பிணங்கள் எரிவதை எங்கள் வீட்டு மாடியில் இருந்து பார்ப்பேன். பிணங்கள் அன்று எரியவில்லை என்றால் எனக்கு போர் அடிக்கும் அளவுக்கு பழகிப்போனது. சூலகிரி இன்னும் மோசம், பை பாஸ் ரோடு பக்கத்தில் வீடு என்பதால் கொத்து கொத்தாக உயிர் போவதை பார்த்து இருக்கிறேன், ஒரு நாளைக்கு ஒரு விபத்தாவது ஆகாமல் இருக்காது. கண் எதிரில் ஒரு உயிர் பிரிவது ரொம்ப பயங்கரமான ஒன்று, அப்பொழுது நான் 8 வது படித்துக் கொண்டு இருந்தேன், மனிதனா? அல்லது எதாவது நாயா? என்று தெரியாத அளவு பிணம் ரோட்டோடு ஒட்டிக் கொண்டு இருக்கும், அந்த ரோட்டில் நொடிக்கு பத்து லாரி போய் கொண்டே இருக்கும்.

மனம் இதையெல்லாம் பார்த்து பார்த்து எனக்கு மறத்து போய்விட்டது. என்ன வாழ்க்கை, ஒரு நிமிஷத்திற்கு முன்னாடி பார்த்த ஆள் லாரி மோதி அதே இடத்தில் இறந்து விட்டார். இதில் பேய்களை நினைத்து எங்கு பயப்படுவது, வாழ்க்கையை பார்த்து தான் பயப்படவேண்டி இருக்கு.

ந்

ஆதவா
17-03-2009, 01:21 AM
மிக்க நன்றி daks.

நிஜ சம்பவங்களுக்கு நகர்ந்த்தவேண்டுமெனில் எனது சில கவிதைகளும் ஏன், கதைகள் கூட நகர்த்தவேண்டியிருக்கும். இந்த அனுபவக் கட்டுரையே பேயைக் காதலியாக்கி முரணாக எழுதப்பட்டிருக்கும். பேய் என்பது பிரமை.. உருவம் அல்ல. கொஞ்சம் சிக்கலான வார்த்தைகள் நிரப்பியிருப்பதால் இது இங்கேயே இருப்பது நல்லது!!

எனக்கு உன்னைப் போன்ற அதீத அனுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஒருமுறை மட்டுமே விபத்தை நேரில் (கிட்டத்தட்ட) கண்டு ஒருவர் இறந்ததைப் பார்த்திருக்கிறேன்..

ரங்கராஜன்
17-03-2009, 02:57 AM
மிக்க நன்றி daks.

நிஜ சம்பவங்களுக்கு நகர்ந்த்தவேண்டுமெனில் எனது சில கவிதைகளும் ஏன், கதைகள் கூட நகர்த்தவேண்டியிருக்கும். இந்த அனுபவக் கட்டுரையே பேயைக் காதலியாக்கி முரணாக எழுதப்பட்டிருக்கும். பேய் என்பது பிரமை.. உருவம் அல்ல. கொஞ்சம் சிக்கலான வார்த்தைகள் நிரப்பியிருப்பதால் இது இங்கேயே இருப்பது நல்லது!!

எனக்கு உன்னைப் போன்ற அதீத அனுபவங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஒருமுறை மட்டுமே விபத்தை நேரில் (கிட்டத்தட்ட) கண்டு ஒருவர் இறந்ததைப் பார்த்திருக்கிறேன்..

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ ஆதவா என் கூட பேசிட்டான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்,

நன்றி ஆதவா

காரணத்தோடு தான் இந்த பகுதியில் இருக்கிறது என்றால் பரவாயில்லை, தொடர்ந்து எழுது...

பா.ராஜேஷ்
17-03-2009, 07:26 AM
கிராமத்தில் இது போன்று பேய் பிடிப்பதும் அதை ஓட்ட நடக்கும் சம்பவங்களும்தான் எத்தனை. விழிப்புணர்வு ஏற்படுத்த செய்ய முயற்சிகளின் எல்லாம் வினாகி இப்போது ஊடகங்கள் தெளிவு படுத்துகின்றன. பேய் பிடித்திருப்பது ஒரு மனோ வியாதியே.
இருப்பினும் இந்த படைப்பை ஒரு சம்பவமாக கருதுகையில் நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்