PDA

View Full Version : ஞாபக நகங்கள்



ஆதவா
14-03-2009, 06:25 AM
இன்றைய காலையில் நகவெட்டியைத் தேடிக் கொண்டிருந்தேன். வெள்ளிக்கிழமையும் அதுவுமா நகத்தை வெட்டாதே என்று அம்மா திட்டியதை ஒரு காதில் நுழைத்து இன்னொரு காதில் உருவியெடுத்துவிட்டு நீண்டு கூர்ந்திருந்த நகத்தை வெட்டுவதற்காக ஆயத்தமாகியிருந்தேன்.. அது ஏனோ, நான் நகங்களை வெட்டும் நாட்கள் வெள்ளி அல்லது சனிக்கிழமையாகவே அமைந்துவிடுகிறது.. என்னுடைய அன்றாட திட்டமிடுதலிலிருந்து தப்பிச் சென்று நகங்கள் நீளுகின்றன. அதற்கான பொழுதுகளை எதிர்பார்ப்பதுமில்லை. கொஞ்சம் பின்னோக்கிப் பார்த்தால், வெட்டப்படும் நாட்கள் எல்லாமே வெள்ளி அல்லது சனியாக இருப்பது என்ன காரணத்தினால் என்பது தெரியவில்லை. கிழமைகள் என்றுமே உகாததாக இருப்பதில்லை. அவைகள் எந்தவொரு நோக்கத்தோடும் பிறப்பதில்லை, ஒருவேளை மூடநம்பிக்கைகளை உடைத்தெறியும் காரணத்தின் பொருட்டு எனக்குள்ளாகவே என்னை அறியாமலேயே அந்த நாட்களை நகம் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கிறேனோ?

நகங்கள் உடலின் ஒரு பாகம் என்று நினைக்கும் பொழுது சிரிப்பாக இருக்கிறது.. அவை எங்கிருந்து முளைக்கின்றன, அதன் வேர் என்ன எனும் ஆராய்வுக்கு இதுவரையிலும் சென்றதில்லை (இளசு அண்ணா சொல்வார் என்று நினைக்கிறேன்) பலருடைய விரல்களைக் காணும் பொழுது அவர்களின் நகம் எப்படி இருக்கிறது என்பதை மட்டும் அவதானிப்பேன். சிறு வயதில் நகங்களில் பூ பூக்கிறது என்று (வெள்ளைப் படுதல்??) ஒவ்வொரு விரலையும் எண்ணிக் களித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. அது ஒரு நம்பிக்கை. அதிகம் பூ உள்ளவர்களுக்கு நல்ல மனைவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்பொழுது எண்ணினால் ஓரிரண்டு தேறுகிறது.

வெகு சில நாட்களுக்கு முன்னர், இடதுகை ஆட்காட்டி விரலில் அடிபட்டு இரத்தம் நகங்களின் இடுக்கு வழியே ஒழுகிக் கொண்டிருந்த பொழுது, நகங்களின் முழுமையான பணி என்ன என்பதை முழுமையாகவே உணர்ந்து கொண்டேன். விரல்கள் கண்களாக இருக்கின்றன. நக இடுக்குகள் என்றுமே மூடிக்கொண்டிருக்கின்றன அல்லது பாதுகாப்பாக இருக்கின்றன. முட்டி ஓடும் இரத்த நீரை அது வெளியேற்றவிடாத பாதுகாவலனாக, விரல்களின் வலிமை அரணாக இருந்துவருகிறது. விரல்கள் அற்றவர்களுக்கு நகங்கள் வெட்டவேண்டும் என்ற அவசியம் நேராததை நினைக்கும் பொழுது நமக்கு ஏன் அது வளரவேண்டும், வளர்ந்து நறுக்கவேண்டும் என்று தோணுகிறது.. இது சோம்பேறித்தனத்தின் எண்ணங்களா இல்லை கையற்றவர்களைப் பற்றி நினைக்கும் கையறு நிலையா என்பது தெரியவில்லை.

சிலசமயம் யோசனைகளை மீறும் பொழுதோ அல்லது யோசனைகளை கயிறு கட்டி இழுக்கும் பொழுதோ, நகங்கள் உணவாவதை நிதானித்திருக்கிறேன். இரவு மொட்டை மாடியில் நகங்களைக் கடித்துத் துப்பாமல் விழுங்கும் பொழுது அது குடலைக் கிழித்து செல்லுவதைப் போன்றும் தொண்டையில் அடைத்து சிறுநாக்கைச் சுரண்டுவது போலவும் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அதே உணர்வோடு உணர்வாக மீண்டும் நகங்களைக் கடிப்பது எதற்காக என்று எனக்கும் தெரியவில்லை. நகம் தின்னுவதில் பெரும்பாலும் எனது கட்டை விரல்கள் முன்னுக்கு வருவதில்லை, ஏனைய நான்கும், குறிப்பாக சுண்டுவிரல் நகம் என் பசிக்கு இரையாவதை எல்லா நாட்களிலும் தவிர்க்க முடியவில்லை. கடித்து அப்படியே விழுங்காமல், அதை சிறுசிறு துகள்களாக செதுக்கி, நாக்கால் குழைத்து பின்னரே விழுங்க நேரிடுகிறது. நகங்களின் வளர்ச்சி எப்படி தெரியாமல் இருக்கிறதோ அதைப் போன்றே விழுங்குவதும் எனக்குத் தெரியாமல் நடக்கிறது. எல்லா நாட்களிலும் நகங்களை வெட்டிய பின்னரும், கடிப்பதற்குத் தோதாக நகங்கள் முட்டி நிற்கின்றன. எந்தவொரு சூழ்நிலையிலும் கடிப்பதற்கு இல்லை என்று வெசனப்பட்டதில்லை.

சென்ற ஞாயிறில் ஒரு வீட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு குழந்தையைக் கொஞ்சுவதற்காகத் தூக்கினேன். என்னை அறியாமல் என் கைவிரல் நகம் பட்டு அக்குழந்தையின் இடுப்பில் சிறு கீற்று படிந்து இரத்தம் மெல்ல எட்டிப் பார்த்தது. அக்குழந்தையின் கதறலையும் மீறி எனக்குள் நகம் குறித்த வெறுப்புகள் அழுந்தின. நகங்களை வெட்டுவதில் நான் என்றுமே பிரயத்தனப்பட்டதில்லை. அது கண்ணுக்குத் தெரியாத ஆயுதமாக என்னுள் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆயுதங்களுக்கு எந்தவித நோக்கமும் இல்லாமல் இருப்பது போன்று நகங்கள் இருக்கின்றன. பல சமயங்களில் ஆயுதங்களைப் பற்றிய வரையறையிலிருந்து நகங்கள் மட்டும் தப்பித்துச் செல்ல நேர்ந்ததை நினைவுகூர்ந்தேன். அறுதியிட்டு சொல்லமுடியாத தொலைவில் நகங்கள் இருக்கலாம் என்று எனக்கு நானே சமாதானமும் சொல்லிக்கொள்ள வேண்டியதாயிற்று. என்றாலும் யார்மீதோ பட்டு கிழிக்கும் ஒரு ஆயுதமாக எண்ணிப் பார்க்கும் வெறுப்பிலிருந்து நகங்களைக் குறித்த என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள இயலவில்லை.

பொதுவாக, பெண்களுக்கு நகங்கள் வளர்ப்பதில் சிறிது விருப்பம் இருக்கின்றது,. அது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான ஆயுதமாக விளங்கியிருக்கலாம். எனக்கு பெண்களின் நக அழகு மிகவும் பிடித்த விஷயம். அவர்கள் அதைப் பாதுகாப்பதும் நகப்பூச்சு பூசி அழகுபடுத்துவதும் சொல்லமுடியாத உணர்வுகள்... ஒரு சில பெண்களின் நகங்களில் சிறு சிறு பூக்கள் வரைந்து அழகுபடுத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். நகங்கள் வளர்ப்பது சிலருக்குப் பொழுது போக்காகக் கூட இருக்கிறது. எங்கள் பழைய வீட்டில் ஒரு மாமா இருந்தார். அவரது இடது கட்டை விரலிலும் ஆட்காட்டி விரலிலும் ஒரு செ.மீட்டர் அளவிற்கு நகங்களை வளர்த்து வைத்திருப்பார். அவர் ஒரு தையல்காரர் என்பதால் துணிகளை மடித்து தேய்க்க அந்நகங்கள் உதவுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். கத்தியின்றி வெங்காயம் நறுக்கும் பொழுது, ஏதாவது ஒரு பொருளை சுரண்டும் பொழுது, சிலசமயம் உடலைச் சொறியவும் கூட நகங்களுக்கு வேலைகள் இருக்கின்றன.

ஆயுதங்கள் நீண்டால், ஒடுக்கப்படவேண்டும் என்ற நியதிப்படிதான் நகங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டிய நகத்தினைக் குப்பையில் கொட்டும்பொழுது புன்னகை இதழோரம் முளைத்துவிடுகிறது. படித்து கிழிக்கப்படும் கவிதையைப் போன்று விரல்களைப் பாதுகாக்கும் பணியிலிருந்து விலகிவிட்ட நகங்கள் யாருக்கும் தெரியாமல் எங்கோ சென்றுவிடுகின்றன. ஈரமற்ற அதன் நெஞ்சிலிருந்து கண்ணீர் முட்டி நிற்பதைப் போன்ற பிரமை தோன்றுகிறது. உங்களுக்கு அப்படியேதும் தோன்றுகிறதா?

பா.ராஜேஷ்
16-03-2009, 06:36 AM
நகம் சில சமையம் பெண்களின் ஆயுதம். சில பெண்களோ இயற்கையான நகத்தின் மேல் செயற்கையான் நகத்தையும் பொருத்துகின்றனர். அதன் மேல் எத்தனை எத்தனை வண்ணங்கள்? ஜொலிக்கும் மின்மினிகள்!! நகத்தையும் ஒரு ஆடம்பர பொருளாக கருதும் பெண்களும் உண்டு. நகத்தை நம்பித்தான் எத்தனை பேரின் வாழ்க்கை உள்ளது!! விந்தைதான்.

விரல்களும் பலவிதம், நகங்களும் பலவிதம். நகம் வளர்ப்பை கூட கண்ணும் கருத்துமாக செய்பவர்களும் உண்டு. கின்னஸ் புத்தகத்தில் கூட நகம் வளர்த்து இடம் பெற்றவர்களும் உண்டு. நகத்தை சுத்தமாக பராமரிக்காமல் விட்டு விட்டால் அதுவே உடல் ஆரோக்கியத்திற்கு எதிரியாக போய்விடும்.
நகத்தை பற்றிய அருமையான சிந்திக்க தூண்டும் கட்டுரை!!