PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 10



rambal
11-09-2003, 12:55 PM
நீ ஒரு மனநலமருத்துவரைப் பார்ப்பதே நல்லது என்று அவள் கூறுகிறாள்..

சமீபகாலமாக இதை உன்னிடம் இருந்து நான் எதிர்பார்த்ததுதான்..

அன்பைத்தேடி ஓடும் நான் மனநலமருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால்..
உலகில்.. பசி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், மற்றும் பல
பிரச்சினைகளையும் மனநலமருத்துவர்களே தீர்த்துவிடலாமே..

நியாயமற்ற உலகில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..
எங்கு நியாயம் இருக்கிறது?
இடத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியாக மனிதர்கள் இருக்கிறார்கள்..
அது பச்சோந்தியின் இயல்பு... மனிதர்களுடையது அல்ல...

எல்லா மிருக குணங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து செய்யப்பட்ட கூட்டு சாராம்சமாக
மனிதன் விளங்குகிறான்.. அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு என்றாலும், மனிதனின் தனித்துவமே
மனிதாபிமனம்தான்.. அதை விட்டொழித்து மிருகங்களின் பிரதிநிதியாக இன்றைய உலக மனிதன் மாறிவிட்டபிறகு..

காலம் என்னைத் துரத்துகிறது வெறி கொண்ட வேட்டை நாயாய்.. அன்பில்லா உலகில் அன்பைத்தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்..
கிடைத்தது அன்பு என்று நினைத்து புளகாங்கிதம் அடைவதற்குள் அது துரோகம் என்று பல் இளிக்கிறது..

குந்தி வந்து அழைத்தும் பாண்டவர்களோடு சேர மறுத்து, இறுதி வரை துரியோதனனோடு இருந்து உயிர் நீத்த கர்ணனைப்
போன்ற நட்பு இன்றைய உலகில் சாத்தியமா?

அண்ணன் தவறு செய்த பொழுதும் அவனோடு இறுதி வரை இருந்து மாண்டு போன கும்ப கர்ணனின்
பாசம் அவசர உலகில் எழுப்பப்பட்ட கட்டிடக்காட்டிற்குள் எந்த கட்டிடத்தினுள் சென்று ஒளிந்து கொண்டது?

போலியான புன்னகை, எந்த கணத்திலும் கவிழ்த்துவிடுவேன் என்ற பார்வை.. முகமூடிகள் இங்கு ஏராளம்..
முகமுடியைக் கழற்றுவது பாபமெனும் இடத்தில் என் முகமுடி எதுவெனத் தெரியாமல் திணறும் என்னை ஒரு பைத்தியக்காரனாய்
வேடிக்கை பார்க்கிறது இந்த உலகு..

சாலை விபத்தில் அடி பட்டவனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது கூட்டம்..
முதலுதவி இல்லாமலேயே செத்துப் போகிறான் அவன்.. பரிதாபமாய் சில உச்சுக் கொட்டுக்கள் கூட்டத்தில் எழுகின்றன..

திண்ணை வைத்து வீடு கட்டும் வழக்கம் இருந்த என் சமூகம் இந்த நிலைக்கு ளானது எப்போது?

இந்த உலகம் பல அற்புதங்களையும் சில ஆச்சரியங்களையும் மட்டுமல்ல.. அளவிற்கு அதிகமான அசிங்கங்களையும் கொண்டுள்ளது..

கருணையின் குடியிருப்பாகக் கருதப்படும் மருத்துவமனைகளில் வெறும் இருநூறு ரூபாய்க்காக பிறந்த குழந்தைகள்
பெற்றவளுக்குத் தெரியாமல் செவிலித்தாய்களால் பிச்சைக்காரிகளிடம் விற்கப்பட்டு கொதிக்கும் வெயிலின் வெப்பம் தாங்காது
மரிக்கின்றன.. அந்த பிஞ்சுகள் செய்த பாவம் என்ன? இந்தக் கொடூர பூமியில் பிறந்ததைத்தவிர..
ஓர் உயிரின் விலை வெறும் இருநூறுதானா?

பெற்றவர்களால், சகோதரனால், தாலி கட்டியவனால் வேசைத் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் எத்தனை?

அனைத்து உயிர்களையும் அடித்துத் திண்ணும் அதிகாரத்தை மனித இனத்திற்கு கொடுத்தவன் நிச்சயமாக கொடுங்கோலன்தான்..

இந்த உலகம் மனித உயிர்கள் சாகும் தருவாயில் ஒலிக்கும் மரண ஓலத்தின் சப்தத்தால் நிரம்பியுள்ளது..
சகமனிதனை கொன்று ருசிபார்க்கும் மனிதர்களின் அதிகார எகத்தாளத்தால் நிரம்பியுள்ளது..
ரத்த வாடை எங்கும் வீசுகிறது.. எனது நாசியில் ரத்தவாடை அடிக்கிறது..
பயம் கொள்கிறேன்.. வேறு ஒருவன் எனது ரத்த வாடையை சுவாசிக்காமல் இருக்கவேண்டும் என்று..

மரணம் உன்னைத் துரத்த உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியிருக்கிறாயா?
பத்து பேர் கொண்ட கும்பல் பயங்கர யுதங்களுடன் உன்னைத் துரத்த.. அவர்களிடம் மாட்டிக்கொண்டால் உன் மரணம் உறுதி..
அவர்களை எதிர்க்கும் அளவிற்கு உன்னிடம் யுதங்கள் கிடையாது..
இது போன்ற தருணங்கள் உனக்கு வாய்த்திருக்கிறதா?

இது போன்று, எத்தனை முறை மரண பயத்தை நீ அனுபவித்திருக்கிறாய்?

இதெல்லாம் உனக்குப் புரியாது..

முதன்முதலில் காரணமின்றி தவறுதலாக ஒரு கும்பலால் அடிபட்டு.. உயிர் பிழைத்து தேறி வந்தது அபூர்வம்..
அன்றைய தினம் ரத்தக்காயங்களுடன் அழுது புலம்பி ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லாத தனிமை
என்னை மிரட்டியது.. இந்த கேடுகெட்ட சமூகம் எனக்கென்று எதைக் கொடுத்ததோ அதைத்தான்
இந்த சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கின்றேன்..

இந்த சித்தாந்தத்தோடுதான் பள்ளி முடித்துவிட்டு கத்தியையும் தூக்கி தூர எறிந்துவிட்டு
கல்லூரிக்குள் நுழைந்தேன்.. அங்கு மீண்டும் எது என்னை கத்தி தூக்க வைத்தது? நான் செய்த தவறா?
இல்லை சமூகத்தின் பிழையா?

நான் கத்தி தூக்குவதை வெறுக்கின்றேன்.. என்னால் காயம்பட்டவனின் குருதி என் மேல் தெரிக்கையில்
ஒரு கணம் மனிதனாய் பிறந்ததற்காக அவமானம் கொள்கிறேன்..
யாரையாவது தாக்கிவிட்டு, அன்றையதினம் பலமுறை தனிமையில் அழுதிருக்கிறேன்..
அடுத்த உயிரை ஹிம்சிப்பது பாவம்.. பாவத்தின் சம்பளம் மரணம்.. பைபிள் படித்திருக்கிறேன்..
ஒத்துக் கொள்கிறேன்.. ஆனால், சிலுவைப் போர்களில் மாண்ட உயிர்கள் எத்தனை?
போர்க்களத்தில் நின்று கொண்டு எதிரே நிற்பது என் குருநாதர் என்று நாணைத் தொடுக்க மறுத்த
அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கீதா உபதேசம் புரிந்தான்..
கீதை தெரியும்.. ஆனால், குருநாதரையே அம்புப்படுக்கயில் வீழ்த்தியது எந்த வகை தர்மம்?
நான் கத்தியோடு அலைவதை காரணப்படுத்தவில்லை..

என்னை கத்தி தூக்க வைத்தது எது?
பத்து பேர் கொண்ட கும்பலிடம் காரணமின்றி அடிவாங்கி தெருவில் அநாதையாய் வீழ்ந்து பார்..
எனக்கு பயம்.. மரண பயம்.. அந்த பயத்தின் உச்சகட்டத்தில் கத்தியை எடுத்தேன்..
இனி ஓடுவதற்கு வழி இல்லை எனும் நிலையில் எலி கூட பூனையை எதிர்த்து ஒரு சீறு சீறி விட்டு
தப்பியோட முயலும்.. அதுபோலத்தான் இதுவும்..

நீ ஒரு கும்பலோடு இருக்கையில் கத்தி தேவையிராது..
உன்னைச்சுற்றியிருக்கும் உன்னைச்சார்ந்த கும்பல் கலைந்த பிறகு,
உன்னை வெட்ட வேறு ஒரு கும்பல் காத்துக் கொண்டிருக்கிறது என்று தகவல் வந்து சேர்ந்தால்..
கையில் கத்தியில்லாமல் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடிய ஓட்டம் எனக்கு மட்டுமே தெரியும்..

நான் யாரையும் கும்பலோடு சேர்ந்து தாக்குவதில்லை..
தனித்து ஒற்றைக்கு ஒற்றையாகத்தான் தாக்குகிறேன்.. இந்த விஷயத்தில் ராமன் கூட வாலியின் மேல் துரோகம் இழைத்துவிட்டான்..

யுத்த தர்மங்களை மீறிவிட்டான்.. நான் இன்று வரை மீறவில்லை..

இனி ஒரு முறை கத்தி எடுக்கக்கூடாது என்றுதான் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறேன்..

இந்த உலகம் சிக்கல்கள் நிறைந்த புதிராக இருக்கலாம்.. அது இந்த உலகை படைத்தவனுக்கு சுவாரசியமான விஷயமாக இருக்கலாம்..
ஆனால், அன்பை ஒளித்துவைத்துவிட்டு போலிகளை நிஜம் என்று உலவ விட்டதில் அவனுக்கு என்ன பரமானந்தம் இருக்கமுடியும்?

சூரியனை நோக்கிப் பறக்கின்றன ஒருவகை பறவைக்கூட்டம்.. சூரியனை நெருங்க நெருங்க சூடுதாங்காமல் கருகி கீழே வீழ்கின்றன..
இதைக் காணும் அடுத்த பறவை உத்வேகத்துடன் முன்னேறுகிறது.. அதுவும் கருகி கீழ் வீழ்கிறது..
இதைக் காணும் கூரைக் கோழிகள் சிரிக்கலாம்.. மற்ற வகை பறவைகள் எக்காலமிடலாம்..
இருந்தபோதிலும் மீண்டும் சூரியனை அடைய முயலும் மற்றொரு பறவையின் சிறகசைப்பே எக்காலமிடும் பறவைகளுக்கு
பதிலாக இருக்கும்.. இது போன்று நானும் அன்பைத்தேடி சிறகசைக்கிறேன்.. இடைவிடாது..
சுவர்க் கோழிகளின் சிரிப்பாய் நிறைந்து இருக்கிறது இந்த உலகம்...

சேரன்கயல்
12-09-2003, 04:13 AM
சமூக அவலங்களையும், தனிமனித வாழ்வில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மிக அழகாய் படம் பிடித்து இருக்கிறீர்கள்...வார்த்தைகளின் கட்டமைப்பில் கருத்துக்கள் அழகாய் செதுக்கப்பட்டிருக்கின்றன...
தொடரட்டும் ராம்...

பாரதி
12-09-2003, 07:33 AM
மனித மனங்களில் அடிக்கடி ஏற்படும் தாக்கங்களை வெளிக்கொணர்ந்த விதம் சிறப்பு.

இளசு
13-09-2003, 07:54 AM
பத்து நாளில் பத்து பாகம்..
இந்த எக்ஸ்பிரஸ் வேகம் தொடர வாழ்த்துகிறேன் ராம்.