PDA

View Full Version : இப்படியும் வாழ்க்கை உண்டு...



சசிதரன்
09-03-2009, 01:28 PM
உறக்கம் கலைக்க யாருமில்லை என்றாலும்
ஒவ்வொரு நாளும் இரவுகள் விடியும்.
எப்படியும் ஏற்பட்டுவிடும்,
தேநீர் தயாரிக்கையில் ஒன்றிரண்டு தீக்காயங்கள்.

வழக்கம் போலவே
எனக்கான கடிதங்கள் ஏதுமின்றி
வாசல் தாண்டி போவான் தபால்காரன்.

எடுத்து பரிமாற யாருமின்றி
அவசரமாய் அள்ளி உண்ணும்போது
அம்மாவின் ஞாபகம் ஏனோ தோன்றும்.

அலுவல் நேரங்களில் நண்பர்களிடம்
எத்தனை சிரித்து பேசினாலும்...
அத்தனையும் பொய்யென்றே
உள்மனம் உரைக்கும்.

சூரியன் மெல்லமாய் மறைய தொடங்கும்.
வரவேற்க யாரும் இருப்பதில்லை என்றாலும்
பூட்டிய வீடு நோக்கி கால்கள் போகும்.

இருள் பரவிய அடர்ந்த இரவில்...
நிலவின் வெளிச்சத்தில்
வாழ்க்கை என்பதே புதிராய் விளங்கும்.

நினைத்து பார்க்க நினைவுகளில்லை...
உறங்கி போனால் கனவுகளுமில்லை
எனும்போது...

ஒரு பெருமழைக்கான ஆரம்பமாய்
விழத் தொடங்கும் தூறல் போல்...
அடிமனதில் ஓர் விசும்பல் தொடங்கும்.

நான் பணிபுரியும் அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை பற்றி யோசிக்கும்போது கிடைத்த கரு இது. பெரும்பாலானவர்கள் சென்னையை சேராதவர்கள். வாழ்க்கை ஓட்டத்தில் உறவுகளை பிரிந்து தனிமையில் வாழ்பவர்கள். ஒவ்வொரு முறை தன் ஊரை பற்றியோ, தன் குடும்பத்தை பற்றியோ பேசும்போது, ஒரு நொடி... அவர்கள் முகத்தில் பிரகாசம் கூடிப் போகும். அடுத்த நொடியிலேயே யதார்த்தம் உணர்ந்து ஒரு விரக்தியான புன்னகையுடன் நகர்ந்து செல்வார்கள். சில புன்னகைகளும் மனம் கனக்க செய்யும் என நான் உணர்ந்த தருணங்கள் அவை. அவர்களின் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்று எழுதிய வரிகள் இவை.

இளசு
09-03-2009, 09:45 PM
எனக்கு வேறு பார்வை உண்டு சசி..

யானைகள் குடும்பத்தைப் பற்றிய விவரணப்படம் பார்த்தேன் அண்மையில்..

ராஜமாதா போல் தலைமை யானை..
நடு, இளவயது பெண் யானைகள்..
ஆண், பெண் குட்டி யானைகள்...

இவையே யானைகள் குடும்பம்..

வாலிப ஆண் யானைகள் - ஒன்றையும் அங்கே காண முடியவில்லை..

ஏன்?

தேடல், முயற்சி, ஆர்வம் என தனிப்பாதை.. தனிப்பயணம்.. புது அனுபவம்.. சீலீர் வாழ்க்கை..

பாசம், ஒட்டுதல், பின்னிப் பிணைந்திருத்தல் என்பது தேங்கல்..
பிரிதல், பரவுதல், தேடுதல் என்பது பெருக்கல், கூட்டல்..

ஆதி ஜீன்களில் பொதிந்த சேதி இது..

இன்று வாலிப ஆண்களும் பெண்களும்
கல்வி, வேலை, பொருள் எனப் பரவி வளர்வது
அந்த பரிணாம ஜீன் விளையாட்டின் நீட்சி..

பிரிந்ததை நினைத்து சுகமாய் வருந்தலாம்.. தவறில்லை!
பிரிவை முறித்து மீண்டும் இணைவதில் அத்தனை லாபமில்லை!


ஒருபக்கப் பார்வையை அழகாய்ச் சொன்ன கவிதைக்குப் பாராட்டுகள்!
மறுபக்கப் பார்வையை கருத்தாடலுக்காய் வைத்தேன்.. அவ்வளவுதான்..!

சசிதரன்
11-03-2009, 03:02 PM
எனக்கு வேறு பார்வை உண்டு சசி..

யானைகள் குடும்பத்தைப் பற்றிய விவரணப்படம் பார்த்தேன் அண்மையில்..

ராஜமாதா போல் தலைமை யானை..
நடு, இளவயது பெண் யானைகள்..
ஆண், பெண் குட்டி யானைகள்...

இவையே யானைகள் குடும்பம்..

வாலிப ஆண் யானைகள் - ஒன்றையும் அங்கே காண முடியவில்லை..

ஏன்?

தேடல், முயற்சி, ஆர்வம் என தனிப்பாதை.. தனிப்பயணம்.. புது அனுபவம்.. சீலீர் வாழ்க்கை..

பாசம், ஒட்டுதல், பின்னிப் பிணைந்திருத்தல் என்பது தேங்கல்..
பிரிதல், பரவுதல், தேடுதல் என்பது பெருக்கல், கூட்டல்..
ஆதி ஜீன்களில் பொதிந்த சேதி இது..

இன்று வாலிப ஆண்களும் பெண்களும்
கல்வி, வேலை, பொருள் எனப் பரவி வளர்வது
அந்த பரிணாம ஜீன் விளையாட்டின் நீட்சி..

பிரிந்ததை நினைத்து சுகமாய் வருந்தலாம்.. தவறில்லை!
பிரிவை முறித்து மீண்டும் இணைவதில் அத்தனை லாபமில்லை!

ஒருபக்கப் பார்வையை அழகாய்ச் சொன்ன கவிதைக்குப் பாராட்டுகள்!
மறுபக்கப் பார்வையை கருத்தாடலுக்காய் வைத்தேன்.. அவ்வளவுதான்..!

மிக அருமையாய் உங்கள் பக்க கருத்தை பதிவு செய்திருக்கிறீர்கள் அண்ணா. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான். எந்த ஒரு விஷயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டல்லவா. நான் ஒரு பக்கத்தை கூறியுள்ளேன். நீங்கள் மறுபக்கத்தை சொல்லியுள்ளீர்கள். இது மட்டும்தான் அவர்கள் எண்ணங்கள் என்று கூறவில்லை அண்ணா... இந்த ஏக்கங்களும், வெறுமைகளும் கூட இருக்கும்தானே... அதனை பதிவு செய்யவே முயற்சித்தேன் அண்ணா... பாராட்டிற்கு மிக்க நன்றி அண்ணா...:)