PDA

View Full Version : சுயப்புலம்பல்



ஆதி
06-03-2009, 10:14 AM
காதாடும் தோடுக்கும் கதப்பாடும் குழலுக்கும்
வாதாடும் இதழுக்கும் வட்டாடும் விழியினுக்கும்
தோதான உவமைகள் தொகைதொகையாய் எடுத்தெழுதி
சாதாரண வாழ்வொன்றில் சரிந்துதிர்ந்து போவேனா

நயவுலகு ஆசைகளின் நயனத்தில் எனையிழந்து
வயமாகி வாழ்வினின்ப மயக்கத்தில் மூழ்கிமூழ்கி
தயவான உன்னன்பின் தண்மைதனை உணராத
பயன்கெட்ட பிறப்பென்ற பதத்தோடு சாவேனா

போதைதரும் பொருளெல்லாம் போகமென்று சேகரித்து
சூதைவிட கொடியவனாய் சுகத்துக்கு அலைந்தலைந்து
பாதையென்று பார்வைபட்ட பக்கமெல்லாம் போய்தோய்ந்து
வேதப்பொருள் உன்நினைவை வேண்டாமென் றுவிடுவேனா

முத்தணைக்கும் மங்கையரின் முறுவலுக்கு முன்விழுந்து
அத்தனைக்கும் முதலான ஐயுருவ பொருளுன்னை
சித்தணைத்து அருள்ஞான தத்துவத்தை அடையாமல்
பித்தளிக்கும் சிருங்கார பெருஞ்சேற்றில் புரள்வேனா

அங்கமெல்லாம் அண்டுகிற அந்தரங்க ஆசைகட்கு
தங்கமலர் தோகையரால் சிங்கார புனைவுசெய்து
சங்கூதி சாமரமும் சங்கடப்ப டாதுவீசி
மங்குகிற ஆயுளதில் மங்கித்தேய்ந்து தீர்வேனா

எப்பழுதில் ஆழ்வேனோ எப்படித்தான் வாழ்வேனோ
முப்பாலின் முடிவுப்பாலில் முடிச்சுண்டு முடிவேனோ
அப்பாலுக்கு அப்பாலேகி அப்பழுக்கு அற்றவுந்தன்
கப்பலுக்கு காத்திருப்பே னோசொல்க பெரும்பொருளே!

அக்னி
06-03-2009, 11:09 AM
எவையெல்லாம் தேவையோ
அவையெல்லாம் தேவையற்றுப் போகும் நிலையும்,
வாழ்வின் ஒரு சுவையே...

இந்தச் சுவை சாத்தியமா...
அசாத்தியமா...

சுயபுலம்பல்
தேவையின் எல்லையை உடைத்துச்
சுயதேடலாகையில்
மனிதன் சுயம் பெறுகின்றான்.

உலக ஆசாபாசங்களை
முழுமையாகப் பெறுவது
பரிபூரணநிலையா...
முழுமையாகத் துறப்பது
பரிபூரணநிலையா...

மனிதர்களின் நிலைகளே
தீர்மானிக்கும்...

*****
சரியாகத்தான் புரிந்துகொண்டேன் என நம்புகின்றேன்.

கவிதையின் நயம் கட்டிப்போடுகின்றது.
சொற்கவர்ச்சி சொக்கவைக்கின்றது.

பாராட்டுக்கள் ஆதி...

இளசு
08-03-2009, 11:53 PM
சித்தனை பிசைந்தூட்டுவான் கண்ணதாசன்..
கண்ணதாசனை இளக்கி ஊட்டும் ஆதி....

சொற்கிடங்கும் கருத்தூற்றும் உன் சொத்துகளா?
அசந்து நிற்கிறேன் ஆதி!

வாழ்த்துகள்!

ஆதவா
09-03-2009, 02:34 AM
என்ன சொல்ல.... வரிகள் கிடைக்காமல் ஒருவரியாய் எழுதிப்போகிறேன்.

பாராட்டுக்கள்!!!!

samuthraselvam
09-03-2009, 03:40 AM
பாராட்டுக்கள் ஆதி அண்ணா...
சுயபுலம்பல்கள், சுயமாய் தேடுதலாகட்டும்.
வாழ்த்துக்கள் ஆதி..

சுகந்தப்ரீதன்
09-03-2009, 09:27 AM
"தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி..." என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டும் கவிதை..!! பாரதி ரவுத்திரமாய் உதிர்த்திருப்பார்.. ஆதியோ சாந்தமாய் சந்தம் பாடுகிறார்.. வாழ்த்துக்கள் ஆதி..!!

சம்சாராமா..?? சந்நியாசமா..?? எது வாழ்வின் முழுநிலை.. முடிவுநிலை என்ற குழப்பத்தினூடே வைரமுத்து ஒரு கவிதை எழுதியிருப்பார்.. அதில் இறுதியில் "பேதைகள் தேடட்டும் பிரபஞ்சம் கடந்த பிரம்மத்தை... நான் கூப்பிடும் தூரத்தில் என் கைக்குள் ஓடிவந்து சிக்கும் நீதான் என் பிரம்மம்.. பிரபஞ்சம் எல்லாம்.." என்று சொல்வதைப்போல் முடித்திருப்பார்...!!

வார்த்தை கோர்வையும் கருத்துக் கோர்வையும் கவிதையில் எம்மை கட்டிப்போடுகின்றன..!! சுயபுலம்பல்.. சுயம் தேடலின் ஆரம்பம்..!!

ஆதி
10-03-2009, 09:06 AM
பின்னூட்ட கவிதை அருமை அக்னி.. அதுவும் இந்த வரிகள் இரமணரை நினைவூட்டின..


எவையெல்லாம் தேவையோ
அவையெல்லாம் தேவையற்றுப் போகும் நிலையும்,
வாழ்வின் ஒரு சுவையே...


பெரும்பொருளையே சுவைத்துவிட்ட எனக்கு ஒரு சுவைதான்.. உங்களை இனிப்பு கசப்பு கரிப்பு காரம் என்று பேதம் தெரியாது என் நாவுகளுக்கு என்பார்..

பாராட்டிற்கு நன்றிகள் அக்னி..

ஆதி
10-03-2009, 09:18 AM
சித்தனை பிசைந்தூட்டுவான் கண்ணதாசன்..
கண்ணதாசனை இளக்கி ஊட்டும் ஆதி....

சொற்கிடங்கும் கருத்தூற்றும் உன் சொத்துகளா?
அசந்து நிற்கிறேன் ஆதி!

வாழ்த்துகள்!

இந்த வரிகள் கிடைக்க பேரு பெற்றேன் அண்ணா.

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அண்ணா...

ஆதி
10-03-2009, 09:18 AM
என்ன சொல்ல.... வரிகள் கிடைக்காமல் ஒருவரியாய் எழுதிப்போகிறேன்.

பாராட்டுக்கள்!!!!

பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கு நன்றிகள் ஆதவா..



பாராட்டுக்கள் ஆதி அண்ணா...
சுயபுலம்பல்கள், சுயமாய் தேடுதலாகட்டும்.
வாழ்த்துக்கள் ஆதி..

மிக்க நன்றிகள் சகோதரி..

சசிதரன்
11-03-2009, 03:05 PM
என்னவென்று பாராட்டுவது ஆதி அண்ணா... மிக அருமையான வரிகள். அசத்தல்..:)

ஷீ-நிசி
13-03-2009, 12:50 AM
முத்தணைக்கும் மங்கையரின் முறுவலுக்கு முன்விழுந்து
அத்தனைக்கும் முதலான ஐயுருவ பொருளுன்னை
சித்தணைத்து அருள்ஞான தத்துவத்தை அடையாமல்
பித்தளிக்கும் சிருங்கார பெருஞ்சேற்றில் புரள்வேனா

வரியமைப்புகள் ரொம்ப பிரமாதம்! வாழ்த்துக்கள் ஆதி!

சிவா.ஜி
13-03-2009, 05:54 AM
யானும் ஆதவாவின் வழியே. பாராட்டுக்கள் ஆதி. உங்களின் தமிழ் என்னை சொக்க வைக்கிறது. வாழ்த்துகள்.