PDA

View Full Version : அவனது (சிறுகதை-31)ரங்கராஜன்
04-03-2009, 09:39 AM
அவனது

மும்பை மாநகரம், ஈசல் பூச்சிகளை போல வண்டிகள் நெரிசலில் சிக்கிக் கொண்டு இருந்தது, டிராப்பிக் சிக்னல். தமிழரசி தன்னுடைய காரில் பச்சை விளக்குக்காக காத்துக் கொண்டு இருந்தாள். அவளுடைய செல் போனில் அழைப்பு வந்தது, சிக்னலை பார்த்துக் கொண்டே செல் போனை எடுத்தாள். அவளின் அம்மா சென்னையில் இருந்து அழைத்து இருந்தார்.

“சொல்லுமா, எப்படி இருக்க ம்மா”

“ராஜாத்தி நீ எப்படி டீ இருக்க, புது ஆபீஸ் எல்லாம் பிடித்து இருக்கா”

“நல்லா இருக்குமா, அப்பா எப்படி இருக்கார்ம்மா”

“அவருக்கு என்ன உன் கவலை தான்........”

“அம்மா தயவு செய்து ஆரம்பிக்காதே, நான் இப்போ ஆபீஸ் போய்னு இருக்கேன். என்னை காலையில் மூடு அவுட் பண்ணாதே”

“ஆமா கல்யாணத்தை பத்தி பேசினாலே உனக்கு மூடு அவுட் தான்”

“...............”

“ராஜாத்தி உன்னுடைய நல்லதுக்கு தான் அம்மா சொல்றேன், புரிஞ்சிக்கோ டா”

“அம்மா செஞ்சிக்கிறேன், கொஞ்ச நாள் ஆவட்டும்”

“இன்னும் எவ்வளவு நாள், இப்பவே வயது உனக்கு 29 ஆவுது ஞாபகம் இருக்கா உனக்கு, கிழவி ஆன அப்புறம் எவன் உன்னை கட்டிப்பான். பெங்களூரில் இருந்து ஒரு மாப்பிள்ளை ஜாதகம்........”

“அம்மா சிக்னல் போட்டுட்டான் நான் அப்புறம் பேசறேன்......” என்று அழைப்பை கட் செய்தாள் தமிழரசி. பச்சை விழ இன்னும் 3 நிமிடம் பாக்கி இருந்தது. தமிழரசிக்கு வேர்த்தது, ஏ.சி யை அதிகப்படுத்தினால்
முகத்துக்கு நேராக காற்றை திரும்பினாள். மனது படபடத்தது, அம்மாவின் வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது

“29 ஆவுது ஞாபகம் இருக்கா உனக்கு, கிழவி ஆன அப்புறம் எவன் உன்னை கட்டிப்பான்”.

“நீ கிழவி ஆனாலும் உன்னை நான் கல்யாணம் செய்துக் கொள்வேன்”............ தமிழின் மனதில் நினைவுகள் கீற்றுகளாக வந்து மறைந்தன.

“நீ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது தமிழ்” ரமணி

“ஏய் தமிழ் நீ ரொம்ப லக்கி டீ, யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டரை பிடிச்சிட்ட, இந்த மாதிரி ஒரு லவ்வர் கிடைக்க நீ கொடுத்து வைச்சி இருக்கணும் டீ, ரமணி பிரில்யண்டு பாய் டீ” கல்லூரி தோழிகள்.

கொஞ்ச நாளில்.

“என்ன ஆச்சு தமிழ் அவனுக்கு, உங்க இரண்டு பேர்குள்ள எதாவது பிரச்சனையா. அவன் எங்களிடம் கூட இப்ப பேசுவது கிடையாது. எக்ஸாம் வேற வரப்போவுது. ஏற்கனவே அவன் போன எக்ஸம்ல
ஃப்பையில் ஆயிட்டான், இப்படியே போன டிகிரி முடிக்க முடியாது தமிழ். அவன் எங்களிடம் பேசுவது கிடையாது. நீ கொஞ்சம் சொல்லு அவனுக்கு” ரமணியின் நண்பர்கள்.

“என்னங்கடீ நீங்களும் நம்ப மாட்றீங்க, இதுவரை அவன் என்னை தொட்டது கூட கிடையாது, நீ சொல்ற மாதிரி அவன் அவ்வளவு கெட்டவன் கிடையாது” தன்னுடைய தோழிகளிடம் தமிழ்.

“தூதூஊஊஊ, நீ தான் அந்த தமிழா, என்னடி செஞ்ச என் பிள்ளையை, என்ன செஞ்சீடீ மயக்கின அவனை, எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானு என் பின்னாடி சுத்துவான். இப்ப என்னடான்னா கிட்ட கூட வரமாட்டுறான், எப்ப பார்த்தாளும் ஒரு ரூம்ல அடஞ்சி கிடக்குறான்............................நீ நல்லா இருப்பியா நாசமா போய்டுவ நாசமா போய்டுவ” ரமணியின் அம்மா.

“ரமணி என்னிடம் உனக்கு பேச விரும்பம் இல்லையா, எத்தனை முறை உன்னிடம் கேட்கறது நீ என்னிடம் பேசி இரண்டு மாதங்கள் ஆகிறது. என்ன பிரச்சனை உனக்கு, எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிர்ந்துக் கொள்.......................... நீ என்னிடம் பேசுவதில்லைனு சொன்னா யாரும் நம்ப மாட்றாங்க டா, எல்லாரும் என்னை திட்டுறாங்க டா. நான் தான் உன்னை இப்படி ஆக்கிட்டேனு சொல்றாங்க டா” என்று கண்ணீருடன் கேட்ட தமிழின் கேள்விகளுக்கு, எப்பொழுதும் போல தலை குனிவையே பதிலாக தந்தான் ரமணி.

“என்னடா நல்லா படிக்கறேன்னு திமிரா உனக்கு, உன் பின்னாடியே வாலை பிடிச்சுனு சுத்துவேனு நினைச்சியா, நீ இல்லைனா இந்த உலகத்துல ஆம்பளைங்களே இல்லைனு நினைப்பா. இனிமே நீ செத்தாலும் நான் உன்னை பார்க்க வரமாட்டேன், என்னமோ காதலிக்கும் பொழுது சொன்ன உன்னுடைய மனச தான் காதலிக்கிறேனு நீ கிழவி ஆனாலும் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்ன, நான்கு மாதத்திலே என் முகம் உனக்கு அலுத்து விட்டதோ”

பச்சை விளக்கு விழுந்தது, பின்னாடி அலறிய ஹார்ன் சத்ததில் சுயநினைவுக்கு திரும்பினாள் தமிழ், தன்னுடைய வண்டியை செலுத்தினாள். திரும்பவும் தன்னுடைய பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள். கல்லூரி முடிந்து கொஞ்ச நாளில் தமிழரசியின் செல்லுக்கு ஒரு குறுச்செய்தி வந்தது

“உன்னை பார்க்க வேண்டும் போல இருக்கு, எல்லாத்திற்கும் என்னை மன்னித்துவிடு. நான் ஊருக்கு கிளம்புகிறேன், செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று 9 மணிக்கு வா......இப்படிக்கு ரமணி” என்று இருந்தது,

தமிழ் சந்தோஷத்தில் குதித்தாள். அவள் அவனை அந்த அளவுக்கு விரும்பினாள். ஓடிச்சென்றாள் ரயில் நிலையத்திற்கு, சந்தோஷம் நிலைக்கவில்லை. ரமணி அங்கு இல்லை. மறுபடியும் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டாள், எண் உபயோகத்தில் இல்லை குறுச்செய்தியை ஒருமுறை படித்தாள், அதில் எந்த ஊர், எந்த ரயில் என்று குறிப்பிடபடவில்லை, அங்கு 9 மணிக்கு எந்த ரயிலும் புறப்படவும் இல்லை, 10 மணிக்கு மும்பை ரயில் மட்டும் தான் இருந்தது. அப்படியே அங்கு இருக்கும் நாற்காலியில் அயர்ந்து உக்கார்ந்தாள். தமிழுக்கு கோபமாக இருந்தது. அவனை கொல்ல வேண்டும் என்று மனதுக்குள் பொங்கினாள்....

திடீர் என்று சாலையை கடக்க ஒரு பெண் ஓடி வர, தமிழ் சுயநினைவுக்கு வந்து காரை அசுர வேகத்தில் நிறுத்தினாள், அப்படியும் கார் அந்த பெண்மணியை சற்று இடித்து விட்டது. பதறிய தமிழ் காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அந்த பெண்மணியை நோக்கி ஓடினாள். அந்த பெண்மணி அவளாகவே ஏழுந்து நின்றாள் தன்னுடைய புடவையை சரி செய்து கொண்டாள், அவளிடம் அலங்காரம் அதிகமாக இருந்தது. தமிழரசி பதறிய படி

“சாரி சாரிங்க, தெரியாம......., பார்த்து வரக்கூடாதுதா..., சாரி ஐ யம் டேரிபளி சாரி மேடம்”

அந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.

“ஆமாங்க, என் பெயர் தமிழரசி. சாரிங்க சாரிங்க” என்றாள்.

“என்னது தமிழரசியா, என் பேரு..........” என்று நிமிர்ந்தாள் அவள். தமிழரசியும் அப்படியே திகைத்து நின்றாள். அந்த பெண்மணியும் தான். தமிழரசி ஆச்சர்யத்துடன், கண்களில் கண்ணீர் பொங்க

“ரமணி நீயாஆஆஆஆஆஆஆஆஆ” என்றாள்.

நீண்ட நேர மெளனத்திற்கு பிறகு ஆமாம் என்பது போல தலையை வெட்கத்துடன் ஆட்டினான், திருநங்கையாக மாறி இருந்த ரமணி.

samuthraselvam
04-03-2009, 10:47 AM
அண்ணா திருநங்கையாக மாறும் ஆண்களின் மனநிலையை உணர்த்துகிறது இந்தக்கதை. ஆனால் அப்படி வரும் மாற்றம் 15 வயதிலேயே தெரியும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். தமிழ் ரொம்ப பாவம்.“தூதூஊஊஊ, நீ தான் அந்த தமிழா, என்னடி செஞ்ச என் பிள்ளையை, என்ன செஞ்சீடீ மயக்கின அவனை, எப்ப பார்த்தாலும் அம்மா அம்மானு என் பின்னாடி சுத்துவான். இப்ப என்னடான்னா கிட்ட கூட வரமாட்டுறான், எப்ப பார்த்தாளும் ஒரு ரூம்ல அடஞ்சி கிடக்குறான்............................நீ நல்லா இருப்பியா நாசமா போய்டுவ நாசமா போய்டுவ” ரமணியின் அம்மா.

இந்த வார்த்தைகளில் தெரிகிறது அவனின் மாற்றம், முடிவை படித்த பிறகு.

வாழ்த்துக்கள்..

ரங்கராஜன்
04-03-2009, 11:54 AM
நன்றி லீலுமா
இந்த வயது குறிப்பிட்ட வயதுனு எதுவும் இல்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்த சில ஆவணப்படங்களில் சிலர் 19 & 20 வயது வரை கூட ஆண் இனமாக இருந்து அப்புறம் திருநங்கையாக மாறி இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் இந்த மாறுதல்கள் ஒன்றும் ஒரே நாட்களில் நடப்பது கிடையாது, படி படியாக நடப்பது. இதில் என்ன பிரச்சனை என்றால் தான் உண்டாகும் மாற்றங்களை அவர்கள் உணர்வது கொஞ்சம் நேரம் ஆகும், உணர்ந்ததுக்கு அப்புறம் அவர்கள் இது எதற்கான மாற்றங்கள் என்று புரிந்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும், அதன்பின் அதை ஒத்துக் கொள்ள இன்னும் நேரம் ஆகும்................................ நன்றி

சிவா.ஜி
04-03-2009, 04:14 PM
தமிழரசியை விட்டு ரமணி விலகிப்போனதற்கான காரணத்தை அறிந்தபோது, அவனை நினைத்து பாவமாக இருந்தது.

ஆனா...அவன்தான் திருநங்கையா மாறிட்டான். ஆனா தமிழ் அப்படியேத்தானே இருக்கிறா. அப்ப பாத்த உடனே அவனுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கனுமே..

அந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.

அப்ப இது எதுக்கு?

கதை சொன்ன விதம் நல்லாருக்கு தக்ஸ். ஆனா...என்னவோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு.

subashinii
04-03-2009, 04:33 PM
கதை எப்படியோ போய் எப்படியோ முடிந்து விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் DAKS

ரங்கராஜன்
04-03-2009, 04:34 PM
1. ஆனா...அவன்தான் திருநங்கையா மாறிட்டான். ஆனா தமிழ் அப்படியேத்தானே இருக்கிறா. அப்ப பாத்த உடனே அவனுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கனுமே..

2. அந்த மஞ்சள் புடவை அலங்கார பெண்மணி, தன்னுடைய செருப்பை குனிந்துக் சரி செய்துக் கொண்டு “என்னம்மா தமிழா” என்றாள்.

அப்ப இது எதுக்கு?

கதை சொன்ன விதம் நல்லாருக்கு தக்ஸ். ஆனா...என்னவோ ஒண்ணு குறையற மாதிரி இருக்கு.

நன்றி அண்ணா

உங்களின் முதல் கேள்விக்கான பதில் அண்ணா, திருநங்கையாக மாறி இருந்த ரமணி ரோட்டை கடக்கும் பொழுது, தமிழரசியின் கார் இடித்து விட்டது. தடுமாறி கீழே விழுந்த ரமணி எழுந்து தன்னுடைய அலங்காரத்தை சரி செய்து கொண்டு இருந்தான்(ள்), தமிழரசியை பார்க்கவே இல்லை.

2. அவள் சரி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, தமிழரசி விபத்து ஆனா டென்ஷனில் தமிழில் பேசினாள், அதாவது இந்தி பேசும் மும்பை நகரத்தில் தமிழில் பேசினாள். அப்புறம் அவளாகவே இதை உணர்ந்து ஆங்கிலத்தில் சாரி என்று சொல்கிறாள். தமிழரசியை பார்க்காமல் தன்னுடைய செருப்பை சரி செய்துக் கொண்டு இருந்த ரமணி, தமிழரசி பேசிய தமிழை மட்டும் காதில் வாங்கிக் கொண்டு, என்னம்மா தமிழா என்கிறான்(ள்). (அதாவது தமிழை தாய் மொழியாக கொண்டவளா?). இதற்கு தமிழரசி ஆமாம் என்று கூறி அறிமுகத்திற்காக தன்னுடைய பெயரை தமிழரசி என்று சொல்கிறாள். அந்த பெயரை கேட்டவுடன் ரமணி திடீர் என்று நிமிர்ந்து பார்க்கிறான் (தமிழரசியை ரமணியும் மறக்கவில்லை). அப்பொழுது தான் இருவரும் முகத்துடன் முகம் பார்க்கிறார்கள். சில வினாடிகளில் இருவரும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள்,,,,,,,,,,,,,,,,,,, ரமணியும் வெட்கத்துடன் திருநங்கையாக இருப்பது தான்தான் என்று ஒத்துக் கொள்கிறான்................................................... அப்படியே கண்ணீருடன் இருவரும் வார்த்தை வராமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

நீங்கள் கூறுவது உண்மை தான், எனக்கே எதோ ஒன்று குறைவது போல தான் இருக்கிறது, அதுவும் இல்லாமல் இந்த கதையை நான் முடிவு யோசித்துவிட்டு கற்பனை செய்தது. ஒருவேளை அதனால் இருக்கலாம் அண்ணா.

தவறுகள் இருந்தால் தம்பியை திருத்துங்கள் அண்ணா.......

அறிஞர்
04-03-2009, 04:35 PM
திருநங்கைகளின் பற்றி பல கதைகள் வருகிறது..
ஏதேனும் பாதிப்பா..

ரங்கராஜன்
04-03-2009, 04:37 PM
கதை எப்படியோ போய் எப்படியோ முடிந்து விட்டது. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் DAKS


நன்றி சுபாஷினி

மதி
04-03-2009, 05:08 PM
நன்றாய் எழுதியிருக்கிறீர்கள் தக்ஸ்... வெறும் வசனங்களை மட்டும் தந்து சூழ்நிலையை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடும் யுக்தி நல்லா இருக்கு.

திருநங்கையாக மாறும் ரமணி. (இருபாலருக்கும் பொருந்தும் பெயர்). ஆயினும் கதையில் ஒரு முடிவு இல்லாதது போன்ற தோற்றம். ரமணி திருநங்கையாக மாறிய சஸ்பென்ஸ் மட்டும் தான் முடிவா? இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா? சிவாண்ணா சொன்னது போல் ஏதோ ஒன்று குறைகிறது கதையில். கதையுடன் ஒட்டாத முடிவு போல்.

இறுதியாக, திருநங்கை பற்றிய கதை என்றானபின் பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான அவன், அவள் ஆகிய சொற்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். திருநங்கை பற்றி ராகவன் எழுதிய கதை ஒன்று. பேர் மறந்துவிட்டது. அதில் இறுதிவரை சந்தித்தான், வந்தாள் போன்று பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே இல்லாது எழுதியிருப்பார். இந்தக் கதையிலும் அது போல் செய்திருந்தால் கதையோடு ஒன்றாத முடிவு போன்ற உணர்வு இல்லாமலிருக்கும்.

ரங்கராஜன்
05-03-2009, 03:04 AM
நன்றாய் எழுதியிருக்கிறீர்கள் தக்ஸ்... வெறும் வசனங்களை மட்டும் தந்து சூழ்நிலையை படிப்பவரின் யூகத்திற்கே விட்டுவிடும் யுக்தி நல்லா இருக்கு.

திருநங்கையாக மாறும் ரமணி. (இருபாலருக்கும் பொருந்தும் பெயர்). ஆயினும் கதையில் ஒரு முடிவு இல்லாதது போன்ற தோற்றம். ரமணி திருநங்கையாக மாறிய சஸ்பென்ஸ் மட்டும் தான் முடிவா? இல்லை வேறு ஏதேனும் மனதில் வைத்திருந்தீர்களா? சிவாண்ணா சொன்னது போல் ஏதோ ஒன்று குறைகிறது கதையில். கதையுடன் ஒட்டாத முடிவு போல்.

இறுதியாக, திருநங்கை பற்றிய கதை என்றானபின் பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளான அவன், அவள் ஆகிய சொற்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருந்திருக்கும். திருநங்கை பற்றி ராகவன் எழுதிய கதை ஒன்று. பேர் மறந்துவிட்டது. அதில் இறுதிவரை சந்தித்தான், வந்தாள் போன்று பால் சம்பந்தப்பட்ட வார்த்தைகளே இல்லாது எழுதியிருப்பார். இந்தக் கதையிலும் அது போல் செய்திருந்தால் கதையோடு ஒன்றாத முடிவு போன்ற உணர்வு இல்லாமலிருக்கும்.

நன்றி மதி

கதையின் குறைகளாக நான் நினைத்ததை அழகாக வரிசை படுத்தி எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது போல இந்த கதையில் பல இடங்களில் நான் தடுமாறி இருக்கிறேன். எப்பொழுதும் ஒரு கதையை எழுதி விட்டு, மன்றத்தில் பதித்து விட்டு ஒரு வாசகனாக இந்த கதையை படித்தேன். எதோ அவசரத்தில் எழுதியது போல ஒரு உணர்வு. அப்புறம் காட்சி விவரிப்பிலும், வார்த்தைகளும் நான் எதிர்பார்த்த தாக்கத்தை உண்டு பண்ணவில்லை. நான் தலைப்பை அவனது (அவன்+அது) என்று வைத்திருந்தேன். அதனால் ஆரம்பத்திலே திருநங்கை பற்றிய கதை என்று முடிவு யாரும் செய்து விடக்கூடாது என்பதால் தான் அவன் அவள் என்ற குறியீடு வார்த்தைகளை உபயோகிக்க வேண்டியாதாகி விட்டது.

அப்புறம் நான் இந்த கதையை ஒரு திருநங்கையின் பார்வையில், அவளுடைய சுகதுக்கங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நான் திருநங்கைகளை பார்த்து இருக்கிறேனே தவிர, அவர்களிடம் பேசியது இல்லை. அவர்களின் வாழ்க்கையை பார்த்தது இல்லை. அதனால் ஆரம்பத்திலே தடுமாறி விட்டேன் மதி.

என்னுடைய அடுத்த கதைகளில் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன், நன்றி

ரங்கராஜன்
05-03-2009, 03:07 AM
திருநங்கைகளின் பற்றி பல கதைகள் வருகிறது..
ஏதேனும் பாதிப்பா..

என்ன தலைவரே பதிப்பு எல்லாம் ஒன்றும் இல்லை, ரொம்ப நாளாய் திருநங்கையை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன், அவ்வளவு தான் தலைவரே

தாமரை
05-03-2009, 03:59 AM
இது கௌதம்மேனன் ஸ்டைலில் இருக்கு.. ஃபாஸ்ட் ஃப்ரேம்ஸ்.. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த நினவுகள் தோன்றித் தோன்றி மறையும் வேகம் படிக்கும் போது சற்று குழப்பமா இருந்தாலும்..

கண்ணை மூடி ஒவ்வொரு காட்சியா ஃபோகஸ் அண்ட் ஃபேட் அவுட் பண்ணினா..

அழகா இருக்கு.

வசனங்களுக்கு இடையில் விவரணங்கள் மிகக் குறைவா இருப்பதால் மக்களுக்கு எதுவோ குறைவதாக உணர்வு ஏற்படுகிறது..

உடலின் புதிர் மாற்றத்தில் ஒரு நல்ல வாழ்க்கை சிதறுண்டு போவது ...

ஒரு பெண்ணை காதலிக்கும் ஒருவனுக்கு இந்த மாற்றம் வருமா என்ற கேள்வி...

இரண்டும் கொஞ்சம் விளக்கப்பட மனசு விரும்புகிறது..

பதின்ம வயதின் இறுதியில் ஏற்படும் மாற்றம் என்பதால் மன உளைச்சல்கள் மிக அதிகமாகவே இருந்திருக்கும். பூட்டிய அறை வாழ்வும், அனைவரிடமிருந்து விலகலும், மனத்தடுமாற்றத்தில் தடுமாறும் கல்வியும்.. காலவெள்ளத்தில் எடுக்கப்பட்ட அவசர முடிவுகளும்...

ஒரு நாவலா எழுத வேண்டியதை சிறுகதையா எழுதிட்டீங்க தக்ஸ்...

ரங்கராஜன்
05-03-2009, 04:15 AM
நன்றி தாமரை அண்ணா
பதின்ம மாற்றம் என்றால் என்ன அண்ணா?, இந்த கதையில் எதாவது தப்பு இருந்தால் சொல்லுங்க அண்ணா, உங்களின் விளக்கங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

தாமரை
05-03-2009, 05:08 AM
டீன் ஏஜ் (தடு)மாற்றங்கள்...

டீன் ஏஜில் தான் பலப் பல பருவ மாற்றங்கள் மனதில் ஏற்படுகின்றன, பல திருநங்கைகள் இந்த வயதில்தான் தங்களை அடையாளம் காண்கிறார்கள், இதற்கு முன் அவர்களுக்கு குழப்பம்தான்.

நன்கு படித்துக் கொண்டு, ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஒரு மாணவன் திடீரென தான் ஒரு பெண் என உணர்வது...

யாரிடமும் அதைப் பகிர இயலாமல் முடங்குவது..

வெளிவேஷம் தாங்கி வாழ இயலாமல் தன் பழைய அடையாளங்களை அழித்துக் கொண்டு புது உலகத்தில் தன் உணர்வுக்கேற்ற வாழ்வைத் தேர்ந்தெடுப்பது..

இந்த உணர்வுகள் எதுவுமே வெளிப்படாமால், 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பார்ப்பதால் அன்னியமாகத் தெரிகிறது.

இவற்றை சரளமாக சீராக மற்றவர் மனம் உணரும் வண்ணம் வெளிப்படுத்த குறைந்த பட்சம் 6 அத்தியாயங்களாவது எழுத வேண்டும்..

இப்பொழுதுள்ள நிலையில்.. கதையில் ரமணி ஒரு சின்ன பாத்திரம்.. மாற்றங்களை நாம் தமிழின் கண்களில் இருந்து பார்க்கிறோம். அவளுக்கே ஒன்றும் தெரியலை.. அதனால நமக்கும் தெரியலை...தமிழ் நிகழ்ச்சிகளை மட்டும் எண்ணிப்பார்க்கிறாள். நாம அதைப் பார்க்கிறோம். அதன் விளைவா அவள் மனசில ஏற்படுகிற சிந்தனைகளைப் பார்க்கல...

அதனால் தமிழோடவும் நம் மனம் ஒட்டலை..

அன்னியத்தன்மையோட பார்க்கிற நமக்கு, நம் மனதில் இருக்கும் பழைய அனுபவங்களை கொண்டு கதையை பார்க்கத் தோணுது. அதனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் தோணும்...

திருநங்கைகளை அன்றாடம் பார்த்து பழகிய சிலருக்கு மட்டும் அந்த உணர்வுகள் சற்று புரியும்..

ஒரு திருநங்கையால் மட்டுமே முழுமையாப் புரிந்து கொள்ள முடியும்.

ரோஸ், லிவிங்ஸ்மைல் வித்யா போன்ற முற்போக்கான திருநங்கைகள் உதாரணங்களாக மட்டுமில்லாமல் வழிகாட்டிகளாகவும் வாழுகின்றனர்.

அவங்க கதையை யாருமே எழுதலையேன்னு ஒரு குறை இருக்கத்தான் செய்யுது.

செல்வா
05-03-2009, 05:13 AM
கதை என்னை மிகக் கவர்ந்தது தக்ஸ்.... நடை நன்றாக இருக்கிறது.... வாழ்த்துக்கள்..

ரங்கராஜன்
05-03-2009, 05:18 AM
நன்றி தாமரை அண்ணா மற்றும் செல்வா

பா.ராஜேஷ்
07-03-2009, 05:56 AM
தான் திருநங்கையாய் மாறி விட்டதை தமிழிடம் சொல்லியிருந்தால் அவளாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாம். கதையோட்டமாய் பார்க்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது.

ரங்கராஜன்
11-03-2009, 04:55 PM
தான் திருநங்கையாய் மாறி விட்டதை தமிழிடம் சொல்லியிருந்தால் அவளாவது திருமணம் செய்து கொண்டிருக்கலாம். கதையோட்டமாய் பார்க்கும் பொழுது நன்றாகவே இருக்கிறது.

நன்றி ராஜேஷ்

அந்த உறவு கல்யாணத்தில் முடியாது ராஜேஷ், அப்படி முடிந்து இருந்தால், ரமணியின் காதல் உண்மையான காதலாக இருந்து இருக்க முடியாது, நன்றி

பூமகள்
19-03-2009, 02:40 AM
கதையின் வேக வேக காட்சி மாற்றங்களில் சற்று கடினமாகத் தோன்றினாலும்.. மெல்ல அசை போட்டு பார்த்ததில் காட்சிகள் நன்கு விளங்குகிறது..

ரமணியின் மாற்றம்..
தமிழ் மீதான வீண் குற்றம்..

எல்லாம் சேர்ந்து என்ன பிரச்சனையாக இருக்குமென்ற கண்ணோட்டத்திலேயே மனம் இருக்க...

வித்தியாசமான முடிவு சொல்லி கதை முடித்ததற்கு பாராட்டுகள்.. இவ்வகை திருப்பம் சிறுகதைக்கு மிக அவசியம்..

கதையில் ஏதோ குறைவதாக தோன்றக் காரணம்.. அழுத்தமான காட்சியமைப்புகள் நிறைய இடம் பெறாதது தான்.. கொஞ்சம் அதிக விவரிப்பை எதிர்பார்த்ததும் ஒரு காரணம்..

ஆயினும்.. எதிர்பாராத முடிவு என்பது கதையின் சிறப்பு..

மற்றவை.. மேலே ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்..

பாராட்டுகள் தக்ஸ்...

நேரம் கிடைக்கையில் உங்களின் அனைத்து சிறுகதைகளையும் படித்து பின்னூட்டமிடுகிறேன்..

தொடருங்கள்..

சசிதரன்
20-03-2009, 02:42 PM
உடனுக்குடன் மாறும் காட்சி அமைப்புகள் வித்தியாசமான அனுபவம் தந்து தக்ஸ்... வாழ்த்துக்கள்...:)

இளசு
01-04-2009, 08:58 PM
பெற்றோரிடமும் பகிரமுடியாத உளவலி..
நண்பர்கள் குழுவிலிருந்து தனித்தீவு..
கைவந்த படிப்பு கவனச்சிதறலில் நழுவல்..
உயிரான காதலியிடமும் உண்மைசொல்லா குற்ற உணர்ச்சி

விலகல் பயணம் முன்னாவது சொல்லத்துணிந்து..
செயல்படுத்தும் நொடியில் அதுவும் கரைந்து..


பழைய வாழ்வை முற்றிலும் துறந்து...
இத்தனை வருட உடலில் வேறுபாலாய் மீண்டும் பிறந்து...

ரமணியின் மனவேதனை அனைத்தையும்
தமிழின் நினைவலைகள் மூலம் மட்டுமே உய்த்துணரவைத்த
அபார பாணிக்கு பாராட்டுகள் தக்ஸ்....

ரங்கராஜன்
21-10-2012, 04:38 AM
உறவுகளே முடிந்தால் இதனை படியுங்கள்...

கீதம்
24-10-2012, 05:48 AM
அவனது கதை படித்தேன் தக்ஸ். ரமணி, தமிழரசியிடமிருந்து ஒதுங்குவதற்கும் பிற மாற்றங்களுக்கும் காரணமாக போதைப்பழக்கம் இருக்கலாம் என்று யூகித்திருந்தேன். இந்த முடிவை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நம் சமுதாயத்தில் இப்படி பால்மாற்றமடையும் பிள்ளைகள் பற்றிய புரிதல் இல்லாமையே அவர்களை வீடு, குடும்பம், நண்பர்கள், வாழ்விடம் அனைத்திலிருந்தும் விரட்டுகிறது. அவர்களை உளவியல் ரீதியாக அணுகி பிரச்சனைகளைக் களையவோ, புரிந்துகொள்ளவோ முற்பட்டால் தவிர இதுபோன்ற தலைமறைவு வாழ்க்கைக்கு முடிவு உண்டாகாது. காலம் மாறும் என்று நம்புவோம். சிக்கலான கரு. தமிழரசியின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருப்பதால் அவள் வலியை உணரமுடிகிறது. அவனது வலியை உணரமுடியவில்லை. தலைப்பு அவனை முன்னிறுத்தியிருப்பதால், அது ஒரு குறையாகத் தெரிகிறது. மற்றபடி கதை என் மனம் தொட்டுவிட்டது. இப்போது நீ எழுதினால் நிச்சயம் பாதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும் என்றும் தெரிகிறது. நேரமிருக்கும்போது எழுதிக்கொண்டிரு. வாழ்த்துக்கள்.