PDA

View Full Version : பெத்தமனசு.....!!!சிவா.ஜி
01-03-2009, 04:51 PM
ஒரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அந்த அம்மா என்னருகே வந்தார். சன்னமான குரலில்,

“தம்பி ஒரு ரூபா குடுக்கறியா...டீ சாப்புடனும்”

நான் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப்பதில்லை. கோபமாக அவரைப்பார்த்து பேச நினைத்தவன் அந்த முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன்.

“அம்மா.....நீங்களா?...எ...எ...என்னம்மா இது? நீ...நீங்க போய்...”

அவர் முகத்தில் திடீரென்று ஒரு கலவரம் தோன்றியது. சட்டென்று முந்தானையை தலைமேல் முக்காடாய் போட்டுக்கொண்டு அவசரமாய் அந்த இடத்தைவிட்டு விலகி வேகமாய் நடந்தார். என் அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு கிட்டத்தட்ட ஓடினாரென்றே சொல்லலாம்.

நான் நின்றுகொண்டிருந்த இடம் ஒரு பேருந்து நிறுத்தமும் கூட. அப்போதுதான் வந்து நின்ற நகரப் பேருந்திலிருந்து கூட்டமாய் இறங்கியவர்களில் சிலர் என்னை உரசிக்கொண்டு போனதைக்கூட உணர்ந்துகொள்ளாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

பின்னாலிருந்து யாரோ என் பெயரைச்சொல்லி அழைத்து, பின் என் தோளைத் தொட்டுத் திருப்புவதை உணர்ந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தேன்.

“என்னடா முரளி...பட்டப்பகல்ல பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு கனவு காண்றியா...?

சிரித்துக்கொண்டே கேட்ட என் வகுப்புத்தோழன் பரமேஷைப் பார்த்து ஒரு புன் சிரிப்பை சிந்திவிட்டு,

“டே பரமேஷ்....மதனோட அம்மாவைப் பாத்தண்டா...அவங்க....”

“தெரியுண்டா. அதான் அப்படி அதிர்ச்சியா நின்னுட்டியா. இல்லாம இருக்குமா? பாவம்டா அவங்க”

“என்னடா என்ன ஆச்சு?”

“அது ஒரு பெரிய கதைடா. அதப்பத்தி அப்புறம் பேசலாம். நீ எப்ப வந்த? இப்ப எங்கருக்க? வைஃப், பொண்ணு எல்லாம் நல்லாருக்காங்களா?”

“எல்லாம் நல்லாருக்காங்கடா. நேத்துதான் வந்தேன். இப்ப ONGC யில இல்லை, GAIL க்கு மாறிட்டேன். மூணு மாசத்துக்கு முன்னதான் என்னை குனாவுக்கு மாத்தினாங்க”

“குனாவா...என்னடா கமல் படப்பேரெல்லாம் சொல்ற”

“டே இது ஒரு ஊர்டா. மத்தியபிரதேசத்துல இருக்கு. அங்க எங்களுக்கு ஒரு பூஸ்டர் ஸ்டேஷன் இருக்கு. அதுல ஷிஃப்ட் இன்சார்ஜா இருக்கேன்.”

“ஓ...பொண்ணு இப்ப சிக்ஸ்த் இல்ல?”

“ஆமாடா”

“சரி வா காப்பி சாப்புட்டுகிட்டே பேசலாம்”

சாலையைக் கடந்து எதிர்வரிசைக் கடைகளின் இடையே இருந்த அந்த சிறிய உணவு விடுதிக்குச் சென்று, நாற்காலியிலிருந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து பக்கத்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்த பரமேஷ், என்னையும் அமரச் சொன்னான். இரண்டு காஃபி சொல்லிவிட்டு, மேலும் தாங்கமுடியாதவனாக மதனின் அம்மாவைப்பற்றிக் கேட்டேன்.

“எப்படி இருந்த குடும்பம்...நம்ம கிளாஸிலேயே அவன் குடும்பம்தானடா பணக்கார குடும்பம். ஒரு லாயர் பையன்ங்குறதுல அவனுக்கு அப்பவே பெருமை ஜாஸ்தி. எத்தனைதடவை அவனோட அம்மாக் கையால சாப்பிட்டிருப்போம். அவங்களை இந்த நிலையில பாக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா...”

“என்னடா செய்யறது. எல்லார் வாழ்க்கையிலும் விதி விளையாடும். மதன் வாழ்க்கையில அவனோட தான்தோன்றித்தனமும், அவன் அண்ணனோட சதியும் தாண்டா விளையாடிடிச்சி”

“அவன் தான் பத்தாவது ஃபெயில் ஆனதுக்கப்புறமா படிப்பு ஏறலன்னு நின்னுட்டானேடா. அதுக்கப்புறம் டான்சியில் ஏதோ கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். போன வருஷம் லீவுல வந்திருந்தப்பக்கூட அவனைப் பாத்தேனே....அப்பக்கூட குடிச்சிட்டு பொலம்புனான். நீங்கள்லாம் நல்ல நிலையில இருக்கீங்கடா...என் பொழப்பப்பாருடா...யாரும் பொண்ணுகூட குடுக்க மாட்டங்கறாங்கன்னு.”

“அதே பாழாப்போன குடிப்பழக்கம்தாண்டா அவனுக்கு வில்லன். நீ வந்து போனதுக்கப்புறமா அவங்கப்பா திடீர்ன்னு அட்டாக்குல போயிட்டாரு. சொத்து பிரிக்கறப்ப அவங்க அண்ணன் இவனை நல்லா ஏமாத்திட்டாருடா. குடிகாரன், பொண்டாட்டி புள்ளைங்க வேற இல்லன்னு கொஞ்சமா ஏதோ பேருக்கு குடுத்துட்டு எல்லாத்தையும் அவரே வெச்சுக்கிட்டாரு. கொஞ்சநாள் அவங்க அக்கா வீட்டுலத்தான் இருந்தான். அவங்க அக்கா அண்ணனுக்கு மேல. குடிபோதையில இருந்தவன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் அவங்க பேருக்கு மாத்திக்கிட்டாங்க. அவனையும் வீட்லருந்து தொரத்திட்டாங்க”

பரமேஷ் சொல்லச் சொல்ல....மூணு வருடம் முன்பு எங்கள் வீட்டில் நிகழ்ந்த சொத்து பிரிப்பு என் நினைவில் ஆடியது. அப்பா இறந்த பிறகு, டவுனில் ஒரு பெரிய வீடும், கிராமத்தில் ஒன்றரை ஏக்கராவில் தென்னந்தோப்பும் மட்டுமே எங்க சொத்து. அண்ணனுக்கு பெருசா வருமானம் இல்ல. அதுவுமில்லாம மூணு குழந்தைங்க. அதுல ரெண்டு பொண்ணு. அதான் நானே அந்த வீட்டை அவருக்கே விட்டுக்கொடுத்திட்டேன்.கிராமத்துல இருந்த நிலத்தை மட்டும் நான் வெச்சுக்கிட்டேன். அம்மா இப்ப அண்ணன் கூடத்தான் இருக்காங்க.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்கிட்ட ஒரு நன்றியுணர்ச்சி எப்பவும் இருக்கும். அந்த நிகழ்ச்சியையும், மதனின் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கும்போது....உறவுகளுக்குள்தான் எத்தனை வித்தியாசங்கள் எனத் தோன்றியது.

“என்னடா யோசனையில இருக்கே?”

‘ஒண்ணுமில்லடா...சொந்தம், பந்தம், உறவு எல்லாம் பணத்துக்கு முன்னால செல்லாக்காசாப் போச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்குடா.”

“அப்படியும் சொல்ல முடியாதுடா. உங்க வீட்லக் கூடத்தான் சொத்து பிரிச்சாங்க. நீ எவ்ளோ பெருந்தன்மையா அந்த வீட்டை அண்ணனுக்கு விட்டுக்கொடுத்தே. இப்பவும் அண்ணனை நான் பாக்கறப்பல்லாம் உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசுவாரு”

என் மனதில் ஓடியதையே அவனும் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். நல்ல நட்பு என்பது இப்படித்தான் ஒத்த அலைவரிசையில் சிந்திக்கும் என்பது சரியாகத்தானிருக்கிறது.

“சரிடா...அவனைத்தான் ஏமாத்திட்டாங்க, அவங்க அம்மா ஏண்டா பிச்சை எடுக்கனும்?”

“அவங்க பிச்சை எடுக்கறது அவங்களுக்காக இல்லடா...கெட்டுப்போன தன்னோட சின்ன மகனுக்காக. வீடும் இல்லாம வாசலும் இல்லாம, தெருத்தெருவா அவன் அலைஞ்சி, அஞ்சுக்கும் பத்துக்கும் யார்யார்கிட்டவோ அடி வாங்கி அவமானப்பட்டதைப் பாக்க சகிக்காம, பெரிய மகன்கிட்டபோய் அழுதிருக்காங்க. அதுக்கு அவன், அந்தக் குடிகாரனுக்காக ஒத்த பைசா குடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டான். அவன்கிட்ட இப்ப ஒண்ணுமே இல்லையேடா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்னு கேட்டதுக்கு, முடிஞ்சா வேலை செய்யச் சொல்லு இல்ல பிச்சை எடுக்கச் சொல்லுன்னு சொல்லியிருக்கான்.

அதைக் கேட்டுத் தாங்க முடியாமத்தான் அவங்களே பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் சாராயத்துக்காக. அது இல்லன்னா அவன் சீக்கிரமே செத்துப்போயிடுவானோனு பயந்துகிட்டு, இப்படி பிச்சை எடுத்து பத்து ரூபா சேர்ந்தா போதும்....ரெண்டு பாக்கெட் சாராயத்தை வாங்கிக்கிட்டு சத்திரத்துக்குப் போயி அவன் கிட்ட குடுத்துட்டு வருவாங்க. சில சமயம் சாராயம் இல்லாம போனா அவன் குடுக்கற அடியையும் வாங்கிட்டு வருவாங்க.”

‘கடவுளே...என்ன கொடுமைடா இது. அட்சயப் பாத்திரம் மாதிரி அள்ளி அள்ளி சோறு போட்டவங்களாச்சேடா....மனசு கேக்கலடா...வா போயி மதனைப் பாத்துட்டு வரலாம்.”

இரண்டு பேரும் போன போது அவனோடு அவனுடைய அம்மாவும் இருந்தார். குடித்துவிட்டு சுயநினைவில்லாமலிருந்த மதனை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டிருந்தார். அது பிச்சைக்காரர்களின் தங்குமிடமான ஒரு பழங்காலத்து சத்திரம். கோணிப்பைகள்தான் அவர்களின் படுக்கைவிரிப்பு. பகலிலேயே இருளடைந்திருக்கும். மதனுக்குப் பக்கத்தில் முழுவதுமாக சாப்பிடப்படாத இட்லிகள் இருந்த பொட்டலத்தை தரையில் பார்த்ததும் விளங்கிவிட்டது உணவு உண்ணக்கூட முடியாத நிலையில் அவன் இருக்கிறானென்று.அவர்களை அந்த நிலையில் பார்த்தபோது என்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டன.

எங்களைப் பார்த்ததும் அம்மா அதிர்ந்துவிட்டார்கள். பின் மெள்ள அதிர்ச்சி சோகமாகி விசும்பி அழத்தொடங்கியதும், அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்ததும் கதறி அழுதுவிட்டார்.மேலே எதுவும் பேசி அவரது மன ரணங்களைக் கீறிவிட விருப்பமில்லாதவனாக பையிலிருந்து கொஞ்சம் பணத்தை அந்தத் தாயின் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து விலகினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த பரமேஷ்...

“ஏண்டா பணம் கொடுத்தே....இன்னும் சாராயம் குடிச்சி சாகட்டுன்னா?”

‘நானும் நீயும் குடுக்கலன்னாலும் வேற யார்கிட்டயாவது வாங்கி மகனுக்கு குடுக்கத்தான் போறாங்க அவங்கம்மா. இந்தப்பணத்துனால அட்லீஸ்ட் அவங்களுக்கு கொஞ்சம் அலைச்சல் குறையட்டுமேடா. மனசு வலிக்குதுடா...குடி குடியைக் கெடுக்குன்னு சொல்வாங்க ஆனா இங்க இவனுடைய குடி அன்னலட்சுமியையே பிச்சைக்காரி ஆக்கிடுச்சேடா....”

என் தோளைப் பிடித்து ஆறுதலாய் கூட நடந்து வந்தவன், சற்றுதூரம் வந்ததும் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு போய்விட்டான்.

மூன்று மாதத்துக்குப் பிறகு உறவினர் ஒருவரின் துக்கக்காரியத்தில் பங்கு கொள்ள மீண்டும் ஊருக்கு வந்திருந்தேன். அந்தமுறையும் மதனின் அம்மாவை மீண்டும் சந்தித்தேன். வேறு இடத்தில். பக்கத்திலிருந்தவர்களிடம் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். அருகே சென்றேன். அவர் பிச்சைக் கேட்கவில்லை.....ஆனால் பார்ப்பவர்களிடமெல்லாம்,

‘என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்.....என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்.....”

என்று சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டதும் திடுக்கிடவில்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். மதன் இறந்ததற்காக மனம் வருந்தவில்லை. அவன் மரணம் ஒரு மனுஷியை பிணமாக்கிவிட்டதே என நினைத்த போது மனம் கணத்தது. முழுவதுமாய் மனம் பிறழ்ந்த அந்த பெரியமனுஷி...இப்போது பிச்சைக்காரியிலிருந்து பைத்தியக்காரியாகிவிட்டிருந்தாள்.

அன்புரசிகன்
01-03-2009, 05:55 PM
என்ன அண்ணா... வாசித்து முடிக்கும் போது தொண்டைக்குழி காய்ந்துவிட்டது. எதிரிக்கும் வரக்கூடாத சோதனை... குடிகாரனால் வந்த கதியை புதுசாக இன்று இந்த கதைமூலம் காண்கிறேன்...

உங்கள் எழுத்துத்திறனில் இன்னொரு வெற்றிக்கதை... வாழ்த்துக்கள் அண்ணா...

சிவா.ஜி
01-03-2009, 06:12 PM
இந்தமுறை ஊருக்கு போனபோது ஒரு மூதாட்டி என்னிடம் இப்படித்தான் ஒற்றை ரூபாய் கேட்டார் அன்பு. பார்த்தால் நிச்சயம் பிச்சைக்காரியாய் தோன்றவில்லை. களையான, குடும்பப்பாங்கான முகம். சொல்ல முடியா ஒரு சோகம் அந்தக் கண்களில்.

அந்த சோகத்துக்குப் பின்னே என்ன இருக்கிறதோ தெரியவில்லை. என் பார்வையில் இப்படியும் இருக்குமோ என எண்ன வைத்தது என் நண்பனின் குடியால் ஏற்பட்ட முடிவு. இரண்டையும் இணைத்தேன்.

நன்றி அன்பு.

நிரன்
01-03-2009, 06:23 PM
கதையைப் படித்து முடிந்ததும் நெஞ்சம் கனக்கிறது!

மற்றவர்களை வருத்தி சுகம் காணும் பலர் இவ்வுலகில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

குடி குடியையும் கெடுத்து அவனுக்காக வாழ்ந்த அப்புனிதமான உயிரையும் கடைசியில் பைத்தியாமாக்கிவிட்டதே!

நான் படித்த உங்கள் கதைகளில் என் மனதில் கனக்கும் கதைகளின் பட்டியலில் இதுவும் ஒன்றே. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

இளசு
01-03-2009, 07:45 PM
இரு சம்பவங்கள் கரையாய்
இணைக்கும் கற்பனை நதியாய்..

வாழ்க்கை மணல் புரட்டுகிறது..
நனைந்த மனம் கனக்கிறது..

என் மனம் கனிந்த பாராட்டுகள் சிவா..

உங்கள் மனதுக்கு வந்தனமும் விரல்களுக்கு முத்தமும்!

அக்னி
01-03-2009, 08:22 PM
இந்தக் கதையை வாசிக்கும்போதே இது நிச்சயமாகக் கற்பனைக் கதையல்ல என்ற எண்ணம் தோன்றியது.
சிவா.ஜியின் இயல்பு அந்த எண்ணத்திற்கு வலுச்சேர்த்தது.
சிவா.ஜியின் பின்னூட்டம் அதைத் தெளிவுபடுத்திவிட்டது.

இரு காட்சிகளை இணைத்து, ஒரு அரும் காட்சியைக் காட்டும் கதை.

பல்வேறு விதமான படிப்பினைகளையும், வாழவேண்டிய, வாழக்கூடாத முறைமைகளையும் கோடிட்டு வரையறுத்து அறுதியிடுகின்றது.

போதைகளின் பிடியில் பிச்சைக்காரியாகிப் பைத்தியமாகிப்போன தாய்க்கும் போதைதான்.
ஒரு பக்கம் குடிப்போதை.
மறு பக்கம் சொத்துப்போதை.
நடுவில் தாயின் பாசப்போதை.

உறவுகளை விடவும் மேலான சொத்து, ஏதுமல்ல...
என்பதை அனைவருக்கும் உணர்த்தும் அழகிய காதை.

பாராட்டுக்கள் சிவா.ஜி...

சிவா.ஜி
01-03-2009, 08:52 PM
.
குடி குடியையும் கெடுத்து அவனுக்காக வாழ்ந்த அப்புனிதமான உயிரையும் கடைசியில் பைத்தியாமாக்கிவிட்டதே!


குடியின் கேடுகள் எத்தனையோ....அதில் இது காணக்கூடாதது.

நன்றி நிரன்.

சிவா.ஜி
01-03-2009, 08:56 PM
இரு சம்பவங்கள் கரையாய்
இணைக்கும் கற்பனை நதியாய்..

வாழ்க்கை மணல் புரட்டுகிறது..
நனைந்த மனம் கனக்கிறது..


சம்பவக்கரைகளுக்கு நடுவே கற்பனை நதியென்றாலும்..சிலவை நேரில் கண்ட....காணுகின்ற உண்மைகள் இளசு. என்னையறியாமல் என் நண்பனின் உண்மைப்பெயரை இதில் பயண்படுத்திவிட்டேன். மதன்...தங்கமானவன். தந்தையின் பணம் நண்பர்களுக்கும் பயன்பட்டது...நாசத்துக்கும் பயன்பட்டது.

நன்றி இளசு.

சிவா.ஜி
01-03-2009, 08:59 PM
போதைகளின் பிடியில் பிச்சைக்காரியாகிப் பைத்தியமாகிப்போன தாய்க்கும் போதைதான்.
ஒரு பக்கம் குடிப்போதை.
மறு பக்கம் சொத்துப்போதை.
நடுவில் தாயின் பாசப்போதை.விமர்சனப்புலியின் அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். எத்தனை உண்மை...?
பாசமும் ஒரு போதையாகி காட்டுபவரையும், காட்டப்படுகிறவர்களையும் அவதிக்குள்ளாக்கிவிடுகிறது.

ஆழமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி.

samuthraselvam
02-03-2009, 10:04 AM
குடி குடிப்பவர்களை மட்டுமல்ல கூட இருப்பவர்களையும் கெடுக்கும். கதையின் முடிவு கண்களை ஈரம் ஆக்குகிறது அண்ணா... இதுபோல் குடியால் அழிந்த குடும்பங்கள் நம் நாட்டில் நிறைய இருக்கிறது. என் வீடிற்கு அருகில் உள்ள வீட்டில் பரிமளா என்ற பெண் இருக்கிறாள். அவள் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பான். பாவம் அவள் வெளியில் யாரிடமும் சொல்லவே மாட்டாள். ஆனால் குடிக்காது இருக்கும் பொது அவர்களைப் போல் ஒரு அன்யோன்னிய தம்பதி யாருமே இல்லை என சொல்லும் அளவிற்கு இருப்பார்கள். இதுபோல் இன்னும் எத்தனை வீடுகளில் எத்தனை விதமாக குடி கொண்டிருக்கிறதோ இந்த குடிப்பழக்கம்.

கதையல்ல இது நிறைய வீடுகளில் நடக்கும் நிஜம்.

அமரன்
02-03-2009, 10:17 AM
சம்பவத் தூண்டல்களில் துலங்கல்களாகக் புதியன உருவாவது இயல்பு. எங்கள் எழுத்து விஞ்ஞானி சிவாவுக்கு அவ்வியல்பு அதீதமாக அமைந்ததில் மகிழ்ச்சி. அளவிறந்த சுவையுடன் விருண்ணும் பாக்கியம் கிடைக்கிறதே.

பெத்த மனசு தலைப்பு. பித்தானது முடிவு. அருமையான முடிச்சு.

இரண்டுக்கும் நடுவில் அனுபவங்களில் தொகுப்பு. அழகாக, எளிதில் எடுத்திடக் கூடியதாக அடுக்கப்பட்டுள்ளது.

நான் என்று சிவா எழுதியதில் இடறி விழுந்தேன். பிச்சை எடுத்தபோது கண்ட நண்பனின் தாயையும் அவளால் அறிந்த நண்பனையும் என் சிவா நிச்சயமாக காசு கொடுத்து விட்டு அப்படியே விட்டுப் போயிருக்க மாட்டார்.

எனது இக்கருத்து அதீதம் தான். அதுக்குக் காரணம் சிவாதான். பொதுவாகவே கதையுடன் ஒன்ற வைக்கும் சிவா தன்னிலை கதைசொல்லியாகி மிகவும் இறுக்கமாக கதையுடன் என்னைப் பிணைத்து விட்டார்.

மற்றவர் துன்புறுத்தப்படும் நிலைக்கு தன் மகன் தள்ளப்படுவதைத் தவிர்க்க தான் துன்புறுவது..
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த மகனின் மரணம் தந்த மகிழ்ச்சியில் பித்தாகியது..
பித்து உதிர்க்கும் வார்த்தைகளில் சோக வித்தும் கலந்திருப்பது..
இப்படி தாயில் காந்தி உட்பட்ட பல பாத்திரங்களைக் கண்டேன்.

போதைகள் வாழ்க்கைக்குத் தேவை. மருத்துவப் பொருட்கள் சிலதின் தயாரிப்பில் கூடப் போதை தரும் கலவை உண்டு. ஏன் ஆரோக்கியம் பேணும் சில மருந்துகளே போதை தரவல்லதும் கூட. அளவு என்பது எமக்காக அளந்த முக்கியமான ஒன்று.சதையும் குருதியுமாக கதைபடைத்த சிவாவுக்கு என் வாழ்த்தும் பாராட்டும்.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
02-03-2009, 12:26 PM
நல்லதொரு பதிவு, கண்களை ஈரமாக்கி மனதில் தங்கிவிட்ட அருமையானதொரு படைப்பு. பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவரின் மறுபக்கமும் ரணங்களின் பிரதிபலிப்புகள் நிறைந்ததொரு சோகவனம் தான், அதை கண்டறிந்து கதையாக்கி தந்திட்ட சிவாவை என் கரங்கள் தேடுகிறது கை குலுக்கி பாராட்ட!

மதி
02-03-2009, 12:34 PM
மனது கனத்துவிட்டது. குடி குடியைக் கெடுக்கும். தங்கள் திறமையை கதையில் முழுமையாக ஒன்ற வைத்துவிட்டீர்கள்.

வாழ்த்துகள் அண்ணா..

சசிதரன்
02-03-2009, 01:15 PM
மிகவும் நெகிழ்ச்சியான கதை அண்ணா... எனக்கு விமர்சனங்கள் எப்படி எழுதுவதென்று தெரியாது... நல்லா இருக்கு, அருமையா இருக்கு.. இப்படிதான் சொல்ல தெரியும்... இந்த கதைய படிச்சிட்டு அப்படி ஒரே வார்த்தையில சொல்லிட்டு போக முடியல... வாசிக்கும் நேரத்தில் நான் என்னை 'முரளி'யாகத்தான் உணர்ந்தேன்... நல்ல கதை அண்ணா...:)

ரங்கராஜன்
02-03-2009, 03:13 PM
நல்ல கரு அண்ணா, நானும் இந்த மாதிரி தானம் கேட்பவர்களை பார்த்து இருக்கேன். ஒரு முறை மேற்கு மாம்பலத்தில் ஒரு 60 வயது மதிக்கதக்க முதியவர் என்னிடம் வந்தார்.

“எக்ஸ் க்யூஸ் மீ சார்” என்றார்.

திரும்பி பார்த்தேன், நெற்றியில் (ஆரஞ் கலர்ல ஒண்ணு இருக்குமே, கேசரி பவுடர் மாதிரி, சட்டுனு அது பேர் நியாபகம் இல்லை) அந்த பவுடரில் நாமம் போட்டு இருந்தார். அவர் மீது இருந்து ஜவ்வாது வாசனை அடித்தது. கொஞ்சம் பழைய சட்டை போட்டு இருந்தார் ஆனால் இஸ்திரி பண்ணி போட்டு இருந்தார். சட்டைக்கு உள் பூணூல் தெரிந்தது. அவரை பார்த்தவுடன் சிரித்துக் கொண்டு, நான் அவரிடம்

“ சொல்லுங்க சார் “

“ நான் தாம்பரம் போகவேண்டும்”

“ சரி”

“எப்படி போறதுனு தெரியல.....”

“அந்த கடைசில தான் பஸ் ஸ்டாண்டு, அங்க போய்.............”

“இல்ல இல்ல என்னுடைய மகனுடன் வண்டியில் சாப்பிங் வந்தேன், எல்லாம் முடிச்சிட்டு நாங்க வண்டியில் கிளம்பும் பொழுது நான் ஏறுவிட்டேன் என்று நினைத்துக் கொண்டு அவன் என்னை விட்டு விட்டு கிளம்பி விட்டான்”

என்னுடைய முகம் மாறியது.

“என்ன வண்டி உங்க பையன் வைத்து இருக்கார்”

அவருடைய முகம் மாறியது.

“பைக்”

“இப்ப உங்களுக்கு எவ்வளவு காசு வேண்டும்”

“தாம்பரம் போற அளவு காசு கொடுத்தால் போதும்”

“4 ரூபாய் தான் ஆவும்”

“அங்க இருந்து என்னுடைய வீட்டுக்கு போறதுக்கு 20 ருபீஸ் ஆவும்”

“இங்க இருந்து திண்டிவனத்துக்கே அவ்வளவு தான் ஆகும்”

“இல்ல ஆட்டோவில் போவதற்கு”

நான் எந்த வித ரீயாக்ஸனும் கொடுக்கவில்லை, என்னுடைய பாக்கெட்டில் இருந்து 10 ரூபாய் எடுத்து கொடுத்து

“நீங்க சொல்வது பொய்யினு எனக்கு நல்லா தெரியும், இருந்தாலும் பரவாயில்லை. இந்தாங்க”

பெரியவருக்கு அவமானத்தில் முகம் இறுகியது, அவர் முகம் இறுகியதும் என்னுடைய மனம் சுருங்கியது, அந்த வார்த்தையை சொல்லி இருக்க கூடாதோ............ என்று. அவர் என்னுடைய முகத்தை பார்த்தார், அவருக்கு விளங்கிவிட்டது.

“இல்ல தம்பி எனக்கு வேண்டாம்” என்று திரும்பி நடக்க தொடங்கினார். எனக்கு அவமானமாக இருந்தது, அவரை இந்த அளவுக்கு
அவமானப்படுத்தி இருக்க வேண்டாம் என்று என்னுடைய மனம் என்னை இறுக்கியது. கொஞ்ச தூரம் போன பெரியவரை

“சார் கொஞ்சம் நில்லுங்க” என்றேன். நின்னார்.

“காலையில் சாப்பிட்டிங்களா?” என்றேன். அவர் என்னை பார்த்து சிரித்துக் கொண்டு இல்லை என்பது போல தலையை ஆட்டினார்

“சாப்பிடலாமா?” என்றேன்.

“ம்ம்ம்ம், போன தடவை சாப்பிட்டோமே அங்கயே சாப்பிடலாம்” என்றார் சிரித்துக் கொண்டு.

“இப்ப தான் நியாபகம் வந்ததா?” நானும் சிரித்தேன்.

“வயசு ஆயிடுச்சா, அதனால தான் நினைவில இருக்க மாட்டுது, இனிமே சுதார்ச்சிகிறேன்” என்று சிரித்தார். இருவரும் ஓட்டலை நோக்கி போனோம்.

இதே பெரியவர் என்னிடம் ஏற்கனவே இதே காரணங்களோடு இப்படி கேட்டு இருக்கிறார், நானும் இதே வசனங்களோடு அவருக்கு காசை கொடுத்து, சாப்பாடும் வாங்கி கொடுத்து இருக்கேன். அது முடிந்து ஒரு மாத இடைவேளையில் தான் நடந்தது நான் மேலே சொன்ன சந்திப்பு. என்னுடன் வந்து சாப்பிட்டார் ஆனால் காசை வாங்கிக் கொள்ளவில்லை.

பாவம் முதியவர்கள் அவர்களுக்கு உதவுவதால் தப்பு இல்லை என்பது என்னுடைய கருத்து. நம் எல்லாரின் கருத்து அதுதான், ஆனால் அதை உபயோகப்படுத்திக் கொண்டு சிலர் ஏமாற்றவும் செய்கிறார்கள்.

சிவா அண்ணா உங்களின் கடைசி வரிகளை படிக்கும் பொழுது அன்பு சொன்னது போல தொண்டைகுழி வரண்டு விட்டது

சிவா.ஜி
02-03-2009, 03:27 PM
மற்றவர் துன்புறுத்தப்படும் நிலைக்கு தன் மகன் தள்ளப்படுவதைத் தவிர்க்க தான் துன்புறுவது..
குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த மகனின் மரணம் தந்த மகிழ்ச்சியில் பித்தாகியது..
பித்து உதிர்க்கும் வார்த்தைகளில் சோக வித்தும் கலந்திருப்பது..
இப்படி தாயில் காந்தி உட்பட்ட பல பாத்திரங்களைக் கண்டேன்.கதையின் சாராம்சத்தை தன் அழகான கருத்தால் சிறப்பாகச் சொன்ன அமரனை நெஞ்சார வாழ்த்துகிறேன். வாசித்த கதைக்கு பின்னூட்டமிடும் வரிகளிலேயே தன் வித்தகத்தைக் காட்டும் எழுத்து சித்தர் அமரனுக்கு மிக்க நன்றிகள்.

சிவா.ஜி
02-03-2009, 03:28 PM
நான் மதிக்கும் நல்லதொரு கதாசிரியர் ஐ.பா.ரா அவர்கள் அவரின் பாராட்டு எனக்கு இன்னும் உற்சாகமளிக்கிறது. மிக்க நன்றி அய்யா.

சிவா.ஜி
02-03-2009, 03:30 PM
மிக்க நன்றி மதி.

உணர்ந்து எழுதிய பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சசி.

உன் அனுபவத்தைப் படிக்கும்போது என் தம்பி என்ற பெருமிதம் தோன்றுவதை தடுக்கமுடியவில்லை தக்ஸ். நல்ல உள்ளம் உனக்கு. மிக்க நன்றி தக்ஸ்.

சிவா.ஜி
02-03-2009, 03:33 PM
குடி குடிப்பவர்களை மட்டுமல்ல கூட இருப்பவர்களையும் கெடுக்கும். கதையின் முடிவு கண்களை ஈரம் ஆக்குகிறது அண்ணா... இதுபோல் குடியால் அழிந்த குடும்பங்கள் நம் நாட்டில் நிறைய இருக்கிறது. என் வீடிற்கு அருகில் உள்ள வீட்டில் பரிமளா என்ற பெண் இருக்கிறாள். அவள் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பான். பாவம் அவள் வெளியில் யாரிடமும் சொல்லவே மாட்டாள். ஆனால் குடிக்காது இருக்கும் பொது அவர்களைப் போல் ஒரு அன்யோன்னிய தம்பதி யாருமே இல்லை என சொல்லும் அளவிற்கு இருப்பார்கள். இதுபோல் இன்னும் எத்தனை வீடுகளில் எத்தனை விதமாக குடி கொண்டிருக்கிறதோ இந்த குடிப்பழக்கம்.

கதையல்ல இது நிறைய வீடுகளில் நடக்கும் நிஜம்.

உண்மைதாம்மா. குடியால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்திருக்கின்றன. நீ சொன்ன அந்த பக்கத்துவீட்டுக்காரர்கள் எத்தனைதான் அந்யோந்யமாக இருந்தாலும், அந்தக் கண்வன் குடித்துவிட்டு தன் மனைவியை அடிக்கும்போது மிருகமாகிவிடுகிறானே...பிறகு பாசம் காட்டி என்ன பிரயோசனம்?

நன்றி லீலும்மா.

ரங்கராஜன்
03-04-2009, 05:11 PM
பெத்தமனசு சிறுகதை யூத்புல் விகடனில் வந்து இருக்கு, என்னுடைய அண்ணனின் சிறுகதை விகடனில் வெளி வந்ததை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறேன்.............. வாழ்த்துக்கள் சிவா அண்ணா

அறிஞர்
03-04-2009, 05:21 PM
பெத்தமனசு சிறுகதை யூத்புல் விகடனில் வந்து இருக்கு, என்னுடைய அண்ணனின் சிறுகதை விகடனில் வெளி வந்ததை எண்ணி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறேன்.............. வாழ்த்துக்கள் சிவா அண்ணா
விட்டா... யூத் விகடனை.. மன்றத்துக்காரர்கள் குத்தகைக்கு எடுத்துவிடுவார்கள் போல இருக்கு.

வாழ்த்துக்கள் சிவா.ஜி.

அறிஞர்
03-04-2009, 05:25 PM
மனதை கனக்க வைத்துவிட்டது.. சிவா.....
எழுத்தாளருக்கு வேறு என்ன சொல்வது..

ஓவ்வொருத்தரிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிக் கொண்டீர்கள்.

சிவா.ஜி
03-04-2009, 05:27 PM
நன்றி அறிஞர். எல்லாம் என் தம்பியின்(தக்ஸின்) தூண்டுகோல்தான். அவனுக்கு என் நன்றியை....வேணாம்...எதுக்கு உடன் பிறப்புக்கு நன்றி? மன்ற உறவுகளுக்கு நன்றி. அவர்கள்தானே நீதிபதிகள். அவர்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டாலே...அது என் படைப்புக்கு கிடைத்த வெற்றிதான்.

அறிஞர்
03-04-2009, 05:28 PM
நன்றி அறிஞர். எல்லாம் என் தம்பியின்(தக்ஸின்) தூண்டுகோல்தான். . மன்ற உறவுகளை நினைத்து பெருமையடைகிறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொருத்தர் தூண்டுகோல்..

"இணைய உலகில் இணைந்து அனைவரும் என்றும் வளருவோம்".

ரங்கராஜன்
03-04-2009, 05:39 PM
சிவா அண்ணா பெத்த மனசு தலைப்பில் விகடனில் வெளிவந்து இருக்குனு போடுங்கள் அண்ணா........ நீங்க அதை விரும்ப மாட்டீர்கள் இருந்தாலும் பரவாயில்லை போடுங்கள் எங்களுக்காக

சிவா.ஜி
03-04-2009, 05:47 PM
இன்னும் பாக்கல தக்ஸ். பாத்துட்டு போடனுமா.....நீ போட்டதே போதாதா...என்னை சிக்கல்ல மாட்டி வுடறதே உன் பொழப்பாப் போச்சி....

சாலைஜெயராமன்
04-04-2009, 08:17 PM
தியாகத்தின் பல முகங்களில் ஒரு புதிய கோணத்தை தந்திருக்கும் திரு சிவா அவர்களின் உள்ளுணர்வுகளை சோகத்தோடு எங்கள் உள்ளங்களிலும் ஏற்றிவிட்ட அற்புத குறும் படைப்பு. இணைய தள விகிடனில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ் கூறும் நல்லுலகில் விகடனின் பங்களிப்பு எப்போதும் முதன்மை பெறுவதற்கு இது போன்ற படைப்பாளிகளின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்கிறது. உடன் அங்கீகரித்து நல்ல எழுத்துக்களை ஊக்கப்படுத்துவதில் விகடனுக்கு இணை விகடந்தான்
திரு சிவாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். சமூக அவலங்களைக் கண்டு அதன் பாதிப்பை மற்றவர்கள் பார்வைக்கு நெருட வைக்கும் அளவுக்கு தந்து, போதை வசப்பட்ட பல உள்ளங்கள் திருந்துவதற்கு தன்னால் ஆன ஒரு சிறு முயற்சியாக இருக்கட்டும் என்ற உள்ளுணர்வின் உந்துதலாலேயே இந்த கதையை சிவா எழுதியிருப்பார் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள் தோழரே

அபரிமிதமான சமூகப் பிரஞ்கை தங்களிடம் இயல்பால் குடிகொண்டிருப்பதால்தான் இப்படிபட்ட எழுத்துக்களை வடிக்க முடிகிறது. வெறும் கற்பனை வளம் மட்டும் கருத்துக்களைக் கொண்டு வராது. கூரிய அக நோக்கு, விமர்சனச் செறிவு இரண்டும் பெரும் பங்காற்றி பொதுவாழ்வில் அவலமான எதார்த்தத்தை தோலுருத்திக்காட்டுவது என்பது எவரும் அவ்வளவு சாதாரணமாக கற்பனையில் செய்ய முடியாது

திரு சிவா எப்பொழும் தன்னைப்பற்றியே எண்ணாமல் தான் சார்ந்துள்ள இச் சமூகத்திற்கு நம்மால் ஏதாவது இயன்றளவு செய்ய வேண்டும் என்ற சிந்தனை வாய்க்கப் பெற்றதால்தான் இந்தப் படைப்பை தந்திருக்கிறார்.

மிக அருமையான சரளமான நடையோடு கூடிய எழுத்துக்கள் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது. எத்தனைபேர் படித்தார்கள் எனத் தெரியவில்லை.

ஒரு காலத்தில் பொது அறிவு நூல்களாகத் தேர்வு செய்து படிப்பது எனக்கெல்லாம் வழக்கமாக இருந்தது. அறிவு தந்ததின் பலனை சமூகத்திற்கு அர்ப்பணித்தலே படித்ததின் பலன் என்று உணர இவ்வளவு காலமாகிவிட்டது.

பொது அறிவுத்திரட்சியைக் காட்டிலும் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுதரும் பாதிப்புகள் மீண்டும் தொடராமல் இருக்க இப்படிப்பட்ட விழிப்புணர்வு பங்களிப்பை எந்த வகையிலாவது தந்தாலே கல்வியின் பலனை முழுமையாகப் பெற்றோம் என்றாகிவிடும். அந்த வகையில் பெரிய எழுத்தாளன் என்ற போர்வையில் மர்மக் கதை, சமூகக் கதை என எழுத முயற்சிக்காமல் அன்றாடம் நாம் காணும் நிகழ்வுகளைத் தொகுத்து பொதுவில் அனைவர் பார்வைக் கொண்டு வரும் ஒரு சிறு சமூகத்தொண்டாக இதைச் செய்துள்ளார் திரு சிவா.

பெரிய கல்வியாளர்களும், பத்திரிக்கையாளரும் செய்யவேண்டிய வேலையை திரு சிவா அனாயசமாகச் செய்துள்ளார். அனைவரும் அவரை வாழ்த்துவோம். .

இந்தியப் பத்திரிக்கைகள் திரித்துக் கூறும் செய்திகளுக்கும், உணர்ச்சிகளைத் தூண்டும் கருத்துக்ளுக்குமட்டும் தான் அங்கீகாரம் தரும். அது நமது நாட்டின் சாபக் கேடு

மன்றத்துப் பதிவில் ஒரு பத்திரிக்கைத் தர்மத்தை ஞாபகப்படுத்தும் ஒரு பங்களிப்பை தந்த சிவாவை பாராட்ட வார்த்தையில்லை

சிவா.ஜி
04-04-2009, 08:48 PM
திரு. ஜெயராமன் அவர்களின் நீண்ட பின்னூட்டம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தாலும், சமூக பிரக்ஞை இன்னும் பலமடங்கு கூடவேண்டுமென்று உரைக்கிறது. கதைகளினூடே ஏதேனும் ஒரு சமூகம் சார்ந்த கருத்தை அதில் தெரிவிப்பது எழுத்தாளனின் கடமையாகிறது. முடிந்தவரை இதை என் எழுத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள முயல்கிறேன்.

மற்றபடி திகில் கதைகள், மர்மக்கதைகள் எழுதினாலும் அதையும் சுவாரசியமாகவும், அதிலும் ஏதேனும் கருத்தை இலைமறைக் காயாகக்கொடுக்கவும் முடியும். அப்படித்தான் எழுத வேண்டுமென நானும் விரும்புகிறேன். ஆனால் சில கதைகளை மட்டும் முழுக்க முழுக்க சுவாரசியத்துக்காக மட்டுமே எழுதுமாறு ஆகிவிடுகிறது. எல்லாம் கலந்திருப்பதுதானே நல்லது.

திரு. ஜெயராமன் அவர்களின் இந்த பின்னூட்டம் நிறைய சிந்திக்க வைத்திருக்கிறது. அவருக்கு என் மனம்நிறைந்த நன்றிகள். உங்களின் பங்களிப்பு மன்றத்தில் பழையபடி அதிகரிக்கவேண்டுமென விரும்பும் பேராசைக்காரர்களில் நானும் ஒருவன்.

ஆதவா
25-04-2009, 11:35 AM
பிச்சை எடுப்பவர்கள் இரவில் மது அருந்துகிறார்கள். அவர்கள் பெண்களேயாயினும்.... ஒரு அதிர்ச்சித் தகவல் படித்தேன். இங்கே மதுவுக்காகவும் தன் மகனுக்காகவும் பிச்சை எடுக்கிறாள்..

அந்த அம்மாவின் பாசம் எப்படிப்பட்டது? மகன் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறாளா? அல்லது இறக்காமல் வாழவேண்டும் என்று நினைக்கிறாளா? தவறு அந்த அம்மாவின் மீதுதான்.. வேறவழியுமில்லை. அவளைத் தவறு செய்யத் தூண்டுகிறான் மகன்.

ஒரு சாதாரணக் கதைபோல தெரிந்தாலும் இறுதியில் ஒரு குறுங்கவிதையை எழுதி அசாதாரணப்படுத்திவிட்டீர்கள். மதுவுக்கும் மகனுக்குமிடையே அந்த தாய் பாசத்தால் கட்டுண்டு பித்தமாகிவிட்டாள். அவளது உணர்வுகள் நறுக்கப்பட்டு குப்பையில் கிடத்தப்பட்டிருக்கின்றன. இப்படி பலர் உண்டு... ஒருசிலர் பாசமெனும் மாயவலையை அறுத்துவிடுவார்கள். பின் அவர்களுக்குத் தெரிவதெல்லாம் ஒரு குடிகாரன் மட்டுமே..... மதனுடைய அம்மா பாவம், வலையை அறுக்கத் தெரியாத அப்பாவி.

மிகச் சிறப்பாக இருக்கிறது அண்ணா.... தேர்ந்த க்தாசிரியருக்கு இக்கதைகள் சாதாரணமாக எழுகின்றன போலும்!!!! வாழ்த்துகள் அண்ணா!!