PDA

View Full Version : .........



சசிதரன்
25-02-2009, 10:21 AM
மொத்தமாய் உருக்குலைந்து...
தரை முழுவதும் உயிர் உருகி...
ஒளி தொலைத்திருந்தது மெழுகுவர்த்தி...

சற்று முன்தான் நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதை...
உணர்த்தி செல்கிறது...
புகையென கலந்த கடைசி சுவாசத்தை...
சுமந்தபடி கடக்கும் காற்று.

உடல் முழுவதும் தீயை பரவவிட்டு...
ஒவ்வொரு நொடியும் உயிர் கரைந்திருக்கிறது...
கடைசி துளி வரை உயிர் சிந்தியிருக்கிறது.

இருக்கும் வரையில் வெளிச்சம் பரப்பி...
இறந்த பின்னே இருளில் கிடக்கிறது.
இரக்கமோ... வருத்தமோ... எதுவும் தோன்றாமல்...
சூழும் இருள் பற்றியே எனக்கு கவலை.

இருள் போக்க வேண்டி... தேடி எடுக்கிறேன்...
மற்றொரு மெழுகுவர்த்தியை.
உடல் மீது கொள்ளி வைக்கிறேன் மறுமுறை...

கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் உருக...
கண்ணீராய் கரைய தொடங்குகிறது... ஒளி வீசி...

அக்னி
25-02-2009, 10:41 AM
உயிர்த் திரி
முழுமையாய்
எரிந்த பின்னரும்,
உருகி உறைந்துபோன
மீதமான உடலுக்குள்
இன்னமும் உள்ளது
ஒளிரும் சக்தி...

சேர வேண்டிய
இடம் சேர்ந்தால்,
மீதங்களுக்குள்
செருகப்படும்
மீண்டும் உயிர்த் திரி...

உயிர்த்திடும் மீண்டும் ஒளி...

பாராட்டுக்கள் சசிதரன்...

நாகரா
25-02-2009, 11:45 AM
சசிதரனின் கவி
மெழுகு மெய்யையும்
அக்னியின் பின்னூட்டக் கவி
திரி உயிரையும்
நோக்குங் கோணங்கள் அருமை!

வாழ்த்துக்கள் இருவருக்கும்

மெழுகு மெய்யுருக்கித்
திரி உயிர் கரைக்கும்
சுடர் ஒளியும்
வெட்டவெளிக்குள்
ஒளியும்!

வசீகரன்
26-02-2009, 05:43 AM
ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறமுடியும்
என்ற வாழ்வியல் உண்மையை உரைக்கும் உயரிய கவிதை....

தன்னை கரைத்து வெளிச்சம் தந்தது மெழுகு
மீண்டும் இருள் கவ்வுகிறது....
வேண்டும் மீண்டுமோர் மெழுகு..........

நாம் தேவைக்காக நாம் தினம் தினம் நம்மை எரித்து
உழைத்துதான் காத்துகொள்ளவேண்டும்...!!!

நல்லதொரு கவிதை சசி பாராட்டுக்கள்...!!!

சசிதரன்
26-02-2009, 09:10 AM
மிக்க நன்றி நண்பர்களே... உங்கள் சிறப்பான பின்னூட்டங்கள் என்னை மேன்மைப்படுத்தும் என்பதில் ஐயமில்லை...:)

ஆதி
26-02-2009, 11:35 AM
//இருக்கும் வரையில் வெளிச்சம் பரப்பி...
இறந்த பின்னே இருளில் கிடக்கிறது.
//

இறந்த பின்னே மட்டுமல்ல சசி.. எரியும் போதும் அது இருளில் தான் இருக்கும்..

எரியும் எல்லா விளக்கும் இருள்வட்டதுக்குள் இருந்தான் எரியும்.. எரியும் நாவுகள் இருட்டை உண்டு ஒளியை உற்பத்தி செய்யும்..

வெளிச்சத்தின் முகவரிகளாய் இருப்பவர்கள் ஞானிகள்..

வெளிச்சமாகவே இருப்பவர்கள் தெய்வங்கள்..

இந்த மெழுகுவத்தியும் தெய்வம் தான்..

வாழ்த்துக்கள் சசி..

இளசு
26-02-2009, 08:17 PM
சசி அக்னி - கவிப்பார்வைகளில்
இன்னமும் கூடுதல் ஒளியும்
இன்னும் பலமுறை கூடுதல் உயிரும்...
மெழுகுவர்த்திக்கு!

கவிஞர்களின் பார்வை அடிக்கடி படும் பாக்கியம் பெற்றது இது..

ராஜா அவர்கள் தந்த இணைய முத்துகள் திரியில்
வைரமுத்துவும் பார்த்திருக்கிறார் இந்த மெழுகுவர்த்தியை..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16239

ஷீ-நிசி
27-02-2009, 12:27 AM
யே! அருமைபா... அப்படியே கண்முன் விரித்தாடுகிறது கவிதையின் சூழல்.. படித்துமுடிக்கையில் மனமெங்கும் ஒருவித அமைதி! வாழ்த்துக்கள்!


சற்று முன்தான் நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதை...
உணர்த்தி செல்கிறது...
புகையென கலந்த கடைசி சுவாசத்தை...
சுமந்தபடி கடக்கும் காற்று.

ரசித்தேன் இந்த வரிகளை!!

சசிதரன்
27-02-2009, 02:45 PM
மிக்க நன்றி ஆதி அவர்களே... உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி இளசு அண்ணா... தோழமையான பாராட்டிற்கு நன்றி ஷீ - நிசி...:)