PDA

View Full Version : கோவணாண்டியின் கோவமும் கோரிக்கையும்



சுகந்தப்ரீதன்
23-02-2009, 04:30 AM
இலங்கை தமிழர்களுக்கு கோவணாண்டி ஆதங்க கடிதம்!

நாடு இழந்து, நாதியத்து, நடுகாட்டுல கிடக்கிற அப்பாவி ஈழத் தமிழருங்களுக்கு உங்க கோவணாண்டி வணக்கம் போடறேன்! இந்தக் கடுதாசி, நிச்சயமா உங்கள்ல ஒருத்தர் கையில கூட கிடைக்காம போகலாம். ஆனா, காத்து வாக்குல கண்டிப்பா நாலு வரியாவது உங்க காதுக்கு வந்து சேரும்கிற நம்பிக்கையில பேனாவை எடுத்துட்டேன். இதுவரைக்கும் எத்தனையோ தலைவருங்களுக்கும், அதிகாரிங்களுக்கும் கடுதாசி எழுதியிருக்கேன். அப்பல்லாம் ஒரு நொடி கூட எங்கை நடுங்கினது கிடையாது. ஆனா, ஒவ்வொரு நொடியும் ஈழத்துல இருந்து வர்ற தகவல்களை கேட்கறப்பவும்... படங்களைப் பார்க்கறப்பவும்... எண்ணெய் கொப்பரையில விழுந்த எறும்பு மாதிரி துடிக்குது... கை நடுங்குது.

இத்தனை நாளா எங்கப் பிரச்னைங்களையே பெரிய பிரச்னையா நினைச்சி எழுதித் தள்ளிக்கிட்டிருந்தேன். ஆனா, அங்க நடக்கற அநியாயத்தையெல்லாம் பார்த்தா... இதெல்லாம் ஒரு விஷயமே இல்லனுதான் தோணுது. அதனாலதான் இந்தத் தடவை, எங்க பிரச்னையைக் கொஞ்சம் ஓரம்கட்டி வெச்சிட்டு, உங்களுக்காக நாலு வார்த்தைங்களை, எங்க கோவணாண்டிங்க சார்பா சொல்லலாம்னு எழுதறேன். அந்த வகையிலயாவது உங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைச்சா... அதுவே எனக்கு நிம்மதி!

ஒரு வகையில உங்க நிலைமையிலதான் நாங்களும் இருக்கோம். அங்க, ராஜபக்ஷேவோட ராட்சஷ ராணுவப் படை உங்களோட வீடு-வாசல், நில-புலன், சொந்தம்- பந்தம்... எல்லாத்தையும் புடுங்கிக்கிட்டு துரத்தியடிச்சிக்கிட்டிருக்கு. உசுரைக் கையில புடிச்சிக்கிட்டு, சாவோடு தினத்துக்கும் சண்டை போட்டுக்கிட்டுக் கிடக்கறீங்க நீங்க.

இங்க, ஏகப்பட்ட சட்டம்- திட்டமெல்லாம் போட்டு, இருக்கறதையெல்லாம் முடிஞ்ச அளவுக்கு ஏற்கெனவே எங்க ஊரு அரசியல்வாதிங்களும், அதிகாரிங்களும் உருவிட்டாங்க. மிச்ச, சொச்சம் துண்டு துக்கடா நிலம்தான். ஆனா, அதுக்கும் அந்த மண்டலம்... இந்த மண்டலம்னு பல ரூபத்துல வேட்டு வெச்சிக்கிட்டிருக்காங்க இந்த அரசியல்வாதிங்களும், அராஜக தொழிலதிபருங்களும்.

ஆந்திராவுல சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு நிலம் கொடுத்த விவசாயிங்க, செத்தா புதைக்கறதுக்குகூட இடம் இல்லாம இப்ப அலையறாங்க. ஏக்கர் 20 ஆயிரம் ரூபாய்னு விவசாயிகிட்ட இருந்து நிலத்தை நேத்து பிடுங்கிக் கொடுத்தாங்க. இப்ப ஏக்கர் 2 லட்ச ரூபாய் சுடுகாட்டுக்கு நிலம் வாங்கியிருக்காங்க. இதையெல்லாம் எங்க போய் சொல்ல.

ஒப்பிட்டுப் பார்த்தா... உங்க துன்பத்துக்கு கால் தூசுதான் எங்க துன்பம். ஆனா, போற போக்கைப் பார்த்தா... கூடிய சீக்கிரமே உங்க நிலைமைக்கு நாங்க ஆளானாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல.

அங்க ஒரேயரு ராஜபக்ஷே, இருக்கற பூமியெல்லாத்தையும் தானே வளைச்சிக்கணும்னு உங்க மேல ராணுவத்தை ஏவிவிட்டுக்கிட்டிருக்கார். ஆனா, இங்க திரும்பின பக்கமெல்லாம் ராஜபக்ஷேதான். அந்தக் கம்பெனி... இந்தக் கம்பெனி; அந்தக் கட்சி... இந்தக் கட்சினு ஆளாளுக்கு ஒரு முகமூடியைப் போட்டுக்கிட்டு, எங்களோட நிலங்களை சுத்தி வளைச்சிக்கிட்டிருக்காங்க.

துப்பாக்கி, டாங்க், ராக்கெட்குண்டு, கொத்து குண்டுனு போட்டு ஒரேயடியா உங்கள ஒழிக்குது சிங்கள ராணுவம்... இங்க, கறித்துண்டு, குவார்ட்டர் பாட்டிலு, சொற்ப காசு இதுதான் ஆயுதமே. இதையெல்லாம் காட்டிக் காட்டியே சத்தமில்லாம நிலத்தை வளைச்சிக்கிட்டு அகதியாக்கிக்கிட்டிருக்காங்க.

ஒட்டுமொத்தத்துல ஈழப் பிரச்னைக்கும்... உள்ளூரு உழவனுங்க பிரச்னைக்கும் சூத்திரதாரியே நாம நம்பிக்கிட்டிருக்கற இந்த அரசியல்வியாதிங்கதான். ஆனா, இங்க இருக்கற உழவனுங்களும் சரி... அங்க இருக்கற தமிழனுங்களும் சரி... இந்த வியாதிங்ககிட்டதான் அபயம் கேட்க வேண்டியிருக்கு. அதை நெனச்சாத்தான் வேதனையில நெஞ்சி வெடிக்கிது.

ராஜபக்ஷேவோட ராட்சஷ ராணுவம் கொத்துக் குண்டு போடுது. குழந்தைங்க, தாய்மாருங்கனு எல்லாரும் கொத்துக் கொத்தா செத்து விழறாங்க... அழறதுக்கு கண்ணீர்கூட இல்லாம தமிழ்த் தாய் துடிக்கிறா...! அப்பேர்பட்ட ராட்சஷனுங்களுக்கு மாண்புமிகு மன்மோகன்சிங் அரசு குண்டு சப்ளை செய்யுது. இரக்கமே இல்லாத அந்த அரசாங்கத்துல 'உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர்' கருணாநிதி, 'தமிழினப் போராளி' ராமதாஸ் இவங்க ரெண்டு பேரும் பங்காளிங்க.

தமிழ் இனத்தை அந்த கருணா காட்டி கொடுத்தாருனா... இந்தக் கருணா(நிதி) ஓயாம பேட்டி கொடுக்கறாரு.

'ரோம் நகரமே தீப்பிடிச்சி எரியறப்ப பிடில் வாசிச்சானாம் நீரோ மன்னன்'னு சொல்வாங்க. அந்தக் கணக்கா, 16 மைல் தூரத்துல தமிழனுங்க செத்துக்கிட்டிருக்கறப்பகூட, வள்ளுவர் கோட்டத்துல பாராட்டுவிழாங்கற பேருல பல மணி நேர ஜால்ரா சத்தத்துக்கு காது கொடுக்கறாரு கருணாநிதி. கடைசியில, இந்தியாவோட குடியரசு தின விழாவுல கூட கலந்துக்காம... முதுகுவலினு போய் ஆஸ்பத்திரியில படுத்துக்கறாரு. அரசியல் அங்கீகாரமே இல்லாத கட்சிங்களையெல்லாம் கூட்டி வெச்சி, உங்க பிரச்னையைப் பத்தி பேசுற துக்காக கூட்டம் போட்டு முடிச் சிட்டு, 'அனைத்துக்கட்சி கூட்டம்'னு போட்டோவுக்கு போஸ் கொடுக்கறாரு.

இவருதான் இப்படினா... தமிழ்த்தாய், கன்னித்தாய், தெய்வத் தாய்னு திரும்பின பக்கமெல்லாம் போஸ்டர்ல பளீர்னு சிரிக்கற அ.தி.மு.க. 'அம்மா' கதை அதைவிட கேவலமா இருக்கு. பிரபாகரனுக்கு கோடிக்கணக்குல பணத்தை அள்ளிக் கொடுத்து, 'என் தம்பி'னு ஆதரவு கொடுத்தவரு எம்.ஜி.ஆரு. அவரோட வாரிசுனு சொல்லிக்கற ஜெயலலிதா... ராஜபக்ஷேவோடயே கைகோத்துக்கிட்டு திரியறாங்க, தமிழனுங்கள காப்பாத்தறதுக்காக.

தமிழனோட பிள்ளைங்களையெல்லாம் கொன்னு போட்டு, 'தமிழ்ப் பிள்ளைக்கறி கிடைக்கும்'னு போர்டு போடுறானுங்க.... தமிழ்ப் பெண் போராளிங்க பிணத்தோட குடும்பம் நடத்துறானுங்க... அந்த அளவுக்கு சண்டாளனுங்களா திரியுது சிங்கள ராணுவம். காதாலகூட இந்தக் கொடுமைங்களக் கேட்டுக்க முடியல. தமிழன்னு பார்க்கவேணாம்... சதையும் ரத்தமும் கொண்ட நம்மள மாதிரி மனுஷன்னு கூடவா பாக்கக் கூடாது. ஐரோப்பாவுல இருக்கற நாடுங்க தொடங்கி, ஐ.நா. சபை வரைக்கும் கண்டனம் தெரிவிச்சிடுச்சி. இரக்கமே இல்லாத அமெரிக்காகூட கொஞ்சம் போல ஆடிப்போய், குரல் கொடுத்திருக்கு. ஆனா, தங்கத் தமிழ்நாட்டை ரெண்டு தடவை ஆட்சி செஞ்சிருக்கற கருணைத்தாய் ஜெயலலிதாவோட மனசு இரங்கவே இல்ல.

'ஈழத் தமிழனை காப்பாத்த நாங்க முழு அடைப்பு நடத்தறோம்... எங்களுக்குத்தான் உண்மையான தமிழுணர்வு இருக்கு'னு சொல்லிக்கிட்டு திரியற வைகோ, ராமதாஸ், திருமாவளவன் மூணு பேரும்கூட முரண்பாட்டு மூட்டைங்கதான்.

கள்ளத்தோணி ஏறி இலங்கைக்குப் போயிட்டு வந்ததாலதான் தமிழ்நாடு முழுக்க இருக்கற இளந்தாரிங்க பலபேரு வைகோ பின்னால வட்டமடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, அவரு என்னடான்னா... விடுதலைப்புலிங்கள விட்டேனா பாருனு கங்கணம் கட்டிக்கிட்டு நிக்கற அ.தி.மு.க. அம்மணிகிட்ட எம்.பி. ஸீட், எம்.எல்.ஏ. ஸீட்டுக்காக கீழ விழுந்து கிடக்கறாரு.

'கருணாநிதி நினைச்சா, மத்திய அரசை நொடியில் தட்டிக் கேக்க முடியும்'னு மேடைக்கு மேடை சவடால் விடறாரு மருத்துவர் ராமதாஸூ, தன்னோட மகன் மத்திய மந்திரி சபையில கடைசி நாள் வரைக்கும் கல்லுப்பிள்ளையாரு கணக்கா உட்கார்ந்திருக்கணும்கிறதுக்காகவே, தான் மட்டும் மத்திய அரசைத் தட்டிக்கேக்க மறுக்கறாரு.

திடுதிப்புனு உண்ணாவிரதம் அது, இதுனு ஆட்டம் காட்டற திருமா தம்பி, ஈழப்பிரச்னைக்காக ஒரு கல்லைக் கூட அசைக்காத கருணாநிதி மேல இருக்கற பாசத்தை விட்டுக் கொடுக்காமலே 'திருதிரு'னு முழிச்சிக்கிட்டு நிக்குது.

இந்த செங்கொடி வீரருங்ககூட நிமிஷத்துக்கு ஒரு வேஷம் கட்டுறாங்க. மத்தியான சோத்து நேரத்துல 'புலிங்களோட பரம எதிரி' போயஸ் அம்மாவோட உக்காந்து போஸ் கொடுக்கறாங்க. சாயங்காலம் காபிக்கு, 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க' கூட்டத்துல தலையை நீட்டுறாங்க.

"விடுதலைப் புலிகளை ஆதரிச்சா, ராஜீவ் காந்தியோட ஆத்மா எங்களை மன்னிக்காது'னு பேசற கதர்ச்சட்டை காங்கிரஸ் சிங்கங்களே... தி.மு.க-வோடவும்... ம.தி.மு.க-வோடவும் கூட்டணியைப் போட்டு ஆட்சியைப் பிடிச்சப்ப இந்த வசனத்தையெல்லாம் வசதியா முழுங்கிட்டீங்களே அது ஏன்?

ஏற்கெனவே, ராஜீவ்காந்தி கொலை தொடர்பா தி.மு.க. மேல ஜெயின் கமிஷன் சந்தேகம் கிளப்பியிருக்கு. அந்தக் காரணத்தைச் சொல்லித் தான், மத்தியில தி.மு.க. இடம் பிடிச்சிருந்த ஆட்சியையே காவு வாங்கினாரு அப்போதைக்கு காங்கிரஸ் தலைவரா இருந்த சீதாராம் கேசரி. அப்படிப்பட்ட தி.மு.க-வோட கூட்டுப் போட்டுக் கிட்டு இப்ப மத்தியிலயும் பாண்டிச்சேரியிலயும் ஆட்சி நடத்தறீங்க... தமிழ்நாட்டுல முட்டுக் கொடுக்கறீங்க. நீங்க ஓயாம ஒப்பாரி வெக்கிற ராஜீவ் காந்தியோட ஆத்மா இதை மட்டும் மன்னிக்குமா...?

'அடப்பாவி அரசியல்வாதிங்களா... ஏன் இந்த நாடகம்?'னு யாரை வேணும்னாலும் கேட்டுப் பாருங்க. 'தேர்தல் கூட்டணி என்பது வேறு... எங்கள் கட்சியின் கொள்கை என்பது வேறு'னு தத்துவ முழக்கமிட ஆரம்பிச்சிடுவாங்க. ஆமா, தெரியாமத்தான் கேக்கறேன். ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சா... ஏதாவது ஒரு கொள்கைங்கறத நோக்கித்தான் இருக்கணும். அதை நோக்கித்தான் கடைசி வரைக்கும் பயணம் போகணும். ம்... அவங்க என்ன பண்ணுவாங்க. அவங்கள்ல பலபேருக்கு கொள்கையும் கிடையாது... ஒரு குந்தானியும் கிடையாதே. ஒரே வரி அஜண்டா... பதவி, பவிசு!

அதுக்காகவே இங்க இருக்கற தமிழனுங்கள ஒட்டுமொத்தமா கூறுபோட்டு வெச்சிட்டாங்க. தனித்தமிழன்னு யாரையுமே பார்க்க முடியல. தடுக்கி விழுந்தா... அம்மா தமிழன், அய்யன் தமிழன், அய்யா தமிழன், தெலுங்கு தமிழன், பச்சத் தமிழன் பல பட்டறை தமிழனுங்க எண்ணிக்கைதான் ஜாஸ்தியா இருக்கு.

உள்ளூர்ல இருக்கற உத்தப்புரத்து பிரச்னையைக் கூட தீர்த்து வைக்க வக்கில்லாத இந்த அரசியல் வாதிங்கள்லாம் ஒண்ணா சேர்ந்து இலங்கைப் பிரச்னையை தீர்த்து வெச்சிடுவாங்கனு யாராச்சும் நம்பினா... அவனவிட கேனயன் எவனுமே இல்ல.

பாகிஸ்தான்காரன், நொடிக்கு நூத்தி எட்டுத் தடவை இந்தியாவுல புகுந்து, 'டொப்பு டொப்பு'னு குண்டு போட்டு கொன்னுட்டு சிட்டா பறந்து போயிக்கிட்டிருக்கான். அவனுங்க மேல தீபாவளி துப்பாக்கியைக் கூட இதுவரை நம்ம மிலிட்டரி நீட்டறதுக்கு துப்பில்ல. ஆனா, இங்க இருந்து பறந்து போய் அப்பாவி தமிழனுங்க மேல குண்டு போடறதுக்கு ஆலோசனை சொல்லிக் கிட்டு நிக்குது இந்திய ராணுவம்.

புதுசா உள்துறை அமைச்சரா வந்திருக்கற... செட்டிநாட்டுச் சிங்கம், சிதம்பரம், 'இன்னொரு தடவை தாக்குதல் நடத்தினா நடக்கறதே வேற'னு பாகிஸ்தான பார்த்து பொளந்து கட்டிக்கிட்டிருக்கார்.

"கட்டின பொண்டாட்டிய ஒருத்தன் பலாத்காரம் பண்ணிட்டான். முக்கா உயிரா மூலையில முடங்கி கெடக்கறா பொண்டாட்டி. ஆனா, 'இன்னொரு தடவை பலாத்காரம் பண்ணினா நடக்கறதே வேற...'னு புருஷன்காரன் வீரமுழக்கம் செய்றது மாதிரி இருக்குது''னு சொல்லிச் சிரிக்கறாரு அரங்கமறிஞ்ச உள்ளூரு பெரிய மனுஷன் ஒருத்தரு.

இந்த லட்சணத்துல இந்தியத் தலைவருங்களையும்... தமிழ்நாட்டுத் தலைவருங்களையும் நம்பிக்கிட்டு, வெம்பி நிக்கிறீங்களே அப்பாவி ஈழத்தமிழர்களே... உங்கள நினைச்சாத்தான் ரொம்ப பரிதாபமா இருக்கு.

அய்யா, அரசியல்வாதிங்களே எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லனாலும்... கடைசியா உங்களுக்கு ஒரு வார்த்தை. ஒவ்வொருத்தரும் '50 ஆண்டு கால அரசியல்பணி... 40 ஆண்டு கால பொதுப்பணி... 25 ஆண்டு கால திருப்பணி'னு ரொம்பவே பணியாற்றி களைச்சித்தான் கிடக்கறீங்க. அப்புறமும் ஏன்தான் அந்தப் பதவியைப் பிடிக்கறதுக்காக படாதபாடு படறீங்க. ஒரு 5 வருஷத்துக்காவது அதையெல்லாம் தள்ளிவெச்சா என்ன? தமிழ் இனத்தை அழிக்கற இலங்கை அரசுக்கு காவடி தூக்கிக்கிட்டிருக்கற இந்திய அரசாங்கத்தோட ஒட்டும் இல்ல... உறவும் இல்லனு ஒரு முடிவெடுங்க.

இத்தனை நாளா வாய் திறக்காமலிருந்த கேப்டன் விஜயகாந்த் சொல்லியிருக்கற மாதிரி, நாடாளுமன்ற தேர்தலையே புறக்கணிச்சிப் பாருங்க... இத்தனை நாளா தமிழைச் சொல்லியும் தமிழனை வெச்சும் சேர்த்த காசுக்காவது இந்த சின்ன தியாகத்தை செய்யக்கூடாதா? இல்லனா... யாரு மன்னிச்சாலும் வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது!

இப்படிக்கு
கோவணாண்டி

--------------------------------------------------------------------------------------------------------------------

நன்றி: பசுமை விகடன்