PDA

View Full Version : அழகைப்போர்த்தியவள்kulirthazhal
21-02-2009, 06:33 AM
அந்த
தருணத்திற்குப்பின்னால்
என் மொழிகள்
கனவுகளைப் போர்த்திக்கொண்டு
பதுங்கிக்கிடந்தது,
முந்தானைக்குள்
பதுங்கிப்பார்க்கும்
குழந்தையின் விழிகளைப்போல்
நிகழ்வுகள்
எதிர்காலத்தை
வெறித்து நோக்கியது.
வழக்கங்கள்
வாழ்ந்த காலமது...

சிரிப்பதும்,
அழுவதும்,
உணர்ச்சிகளைத்
தேடிக்கொண்டிருக்கவில்லை.
விழிகளுக்கு
கட்டுப்பட்டுக்கிடந்தது.

விவாதங்களே இல்லாத
வாழ்க்கை அது.
வெற்றிக்கான
எந்த முதல்பொருளும்
பதியப்படாமல் போனதால்
எல்லோரும் ஏமார்ந்தனர்,
சில தோல்விகள்
துன்பப்பட்டன
என்னிடம்
வீறு பேச இயலாமல்...
நான்
தவத்தில் கிடந்தேன்...

அது வெறும்
மந்திரங்களை
சொல்லிக்கொண்டிருந்த தவம்.
அங்கே
நோக்கங்கள் ஏதுமில்லை,
எந்த தேவதையும்
வரம்தரப்போவதில்லை.
வேடம் பொருந்தியதால்
தொடர்ந்தேன்...

காலங்கள் கோபம்கொண்டு
சத்தங்கள் சூழ்ந்துகொண்டன..,
தவத்திற்கான விமர்சனங்கள்
அழுவதும், சிரிப்பதுமாய்,
கூச்சல் போட்டுக்கொண்டிருந்தன,
வேடம் அச்சம் கொண்டு
உலுக்கியது,
கனவு கலைந்தது.
விழிகளைத்திறந்தேன்.

உலகம் காத்துக்கொண்டிருந்தது,
மீண்டும் எனக்குள்ளே
கருக்கொண்டேன்
விழிகளைத்திறந்தபடி...
மீண்டும் பிறந்தேன்
மீசையோடு.

எல்லாமே புரிந்தது,
எதுவும் விளங்கவில்லை.
அது கனவுமட்டுமல்ல
மயக்கமும்தான்..

விளக்கங்களைத் தேடி
சிந்தித்தேன்,
அது பாடங்களை மட்டுமே
தந்தது,
பாதைகளைப்பற்றி
அதற்கொன்றும் தெரியவில்லை.

அத்தனை செறிவான
போதையைத் தந்தவள்
அவள்தான்,

அவளிடம் கேட்டிருந்தால்
விடை
கிடைத்திருக்கலாம்...

அவள்
அவ்வளவு
அழகானவளுமல்ல....

- குளிர்தழல்.

இளசு
23-02-2009, 05:58 PM
இருமுறை வாசித்தேன் குளிர்தழல்..

சிலவகைகளில் பொருள் கொண்டு கவிதையைக்
கைபிடித்தபடி உறவாடி வந்தும்
கடைசி வரியில் மீண்டும் மீண்டும்
கைவிடப்பட்டு தடுமாறுகிறேன்..

-----------------------------

கவி விற்பன்னர்கள் கைகொடுங்கள்..
இல்லை..
கவிஞருக்காகக் காத்திருப்போம்!

kulirthazhal
24-02-2009, 12:16 PM
புற அழகில் மயங்கி காதல் வயப்பட்ட ஒரு இளைஞனின் முன்னோட்டம் மறைக்கப்பட்டுள்ளது..

மேலும் இது அதிகமாக பேசப்பட்டுவிட்டதால் அடுத்த நிலையில் இருந்து துவங்கியுள்ளேன்.

கண்களில் தொடங்கி கனவினில் விளையாடும் வரை எத்தனையோ மயக்கங்களையும் மிதப்பினையும் தரும் காதல் மனங்கள் நெருங்கிவரும்போது சற்றே தடுமாற்றம் கொள்கிறது (மனம் விருப்பங்கள், ஏக்கங்கள், வழக்கங்கள், நோக்கங்கள் ஆகியவற்றை சார்ந்துள்ளது)

பிரிந்தபின்னும் (சில)காலங்களில் மிதந்து வரும் அந்தமயக்கம் அறிவினை மயங்கடிக்கும் இது நன்றாக விமர்சிக்கப்பட்ட பகுதிதான். என்றாலும் இந்த கவிதையில் தனிமனிதன் பேசுகிறான், அவனின் பார்வையில்.

மதிப்பிற்குரிய இளசு அவர்களே!

வெளிப்படையான நிகழ்வுகளையும், அதீத வர்ணனைகளையும் கவிதையாய் தீட்டுவதில் எனக்கு திருப்தி ஏற்படுவதில்லை, எனவே என் பானியிலே தொடர்கிறேன்.

எனது கவிதைகளை தொடர்ந்து ஊக்குவித்து வருவதற்கு நன்றி!

அக்னி
24-02-2009, 12:30 PM
இளசு அண்னாவின் நிலையில் நானும்...

குளிர்தழலின் விளக்கத்தில் சற்றே தெளிவுபெற்றாலும், இன்னும் சில விளங்காமலேயே....

அழகற்றுப் போனது,
புற அழகா... அக அழகா...

புற அழகானால்,
அலட்சியப்படுத்தியது அவன்...
அக அழகானால்,
அலட்சியப்படுத்தியது அவள்...

தப்பு யாரிடம், தவிப்பு யாரிடம் என்று, புரியாமல் தவிக்கின்றேன்.

kulirthazhal
24-02-2009, 04:12 PM
அன்புள்ள அக்னி அவர்களே!
புற அழகு புலமையைத்தரும்,
அகவழகு கவிதையை தரும்.

இது நிகழ்வு,
நிழல்,
நாம் பார்வையாளர்,
அவனின் முன் வாழ்க்கை நமக்கு தெரியாது, அவனின் திறமை நமக்கு தெரியாது, அவனின் துன்பம் எல்லா ஆண்களுக்கும் புரியும்,

அடுத்ததாக இது அழகைப்பற்றிய பிரச்சனை அல்ல, அன்ன்பைப்பற்றிய பிரச்சனை......

இது தனி மனித கவிதை, நியாயம் அநியாயம் எல்லாமே அவனைப்பொறுத்துதான்.... நாம் பார்ப்போம்.

இளசு
24-02-2009, 08:39 PM
வந்து விளக்கம் அளித்தமைக்கு நன்றி குளிர்தழல் அவர்களே..

கவிஞனுடைய படைப்பு - முழுதும் அவன் உரிமை..
உங்கள் பாணியில் தொடருங்கள்.

விளங்கினால் விமர்சித்து இல்லையேல் விளக்கம் கேட்டு
உங்களுடன் நாங்களும் வருவோம்..

நன்றியும் பாராட்டும்..