PDA

View Full Version : ஒரு பொய்யாவது



ஐரேனிபுரம் பால்ராசய்யா
19-02-2009, 07:24 AM
தரகர் சொன்ன வீட்டில் பெண் பார்த்துவிட்டு சொல்லி அனுப்பறோம் என்ற வழக்கமான பதிலைச் சொல்லிவிட்டு வெளியேறினார்கள் ஸ்ரீதரும் அவன் தாயாரும். மனதிற்க்குள் தரகரை திட்டித்தீர்த்தார்கள். மறுநாள் காலை தரகர் வந்து சேர்ந்தார்.

`` யோவ், ஒரு லட்சம் ரொக்கம், பத்து பவன் நகை போடுற குடும்பம் இருந்தா சொல்லு, பொண்ணு பார்த்துட்டு வர்றோமுன்னு சொன்னோம், நேத்து நீ அனுப்பி வெச்ச வீட்டுல அவங்களால அதுல பாதி கூட போட முடியாதாம், எதுக்கு அந்த மாதிரி வீட்டுக்கு எங்கள அனுப்பி வெச்சு எங்க நேரத்த வேஸ்ட் பண்ணின ?’’ தரகரது முகத்தில் அறைந்தார்போல கேட்டாள் ஸ்ரீதரின் தாயார். தரகரின் முகத்தில் சோகம் நிழலாடியது.

`` என்ன மன்னிச்சிடுங்க, அந்த வீட்டுல அவங்களால அவ்வளவு தான் போட முடியும், இத எல்லா மாப்பிள்ளை வீட்டுலயும் சொல்றேன், ஆனா யாரும் அந்த வீட்டுல பொண்ணு பார்க்க போகல, வரதட்சணை குறைவுன்னு தன்ன எந்த ஒரு மாப்பிள்ளையும் வந்து பொண்ணு பார்த்துட்டு போகலியேன்னு அந்த பொண்ணு வருந்தக்கூடாதுன்னுதான் உங்கள அனுப்பி வெச்சேன். சொல்லிவிட்டு திரும்பி நடந்த தரகரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் ஸ்ரீதரும் அவன் தாயாரும்.

இளசு
25-02-2009, 07:32 PM
அந்தப் பெண்ணையும் அவள் குடும்பத்தையும் பார்த்தால்
ஈர்க்கப்பட்டு '' வற''தட்சணையைக் கூட மறந்துவிடலாம்
என்றும் எண்ணியிருக்கலாமோ?

புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்....


பாராட்டுகள் ஐ.பா.ரா. அவர்களே!

அமரன்
02-03-2009, 02:57 PM
அடடா..

தரகரின் நல்லெண்ணம் காசு பணத்தில் வறுமை என்று நினைத்தவர்களை எதில் வறுமை என்று மண்டையை உடைக்க வைத்திருக்குமே.

உங்கள் கதைகளில் வீச்சுடன் ஒப்பிடுகையில் இது சற்றுக் குறைவாகப்படுகிறது ஐபாரா.

மனிதாபிமானம் வளர்க்கும் வகையில் கதைக்குப் பாராட்டுகள்.

அன்புரசிகன்
02-03-2009, 03:10 PM
இந்த கதையை குங்குமத்தில் வாசித்தேன். என்ன நம் மன்றில் காணவில்லையே என்று நினைத்தேன். என் கண்ணில் தான் படவில்லை...

இப்படியாவது ஒரு திருப்தியுணர்வு அந்த பெண்ணுக்கு கிட்டும்... இப்படியும் தரகர்கள் இருக்கிறார்களா..............?

அமரன்
02-03-2009, 03:14 PM
இப்படியாவது ஒரு திருப்தியுணர்வு அந்த பெண்ணுக்கு கிட்டும்... இப்படியும் தரகர்கள் இருக்கிறார்களா..............?

என்னையும் ஒருவர் பார்க்கிறார் என்பது எந்தளவு ஆனந்தத்தை தருமோ அதே அளவு சோகத்தை நிராகரிப்பும் தருமன்றோ அன்பு.

தொழிலை புனிதமாகக் கருதுபவர்கள் இன்னும் உலகில் உள்ளார்கள் ரசிகா.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
04-03-2009, 03:10 AM
அன்பு ரசிகன் அவர்களுக்கு,
இந்த கதையை குங்குமத்தில் வாசித்தேன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் நான் இதுவரை பார்க்கவில்லை தங்களிடம் இதழ் இருந்தால் அதில் குறிப்பிட்டிருக்கும் நாள் விபரம் தெரியப்படுத்தவும்.

பாராட்டி பதிலிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

அன்புரசிகன்
04-03-2009, 03:22 AM
நான் பார்ப்பது தினகரன் இணையத்திலுள்ள குங்கும பதிப்பு. எதற்கும் பார்த்து அந்த பக்கத்தினை தரமுயல்கிறேன்.