PDA

View Full Version : மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...!



M.Rishan Shareef
18-02-2009, 07:30 AM
எந்த தேவதைக்கதைகளும்
தேவையில்லை
மெல்லிசைகளோ,சுகந்தங்களோ கூட
வேண்டவே வேண்டாம்
பாவங்கள் சூழ்ந்த
இந்த யுத்தப்பிசாசினை மட்டும்
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள்

என் ஜன்னலில் தெரியும் வானம்
உங்களுடையதைப் போலவே
மேகம் தழுவும் மென் நீலமாயும்
என் பாதங்கள் பயணிக்கும்
வயல்வெளி,வனாந்தரங்களத்தனையும்
உங்களுடையதைப் போலவே
அடர்பச்சை கலந்ததாயும்
மழைநீரும்,நதியும்,நீர்வீழ்ச்சி,வாவிகளும்
நிறமற்றதாயும்
வெயில் வெப்பம் சுமந்தலைவதாயுமே
இருக்கின்றதென்பதை மறுப்பீர்களாயினும்
உங்களைப் போலவே
காற்றைத்தான் நானும்
சுவாசித்துச் சீவிக்கிறேனென்பதை
மட்டுமாவது ஒத்துக்கொள்வீர்களா

உங்களுக்கேயுரியதாக நீங்கள்
காவியங்களில் சொல்லிக்கொள்ளும்
சூரிய,சந்திர,நட்சத்திரங்கள்
எனக்கும் சில கிரணங்கள் மூலம்
வெளிச்சம் பாய்ச்சுவதோடு
உங்கள் வியர்வையழிக்குமல்லது
மேனி சிலிர்க்கச் செய்யும் தென்றல்
எனக்காகவும் கொஞ்சம்
வீசத்தான் செய்கிறது

உங்களுக்கேயுரியதான
இவ்வினிய பொழுதில்
எனதிப் புலம்பல் எதற்கெனில்
பசி,தாகம்,உறக்கமென
உங்களைப் போலவே
அத்தனை உணர்ச்சிகளும்
எனக்கும் வாய்த்திருக்கையில்...

பெரும் அடர்புற்றுப் போல்
என் தேசம் முழுதும்
வியாபித்துச் சூழ்ந்திருக்கும்
இந்த யுத்தப்பிசாசினை
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள்

உங்களைப் போலவே
எனக்கும்
எத்துயர் நிஜங்களோ
தீய கனவுகளோ அற்றுக் கொஞ்சம்
நிம்மதியாக உறங்க ஆசை

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

ஓவியன்
18-02-2009, 10:55 AM
மரணம் துரத்தும் தேசத்தவனாக
இனி எவரும் இல்லாத நிலை வரட்டும் றிஷ்வான்..!!

செல்வா
19-02-2009, 11:27 PM
யுத்தம் மனிதன் தன் ஆளுமையை நிலை நிறுத்த
தன் அதிகாரத்தை நிலைநிறுத்த...
தன் இருப்பை நிலைநாட்டப் பயன்படுத்தும் ஆயுதம்...
உலகிற்கு அன்பைப் போதிக்க வந்தவனை அறிமுகப்படுத்தவும் ஆயுதமேந்திப் போர்...
போரில் அகப்பட்டவர்களுக்குத்தான்...
போரின் விளைவுகள் புரியும்...

நிம்மதியாக வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல்
நரக வேதைனையுடனும்...
நாளெல்லாம் அச்சத்துடனும்.... வாழும் சமுதாயத்தின் ஏக்கக்குரல்
எங்களைத் தூங்க விடுங்களேன்....
எட்டுமா இந்தக்குரல் எஃக்குக் காதுகளுக்கு....

M.Rishan Shareef
20-02-2009, 10:09 AM
அன்பின் நண்பர் ஓவியன்,
//மரணம் துரத்தும் தேசத்தவனாக
இனி எவரும் இல்லாத நிலை வரட்டும் றிஷ்வான்..//

நன்றி நண்பரே...!
இதுவே எல்லோருடைய பிரார்த்தனையாக இருக்கட்டும் !

M.Rishan Shareef
20-02-2009, 10:12 AM
அன்பின் நண்பர் செல்வா,
//யுத்தம் மனிதன் தன் ஆளுமையை நிலை நிறுத்த
தன் அதிகாரத்தை நிலைநிறுத்த...
தன் இருப்பை நிலைநாட்டப் பயன்படுத்தும் ஆயுதம்...
உலகிற்கு அன்பைப் போதிக்க வந்தவனை அறிமுகப்படுத்தவும் ஆயுதமேந்திப் போர்...
போரில் அகப்பட்டவர்களுக்குத்தான்...
போரின் விளைவுகள் புரியும்...

நிம்மதியாக வாழவும் முடியாமல்
சாகவும் முடியாமல்
நரக வேதைனையுடனும்...
நாளெல்லாம் அச்சத்துடனும்.... வாழும் சமுதாயத்தின் ஏக்கக்குரல்
எங்களைத் தூங்க விடுங்களேன்....
எட்டுமா இந்தக்குரல் எஃக்குக் காதுகளுக்கு....//

அருமையான கருத்து உங்களுடையது.
எல்லாக் காதுகளுக்கும் எட்டவேண்டுமென்றே எழுதப்பட்டிருக்கிறது.
எஃகுக் காதுகளுக்கு எட்டினாலும் கருணை இதயத்திலிருந்துதானே வரவேண்டும். அது இரும்பால் ஆனவர்களுக்கு எப்படி இளகும்? :(
அன்பான கருத்துக்கு நன்றி நண்பரே !

இளசு
01-03-2009, 07:55 PM
பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தாலும்
இன்னும் மூன்றாண்டுகள் அங்கேயேதானாம்..

யாரும் போய்ப் பார்க்க இயலாதாம்..

வாழ்விடங்களில் மாற்றுக்குடியேற்றம்..
மறுவாழ்வுப் பிரயத்தனம் இல்லையாம்..

யுத்தப்பிசாசே..


எம் தோழனின் கண்ணீர் வேண்டுகோளைக் கேள்..
கேட்டுமா இன்னும் உன் உலவல்?

என்று உனக்கு இறுதிநாளோ
அன்றே எம் மக்கள் மீண்டும் பிறக்கும் நாள்!

சிவா.ஜி
01-03-2009, 09:03 PM
இனி எங்கள் நாட்டில் ஆறுகள் நீரின் நிறமாகவே இருக்கட்டும்.

செர்ரியின் சிவப்பைக் கண்டும் பதறும் நிலை இல்லாதிருக்கட்டும்.

ஆதுரத்தென்றல் சேதாரங்களைத் துடைக்கட்டும்...

கவிஞனின் மொழி அந்த அரக்கக் காதுகளை எட்டி இரக்கம் பிறக்க வைக்கட்டும்.

M.Rishan Shareef
02-03-2009, 05:57 AM
அன்பின் நண்பர் இளசு,

//பாதுகாப்பு வளையத்துக்குள் வந்தாலும்
இன்னும் மூன்றாண்டுகள் அங்கேயேதானாம்..

யாரும் போய்ப் பார்க்க இயலாதாம்..

வாழ்விடங்களில் மாற்றுக்குடியேற்றம்..
மறுவாழ்வுப் பிரயத்தனம் இல்லையாம்..//

:(
இப் பாதுகாப்பு வளையத்துக்கும், சிறைச்சாலைக்கும் என்ன வித்தியாசம் :(

//யுத்தப்பிசாசே..


எம் தோழனின் கண்ணீர் வேண்டுகோளைக் கேள்..
கேட்டுமா இன்னும் உன் உலவல்?

என்று உனக்கு இறுதிநாளோ
அன்றே எம் மக்கள் மீண்டும் பிறக்கும் நாள்!//

நிச்சயமாக யுத்தச் சாத்தான் அழியும் நாளிலேயே நிம்மதி பிறக்கும்.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
02-03-2009, 05:58 AM
அன்பின் நண்பர் சிவா,
//இனி எங்கள் நாட்டில் ஆறுகள் நீரின் நிறமாகவே இருக்கட்டும்.

செர்ரியின் சிவப்பைக் கண்டும் பதறும் நிலை இல்லாதிருக்கட்டும்.

ஆதுரத்தென்றல் சேதாரங்களைத் துடைக்கட்டும்...

கவிஞனின் மொழி அந்த அரக்கக் காதுகளை எட்டி இரக்கம் பிறக்க வைக்கட்டும்.//

உங்கள் அன்பான பிரார்த்தனை பலிக்கட்டும்.
நன்றி நண்பரே !
__________________