PDA

View Full Version : எதிரிகள் வாழ்க..!பூமகள்
13-02-2009, 08:48 AM
(http://poomagal.blogspot.com/2009/02/blog-post_12.html)
http://3.bp.blogspot.com/_ATCRNmCxu-E/SZTi-2VBLnI/AAAAAAAAAqY/ohNAPyvPlYY/s400/Enemies.jpg (http://3.bp.blogspot.com/_ATCRNmCxu-E/SZTi-2VBLnI/AAAAAAAAAqY/ohNAPyvPlYY/s1600-h/Enemies.jpg)எதிரிகள் வாழ்க..!நெருப்பு நாவுகள்
சிரிப்போடு சாடுகையில்..
கரைக்கும் அமிலமாய்
சிறையிடும் வார்த்தைகள்..!

உணர்ந்தழுது வெதும்பி
கிடக்கையில்..
உள்ளத்தின் நாவசைந்து
மென்மையாய் உரையாடும்..!

முன்னாளில் பகைவரால்
வேல் பாய்ச்சிய
வசைகள் பல
தசை கிழித்து
உள வேர் முறுக்கிய
கதை படிக்கும்..!

கூர் ஊசி நூறு
உரசிப் போன
நெஞ்சமது..
இன்னாளின் இடரெல்லாம்
இம்மியளவாய் தோன்ற வைக்கும்..!

துயர் கடந்து
லேசாகி மனம் மெல்ல
மேலெழும்பும்..!

எல்லாம் தாங்கி
ஏற்றமதைக் காண
கற்பித்த எதிரியே - நீவீர்
வாழ்க வாழ்கவே...!

நதி
13-02-2009, 09:18 AM
நந்தவனத்தில் பூமகள்..
முதல்களுக்கு வாழ்த்துகள்.

இப்பூவில்
பொருத்தமின்றி
சில பொருத்துதல்கள்.

திருத்தி விட்டால்
அனல் மீது பனித்துளியாய்
எதிரிகளின் கனித்துளியாய்
இந்தப்பூ
இன்னும் மணம் வீசும்.

பூமகள்
13-02-2009, 09:28 AM
முத்தமிழ் நெருப்பில்
ரவுத்திரம் பயின்ற
வித்தகர் விளக்கின்
இன்னும் அழகாய்
பொருத்துவேன்..

ரவுத்திரர் சுட்டுவிரல்
சுட்டிக் காட்டுமோ?

முதல் பின்னூட்டம்.. முத்தாக.. கவிக்கு சத்தாக.. ஆயினும்..
கவி விமர்சனம் இல்லையே...??

நதி
13-02-2009, 09:43 AM
முத்தல்ல முத்தே
சிப்பி
உள் முத்தே.

இளசு
14-02-2009, 06:01 AM
''எதிரிகள்'' ஒரு வகை..

எதிர்கொள்ளும் நம் மனப்பாங்கால்
''எதிரிகள்'' - இருவகை..
உசுப்பி, உரமேற்றி - ஆக்கும் வகை ....
வெறியேற்றி நெறிகுழப்பி - அழிக்கும் வகை...

இவ்வகைப் படைப்புகளை '' ஆக்க வைக்கும்''
எதிரிகள் வாழ்க என நானும் இணைந்து பாடுகிறேன் -
பாமகளுடன்!

தாமரை
14-02-2009, 06:55 PM
உதவி யாரிடம் கேட்கலாம்.. முக்கியமாக யாரிடம் கேட்க கூடாது ..?

நாம் கேட்டுத்தான் மற்றவர்கள் உதவுவார்கள் என்பது தவறு. ஏதோ ஒருவகையில் எல்லோரும் எல்லோருக்கும் உதவிக் கொண்டுதான் இருக்கிறோம்.

விரோதி கூட நம் இலட்சியப் பிடிப்பை உறுதியாக்க உதவுகிறார்.

---------------------------------------------------------------------

இன்று தங்கையின் கவிதையைக் கண்டவுடன் என் பழைய வார்த்தைகள் ஞாபகம் வந்தன,

எவ்வளவோ செஞ்சிட்டோம் இதைச் செய்ய மாட்டோமா?

இதுவும் ஞாபகம் வருகிறது.

இன்னும் பல சிந்தனைகள்.. ஒவ்வொன்றாய்.. ஒவ்வொன்றாய்...

ஆயிரம் வடுக்களில் ஒன்றிரண்டின் அடையாளம் தெரிகிறது...

உடல் அடிபட்டு அடிபட்டு மரத்து விடும்
மனம் அடிபட்டு அடிபட்டு பழுத்து விடும்.

வாழ்க்கை புரியும் பொழுது தெளியும் மனது
வசைகளுக்கும், சம்மட்டிகளுக்கும் கூட நன்றி சொல்லும்

நீங்கள் இல்லாவிட்டால் இன்று நான் நானாக இல்லையென..

எதிரிகள் ஒருவகைதான் இளசு..

துரோகிகள்தான் பலவகை...:D :D :D

சுகந்தப்ரீதன்
15-02-2009, 04:56 AM
எதிரியை வாழ்த்துவது என்பது எல்லோராலும் எளிதில் இயலாத காரியம்.. அந்த நிலையை அடையவதற்க்கு நிறையவே பக்குவம் தேவை..!! ஆனால் அந்த பக்குவத்தை அடைவதற்க்கு பலமுறை அடிபட வேண்டியிருக்கும்..!! ஆரம்பத்தில் அதிகமாக வலிக்கும்... பின்னர் போகபோக வலி குறையும் ஆனால் வலிமை கூடும்.. ஒருகட்டத்தில் எதையும் தாங்கும் இதயம் இயல்பாகவே அமைந்துவிடும்.. அந்தநிலையில் எதியைக்கூட இன்முகத்தோடு வாழ்த்த முடியும்..!! அந்த நிலையை நீ அடைந்துவிட்டதாகவே உன் கவிதை உரைக்கிறது... வாழ்த்துக்கள் பூ.. வசந்தமான வாழ்விற்க்கு..!!

வசீகரன்
16-02-2009, 09:01 AM
எல்லாம் தாங்கி
ஏற்றமதைக் காண
கற்பித்த எதிரியே - நீவீர்
வாழ்க வாழ்கவே...!

ஏமாற்றமான அனுபவங்கள் அதன்பின் நமக்கு எந்த ஒரு அனுபவத்தையும் தைரியமாக எதிர்கொண்டு சந்திக்கும் மனவுறுதி தரும்... நம்முடன் நேருக்கு நேர் சண்டையிடும் எதிரிதான் நமக்கு வீரத்தையும் தைரியத்தையும் காற்றுத்தரும் குரு.
எந்தஒரு அனுபவங்களையும் எதிர்கொள்ள நமக்கு அந்த அனுபவத்தின் முதல் தோல்விதான் படிப்பினை

நல்லதொரு கவி படைத்த பூவுக்கு பாராட்டுக்கள்

அமரன்
16-02-2009, 06:49 PM
சோதனைகளில் சாதனை செய்ய வெகு சிலருக்கு இயல்பிலேயே அமைந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு சோதனைகளில் இனி எதுவும் செய்ய இயலாது என்ற விளிம்பு நிலையில் விழுந்து விடாமல் இருக்க சாதனைகள் செய்யும் உத்வேகம் வந்துவிடுகிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும் பூமகள்.
எதிரிகள் நிச்சயம் தேவை.

அனைத்து பின்னூட்டங்களும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

poornima
17-02-2009, 10:56 AM
உன்னை உனக்கு
அடையாளம் காட்டவேணும்
உன்னை யாவர்க்கும்
எடுத்துக் காட்டவேணும்
தேவைப்படுகிறார்கள் எதிரிகள்..

துன்பங்களும் சோகங்களும்
நேர்கையில் கடவுளை
நினைப்பவர்கள் போல

வித்தியாசமான எண்ண ஓட்டத்துடனான
கவிதை.. பாராட்டுகள்

துளசி
17-02-2009, 09:56 PM
//முன்னாளில் பகைவரால்
வேல் பாய்ச்சிய
வசைகள் பல
தசை கிழித்து
உள வேர் முறுக்கிய
கதை படிக்கும்..!//

நல்லா சூடா எழுதறீங்க பூமகள் அவர்களே. உங்கள் கவிதைகளை இனி வரும்போதெல்லாம் படிப்பேன்.

பூமகள்
19-02-2009, 02:12 AM
இரு முக எதிரிகளை இனம் பிரித்த பெரியண்ணாவுக்கும்,

எதிரிகள், துரோகிகள் வேறுபாட்டை விளக்கிய தாமரை அண்ணாவுக்கும்,

மன நிலை ஆராய்ந்த சுபிக்கும்,

எதிரியை குருவாக்கி விமர்சித்த வசீக்கும்,

வெற்றி நிலை கண்டெடுத்த அமரன்ஜிக்கும்,

எதிரிகளின் அவசியம் வலியுறுத்திய சகோதரி பூர்ணிமாவுக்கும்,

துளசியின் வாசம் போல் மணம் பரப்பி விமர்சித்த துளசிக்கும்

நன்றிகள் கோடி..!

சில கவிதைகள் பார்க்க மிக எளிதாக இருக்கும், ஆனால் அதற்கு வரும் பின்னூட்டங்களே அதனை இன்னும் அழகாக காட்டும்.. அவ்வகையில் இந்த எளிய கவிதைக்கு வந்த அனைத்து பின்னூட்டங்களும் முத்துகள். நன்றிகள் பலப்பல.