PDA

View Full Version : கடவுளின் நித்திரையும் பிசாசின் தோற்றமும்



ஆதவா
13-02-2009, 04:34 AM
பாரதி அண்ணாவின் 'சிவனுக்கு எத்தனைக் கண்கள்' (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19353) என்ற பதிவில் என் பின்னூட்டத்தில், கடவுளின் நித்திரை குறித்து எழுதியிருந்தேன். அப்பொழுதே இக்கவிதைக்கான கரு உதித்துவிட்டது.. என்னை ஒரு பேயாக உருவகித்துக் கொண்டு கடவுளைக் கொல்லப் புறப்பட்டேன்.//////

கடவுளைக் கொல்லுதல் எனும் தலைப்பில் இருதினங்களுக்கு முன்பு ஒரு வலைப்பூவில் கவிதை படித்திருந்தேன்.... நல்லவேளையாக அது வேறு பாதையிலிருந்தது...

உதிர்தலில் வாடாத மரங்களின்
பெருமூச்சைக் கடந்து செல்லும்
நதியின் சலனமாக கடவுள் உறங்குகிறார்

ஒரு பூனையின் சாதுர்யமாக
கடவுளின் இல்லத்திற்குள் நுழைந்து
அவரது பஞ்சனைக்கு அருகில் அமர்கிறேன்

அவரின் பாதங்களில்
பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன
ஒவ்வொரு சீட்டினுள்ளும்
கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து
சூடு தாளாமல் இறந்து போன
யாரோ ஒருவர் இருக்கிறார்
வெகு சிலர் எனது இருப்பை
கடவுளுக்குத் தெரியப்படுத்த முயலுகிறார்கள்
அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்

என் கோணிப்பை நிறைத்திருக்கும்
விஷத்திலிருந்து இரு சொட்டுக்களை
அவரது வாயில் ஊற்றுகிறேன்
அவை வழுக்கிச் சென்று
மரண முடிச்சைத் தேடுகின்றன

கடவுள் திமிருகிறார்
கண்கள் பிதுங்குகின்றன
சிறிது நேரம் மனிதர்கள் பிறப்பது நிற்கிறது
மூச்சு அடங்குகிறது
கடவுள் இறந்து போகிறார்

கடவுளின் இல்லம் விட்டு நகர்கையில்
எனது வாயிலிருந்து இருபற்கள்
நீட்டி முளைத்து நிற்கின்றன
ஒரு பிசாசின் உருவமாக

loshan
13-02-2009, 04:38 AM
அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்

இது இப்போது உண்மை என்பது நிரூபணம் ஆகிக்கொண்டே இருக்கிறது..

ஆதவா உங்கள் கவிதை அருமை.. அலங்கார வார்த்தைகள் இல்லாமல் நேரடி விஷயம்,படிமக் கருத்துக்களை வந்துள்ளது.

இளசு
14-02-2009, 05:11 AM
மனிதம் கொன்று மனிதம் கொன்று
மிருகம் வளரப் பார்க்கிறதே.....!

மொத்த மனிதம் இணைந்தால் - இறை
மொத்த ''மிருகம்'' சேர்ந்தால் - பேய்...

சிறு அளவில் ஒவ்வொரு மனிதனும் இக்கலவை..
பெரு அளவில் - குழுக்கள், சமூகங்கள்... இவ்வுலகம்..

முழுக்கக் கடவுளும் இல்லை..
முழுக்கச் சாத்தானும் இல்லை...

அந்தந்த நேரத்து விகிதங்கள்..
அவை எழுதுவதே நம் சரிதங்கள்...

------------------------------------------

சிறுவிஷம் ஏந்தினால் - நச்சுப்பை!
சேர்த்துவைத்துப் பெருவிஷமானால் = கோணிப்பை?

கொல்லத் தேவைப்படும் அளவைவிட
கொல்லப் போன(வனின்) தீவிரம் பெரிது!!!!!!!

---------------------------------------

பாராட்டுகள் ஆதவா!

ஆதவா
14-02-2009, 05:34 AM
சில நேரங்களில், நான் நினைத்துக் கொள்வேன்...
நாம் ஏன் மிருகம் ஆகக் கூடாதென்று...

கடவுளின் இருப்பைக் காணாத பொழுது,
மிருகங்கள் ஏன் உலாவக் கூடாது?
முளைக் கட்டி வளர்த்தெடுத்த
விஷப் புத்தியைச் சற்று தீட்டி
கடவுள் கொல்லப் புறப்படுகிறேன் அண்ணா..

காணாத கடவுள் காணாமலேதான் இருக்கிறார்... அவருக்கு எங்கிருந்தாலும் பிரார்த்தனைச் சீட்டுக்கள் வசையாகவோ, புகழாகவோ, யாரோ பைத்தியக்காரர்கள் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

இறைவனைக் கொன்றுவிட்டு, இறைவனாக நான் விரும்பவில்லை.

ஏனெனில் இன்னொரு இறைவனை இவ்வுலகம் தாங்காது..

மிக்க நன்றி அண்ணா...

சசிதரன்
14-02-2009, 03:21 PM
நல்லதொரு கரு ஆதவா... கடவுளின் நித்திரையை குறிக்கும் ஆரம்ப வரிகள் அருமையாக உள்ளது...
//அவரின் பாதங்களில்
பிரார்த்தனைச் சீட்டுக்கள் விழுகின்றன
ஒவ்வொரு சீட்டினுள்ளும்
கடவுளின் உஷ்ணத்தில் பிறந்து
சூடு தாளாமல் இறந்து போன
யாரோ ஒருவர் இருக்கிறார்//
//அவர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறார்//

நல்லா சொல்லியிருக்கீங்க...:)

பின்னூட்டமும் அதற்கு உங்கள் பதிலும் சிறப்பு...:)

செல்வா
19-02-2009, 11:42 PM
கடவுளுக்கானத் தேடல் உலகம் உள்ளளவும் நடந்து கொண்டு தானிருக்கும்.
மறுத்துக் கேட்கத் தோன்றாத வயதில் நம்பிய நம்பிக்கைகள்...
சிந்திக்கும் திறன் வந்ததும் கேள்விக்கணைகள் தொடுக்கின்றன நம்பிக்கைகளுக்கெதிராக அல்லது விளக்கம் வேண்டி...
பதில் வராத போது....
நம்பிக்கைகளே.... செத்துப் போகின்றன...
இப்போது புதிய நம்பிக்கைகள் நாம் சிந்தனைத் திறனால் நம்புபவை... உயிர் கொள்கின்றன....
வடிவம் மாறிய பழைய நம்பிக்கை... ஆனால் நம்பிக்கை ஒன்று தான் வடிவத்தில் தான் மாற்றம்
கடவுளும் - பிசாசும் போல...
இரண்டும் ஒன்று தான்.