PDA

View Full Version : ஒவ்வாமை - அழற்சிபாரதி
11-02-2009, 05:02 PM
ஒவ்வாமை - அழற்சி.

நம்மில் சிலருக்கு ஒவ்வாமை இருக்கலாம். சிலருக்கு குறிப்பிட்ட ஊசி, மருந்து மாத்திரைகள் அல்லது தூசி அல்லது சில வீட்டு
வளர்ப்பு மிருகங்களின் உரோமங்கள் அல்லது குறிப்பிட்ட உணவுப்பொருட்கள் என ஒவ்வாமை வெவ்வேறாக இருக்கக்கூடும். சிறுவயதில் நிலக்கடலை சாப்பிட்டால் எனக்கு உடனே வாந்தி வந்து விடும்.

பொதுவாக பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்னர் குறைந்த அளவில் கையில் ஊசியால் ஏற்றிவிட்டு, நமது உடல் அதை ஏற்றுக்கொள்கிறதா என பரிசோதித்த பின்னரே மருத்துவர்கள் / செவிலியர்கள் ஊசி போடுவார்கள் போன்றவற்றைத் தவிர்த்து அதைக்குறித்து பெரிய அளவில் எதுவும் எனக்குத் தெரியாது.

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு நாள் எனது தந்தையாரைக் காணும் போது அவருடைய நெற்றியில் சிறிய பந்து போன்றதொரு புடைப்பைக்
கண்டேன். எதிலாவது மோதி விட்டாரா எனக் கேட்டதற்கு இல்லை என கூறினார். பின்னர் அந்த புடைப்பு எப்படி வந்தது என்பதை அறியும் நோக்கில் எங்கு சென்று வந்தார் என்று வினவுகையில் மருத்துவமனைக்கு சென்று வந்ததை அறிந்தேன். அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் ஒவ்வாமை ஏற்பட்டிருக்கக்கூடுமோ என ஒரு சந்தேகம் வந்தது. உடனடியாக அவரை அதே மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன். மருத்துவரிடம் விளக்கினேன்.

உடனடியாக தந்தையார் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்! அதற்குப்பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு, தொடர்ந்து அவதானித்த பின்னர் சுமார் நான்கு மணி நேரம் கழித்தே அவரை வீட்டுக்கு அழைத்து வர முடிந்தது. அதைக்குறித்து அம்மருத்துவரிடம் விசாரித்த போது " அவருக்கு போடப்பட்ட ஊசி மருந்து அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சரியான நேரத்தில் அழைத்து வந்து விட்டீர்கள். இல்லையெனில் நிலைமை மோசமாகி இருக்கக்கூடும்" என்பதைத்தவிர வேறு விபரங்கள் எதையும் சரிவர தெரிவிக்கவில்லை.

இதைத்தெரிவிக்க என்ன காரணம் என்று கேட்கிறீர்களா..? இருக்கிறது. கடந்த கிருஸ்துமஸ் விழாவின் போது நான் பணியிடத்தில் இருந்தேன்.
பணியிடத்தில் கிருஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப்புத்தாண்டு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும். கிருஸ்துமஸ் விழாவிற்கு அடுத்த நாள் காலையில் எனக்கும் அடுத்த துறையைச் சார்ந்த கேரள நண்பர் வினோய் கொலங்காணி இரப்பாய் என்பவருக்கும் சேர்ந்து பணிபுரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. குறிப்பிட்ட இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது அவரது துறையைச் சேர்ந்த ஒரு சிறிய சாதனத்தில் இருந்தது என்பதை நான் கண்டறிந்து கூறியதும் அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அதை உறுதி செய்து முடிக்கும் சமயத்தில் மதிய உணவு இடைவேளை நேரமாகி இருந்தது.

அவர் சாப்பிடச் சென்று விட்டார். நான் எனது இடத்திற்குச் சென்று விட்டேன். சுமார் ஒன்றரை மணி நேரம் கழிந்த பின்னர் மறுபடி அவரை ஒரு கட்டுப்பாட்டு அறையில் பார்க்க நேர்ந்தது. அவருடன் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களும் பல இந்திய நண்பர்களும் அவரை கிண்டல் செய்தபடி இருந்தனர். அருகில் சென்று பார்க்கும் போதுதான் அவரது கண்ணின் இமைப்பகுதி சற்று வீங்கி இருந்ததைப் போன்று இருந்தது.

என்னவென்று விசாரித்தேன். அவர் மதியம் பெரிய லோப்ஸ்டர் (இறால்..?) ஒன்றை நண்பர்களின் வற்புறுத்தலால் சாப்பிட்டதாகவும், அதற்குப்பின்னர் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதை நண்பர்களுடன் கூறிய போது அவர்கள் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் எனவும் கூறினார்.

ஒருவேளைமதியம் சாப்பிட்ட உணவு ஒத்துக்கொள்ளவில்லையோ என சந்தேகித்த நான் அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது என விசாரித்தேன். அப்போதும் தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் வலியோ அல்லது அரிப்போ இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவர்கூறுவதில் எனக்கு உடன்பாடு ஏற்படவில்லை. உடனடியாக மருத்துவரை சென்று உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூறினேன். சற்று நேரத்தில் தானே சரியாகிவிடும் என்றும் கவலைப்பட ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். காலையில் இருந்து என்னுடன் பணிபுரிந்த அவரின் முகத்தில் ஏற்பட்ட வித்தியாசத்தை நன்கு கண்டுகொண்ட நான் மீண்டும் வலியுறுத்தி உடனே மருத்துவரைக் காணுமாறு வற்புறுத்தினேன்.

எங்கள் கடல்மேடையில் மருத்துவர் எவரும் இல்லை. அடுத்த நிறுவனத்தின் கடல்மேடையில்தான் ஒரு மருத்துவர் இருப்பார். அவரைப் பார்க்க வேண்டுமெனில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அங்கே செல்ல கடலில் அமைக்கப்பட்ட பாலத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த நிறுவனத்திற்கு செல்ல வேண்டுமெனில் சில பாதுகாப்பு கருவிகளையும் வேறொரு கட்டுப்பாட்டு அறையில் பெற்றுக்கொண்டு கட்டுப்பாட்டு அறை பொறுப்பாளரிடம் அறிவித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு அவருக்கு தெரிவித்தேன்.

சரி என்று என்னிடம் கூறிய அவர், தன்னுடைய முகத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தானே பார்க்க வேண்டும்
என்று எண்ணி, கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைக்கு சென்று இருக்கிறார். அங்கு வேறு யாரோ இருந்ததால் அவர் வெளியில் வரும் வரைக்கும் காத்திருந்து, பின்னர் சென்று கண்ணாடியில் பார்த்து விட்டு அதற்கு பின்னர் மெதுவாக மருத்துவரைக் காணச் சென்றிருக்கிறார்.

இதற்கு பின்னர் நடந்ததை எல்லாம் பின்னர் அவரே நேரடியாக என்னிடம் தெரிவித்தவைதாம். பாதுகாப்பு உபகரணங்களை பெற்றுக்கொண்டு பாலத்தின் வழியாக அடுத்த நிறுவன கடல்மேடைக்கு நடந்து சென்றிருக்கிறார். மருத்துவர் இருக்கும் இடத்திற்கு சற்று தூரத்திற்கு முன்னதாகவே அவரால் மூச்சு விட இயலவில்லை என்றும், வாயைத்திறந்து ஹா... ஹா.. என வலுக்கட்டாயமாக மூச்சுவிட்டவாறே மருத்துவரின் அறையை அடைந்திருக்கிறார்.

அவரை பரிசோதித்து, உடனடியாக ஒரு ஊசி போட்டு அடுத்து சில நிமிடங்கள் கழித்து மற்றொரு ஊசியும் அதன் பின்னர் மற்றொரு ஊசியும் போட்டிருக்கிறார். தொடர்ந்து அவரைக் கண்காணிப்பில் வைத்திருந்து விட்டு அவரை சுமார் நான்குமணி நேரம் கழித்தே அவர்
எங்கள் கடல்மேடைக்கு செல்ல அனுமதித்திருக்கிறார். சரியான நேரத்தில் வந்ததாகவும் இன்னும் சற்று நேரம் கழிந்திருந்தால், தொண்டை அடைப்பு ஏற்பட்டு அவருடைய நிலைமை படுமோசமாகி இருக்கும் என்றும் கூறி அடுத்த மூன்று தினங்களுக்கு மாத்திரைகளையும் வழங்கி இருக்கிறார்.

அங்கிருந்து வந்தவர் நேரடியாக என்னைத்தான் காண வந்தார். எங்கள்கடல் மேடையில் பணிபுரியும் யாருக்கும், அவருடைய
துறைக்கண்காணிப்பாளர், கடல்மேடை மேலாளர்களான ஆங்கிலேயர்கள் உட்பட யாருக்குமே இந்த ஒவ்வாமை குறித்த விபரீதம் புரியவில்லை
என்றும், வெறுமனே அவரைத்திட்டினார்கள் என்றும் வருத்தப்பட்டார். சரியான நேரத்தில் உரிய வழிகாட்டியதற்கு நன்றி கூறினார்.
மருத்துவர் என்ன கூறினார் என்று கேட்டதற்கு இனிமேல் ஓடு இருக்கும் கடல் உணவுகள் - நண்டு, லோப்ஸ்டர் போன்றவற்றை எந்தக்காரணம் கொண்டும் உட்கொள்ளக்கூடாது என்றும் விடுமுறையில் இந்தியா திரும்பிய பின்னர் எதனால் இந்த ஒவ்வாமை ஏற்படுகிறது என்பதைக் கண்டறிவதற்கான சோதனைகளை நல்ல மருத்துவமனையில் மேற்கொள்ளுமாறும் அறிவுரை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

தந்தையாருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை குறித்து சற்று தெரிந்திருந்ததால் அவருக்கு இதைக்குறித்து கூற முடிந்தது. இதைக்குறித்து அப்போதே மன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என விரும்பினாலும் என்னால் பதிவிட இயலவில்லை. விடுமுறையில் வந்த பின்னர் இதைக்குறித்து இணையத்தில் தேடிப்பார்த்தேன். அப்போதுதான் ஒவ்வாமை அழற்சி குறித்தும் அதன் எதிர்விளைவுகள் குறித்தும் ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வாமை எதிர்விளைவு அல்லது ஒவ்வாமை அதிர்ச்சி என்பது ஒத்துக்கொள்ளாத பொருள்களை உட்சுவாசிப்பதால், சாப்பிடுவதால், ஊசியாக போட்டுக்கொள்வதால், உடம்பில் படுவதால் ஏற்படும் எதிர்விளைவு ஆகும். ஒவ்வாமை எதிர்விளைவுகள் மிதமாகவோ அல்லது மிகக்கடுமையானதாகவோ இருக்கக்கூடும்.

1. அரிப்பெடுக்கும் சினப்புகள், தடிப்புகள் அல்லது புடைக்கும் தடிப்புகள்
2. மூக்கு வடிதல், கண் எரிச்சல் அல்லது அரிப்பு
3. தொண்டை எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுதல்
4. ஒவ்வாமை அதிர்ச்சி,
5. வயிற்றுப்போக்கு ஆகியன ஒவ்வாமை எதிரிவிளைவுகளால் ஏற்படக்கூடும்.

சிலருக்கு பூனை உரோமம், தூசி, மீன் மற்றும் இறால் போன்ற உணவு வகைகள், சில பூக்களின் மகரந்தத்தூள்கள், கோழி இறகு, இலவம்பஞ்சு என இன்னும் பல வகைகளில் ஒவ்வாமை அழற்சி ஏற்படக்கூடுமாம்.

ஒவ்வாமை ஒரு தொற்று நோயல்ல என்றாலும், அந்த நோய் பெற்றோர்களுக்கு இருப்பின் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

தோல் அரிப்பிலிருந்து (மருத்துவரிடம் செல்ல தாமதமானால்) உயிரிழப்பு வரை நேரிட ஒவ்வாமை காரணமாக இருக்கிறது. எனவே யாரும் ஒவ்வாமையை சாதாரணமாக எண்ண வேண்டாம். அவ்விதம் யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், கால தாமதமின்றி உடனே மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளுங்கள்.

அன்பான இளசு அண்ணா, ஒவ்வாமை குறித்தும் அதற்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் விபரங்கள் தாருங்களேன். மன்ற நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

samuthraselvam
12-02-2009, 04:43 AM
அலர்ஜி என்பது பொதுவாக எல்லோருக்கும் இருக்கக் கூடியது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அலர்ஜி. சில பேருக்கு சரிப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். காரணம், அதைப்பற்றி அறியாமை, அது என்ன செய்துவிடும் என்ற மனப்போக்கு, கவனிக்காமல் விடுவது என பல..
என் அத்தை மகன் பெயர். ராஜாராம். அவனுக்கு 7 வயது இருக்கும் போது காலை மிதிவண்டி சக்கரத்தில் விட்டு காயப்படுத்திக்கொண்டான். அதை சரியாக கவனிக்காமல் விட்டு அது புறை(ர) (ர, ற எந்த எழுத்து என்பது தெரியவில்லை) ஏறிவிட்டது.
அதற்கு ஏதோ ஊசி போடவேண்டும் என்று மருத்துவர் சொல்ல, (பென்சிலின் ஊசி என்றுதான் நினைக்கிறேன். அப்போது எனக்கும் 7 வயது. அதனால் சரியாக நினைவில் இல்லை) மாமாவும் சரி என்று சொன்னதும், மருத்துவர் பரிசோதிக்காமல் போட்டுவிட்டார். அதன் விளைவு மருத்துவமனையில் இருந்து வீடு வருவதற்குள் இறந்துவிட்டான்.

அதனால் சின்ன விஷயம் தானே என்று அலச்சியப்படுதக் கூடாது. எதையும் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். நடந்து முடிந்த பிறகு வருத்தப்பட்டு பயன் இல்லை. எதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இளசு
12-02-2009, 07:06 AM
மிக அவசியமான கட்டுரை.

நன்றி பாரதி.

அப்போது எனக்கு 10 வயது.. என் தம்பிக்கு 4 வயது.

என்னுடைய தம்பிக்கு மருத்துவரிடம் ஊசி போட்டு அழைத்துவந்த என் அம்மா
என்னை அவனுக்குத் துணையாக இருத்திவிட்டு , மதிய உணவு சமைக்க பொருட்கள் வாங்கப் போனார். அது கோடை விடுமுறைக்காலம்.

தம்பி உறங்கிக்கொண்டிருக்க, நண்பர்கள் சமிக்ஞையால் நான் தெருவுக்குப்போய்
கோலி விளையாடத் தொடங்கிவிட்டேன்..

அரைமணி நேரம் ஆகியிருக்கலாம்..

அய்யய்யோ என்ற என் அம்மாவின் அலறல் என் வீட்டிலிருந்து தெருவரை கேட்டு
என் நெஞ்சம் நடுங்கியது - இன்றும் ........!

முகம் வீங்கி, மூச்சுவிட இயலாமல் என் அன்புத்தம்பி..

அவசரமாய் மீண்டும் மருத்துவமனைபோய்..
(அட்ரீனலின், ஹைட்ரோகார்ட்டிசோன் வகை) மாற்று ஊசிகள் போட்டு
பின்னர் பிழைத்தான்.

அலர்ஜி - ஒவ்வாமை வெறும் தோல் அரிப்பு ( அர்டிகேரியா)வுடன் நிற்கலாம்..
அல்லது ஆஞ்சியோ-எடிமா எனும் இமைவீக்கம், நாக்கு ,அன்ன வீக்கம், மூச்சுக்குழாய் அடைப்பு, நுரையீரல் நீர்த்தேக்கம், இரத்த அழுத்தக்குறைவு என
உயிர்பறிக்கும் எமர்ஜென்சியாகவும் அமையலாம்.

அண்மையில் தன் அப்பாவுடன் அவர் அலுவலகம் போய் ஜாலியாக கடலைமிட்டாய் சாப்பிட்டு, அடுத்த 10 நிமிடங்களிலேயே ஆஞ்சியோஎடிமாவால் மிகவும் ஆபத்தான நிலையில் வந்த
16 வயது இளைஞனை வெண்ட்டிலேட்டரில் வைத்து நாங்கள் சிகிச்சை அளித்தும்..
பலனின்றி பறிகொடுத்தோம்...
மருத்துவமனை வருவதற்குள் - ஆபத்தான விளைவுகள் முழுதும் நிகழ்ந்துவிட்டபடியால்..

வருமுன் காத்தல், வந்துவிட்டால் உடனடி சிகிச்சை.. - முக்கியம்.

மருத்துவ வசதி இல்லாத இடங்களில், நோயாளியிடமே
ஏற்றிக்கொள்ள வசதியாய் அட்ரீனலின் ( எபிநெஃப்ரின்) ஊசிகள் கொடுத்துவிடுவோம்.

கடல் உணவுகள், நட் எனப்படும் கடலை வகைகளிலிருந்து எதற்கும்
ஒவ்வாமை வரலாம்..

ஏற்கனவே பழகியவற்றுக்குக் கூட, பின்னர் ஒவ்வாமை வரலாம்.

கவனித்து, தவிர்த்து..
வந்தால் உடனடி சிகிச்சை அளிப்பது அவசியம்..


பாரதியின் இக்கட்டுரை -
அப்பா, நண்பர் போல்
இன்னும் பல உயிர்களைக் காக்க உதவட்டும்!

சிவா.ஜி
12-02-2009, 07:19 AM
மிக அவசியமான கட்டுரையை வழங்கிய பாரதிக்கு மிக்க நன்றி. என் நன்பன் திராட்சை பழம் சாப்பிட்டாலே உடலெல்லாம் தடித்துவிடும். அதனால் அவன் புளிப்பான எந்த பழத்தையும் சாப்பிடுவதில்லை.

இந்தக்கட்டுரையின் மூலமும், இளசுவின் விளக்கங்கள் மூலமும் ஒவ்வாமை எத்தனை ஆபத்தானது என தெளிவாகத் தெரிய வருகிறது.

இருவருக்கும் என் நன்றிகள்.

செல்வா
12-02-2009, 08:09 AM
தேவையான ஒன்று பாதுகாத்து எல்லோரும் கவனமாக இருக்கவேண்டிய ஓரு பதிவு. இந்த நிகழ்வை அண்ணா என்னிடம் சொல்லியிருந்தார். கேட்கும் போதே மனம் கலங்கிவிட்டது. எனது குணங்களில் ஒன்று மருத்துவரை அணுகாமல் இருப்பது. மருத்துவமனையிலேயே பணிபுரிந்தாலும் மருத்துவரை அணுகுவது என்றால் அத்தனை சீக்கிரத்தில் செல்லமாட்டேன். அலட்சியமாகவே இருப்பேன். என்னைப்போன்ற அலட்சியப் போக்கு உள்ளவர்களுக்கு இத்தகைய பதிவுகள் ஒரு எச்சரிக்கையைக் கொடுக்கிறது. அதோடு நமக்கு மட்டும் என்றில்லாமல் நம்மைச் சுற்றியிருப்பவர்களையும் இக்கட்டு நேரத்தில் முன்னறிவித்துக் காத்துக் கொள்ள வழிவகுக்கிறது.
இத்தகைய பதிவுகள் மன்றத்திற்கு மிகவும் தேவை. பகிர்தலுக்கு நன்றிகள் அண்ணா. இளசு அண்ணாவின் மருத்துவ ரீதியான விளக்கங்களையும் மிகவும் எதிர்பார்க்கிறேன்.

பாரதி
13-02-2009, 08:49 AM
கருத்துக்களுக்கு நன்றி சமுத்திரசெல்வம், அண்ணா, சிவா, செல்வா.

சமுத்திரசெல்வம் கூறி இருப்பது போலவும், செல்வா உணர்ந்தது போலவும் நம்மில் பலரும்.. இதுதானே ஒன்றும் செய்யாது... என அசட்டையாக இருப்பது அல்லது வலி எதுவும் இல்லை என்று ஏதுமறியாமல் இருப்பதுதான் காரணம். அது பயப்படக்கூடிய விடயம் இல்லை என மருத்துவர் பரிசோதித்து கூறிய பின்னர்தான் நாம் நிம்மதியாய் மூச்சு விட இயலும்.

அன்பு சிவா, உங்கள் நண்பரை ஒரு முறை உரிய பரிசோதனையை மேற்கொள்ள சொல்லுங்கள். அண்ணா கூறியது போல, வழக்கமாக நாம் உண்ணும் சில பொருட்களே நமக்கு ஒத்துக்கொள்ளாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.

தன்னுடைய கடும் வேலைப்பளுவிலும், இங்கு வந்து விரிவாக பின்னூட்டம் அளித்த அண்ணனுக்கு அன்பு.

இந்தக்கட்டுரை யாருக்கேனும், ஒவ்வாமையைக் குறித்து விழிப்புணர்வை உண்டாக்கினால் அதுவே போதுமானது.

ஷண்முகம்
13-02-2009, 11:12 PM
பெரும்பாலோர்க்குப் பயனளிக்கும் தகவல்

anna
22-02-2009, 05:38 AM
ஓவ்வாமை என்பது பொதுவாக எல்லோருக்கும் உண்டு. நமக்கு எது ஒத்துக்கொள்ளாது என்பதை அறிந்து தவிர்த்து விட்டாலே போதும். என்னை பொறுத்தவரையில் எனக்கு தூசி,பெயிண்ட் என்றால் போதும் காத தூரம் ஓடிவிடுவேன். இருந்தாலும் நாம் எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறோம். எப்படி தூசியை தவிர்ப்பது. நான் 5 வயதில் இருந்து ஓவ்வாமைக்கு இன்ஹேலர்(வெண்ட்ரோலின்) தான் பயன் படுத்தி வருகிறேன். இருப்பினும் வரும்முன் காப்போம் வந்தபின் திவிர சிகிச்சை எடுத்துக்கொள்வது தான் சால சிறந்தது.

ஓவியா
24-05-2009, 12:36 AM
மிகவும் பயனுள்ள தகவல், நன்றி பாரதியண்ணா.

லண்டனில் வசிக்கும் ஒருவருக்கு 2 வருடங்களுக்கு முன் இலையுதிர் காலத்தில் இருமல்=சளி பிடித்து அது இன்னமும் சரியாகவில்லை என்றுதான் சொல்வேன்...

இருப்பினும் இப்பொழுது கடந்த 3 வாரகாலமாக ஒரு மரத்தின் கீழ் பல மணிநேரம் அமர்ந்ததால் அவருக்கு மகரந்த அலர்ஜி ஏற்ப்பட்டு மரண வேதனையை அனுபவித்து வருகிறார். தொண்டையில் புண் மற்றும் அரிப்பு :redface: சின்ன சின்ன கொப்புளம் வந்துள்ளன தொண்டையில்/

7 நாட்கள் எடுத்த முதல் மருந்து கேட்கவில்லையாம்,(phenoxymethylpenicillin 250mgtab) அது அன்டிபயொட்டிக்காம். இப்பொழுது கொடுத்த மருந்து 2 மாதத்திற்க்கு தினமும் ஒன்று என்று கொடுத்துள்ளார்கள்..இது cetirizine hydrochloride 10mg tab


பாரதியண்ணா,
என் கேள்வி இதுதான் இந்த மகரந்த அலஜியை (heyfever) முற்றிலும் நீக்கி குணமாக்க முடியுமா? அல்லது இனி வரும் ஒவ்வொரு இளவேனிர் காலமும் அவர் இப்படி துண்புற வேண்டுமா?? :traurig001:


டாக்டர் இளசு வந்து பதில் சொல்லுவாரா, இல்லை பார்த்து செல்லுவாரா :D பார்ப்போம்

Tamilmagal
24-05-2009, 11:01 AM
ஓவ்வாமை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் கட்டுரை. பலருக்கு பயன்படும் என நினைக்கிறேன்.
பதிவிற்க்கு நன்றி.

சரண்யா
15-11-2009, 02:27 AM
பழையது தான் இருந்து படித்துவிட்டு பின்னூட்டம் இடாமல் செல்ல மனமில்லை...

நன்றிகள் ..ஒவ்வாமையை பற்றி அக்கறையோடு பகிர்ந்து கொண்டீர்கள்...
இளசு அவ்ர்களுக்கும்...ஏனைய பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கும் நன்றிகள்...

குணமதி
15-11-2009, 09:03 AM
தக்க எச்சரிக்கை தரும் பயனுள்ள பதிவு.
நன்றி.

'பார்த்தீனியம்' செடி மற்றும் வெளிநாட்டு முள்செடிகளின் மகரந்தங்களாலும்
ஒவ்வாமை ஏற்படுகிறது.

உணவில் தக்காளி, நீர்க்காய்கள் பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்படுகிறது.

மேற்சொன்னவாறு மகரந்தத்தாலும் ஒவ்வா உணவுப் பொருள்களை உண்பதாலும்
ஒரேவகைத் தாக்குதலாக சளி, மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

இவற்றுக்குத் தீர்வான மருத்துவம் இல்லையா?

"seroflo" - inhaler - பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் அஞ்சும்படி ஏதாவது ஏற்படுமா?

தொடர்புடைய திறனாளர்கள், தெரிந்தவர்கள் விளக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.