PDA

View Full Version : ஜெயிலுக்கு போனேன் - பாகம் 1



ரங்கராஜன்
11-02-2009, 07:22 AM
வணக்கம் உறவுகளே

இடிக்கப்பட இருக்கும் பெரும் சரித்திரம், எத்தனை மனிதர்களின் வாழ்க்கையை மாற்றிய பள்ளிக்கூடம், பல கைதிகளில் சுற்றுலாத்தளம், நேத்தாஜீ, காமராஜர், போல பல தலைவர்கள் இருந்த இடம், மனித உருவில் இருந்த பல கொடூர மிருகங்கள் இருந்த இடம், எவ்வளவோ உண்மைகள் புதைக்கப்பட்டு, பலரை உச்சியில் ஏற்றிய இடம். இது வேறு உலகம், வேற கிரகம் என்றே சொல்லலாம். அது தான் வரலாறு சிறப்பு மிக்க சென்னை சென்ட்ரல் ஜெயில்.

தோற்றம் : 1837,
மறைவு : இன்னும் கொஞ்ச நாட்களில்

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_je.jpg

பாகம் - 1

கடந்த சில மாதங்களாகவே சென்னையின் மத்திய சிறைச்சாலை பல பத்திரிக்கைகளில் இடம் பிடிக்கிறது, இடப்பற்றாக் குறை காரணமாகவும், உள்ளே வருபவர்களின் வரத்து அதிகமானதாகவும் இருப்பதினால், அவர்களுக்கு போதிய வசதி இல்லை என்பதாலும் மத்திய சிறைய புழலுக்கு மாற்றி விட்டார்கள். மத்திய சிறைச்சாலையை பற்றிய செய்திகள், வரலாறுகள், புள்ளி விவரங்கள் பல வார பத்திரிக்கைகளில் தொடராக வெளி வந்தது. நான் இப்பொழுது அதை பற்றியே பேசி அரைத்த மாவை அரைக்க விரும்பவில்லை. உங்களில் பல பேரை போல நானும் ஜெயிலை சினிமாக்களில் மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். ஜெயில் என்றால் பாட்டு பாடுவார்கள், அடித்துக் கொள்வார்கள், வேலை செய்ய சொல்லி ஆளைப் பிழிவார்கள் என்று மட்டும் தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்படி எதுவும் கிடையாதாம்???. கடந்த ஒரு வாரமாக நாளிதழ்களில் வரும் செய்தி ஜெயிலை போது மக்களின் பார்வைக்காக திறந்து வைத்து இருக்கிறார்கள் அதுவும் புதன்கிழமை வரை தான் என்று படித்தேன், அதுவும் இல்லாமல் தொலைக்காட்சி செய்திகளில் குடும்பத்துடன் மைக்கில் ஒருவரின் மனைவி

“இதுவரை ஜெயிலுக்கு நான் வந்தது இல்லை, அவரும் தான். எனக்கு இது ஒரு புது உணர்வு, எப்படி அவங்க வாழ்ந்தாங்க பார்க்க நாங்க குடும்பத்துடன் வந்து இருக்கோம். தூக்கு மேடையை பார்க்கணும் தான் முக்கியமா வந்தோம், இதுவரை வேறு எந்த ஆட்சியிலும் இந்த மாதிரி அனுமதித்தது கிடையாது, முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றிகள்”

இந்த பேட்டியை ஒலிப்பரப்பிய டி.விக்கு எதிர் டி.வி யில் இந்த செய்தியை போட்டு இருந்தால் //கைதிகளின் வாழ்க்கையை கேலி கூத்தாக மாற்றிக் கொண்டு இருக்கும் இந்த ஆட்சியின் வக்கரதனத்தின் உதராணம் தான் இந்த ஜெயில் கண்காட்சி, பல கைதிகளுக்கு
மன உளச்சலை தரும் இந்த ஜெயில் கண்காட்சியை எதிர்த்து பல பொது மக்கள் கோஷங்களை எழுப்பினர்// என்று ஒரு வீடியோவை போடுவார்கள், அதில் அனாதையாக ஒருவர் மட்டும் நின்றுக் கொண்டு, அவரைச் சுற்றி வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தினர் கேமிராவை மொய்க்க, அவர் பேட்டியை கொடுப்பார், ஓர் ஒண் ஒன்று, ஈர் இரண்டு இரண்டு என்ற வாய்பாடு ராகத்தில் சொல்ல ஆரம்பிப்பார்.

“நான் முன்னால் கைதிங்க, நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இப்படி கேலி கூத்தாக ஆக்க கூடாதுங்க, எங்களை வெளியில் இதுக்கு அப்புறம் எப்படிங்க மதிப்பாங்க, இந்த ஆட்சியில் எழைகளின் நிலம இதாங்க, இந்த ஆட்சி மாறினா தாங்க தமிழ்நாட்டுக்கு நல்லது” என்று அப்படியே ஒப்பிப்பார்.

எதிர்கட்சி என்பதால் எல்லாத்தையும் எதிர்க்க வேண்டும் என்று அர்த்தம் போல. சரி நாம் விஷயத்திற்கு வருவோம். ஜெயிலை நானும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதற்கு காரணம், நான்கு சம்பவங்கள்

1) எனக்கு தெரிந்த ஒரு வாட்ச்மேன், அவர் ஒரு முன்னால் கைதி. எதோ சொத்து தகராறில் ஜெயிலுக்கு போனவர்.

2) சின்ன வயதில் (9 வயது) நான் செங்கல்பட்டில் இருக்கும் பொழுது அங்கு இருக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து தப்பித்த ஒரு சிறுவனை (12 வயது), என் கண் எதிரே துரத்தி பிடித்து தர்ம அடி கொடுத்த போலீஸ்.

3) ஆட்டோ ஷங்கரின் சுயசரிதை படித்ததில் இருந்து ஜெயிலைப் பார்க்கவேண்டும் என்று ஆசை.

4)பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் ஓய்வு பெற்ற ஒரு சிறை அதிகாரி தன்னால் மறக்க முடியாத ஒரு பெண் கைதியை பற்றி சொன்ன கதை. (பின்னாடி அந்த கதையை சொல்கிறேன்)

இவை அனைத்தும் சேர்ந்து தான் என்னுடைய ஆவலை அதிகப்படுத்தியது.

நானும் அந்த வாட்ச்மேன் அண்ணனும் சேர்ந்து ஜெயிலுக்கு புறப்பட்டோம், நீங்க எதுக்குன என்றேன், இல்லப்பா நான் இருந்த இடம் இப்ப இடிக்க போறாங்களாம் கடைசியா ஒரு தடவை பார்க்கலாமே அதனால் தான்.என்னண்ணா எதோ பூர்வீக சொத்த பார்க்க போற மாதிரி சொல்றீங்க என்றேன். எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டு என்னுடைய பைக்கில் ஏறினார். மெளண்ட் ரோடில் இருந்து செண்ட்ரல் ரயில் நிலையம் போவதற்காக ஒரு பாலத்தை கடக்க, அந்த பாலத்தின் நடுவில் சாக்கடைக்கு அந்த பக்கம் இருக்கிறது மத்திய சிறைச்சாலை,

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_11022009315.jpg


அங்கே இறங்கி பார்த்தால் மக்கள் கூட்டம் அம்மியது, ஏன் சென்னையில் மட்டும் எது வைத்தாலும் கூட்டம் நிரம்புகிறது. ஜெயிலை பார்க்க இவ்வளவு கூட்டமா??, அதுவும் குழந்தை குட்டிகளை எல்லாம் தூக்கிக் கொண்டு, பாலத்தின் முன் பெரிய கேட் மத்திய சிறைச்சாலை என்று எழுத்து அழிந்து இருந்தது, நாங்கள் போன நேரம் சிறை துறையின் மேல் அதிகாரி நடராஜ் வந்து இருந்தார் அவரைச் சுற்றி நிரைய கூட்டம் இருந்தது, மேலே இருந்து கூட்டம் அவரை பார்த்துக் கொண்டு இருந்தது
மக்கள் என்ன என்று தெரியாமல் பேசிக் கொண்டு இருந்தனர்.

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_11022009261.jpg

http://www.tamilmantram.com/photogal/images/5066/1_11022009304.jpg


http://www.tamilmantram.com/photogal/images/5066/1_11022009259.jpg

“ஏய் என்னப்பா கீழே இவ்வளவு கூட்டமா இருக்கு, யாராவது ரிலீஸ் ஆவராங்களா?”

“ச்சீ ச்சீ எதோ சினிமா சூட்டிங்கு போல”

“இல்லப்பா யாரோ ரீலிஸ் ஆயி இருக்காங்க”

நான் “ஏங்க ஜெயிலை மூடியே பல மாதம் ஆவுது”

“அப்பறம் ஏன் இன்னிக்கி இவ்வளவு கூட்டம், யாரு அந்த போலீஸ்சு”

நான் “இல்லங்க அவர் தான் ஜெயிலோட உயர் அதிகாரி”

“ஜெயிலை மூடிட்டாங்கனு சொன்னீங்க”

?????????????? நான் “ஆமா எதோ சூட்டிங் தான் எடுக்கறாங்க போல”

“அதான் நான் அப்பவே சொன்னேன்”.

அந்த பாலத்தில் மக்கள் வெள்ளம் அதிகமானது, அங்குள்ள ஒரு போலீஸ் சிரித்துக் கொண்டு “யோவ் அப்படி என்னய்யா ஜெயிலில் இருக்கு என்று எல்லாரும் வரீங்க”. கூட்டமாக வந்த ஆட்டோகாரர்கள் “அத பார்க்க தான் சார் வரோம்”

என்னுடன் வந்த வ.மே அண்ணா எதுவும் பேசாமல் ஜெயிலையே பார்த்துக் கொண்டு வந்தார், அவர் மனதில் பழைய எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கும் போல, நான் அதை கலைக்க விரும்பாமல் அமைதியாக வந்தேன். மக்கள் வெள்ளத்தை கடந்து நாங்கள் சிறைச்சாலையின் கேட்டின் முன் நின்றோம், சினிமாவில் காட்டப்படும் கம்பீரம் நிஜத்துக்கு இல்லை தான், சின்னதாக தான் இருந்தது கேட். ஆனால் மூன்று பேர் சேர்ந்து தள்ளினால் கூட
அசைய மறுத்தது, சொக்க இரும்பு போல, சினிமாவில் காட்டப்படும் கேட் அட்டையாக இருந்து இருக்கும். உள்ளே சென்றோம், மக்கள் வருவதும் போவதுமாக இருந்ததினால், அந்த இடமே புழுதி காடாக மாறி இருந்தது, நான் முதல் முறையாக ஓடிச் சென்று பார்த்தது என்ன தெரியுமா?, சிறை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் சுவரும் இரும்பு வேலியும், அதுதான் நான் மேலே நாலாவதாக சொன்ன காரணம்.

பல வருடங்களுக்கு முன் ஒரு பத்திரிக்கையில் ஓய்வு பெற்ற சிறை அதிகாரி பேட்டி தந்து இருந்தார். அதில் அவருக்கு ஒரு கேள்விக் கேட்கப்பட்டு இருந்தது.

“நீங்கள் மறக்க முடியாத சிறையில் நடந்த சம்பவத்தை சொல்லுங்களே”

அவர் “இரண்டு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது, ஒரு குடும்பத்தை கொலை செய்த தூக்கு தண்டனை கைதி ஒருவன் தினமும் கொஞ்ச நேரம் காணாமல் போக ஆரம்பித்தான், எங்கு போறான் என்ன செய்கிறான் என்று யாருக்கும் தெரியவில்லை.ஒரு நாள் அவனை பின்னாடியே தொடர்ந்து போய் நான் பார்த்தேன், அவன் தன்னுடைய சட்டை பையில் எதையோ மறைத்து கொண்டு போனான். சிறைச்சாலையின் பின்னாடி புதர் மாதிரி செடிகள் இருக்கும், அங்கு போனான். அங்கு ஒரு மரத்தின் பொந்தில் கையை விட்டு எதையோ எடுத்தான், தான் மறைத்து வைத்து இருந்தை அதன் பக்கத்தில் கொண்டு போனான். நான் அவனை அழைத்தேன், அவன் யாரிடமும் பேச மாட்டான், என்னை பார்த்து அவன் எந்த சலனமும் இல்லாமல் தன்னுடைய வேலையை தொடர்ந்தான். கிட்ட சென்று பார்த்தேன், அவன் ஒரு கையில் பிறந்து கொஞ்ச நாள் ஆன அணில் குஞ்சு, இன்னும் கண்களை கூட திறக்க வில்லை. இன்னொறு கையில் ஒரு ஈர துணி இருந்தது. என்னையா இது என்றேன் “இல்ல சார் போன வாரம் நான் மரத்து அடியில் உக்கார்ந்து இருக்கும் பொழுது மரத்தில் இருந்து கிழே விழுந்துடுச்சு, பாவம் சார் சின்ன குஞ்சு காக்கா கொத்திடப்போவுது என்று மறச்சி வச்சி இருக்கேன், அதுக்கு பசிக்கும் இல்ல, அதனால் தான் எனக்கு நீங்க தரும் பாலை துணியில் தொட்டு இதுக்கு தரேன். பாவம்
அதுக்கு இரைத்தேட தெரியாதுனு சொன்னான் ஒரு குடும்பத்தை கொன்ற கொலைக்காரன்.

ஜெயிலில் எப்பொழுதும் பாதுகாப்பு பலமாக இருக்கும், நிறைய பேர் தப்பிக்க நினைத்து மாட்டி இருக்கிறார்கள், திடீர்னு பார்த்தால் ஒரு நாள் இரவு ஒரு கைதி தப்பிச்சாச்சுனு தகவல் வந்தது யார் என்று பார்த்தால், ஒரு பொம்பளை அதுவும் 40 அடி உயரம் உள்ள சுவரை தாண்டி
அதற்கு மேல அமைக்கப்பட்டு இருக்கும் மின்சார வேலியை தாண்டி எப்படி அவள் போய் இருப்பாள் என்று குழம்பிக் கொண்டு இருக்கும் பொழுது, அடுத்த நாள் அவளே வந்து சரண் அடைந்து விட்டாள். கோபத்துடன் அவளை நோக்கிச் சென்றேன், பார்த்தால் அவள் கையில் ஒரு 2 வயது குழந்தை இருந்தது, என்ன என்று கேட்டால். அவள் காலில் விழந்து “இல்ல சாமி என்னுடைய குழந்தை ஞாபகமாகவே இருந்தது, அதை யாரும் கவனிக்க மாட்டாங்க சாமி, பசியில செத்து போய்டும், அதனால் இத என் கூடவே வச்சிக்க அனுமதி குடுங்க என்று அழுதாள். சரி எப்படி நீ அந்த 40 சுவர்ல ஏறின அதுவும் மின்சார கம்பி எல்லாம் தாண்டி”. அவள் சொன்ன பதில் எனக்கு தெரில சாமி, எதோ ஒரு வேகத்தில் செய்து விட்டேன், என் குழந்தைக்காக” என்றாள்.

தாய் பாசத்திற்கு அளவே கிடையாது, மனிதர்கள் எல்லாரும் நல்லவர்கள் தான் என்று புரியவைத்த அந்த இரண்டு சம்பவங்களையும் என்னால் மறக்கவே முடியாது என்றார் அதிகாரி. என்னாலும் இந்த சம்பவங்களையும் மறக்கவே முடியாது. அந்த அணில் கதையை தான் நான் ஒரு துளி பால் என்ற சிறுகதையாக நம் மன்றத்தில் பதித்து இருப்பேன். அந்த சிறைச்சுவரை போய் பார்த்தேன், எவ்வளவு பெரிசு, அதன் மேல் மின்சார கம்பிகள் வேறு, எப்படி அந்த பொம்பளை ஏறி இருப்பாள்
அப்பப்பா உண்மையிலே தாய் பாசத்தின் சக்தி பெரியது தான்.


இது உள்ளே
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_11022009282.jpg


இது வெளியே
http://www.tamilmantram.com/photogal/images/5066/1_11022009263.jpg

(ஆச்சர்யங்கள் தொடரும்........)

பாரதி
11-02-2009, 07:30 AM
ஆஹா... தலைப்பை கண்டவுடன் இதுவாகத்தான் இருக்குமோ என நினைத்தேன். அப்படியே இருப்பதில் சின்ன திருப்தி. இன்று செய்திகளிலும் வலைப்பூக்களிலும் படித்தேன். உங்கள் கைவண்ணத்தை காண ஆவலாக இருக்கிறேன்.

சிவா.ஜி
11-02-2009, 08:03 AM
வாங்க வாங்க முழு விவரத்தோட. பல பெருமைகளைத்தாங்கிய கட்டிடம். இனி இல்லாமல் போகப்போகிறது.

அமரன்
11-02-2009, 11:43 AM
விகடன், குமுதம் இரண்டுமே கவர்ஸ்டோரி போட்டு கவர்ந்துட்டாங்க. ஆனாலும் மனதில் ஒரு சின்னக் குறை. சுஜாதாவின் வண்ணத்தில் கண்ணைக் கொஞ்சலையே. அந்தக் குறை விரைவில் தீர்ந்திடும்.

வருங்கால பிரதமர் தக்ஸ்... வாழ்க .. வாழ்க...

ஷீ-நிசி
11-02-2009, 11:56 AM
இந்த சனிக்கிழமை வரைக்கும் இடிக்காம இருப்பாங்களா?! நாங்களும் போய் பார்ப்பமுல்ல!!

தாமரை
11-02-2009, 12:03 PM
நானும்தான் ஒரு காலத்தில் திருச்சி மத்திய சிறைக்கு போய் வந்தேன்.. :D

வருங்கால பிரதமர் எல்லாம் கொஞ்சம் ஓவர் அமரா!

ரங்கராஜன்
11-02-2009, 12:26 PM
விகடன், குமுதம் இரண்டுமே கவர்ஸ்டோரி போட்டு கவர்ந்துட்டாங்க. ஆனாலும் மனதில் ஒரு சின்னக் குறை. சுஜாதாவின் வண்ணத்தில் கண்ணைக் கொஞ்சலையே. அந்தக் குறை விரைவில் தீர்ந்திடும்.

வருங்கால பிரதமர் தக்ஸ்... வாழ்க .. வாழ்க...

இந்த மாதிரி உசுப்பு ஏத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகலமாக ஆக்கிடுங்க:icon_rollout::icon_rollout::icon_rollout:


இந்த சனிக்கிழமை வரைக்கும் இடிக்காம இருப்பாங்களா?! நாங்களும் போய் பார்ப்பமுல்ல!!

இருக்கும் என்று நினைக்கிறேன் நண்பரே, மக்கள் திருவிழா கூட்டம் போல போகிறார்கள், சரி என்னை நியாபகம் இருக்கா, ஏர்பேக் எப்படி இருக்கு, குறைந்ததா இல்லை அப்படியே தான் இருக்கிறதா?


நானும்தான் ஒரு காலத்தில் திருச்சி மத்திய சிறைக்கு போய் வந்தேன்.. :D

வருங்கால பிரதமர் எல்லாம் கொஞ்சம் ஓவர் அமரா!

அண்ணா முதலில் அமரனின் நக்கல் புரியவில்லை, உங்களின் பின்னூட்டத்தை பார்த்தவுடன் தான் புரிகிறது.

ரங்கராஜன்
11-02-2009, 05:29 PM
பாகம் 1 மேலே முதல் பத்தியில் சேர்த்து விட்டேன், நன்றி

arun
15-02-2009, 04:58 PM
தினமும் பார்க்கும் இடம் இது வெளியில் இருந்து தான் கடந்த ஒரு வாரமாக சரியான கூட்டம் ஏற்கனவே பேப்பர் படித்ததால் விஷயம் புரிந்தது ஆனால் எப்போது இடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை

ரங்கராஜன்
16-02-2009, 09:36 AM
தினமும் பார்க்கும் இடம் இது வெளியில் இருந்து தான் கடந்த ஒரு வாரமாக சரியான கூட்டம் ஏற்கனவே பேப்பர் படித்ததால் விஷயம் புரிந்தது ஆனால் எப்போது இடிக்க போகிறார்கள் என்று தெரியவில்லை

அப்படியா இன்னும் கூட்டமாக இருக்கா என்ன?, இடிப்பது முடிவாகிவிட்டது, ஆனால் அதில் இருக்கும் பல லட்சம் பதிப்பு வாய்ந்த பொருட்களை அப்புறபடுத்திவிட்டு தான் இடிப்பார்கள். இரும்பு, மரம், கட்டைகள் என்று பல இன்னும் அதில் இருக்கிறது.

செல்வா
16-02-2009, 10:21 AM
இரும்பு, மரம், கட்டைகள் என்று பல இன்னும் அதில் இருக்கிறது.
ஆமா ஆவிகள் கூட நிறைய சுத்திட்டிருக்காம்... கேள்விபட்டேன். வெள்ளிக்கிழமைகளில் ஜெயில் பக்கமாகச் செல்லாமலிருப்பது நல்லது அதுவும் மாலை ஆறுமணிக்கு மேல் அந்தப்பக்கமாக வரும் காற்றைச் சுவாசிப்பது கூட ஆபத்து.
ஜெயிலை இடிக்கும் நேரத்தில் உள்ளே மறைந்து வாழ்ந்த பல ஆவிகள் வெளியே வரும் என்றும் பேசிக்கொள்கிறார்கள் உண்மையா...?

தங்கவேல்
16-02-2009, 12:12 PM
டக்ஸ், மனதினை கனக்கச் செய்யும் பதிவினை எழுத ஆரம்பித்திருக்கின்றீர்கள். படித்துக் கொண்டிருந்த போதே மனம் நெகிழச் செய்து விட்டீர்கள். மனித வாழ்வில் சில சம்பவங்கள் மனிதனின் அரக்கக் குணத்தை அசைத்துப் பார்க்கும் தன்மை கொண்டது.... அசத்தலாய் அதுவும் நெகிழ்வாய் இருக்கிறது... தொடருங்கள்...

ரங்கராஜன்
16-02-2009, 12:47 PM
ஆமா ஆவிகள் கூட நிறைய சுத்திட்டிருக்காம்... கேள்விபட்டேன். வெள்ளிக்கிழமைகளில் ஜெயில் பக்கமாகச் செல்லாமலிருப்பது நல்லது அதுவும் மாலை ஆறுமணிக்கு மேல் அந்தப்பக்கமாக வரும் காற்றைச் சுவாசிப்பது கூட ஆபத்து.
ஜெயிலை இடிக்கும் நேரத்தில் உள்ளே மறைந்து வாழ்ந்த பல ஆவிகள் வெளியே வரும் என்றும் பேசிக்கொள்கிறார்கள் உண்மையா...?

ஹா ஹா ஹா செல்வா, என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு? நான் என்ன மொடி மஸ்தானா? எனக்கு எப்படி தெரியும்?,

ஆனால் நான் youtube ல் ghost videos பார்த்து விட்டு, பல நாட்கள் முழுவதும் அதே சிந்தனையாக தான் இருந்து இருக்கிறேன், சில வீடியோஸ் போலியான தாக இருந்தது, சில வீடியோஸ் நிஜமானதாக இருந்தது. paranormal depatments என்று ஒண்ணு இருக்கு, ஆவிகளை பிடிக்கறவங்க, (அதை பற்றியும் வீடியோஸ் youtubeல் இருக்கு) அவங்கள கேட்டாதான் தெரியும்.

arun
16-02-2009, 05:35 PM
அப்படியா இன்னும் கூட்டமாக இருக்கா என்ன?, இடிப்பது முடிவாகிவிட்டது, ஆனால் அதில் இருக்கும் பல லட்சம் பதிப்பு வாய்ந்த பொருட்களை அப்புறபடுத்திவிட்டு தான் இடிப்பார்கள். இரும்பு, மரம், கட்டைகள் என்று பல இன்னும் அதில் இருக்கிறது.

ஆம் கடைசியாக வெள்ளிக்கிழமை பார்த்தேன் சரியான கூட்டம் டிராபிக் ஜாம் வேறு ஆனால் இன்று நைட் ஷிப்ட் ஆதலால் தெரியவில்லை

உடனடி கடைகள் பல திறந்து வியாபாரம் கூட படு வேகமாக நடக்கிறது