PDA

View Full Version : குழந்தைகளின் உலகம்



ஆதவா
11-02-2009, 05:14 AM
குழந்தைகளுக்கான உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. எல்லைகள் அற்ற பாதைகளில் முடிவில்லாத பயணம் போன்று நீண்டு கொண்டே இருக்கிறது. சிலர் அப்பயணத்தில் இறங்கிக் கொள்ளலாம், சிலர் பயணித்துக்கொண்டும் இருக்கலாம்.. ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒவ்வொருவிதமான உலகம் இருக்கிறது. அது நீண்டோ, குறுகியோ, எந்த விதமான வடிவங்களிலும் இருக்கலாம்.. அவர்களின் ஒவ்வொரு நொடியிலிருந்தும், அவர்களின் உலகம் நழுவிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் முடிவைக் காணும் பொழுது, பாகுபாடுகளை அறிந்து கொள்ளும் முரட்டு மனிதர்களாகிவிடுகிறார்கள்.

குழந்தை எனும் வரையறை எங்கு நீங்குகிறது? அதன் செயல்பாட்டை வைத்தா? அது பேசும் மொழியை வைத்தா?

குழந்தைகளுக்குத் தான் எந்த பாலினம் என்று எப்பொழுது தெரிய வருகிறதோ, அல்லது அந்த பாலினத்தின் உண்மையான நடவடிக்கைகள் சாராம்சங்களைப் பற்றி எப்பொழுது புரிய வருகிறதோ அன்றிலிருந்து குழந்தைகள் மாறத் துவங்குகிறார்கள். அவர்களின் மொழி மாறுகிறது. நடத்தை, பாகுபாடு, செயல்கள், பாவனை என்று ஒவ்வொரு வடிவங்களும் மாறத் துவங்குகின்றன. தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.

குழந்தை மொழி ஒரு ஆரஞ்சுப் பழத் தோலைப் போன்று உரிய உரிய அது பண்பாட்டு மொழியை அடைகிறது, உரிந்து சருகாகிப் போன மொழி, எங்கே சென்றது என்ற அக்கறையின்மை, ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தானாக அமர்ந்துவிடுகிறது. உரிந்து போகாத மொழியைக் கொண்டவர்கள் பைத்தியக்காரர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். உண்மையிலேயே பைத்தியக்காரர்களுக்கும் குழந்தைகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்? உருவத்தைத் தவிர..

என் மாமாவின் மகன், பேசுவதெல்லாம் ஏதோ கடவுள் பேசுவதைப் போன்று இருக்கிறது ; அவனது ஒற்றைச் சொல்லுக்காக ஏங்கி நிற்கிறோம்.. அவன் அப்படி பேசுகிறான், இப்படி பேசுகிறான் என்று பெருமைப் படுகிறோம், அங்கலாய்க்கிறோம், அவனது ரிப்பீட்டட் சொற்கள் நம்மை குதூகலிக்கச் செய்கிறது, ஒரே சொல்லையே திரும்பவும் சொல்கிறான், அவனது கேள்விகளின் விடைகளெல்லாம் அந்த ஒற்றைச் சொற்கள் தான். ஆனால் ஒரு பெற்றோராக தம் குழந்தை இப்படியே பேசுவதை யாரேனும் விரும்புகிறார்களா என்றால் இல்லை.. குழந்தை மொழி இனிது என்று நினைக்கும் அத்தனை பேரும், அம்மொழி நீடிக்கவேண்டும் என்று விரும்புவதில்லை.. மொழியிலிருந்து வெளியே வரவேண்டும் என்று மறைமுகமா நினைக்கிறார்கள். அதுவே உண்மையும் ஆகிவிடுகிறது. யாருக்கும் தெரியாமல் குழந்தை மொழி, கண்ணீர் கசக்கி குழந்தையை விட்டு வெளியேறுகிறது.

தாயின் கருப்பப்பையிலிருந்து குழந்தைகள் கனவு காணத் துவங்குகிறார்கள். அவர்களின் கனவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும்? நவீன ஓவியங்களின் சிதறல்களைப் போன்று வர்ணங்கள் கலைந்த கனவுகள் குழந்தைகளுக்கு வருமா? அல்லது பொம்மைகளின் உலகத்திற்குச் சென்று அகப்பட்டுக்கொண்டதைப் போன்ற கனவுகள் வருமா? இன்னும் புரியாத புதிர்தான்..
தான் கண்டது கனவுதான் என்று அந்த குழந்தைக்கு எப்படி புரிய வைக்க முடியும்? அல்லது குழந்தைகள் ஏன் தன் கனவைப் பற்றி பேசுவதில்லை? விடை தெரியாத கேள்விகள் இவை.

தெரிந்த குழந்தை ஒன்று தனக்கு நேர்ந்த சம்பவத்தை விவரிக்கிறது. அது கனவைப் போன்று இருக்கிறது. குழந்தைகளுக்கு பொய்கள் தெரிவதில்லை, ஏனெனில் அது கற்பனை செய்வதில்லை. நேர்ந்ததை மட்டும் கூறுகிறது. நான் அதனிடம் கேட்டேன், உனக்கு கனவு வருமா என்று.. அதற்கு அக்குழந்தை 'அப்படின்னா என்ன' என்கிறது.. மேலும் சொல்கிறேன். 'நீ தூங்கிட்டதுக்கு அப்பறம் உனக்கு என்ன ஆகும் ? ' அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.. ஒருவேளை நான் கேட்டது தவறாக இருந்திருக்கலாம். ' நல்லா தூங்கிடுவேன்' என்று சொல்லிச் சிரிக்கிறது. நன்கு ஞாபக சக்தியுடைய மனிதர்களே கனவுகளை மறந்துவிடும்பொழுது, மழலை மொழி பேசும் குழந்தையிடம் இதை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? குழந்தைகளிடம் அதட்டிக் கேட்கமுடியாது, மேலும் ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்கும்பொழுது, தனக்குத் தெரிந்த பதில்களையே சொல்லி வருகின்றன குழந்தைகள். அவை, முன்பு சொன்னதற்கு ஒத்து இருக்கலாம், அல்லது சற்று மாறியிருக்கலாம்.

சில சமயங்கள் நான் ஆச்சரியப்படுவேன், இந்த குழந்தை என்னைப் பார்த்து என்ன நினைக்கும்? இவன் நல்லவன் என்றா? கெட்டவன் என்றா? அவர்களுக்கு எப்படி அந்த பாகுபாடு தெரிந்திருக்கிறது? குழந்தைகளின் சுபாவம் தாயிடமிருந்து நிர்ணயிக்கப்படுகிறது, தன்னை யார் சுமக்கவேண்டும், யார் சுமக்கக் கூடாது என்பதை அக்குழந்தை முடிவு செய்துகொள்கிறது.. இன்னும் சில குழந்தைகள், தன்னை மாறி மாறி யாரேனும் தூக்க மாட்டார்களா என்று ஏங்குகிறது.

என்னைக் காணும் சில குழந்தைகள் காரணமே இல்லாமல் சிரிக்கும்.. ஏன் சிரிக்கிறது என்று நான் யோசிப்பேன். நான் ஏதோ ஒரு வடிவத்தில் அக்குழந்தையைக் கவருவதாக உள்ளேன். இதைப் போன்றே நான் இன்னொருவரைப் பார்த்து அப்படி சிரிக்க முடியுமா? அந்த சிரிப்பில் என்ன அடங்கியிருக்கிறது, கேலி பண்ணுகிறதா, என்னை கோமாளியாக நினைக்கிறதா என்றெல்லாம் மனம் விரிந்து கொண்டு கேள்விகளை அடுக்கிச் செல்லும். அக்குழந்தை அந்த நொடியில் நினைப்பதெல்லாம், அது கவர்ந்த என் உருவத்தை மட்டுமே..

வெகு நாட்களுக்கு முன்னர், பந்து விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்,, அக்குழந்தைகளுக்கு தன்னைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப்பட்டது என்று தெரியவில்லை, அதன் குறிக்கோள் எல்லாம், அடுத்த குழந்தையிடமிருந்து எதிர்வரும் பந்தை தன் வசமாக்குவது மட்டுமேதான். பந்து அதன் ஆடையில் பட்டு அழுக்காகிறது. தன் ஆடை அழுக்காகி வருகிறதென்பதை அவர்களால் உணரமுடியவில்லை..

இதே போன்று எங்கோ ஒரு இடத்தில் நானும் விளையாடிக் கொண்டிருந்திருப்பேன்.. என் ஆடையும் அழுக்காகியிருக்கலாம், ஏன், கிழிந்துகூட போயிருக்கலாம்.. அது எனக்கோ, அல்லது நான் எதிர்கொண்டு ஆடிய இன்னொரு குழந்தைக்கோ மறந்து போயிருக்கின்றன. நாங்கள் விளையாடிய மண் இன்று எங்கோ ஆழத்தில் புதைந்திருக்கலாம்.. எந்தச் சுவடும் இன்றி அந்நிகழ்வு காணாமல் போயிருக்கிறது.. அதைப் போன்று எத்தனையோ!!

யாரென்றே தெரியாத குழந்தைகளோடும் விளையாட வேண்டும் என்று நினைப்பேன். அதன் தாய் அதற்கு வழி கொடுக்கிறாள், குழந்தை குறித்து பேசுகிறாள், அவள் யார் என்று எனக்கும் தெரியாது. அக்குழந்தை என்னிடம் விளையாடுகிறது.. சிறிது நேரத்தில் அம்மாவைத் தேடுகிறது.. என்னை விட்டு நீங்கியதும், என்னோடு விளையாடிய நிமிடங்களையும், என்னையும் அது மறந்துவிடுகிறது.. இன்னும் சிறிது காலம் கழித்து அதே குழந்தையை விளையாட்டுக்கு அழைக்க முனையும் பொழுது, அந்த தாய் அவளை மறைக்கிறாள்.. தயங்குகிறாள், ஏனெனில் குழந்தைகள் என்றும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள் என்றுதவறாகப் புரிந்து கொள்கிறேன்.

சிலருக்கு பொம்மைகள்தான் உலகம்.. அதனோடு பேசும், பழகும்.. சிரிக்கும்.. கோவித்துக் கொள்ளும்.. பொம்மைகளுக்காக அழும்... முறிந்து கிடக்கும் பொம்மையின் முண்டம், அதற்கு என்ன விதமான எண்ணங்களையும் தோன்ற வைக்கலாம்.. குழந்தைகள் முடிவு செய்து கொள்கிறார்கள், பொம்மையின் இறப்பை அசாதாரணமாக எடுத்துக் கொள்ள சிலரால் முடிவதில்லை.. அழுகிறார்கள்... மேலும் மேலும்..

என் வீட்டுக்கு எதிர்வீட்டில் உத்திரத்தில் கயிறு கட்டி, கழுத்து நெறிக்கத் தொங்கிய அப்பாவைக் கண்ட அந்த குழந்தைக்கு அது என்ன செயல் என்று தெரியவில்லை, அப்பா தொங்குகிறார் என்று சொல்லத் தெரியாமல் சிரிக்கிறது. அம்மா அழுகிறாள்... எதற்காகவோ அழுகிறாள் என்பது மட்டும் அக்குழந்தை தெரிந்து கொள்கிறது.. தானும் அழுகிறது... மிகச் சில நேரங்கள் கழித்து, அது பொம்மையைத் தேடிக் கொண்டிருக்கிறது. அழுகைகள் என்பது வலியின் பிரதிபலிப்பு, குழந்தைகளைப் பொறுத்தவரை அது தன்னைக் காட்டிக் கொள்ளும் அங்கீகாரம்.

குழந்தைகளுக்கான கேள்விகள் இன்னும் நீண்டுகொண்டேதான் இருக்கின்றன. அதற்கான விடையை இதுவரையிலும் யாரும் சொன்னதாகத் தெரியவில்லை, ஏனெனில் ஒவ்வொரு முறையும் விடை கண்டறியும் பொழுது, ஒரு குழந்தை அவ்விடையை உடைத்தெறிகிறது. குழந்தைகளைப் போல நம்மால் கேட்கவும் முடிவதில்லை, அவர்களைப் போன்று எண்ணவும் முடிவதில்லை, ஏனெனில் நாம் குழந்தை எனும் உலகத்தை கால சுழற்சியில் தொலைத்துவிட்டு வருகிறோம்..

அன்பின்
ஆதவா..

சுகந்தப்ரீதன்
15-02-2009, 11:38 AM
மன்னிக்கவும்... மறக்கவும்.. மனிதனை நேசிக்கவும் எனக்கு கற்றுக்கொடுத்தவை குழந்தைகள்தான் என்றால் அது மிகையில்லை.. ஆதவா..!! இன்றுதான் உன் எண்ணவோட்டத்தைக் கண்டேன்.. ஆகையால் தாமாதமான பின்னூட்டத்திற்க்கு என்னை மன்னிக்கவும்...!!

கோவமோ துக்கமோ சிலர் தண்ணியைக்குடி, அமைதியாய் இரு அப்படி இப்படி என்று அறிவுரைக் கூறுவார்கள்.. என்னை பொறுத்தவரை அந்தமாதிரி நேரங்களில் குழந்தைகளின் செய்ல்களை கூர்ந்து கவனித்தாலே போதும்.. எத்தகைய சுமையும் எளிதாய் மாறிவிடும் என்று நம்புபவன்..!!

எளிதில் யாராலும் விவரிக்க முடியாத விநோதம்தான் குழந்தைகளின் உலகம்.. நீ சொன்னதைப்போல் இப்படித்தான் குழந்தைகள் என்று வரையறுத்த மறுகணமே அதை அலட்சியமாக அறுத்தெறிந்து சிரிப்பவர்கள் குழந்தைகள்..!! குழந்தைகளை பற்றிய அனுபவத்தை ஒரு கட்டுரையாக வரையவேண்டும் என்பது என் நெடுநாள் ஆசை.. ஆனால் இன்னும் நிறைவேறியபாடில்லை..!! என் எண்ணத்தில் பெரும்பாலனவற்றை உன் உரைத்தலில் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன் ஆதவா..!!

என்னை பொருத்தவரை உலகத்தில் "இன்றைக்கும் சரி என்றைக்கும் சரி இறைவன் எஞ்சி இருப்பது குழந்தைகளிடம் மட்டும்தான்.." ஆகையால் முற்றிலுமாக இல்லாவிட்டாலும் குறைந்த பட்சமாகவாவது குழந்தையாக இருக்க ஆசைப்படுகிறேன் நான்..!!

இதுபோன்ற உன் எண்ணவோட்டங்கள் தொடர்ந்து இங்கே இலக்கியமாய் தொடரவேண்டும் என்று அன்புடன் உன்னை வாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன்..!!

பாரதி
15-02-2009, 12:14 PM
நல்ல கட்டுரை தந்ததற்கு பாராட்டு ஆதவா.

குழந்தைகளின் உலகமே தனியானது ; எதையும் சாராது நினைப்பதை வலியுறுத்த நினைப்பது ; கேட்டது கிடைத்ததும் உலகமே தன் காலடியில் என மகிழ்ந்திருப்பது ; மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது ; விரும்பியதை அடைய முயற்சிப்பது என ஒவ்வொரு காலகட்டத்திலும், வயதாக வயதாக குழந்தைகளின் உலகம் மாற்றமடைந்து கொண்டேதான் வருகிறது.

ஒவ்வொருவரும் குழந்தைத்தனத்தை தொலைத்தேதான் வளர்கிறார்கள். ஆனால் சிலர் ஏதாவது ஒரு காலகட்டத்தில் மீண்டும் அதை மீட்டெடுக்க முயற்சிக்கிறார்கள். வெகு சிலர் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றி பெறுகிறார்கள். சிலர் அந்த முயற்சியிலேயே காலத்தைக்கடந்து விடுகிறார்கள். பலர் அதைப்பற்றி நினைப்பதே இல்லை! நாம் குழந்தைகளாக இருந்த போது நம்முடைய எல்லா விருப்பங்களும் என்னவாக இருந்தது என்பதை மீண்டும் கணிப்பது சிரமமான ஒன்றே.

இப்போதைக்கு நாம் செய்யக்கூடியது - குழந்தைகளை குழந்தைகளாக வாழவிடுவது மட்டுமே.

அறிஞர்
24-02-2009, 06:57 PM
நல்ல கட்டுரை ஆதவா...
குழந்தைகள் எண்ணங்கள்/நடவடிக்கைகள் வித்தியாசமான கோணத்தில்...

இளசு
25-02-2009, 06:33 AM
மனம் நிறைந்த பாராட்டுகள் ஆதவன்..

எண்ணச் சிதறல்களை அழகாய்க் கோர்க்கும் உன் இலக்கியத் திறத்துக்கு
மற்றொரு சின்னம் இக்கட்டுரை..

நண்பர்களுடன் இணைந்து நானும் கோருகிறேன் -
இதுபோன்ற உன் எண்ண ஓட்டங்கள் மேலும் பல நல்ல கட்டுரைகளாய்
இங்கே வலம் வரட்டும்!

அமரன்
16-06-2009, 09:25 AM
இந்த இடத்துக்கு வந்து போயிருக்கிறேன். வர வேண்டும் என்று மனதில் பதிய வைத்தும் இருக்கிறேன். என்னவோ தெரியவில்லை. வர முடியவில்லை. பதிவு தூசி மூடி இருந்திருக்கிறது போலும். பசங்க படத்தைப் பார்த்த மறுநொடி குழந்தைகள் உலகை மூடி இருந்த தூசி பறந்து விட்டது. அது வேறிடம் சென்று படுந்திருக்கும். இன்னொன்றை மூடி மறைத்திருக்கும். இதுவும் குழந்தைகள் உலகுதானே!!

குழந்தைகள் எதையும் தொலைப்பதில்லை. இலக்கணம் மீறிய கவிதையாய் ம்ம்ம்ம்மா என்று கொஞ்சத் தொடங்கியதையும், பொம்மைகளுக்கு உயிர் கொடுத்து கவலைப்பட்டதையும், நடமாடும் மனிதர்களின் உயிர்பறித்து மகிழ்ந்ததையும், தன்னுடன் பழகிய மனிதர்களையும், பழக்கவழங்கங்களையும், இன்னபிறவையும் குழந்தைகள் தொலைப்பதில்லை. அவற்றுள் அவர்கள் தொலைந்து போவதுமில்லை. மாறாக போகம் தப்பிய மழைபோல் குழந்தைப் பருவம் கடந்த பின்பு குழந்தை உலகம் மாய விரலில் சுழல்கையில் அதில் நுழைந்து தொலைந்து போகிறோம். தொலைந்ததை எடுத்து வருவதும் நிகழ்வதுண்டு.

யோசித்துப் பார்க்கிறேன்.. குழந்தைகள் உலகம் எங்கேயும் செல்லவில்லை. எனக்குள் உள்ளது. அதை தின்று செரித்து நான் வளர்ந்திருக்கிறேன். என் நரம்புகள், குருதிமயிர்க்குழாய்கள், நிணநீர்க்கலங்கள், திசுக்கள், ஒவ்வொன்றிலும் வியாபித்த என் குழந்தை உலகம் என்னுடன் இரண்டறக் கலந்து என்னை இயக்குவதில் பங்காற்றுகிறது. அகச்சூழலில் அதுக்குப் பசி எடுக்கும் போது புறச்சூழலில் இரை தேடுகிறது. அதன் விளைவுகள் அழகானவையாகவும் ஆபத்தானவையாகவும் அமைந்துவிடுகின்றன.

சுழலுல் உலகை சுற்றி வருதல் போன்று குழந்தை உலகை வலம் வருதலும் அழகான நாட்களைப் பிறப்பிக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. அந்த அனுபவத்தை தந்த கட்டுரைக்காக ஆதவனுக்கு என் பொங்கல்.

பரஞ்சோதி
16-06-2009, 11:27 AM
ஆதவன் தம்பியிடமிருந்து வந்த அருமையான கட்டுரை நல்லதொரு பாடமாக திகழ்கிறது.

நன்றி தம்பி.

kavitha
17-06-2009, 05:48 AM
மீண்டுமொரு பெருமித புன்னகையை இடுவதை தவிர வேறெதுவும் எழுத தோன்றவில்லை ஆதவா. மென்மேலும் வளர்க!

வெற்றி வாசன்
10-08-2009, 07:16 PM
ஒரு வயது மகனின் தந்தை என்ற முறையில் சொல்கிறேன், குழ்ந்தை உலகம் ஒரு புரியாத கண்டம், மகிச்சிக்கு வானம்.எல்லை ஆனால் அதை நாம் குழந்தையாக இருக்கும் பொது உணர்வது இல்லை.
இது தான் வாழ்கை.

கா.ரமேஷ்
11-08-2009, 05:59 AM
விவரிக்க முடியாத பல விசயங்களை விரிவாக விளக்கியுள்ளீர்கள்.. குழந்தைகள் எப்பொழுதுமே விளங்க முடியாத அற்புத* அதிசயங்கள் வளர வளர அவர்களை ஒரு வலையத்திற்க்குள் சிக்க வைத்து விடுகிறது உலகம் என்பது நிதர்சனமான உண்மை..

அருமையான படைப்பு அதனை எங்களுக்கு அறிய கொடுத்தற்க்கு மிகுந்த நன்றிகள்...