PDA

View Full Version : அறைச் சாம்ராஜ்ஜியம்



அமரன்
09-02-2009, 09:22 AM
என் பிரியமானவனுக்கு...!

நான் உன்னை விட்டுப் போகிறேன். உலகை விட்டுப் போகலாம் என்றுதான் நினைத்தேன். என் இதயச் சிறையின் நினைவுக் கம்பிகளுக்குள் இருக்கும் ஆயுட்கைதியான அந்த சம்பவம் என்னை தடுத்து விட்டது.

கூடாரத்தில் கிருஷ்ணவேணி மௌனமாக படுத்திருக்கிறாள். அவளது உடலிலும் சரி முகத்திலும் சரி எந்தவிதமான சலனமும் இல்லை. அவளுக்குப் பக்கத்தில் நீ மௌனியாக. இப்படியான மௌனத் தருணங்களில் உங்களை அதிகமாகச் சுற்றிக் கொண்டிருக்கும் காதலும் மிக அடர்வாக.. வழக்கத்துக்கு மாறாக மனித இரைச்சல்களும்..

எனக்கு முதுகாட்டி நின்றிருந்த உன் தோள்களில் கையை வைக்கிறேன். நீ திரும்புகிறாய். பார்வைகள் பரிபாசைகள் ஆகின்றன. இமைகள் நெறிப்படுதுக்கின்றன. உன் கண்களில் காதல் முட்டுகிறது. என் இதழ்கள் விரிய முனைய உன் உதடுகள் வெடிக்கின்றன..

"இவள் கோழைடா.."

கோபம் தெறிக்க நீ சொன்னாலும் உன் கண்களில் முட்டிய காதல் கன்னத்தில் கோடு போட்டு அவள் மேல் நீ கொண்ட உரிமையையும் அவளுக்கு உன்னை புரியவைக்காத இயலாமையையும் காட்டுகிறது. நான் பயந்தேன். நீ அடிக்கடி சொல்வாய். "இயலாமை கோபப்படுத்தும். கோபம் கோழையாக்கும். கோழைத்தனம் விபரீத முடிவுகளை தரும்." நல்லவேளை நீ விபரீத முடிவுகளுக்குப் போகவில்லை.

என் உலகப் பிரிவைத் தள்ளிப்போட்ட அந்தக் கைதி உனக்குள்ளும் நிச்சயமிருப்பான். அந்தக் கைதி உன்னுடன் நானிருப்பதை எப்போதும் உனக்கு நினைவூட்டுவான்.

கடிதத்தைப் படித்துக்கொண்டிருந்த அனந்தராமனின் இமைகள் மூடிக்கொண்டன. வேறொரு உலகுக்கு அனந்தராமனை அழைத்துச் சென்றன. அதைப் பார்த்த பாலுக்குப் பொறுக்கவில்லை. பொங்கி.. வடிந்து.. நெருப்புக்குள் விழுந்து.. சத்தமிட்டு.. கருகி.. அனந்தராமனை இவ்வுலகுக்கு இழுத்து வந்தது. பக்கத்திலிருந்த மொத்த துணியால் பால் கொதித்த பாத்திரத்தை இறக்கிவிட்டு அடுப்பை அணைத்தார். கிளாசுக்குள் பாலை ஊற்றினார். பால் காய்ச்சிய பாத்திரத்துக்குள் தண்ணீரை விட்டார். கண்களை கடிதத்தில் வடியவிட்டார்.


இப்ப எதுக்காக உன்னை விட்டுப் போக வேண்டும் என்று கேட்கிறாயா. நீ சமீப நாட்களாக என் பக்கத்தில் நிழலாய் வரும் போதே பின்னாலும் உன் ஒரு நிழலை தொடரச் செய்கிறாய். உன்னை குற்றஞ் சொல்லவில்லை. நீ என்ன செய்வாய். உன் வேலை அப்படி. என்னை உனக்கு அம்மணமாய்த் தெரிந்தும் இப்படி ஒரு நிலையா என்று நீ வருத்தப்பட்டிருப்பாய் என்று எனக்குத் தெரியும். சொல்லத்தேவை இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

பாவப்பட்ட இனத்தில் பிறந்தது என் குற்றமில்லை. எனக்குக் கவிமனம் வாய்த்ததும் என் தவறில்லை. கவிமனம் அடிக்கடி கொதிப்பதுக்கும் நான் பொறுப்பில்லை. ஒரு மனிதன் கொடுமைப்படும் போது கொதிக்கும் மனம் ஒரு இனம் கொடுமைப்படும் போது சும்மா இருக்குமா. எழுதினேன்.. ஆவேசமாக எழுதினேன். கோபாவேசமாக எழுதினேன். எத்தனையோ பேரின் உடுப்புகளை நடுரோட்டில் கவிதைகளால் உருவி எடுத்தேன். என்றும் எனக்கு இனபேதம் இருந்ததில்லை. நான் பிறந்த இனம் கொடுமைப்படுவதுக்கு நான் காரணமுமில்லை. என்னை கவியாகப் பார்க்காமல் இனமாகப் பார்த்தத்து யார் தப்பு. என்னை வேவு பார்க்க உன்னையே நியமித்தது எவர் தப்பு.


தப்புகள் யாருடையாதவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் நண்பனிடம் நண்பனாக நடிக்கும் அவலநிலையை உனக்குத் தர நான் விரும்பவில்லை. உனக்கான சங்கடங்களின் ஊற்றுக் கண்ணாக இருக்க எனக்கு ஒப்பவில்லை. அதுதான் போகிறேன். இப்போது கூட என்னைத் தேடும் பணி உன்னிடம் தரப்படலாம். நீயும் என்னைத் தேடலாம். நான் உன்னை காணக்கூடாது என்று ஓடலாம். இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் என்றுமே உன்னை நான் சதிக்கக் கூடாது. இதைத்தான் நான் ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.


கடைசியாக ஒன்று எவரிடமும் "நான் உண்மையாக இருந்ததில்லை" என்று அப்பப்போ என்னிடம் கொட்டித்தீர்ப்பாய். நீ தாய்தேசத்துக்கு உண்மையாக இருந்திருக்கிறாய். அதன் மூலம் ஒவ்வொருவனுக்கும் உண்மையாக இருந்திருக்கிறாய். என்றும் இதை உன் மனதில் பிரேம் போட்டு மாட்டிக்கொண்டு சந்தோசமாக இரு.

விடைபெறுகிறேன்

என்றும் உன் அன்பு நண்பன்
சோமு என்கிற சோமசுந்தரன்

படித்து முடித்து மூடிய அனந்தராமன் கண்களுக்குள் காட்சிகள் மின்னி மறைகின்றன. சோமு என்னன்மோ பேசுகிறான். என்னென்னமோ சேட்டை செய்கிறான் அவன் செய்யும், சொல்லும் எல்லாமே அவரை குசிப்படுத்துகிறது. குசிப்படுத்துவதுக்காகச் செய்கிறானோ.. அவன் செய்வதால் குசிப்படுகிறாரோ என்று அனந்தராமன் யோசிக்கும் போதே எங்கோ செல்கிறான். அனந்தராமன் அவனைத் தேடுகிறார். எங்கும் அவன் அகப்படவில்லை. ஒருநாள் குண்டு ஒன்று வெடிக்கிறது. சோமு அதில் சிக்கி உடல் சிதறி மாள்கிறான். ஏற்கனவே இருந்த சந்தேகம் சோமுதான் வெடித்தான் என்று உறுதிப்படுத்துகிறது. அவனுக்கு தீவிரவாதி என்று பட்டம் சூட்டுகிறது. அவனுக்கு உடந்தையாக இருக்கலாமோ என்று அனந்தராமன் மீது சந்தேகக்கை நீட்டுகிறது. அனந்தராமன் இல்லை என்பதை நிரூபித்து விட்டு இந்த அறைக்குள் முடங்குகிறார். அனந்தராமனின் கண்திரை இருள்கிறது. புற வெளிச்சம் பரவுகிறது.

அனந்தராமன் பால்கிளாசை கையில் எடுத்தார். பால் ஆடை பூண்டிருந்தது. அனந்தராமன் பாலாடை நீக்கிப் பழக்கம் இல்லாதவர் அப்படியே மடக் மடக் என்று பாலை தொண்டையில் சரித்தார் பாயை விட்டு எழுந்து கடிகாரத்துக்குப் பக்கத்தில் மகாராணி போல கண்ணாடிப்பிரேமை வைத்தார். கடிகாரம் டிக் டிக் என்று சப்தித்து அந்த அறையை அதிகாரம் செய்துகொண்டிருந்தது. அனந்தராமன் பாயில் சாய்ந்தார்.

ரங்கராஜன்
09-02-2009, 09:34 AM
அமரன் பொறுப்பாளர் பதவியில் இருந்து இறங்கியதும் நேரம் அதிகமாக கிடைக்கிறது போல கதையா எழுதி தள்ளுகிறீர்கள், கதையை படித்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன்.

ஆதவா
09-02-2009, 11:00 AM
அமரன் பொறுப்பாளர் பதவியில் இருந்து இறங்கியதும் நேரம் அதிகமாக கிடைக்கிறது போல கதையா எழுதி தள்ளுகிறீர்கள், கதையை படித்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன்.

அப்படியென்றால் நாங்களெல்லாம் படிக்காமலா விமர்சனம் எழுதுகிறோம்?? :sauer028:

ரங்கராஜன்
09-02-2009, 11:04 AM
அப்படியென்றால் நாங்களெல்லாம் படிக்காமலா விமர்சனம் எழுதுகிறோம்?? :sauer028:

டேய் எங்கப்போனாலும் என் பின்னாலே வந்து, ஏண்டா என்னுடைய உயிரை வாங்குற, எதாவது சொல்லிவிட்டு, யாரிடமாவது மாட்டிவிட்டு தர்ம அடி வாங்க வைக்கிறீயே நியாயமா?, மன்றத்தை விட்டு என்னை துரத்த என்ன என்ன வழி இருக்கோ அதை அனைத்தையும் கையாள்கிறாயா????, டேய் கண்ணாடி சென்னை வருவ இல்ல அப்ப வச்சிக்கறேன் உனக்கு.:sauer028::sauer028::sauer028:

தாமரை
09-02-2009, 11:50 AM
ஆளு இல்லன்னா ரொம்பவே அலட்சியமாயிட்டது அமரன்..

புரியலையா... நீங்க எழுதினதை நீங்களே இன்னொருமுறை படிங்க,,

யார் கண்ணோட்டத்தோடன்னு புரியுதில்ல... சாம்பவி கண்ணோட்டத்தில

ஆதவா
09-02-2009, 11:56 AM
அமரன்.... ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் கதை படிக்கிறேன்.... கடித வடிவில் கதை.. ரொம்ப அருமையாக இருந்தது.

யார் செய்வது நியாயம் என்று தராசுத்தட்டில் வைத்து பார்க்கவேண்டிய நிகழ்விது. அனந்தராமனா, சோமுவா.... என்று மனம் சிந்திக்க வைக்கிறது..

கடைசியில் கதையை அவசரமாக முடித்துவிட்டதைப் போன்று ஒரு உணர்வு...

தொடர்ந்து எழுதிகிட்டே வாங்க....

செல்வா
09-02-2009, 12:02 PM
படித்து முடித்த அனந்தராமனின் கண்களுக்குள் சோமு வந்து நின்றான். என்னன்மோ பேசுகிறான். என்னென்னமோ சேட்டை செய்கிறான் அவன் செய்யும், சொல்லும் எல்லாமே அவரை குசிப்படுத்துகிறது. குசிப்படுத்துவதுக்காகச் செய்கிறானோ.. அவன் செய்வதால் குசிப்படுகிறேனோ என்று அனந்தராமன் யோசிக்கும் போதே குண்டு ஒன்று வெடிக்கிறது. சோமு அதில் சிக்கி உடல் சிதறி மாள்கிறான். ஏற்கனவே இருந்த சந்தேகம் சோமுதான் வெடித்தான் என்று உறுதிப்படுத்துகிறது. அவனுக்கு தீவிரவாதி என்று பட்டம் சூட்டுகிறது. அவனுக்கு உடந்தையாக இருக்கலாமோ என்று அனந்தராமன் மீது சந்தேகக்கை நீட்டுகிறது. அனந்தராமன் இல்லை என்பதை நிரூபித்து விட்டு இந்த அறைக்குள் முடங்குகிறார்.

ரொம்ப குழப்புது இந்த பகுதி.... வாசிச்சிட்டு யோசிக்கிறார் யோசிக்கும் போது.... வெடிக்குது... அதோடே.. எல்லாம் முடிஞ்சிடுதா...?





தொடர்ந்து எழுதிகிட்டே வாங்க....
தொடர்கதை தானா?
தொடரும் போடலியேனு நான் மண்டையப் பிச்சுகிட்டு இருக்கேன்.. :traurig001::traurig001:

நிரன்
09-02-2009, 12:40 PM
கடிதவடிவில் வடித்த கதை நல்லாத்தான் போகுது.

செல்வா அண்ணாவோட நிலைதான் எனக்கும்:confused:

கதையைப் படித்துப் படித்து தலையில் உள்ள முடியைப் பிச்சுக்கவேண்டியதா இருக்கு:traurig001:

இளசு
26-02-2009, 08:40 PM
அன்பு அமரா

அடர்த்தி மிக அதிகம் உன் எழுத்துக்கு -
அனந்தராமன் சுண்டக் காய்ச்சிய பால் போலவே!

மறைக்கும் ஆடை நீக்கும் பழக்கம் இல்லாதவர் அவர்..
மறைந்து நிற்கும் பல நிகழ்வுகளை, எண்ணங்களை விளக்காத நீ!!!


அன்று ஒரு தற்கொலை...
அனந்தனின் காதலி..
அதைக் கோழைத்தனம் என்ற அனந்தன்...

அதை மனச்சிறையில் வைத்த சோமு..


---------------------------------

இன்று
சோமுவைத் துப்பறிய பணிக்கப்பட்ட அனந்து..

சோமுவின் அகால மரணம்..

----------------------------

அனந்தனின் அறை.. தனிமை..
சோமுவின் கடிதம்...

அனந்தனின் அந்தம்..

-------------------------------

மனமும் அறைபோலத்தான்..
அளவில் சிறியதாய்...
அளந்து வைத்த உள்ளீடுகளுடன் ஒரு பரிமாணம்..

இரு துருவங்களும் உள்ளடங்கிய
நீள அகல ஆழங்களில் விரிந்து பரவிய
சாம்ராஜ்யமாய் இன்னொரு படிமம்..
----------------------------------------

அனந்தனின் சாம்ராஜ்ய அறை அத்தகையது..

-------------------------------------
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
எத்தனை உலகங்கள் இதயத்திலே

அமரன்
02-03-2009, 03:09 PM
தக்ஸ்..

எழுதுவதுக்கு மன்றப்பொறுப்பாளர் தடையில்லை. சொந்தப்பொறுப்புகள்தான் எழுதுவதில் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்பப்போ பதிவுசெய்து வைத்தவற்றை தருணம் அமையும் போது எழுத்துகளில் சொருகுகிறேன். அவ்வளவுதான். கதையை இன்னும் படிக்கலையோ.

தாமரை அண்ணா..
ஆமங்கண்ணே.. ஆளு இல்லைன்னதும் ஒருவித அசட்டைத்தனம் வந்துட்டுது. போகவே மாட்டேங்குது.

ஆதவா..
அவசராவசராமக முடித்தது போல் உள்ளது நிஜம்தான். ஆனால் முடிக்க வேண்டும் என்று அவசரம் இருக்கவில்லை. திரைப்படங்களில் சில முன்னால் மின்னல்கள் மின்னி மறையுமே.. அப்படி இருக்கட்டும் என்று நினைத்ததை முடித்தேன்.

செல்வா, நிரன்..
எவ்வளவு முயன்றாலும் புரிதல் கடினம் புகுந்து விடுகிறது. இளசு அண்ணா அதனை இலகுவாக்கி விட்டார்.

அண்ணா..
பொதுவாக என் கதைகளின் பாத்திரங்களில் நான் சந்தித்த மனிதர்களின் குணாதியங்களை அடைப்பது வழக்கம். இந்தக் கதையையும் சேர்ந்து இரு கதைகளில் என் இயல்புகளை ஒத்த கதா மாந்தர்களை உருவாக்கினேன். ஒரு சில விடயங்கள் தொடர்பாக நான் கேட்ட கேள்விகளுக்கு நான் சொன்ன பதில்களின் தொகுப்பின் அடிபப்டையில் எழுதப்பட்டது இந்தக்கதை. ஆதலால் இரு ஆண்களும் என் சாயலில்.

என்றும் என்னை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி.

ரங்கராஜன்
02-03-2009, 03:37 PM
அமரன் என்னை தப்பாக நினைக்கூடாது, நான் இப்பொழுது எல்லாம் என்னுடைய கருத்தை எழுதுவது, சில நேரங்களில் பலரின் மனதை புண்படுத்துவதால். விமர்சனங்கள் எழுதுவதற்கு தயக்கமாக இருக்கிறது. நீங்கள் கேட்டதால் எழுதுகிறேன்.

எனக்கு இந்த கதை புரியவில்லை அமரன், அதற்கு முக்கிய காரணம் கதை திரைக்கதை போல இருந்தாலும் சொல்ல வந்த கதையை சரியாக உணர்த்தவில்லை என்பது போல தோன்றுகிறது. உங்களின் வார்த்தை உபயோகங்கள் என் மனதில் இறங்கவில்லை, குத்தவில்லை. சாவை பற்றி சொல்லும் பொழுது அந்த சாவை நாமே உணர்வது போல இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான்.

அமரன் என்னை தப்பாக நினைக்காதீர்கள், எனக்கு தோன்றியதை சொன்னேன், உங்களிடம் நான் எதிர்பார்த்ததை சொன்னேன். மன்னிக்கவும்.

அமரன்
02-03-2009, 03:44 PM
தக்ஸ்..
நேர்படப் பேசுவோரை எனக்கு அதிகம் பிடிக்கும்:icon_b:.உங்கள் தயக்கமும் மன்னிப்புக்கோரலும் அநாவசியமானது.:icon_p:

ஒரு படைப்பால் நீங்கள் சொன்ன அத்தனையும் நிகழவேண்டும் என்பதில் மாற்றுகருத்தில்லை. அப்படி எழுத என்னால் இயலாது என்ற உண்மை ஒரு புறம் இருந்தாலும் கதைக்கான இலக்கணத்துடன் இந்தக் கதையை எழுத முயலவில்லை என்பதே நிஜம்.