PDA

View Full Version : முதல்களின் முடிவுகளில்.



அமரன்
05-02-2009, 02:06 PM
வசந்தனுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. பத்து வருஷத்துக்குப் பிறகு சொந்த நாட்டுக்கு வந்திருக்கிறான். வந்து ஒரு மணி நேரம்தான் ஆகிறது. தாய் ஆசை ஆசையாய் ஆக்கி வைத்த வெங்காயக் குழம்பும் வெள்ளைமாப் புட்டும் சேர்ந்து மூக்கைத் துளைத்தாலும் அதையும் மீறி அவனுடைய கவனம் முழுதும் படலையில் இருந்தது. "தம்பி சாப்பிடனனை" என்ற தாயின் பாசக்கயிற்றால் இழுக்கபட்டவன் வெறுந்தரையில் சம்மணம் கொட்டி இருந்தான். பத்து வருஷப் பழக்கத்தில் தனிச்சையாக கோப்பையை எடுத்து புட்டைப் போடப் போன கையை தன் கையால் தடுத்தாள் தாய். "என்னடா இது புதுப் பழக்கம். எப்பவும் நாந்தானே உனக்கு சாப்பாடு போட்டுத்தருவன்" கோப்பையில் புட்டைப் போட்டு அகப்பையில் வெங்காயக் குழம்பை அள்ளி கோப்பையின் வட்டத்துக்கு வழியில் அகப்பையால் வட்டமிட்டு குழம்பை புட்டின் மேல் சிந்தினாள். "காணுமனை" என்று சொன்ன வசந்தன் புட்டைக் குழம்புடன் குழைத்து கவளமாகத் திரட்டி ஒருவாய் வைத்திருப்பான். படலையில் ஹோர்ன் சத்தம் கேட்டது.

அவசராவசரமாய் எழும்பி கைலைக் கழுவி விட்டு தாயிம் சேலைத் தலைப்பில் கையை துடைத்து விட்டு வேகமாக படலைக்குப்போன வசந்தனை வாசலில் நின்றபடி பாத்துக்கொண்டிருந்தாள் தாய். "இவன் இன்னும் மாறவே இல்லை" என்ற அவள் முணுமுணுப்பில் பெருமிதமும் பழைய நினைவுகளும் தெறித்தது. முந்தின நாள்களிலும் இப்பிடித்தான். இவன் சாப்பிட ஷேக்ஸ்பியர் படலையில் பெல்லடிக்க.. வசந்தன் எழும்பிப் போய் விடுவான். இப்போ சைக்கிளுக்குப் பதிலாக பைக்.. "என்னடா முந்தி மாதிரி சாப்பிடமால் வந்திட்டியா. அம்மா வாசலில் நிண்டு பாக்கிறா" என்று சிரித்தபடி கேட்ட ஷேக்ஸ்பியருக்கு சிரிப்பாலே பதில் சொலிவிட்டு பைக்கின் பின்னால் ஏறினான்.

இருவருக்கும் இடையில் எந்தவிதமான சம்பிராதாய விசாரிப்புகளும் இருக்கவில்லை. முகவாசல் வழியாக ஒருவன் மனதை ஒருவர் படித்து விடக் கூடியளவு அவர்களது நட்பு இருந்ததால் அந்தக்காலத்தில கூட இருவருக்கிடையேயும் சம்பிரதாய விசாரிப்புகள் இருப்பதில்லை.

"எங்கைடா போவம்.. ஸ்ரீ வேலைக்குப் போயிருப்பன். கட்டையும் வேலைக்குப் போயிருப்பான். சாந்தன் தோட்டத்தில நிப்பான். அவனிட்டப் போவமா"

""ம்ம்.. போகலாம்.. அதுக்கு முதல் மேகலாட்டப் போவம்டா"

வசந்தன் சொன்னதைக் கேட்டதும் வல்லிய ஆனந்தமும் அதிர்ச்சியும் கலந்து ஷேக்ஸ்பியரிடமிருந்து பதில் வெளிப்பட்டது.

"அவளை இன்னும் நீ மறக்கேலையோடா"

வசந்தன்னின் மௌனம் சில நிமிடங்கள் முகவுரை கொடுத்து விட்டு பழய கதைகளுக்கு வழிவிட்டது. பைக் மேகலாவைத் தேடிப்போனது.
வசந்தனுடன் அரிவரியிலிருந்து ஒன்றாகப் படித்தவள் ஊர்மிலா. அவள்தான் வசந்தனின் முதலாவது ஃபிரன்ட். பால்வினைகள் அவர்களிடம் இருந்ததே இல்லை. கைகளை கோர்த்தபடி பள்ளிக்குப் போவது; அங்கே சேர்ந்து இருந்த படிப்பது; ஊர் திருவிழாவில் ஒன்றாக சுத்துவது; கூட்டணி வைத்து விளையாடுவது; இப்படி பருவத்தின் பருக்களாக இருவர் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்வரை இது தொடர்ந்தது..

ஊர்மிலா வயசுக்கு வந்தாள். கள்ளமில்லா உள்ளத்தில் கருவளையம் வரையப்பட்டது. அந்தக் கருவளையப் பாதுகாப்புக் கோட்டினால் ஊர்மிலா மனதளவிலும் மாற்றப்பட்டாள். இருவருக்கும் இடையான நட்பு ஆண்-பெண் நட்பு என்ற வட்டமாகச் சுருங்கியது. அதனால் வசந்தன் அதிகம் பாதிப்படைந்தான். யாரையும் அவன் குற்றம் நினைக்கவில்லை. அசரீரி சாபம் என முடிவு செய்தான். ஆனாலும் புழுங்கினான். அந்த நேரத்தில் வந்த தென்றல்தான் மேகலா.

மேகலா.. மேகத்தை மாதிரி அழகானவள். மேகத்தை மாதிரி தூய்மையானவள். மேகத்தை மாதிரி வெளிப்படையானவள். அடிக்கடி "நிறம்" மாறுபவள். அவளுக்கு யார்தான் மேகலாவென்று பொருத்தமாகப் பெயர் வைத்தார்கள். ஊரில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. வசந்தன் வயசுக்கு வரும் வரைக்கும் அந்த ஊரைப் போல அவனுக்கும் மேகலா விசரி. தாய் தந்தை இல்லாத அநாதை. வெளியூர் சந்தைக்குப்போன தனிக்கட்டைக் கிழவி ஒருத்தி சந்தையில் அநாதரவாகக் கிடந்தவளை கூட்டி வந்தாள்.

பழைய ஊர்மிலாவை மேகலாவின் கண்டான் வசந்தன். வெள்ளந்தியான அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுடைய ஆடை விலகி இருப்பது அவளுக்கும் தெரியவில்லை. அவனுகும் தெரியவில்லை என்கிற அளவுக்கு இருவர் உறவும் இருந்தது. ஆனால் ஊர்க் கண்களுக்கு அந்த விலகிய ஆடை அப்பட்டமாகத் தெரிந்தது என்பதும் வேறு எதுவும் கண்களுக்குப் புலப்படமாலல் போக கட்டுக்கதைகள் தறிகெட்டுப் பறந்தன என்பதும் உண்மை. எத்தனையோ இடர்கள் வந்த போதும் மேகலா உடனான உறவை வசந்தன் அறுத்தான் இல்லை. அப்படிப் பழகிய மேகலாவை, பத்து வருஷம் கழிச்சு இப்பத்தான் வசந்தன் பார்க்கப் போறான்.

பைக் ஒரு ஒழுங்கையில் சென்று மேகலா வீட்டின் முன்னால் நின்றது. வசந்தனும் ஷேக்ஸ்பியரும் படலைத் திறந்தார்கள். முத்தத்தில் இரண்டு பொடியனும் ஒரு பெட்டையும் விளையாடிக்கொண்டிருந்தனர். இரண்டு பேருக்கும் பத்து வயசுக்குள்ளதான் இருக்கும். யார் அவர்கள் என்பது போல ஷேக்ஸ்பியரின் முகத்தை ஏறிட்டான் வசந்தன். ஷேக்ஸ்பியர் ஏதோ சொல்ல வாயெடுக்க "அம்மா ஆரோ வந்திருக்கனம்" என்ற பிள்ளைகளின் கத்தலைக் கேட்டு வெளியே வந்தாள் வினிதா.

வசந்தனும் வினிதாவும் காதல் வெளியில் பட்டம் விட்டவர்கள். ஆம்.. அவர்கள் காதல் காதல்வெளியில் விட்ட பட்டம் போன்றதுதான். வாலை நூலுக்குத் தெரியவில்லை. நூலை வால்லுத் தெரியவில்லை. தெரிந்து கொள்ள முன்னரே காலக் காற்று செய்த சதியில் பட்டம் எங்கோ பறந்து விட்டது. அன்று தெரியாது இப்போ தெரிய வந்தது. இருவர் பார்வைகளும் தெரிய வைத்தன.

"வா வசந்தா. எப்ப வந்தனி"

"காலமைதான் வந்தனான். எப்படி இருக்கிறா"

"ம்.. நல்லா இருக்கன்" - சொன்னவாறு பழைய மரக்கதிரையில் இருந்த உடுப்புகளை எடுத்து விட்டு "இருங்கோ வாறன்" என்று சொல்லிவிட்டு அறைக்குள் போனாள்.

மேகலா வீட்டில் இவள் எப்படி? இவளின்ர அம்மா அப்பா எல்லாம் எங்க? இவளுக்கு ஒரு தங்கச்சி இருந்தாளே? பள்ளிக்கூடத்துப் பக்கத்தில இருந்த பனாட்டுக் கடையில அவளுக்கு பனாட்டு வாங்கிக் குடுத்து வீட்டில நடந்ததுகளை அறிஞ்சு வினிதாவை பகிடி பண்ணியது இப்பவும் ஞாபக்கதில இருக்கே. இவள் இஞ்ச இருக்கிறாள் என்டால் மேகலா எங்க? சேக்ஸ்பியரும் ஒண்டும் பேசாமல் இருக்கிறானே? மனஓட்டங்கள் அலைகிளப்ப சலனமில்லாமல் இருந்தவனை தட்டி அழைத்தது வினிதாவின் குரல்.

"என்ன இரண்டு பேரும் யோசிக்கிறியள்" - கேட்டபடி வந்த வினிதா கையிலிருந்த டம்ளரை இரண்டு பேரிடமும் நீட்டினாள்.

"ஒண்டுமில்லை"-ஷேக்ஸ்பியர் சிரித்து சமாளித்தபடி வாங்கிக்கொண்டான். வசந்தன் பேசாமல் வாங்கிக் கொண்டான். வினிதாவுக்குப் பின்னால் பார்வையை பதித்தான். வினிதாவின் முகத்தைப் பார்த்தான்.

"என்ன வசந்தா.. நீ தேத்தண்ணிதானே குடிப்பா.. டீ குடிக்கிறேல்லத்தானே"

"ஓம்.." சற்று நிறுத்தியவன் "அது ஆர்" என்றான். அவன் கண்ணோடிய பாதையில் தன் கண்ணோட்டியவள் "மேகலா" என்றாள்.
வசந்தன் எழுந்தான். குசினிக்குள் இருந்த மேகலாவை நெருங்கினான். வயது அதிகரித்த அடையாளங்கள் தவிர வேறெந்த மாற்றமும் இல்லை. இவனை பேந்தப் பேந்தப் பார்த்தாள். இவன் கையை நீட்டி தொட முயன்றபோது பயத்தால் குறுகினாள். முதன் முதலாக மேகலாவிடம் இருந்த அப்படி ஒரு எதிர்வினை தாக்கியதில் வசந்தன் தள்ளாடினான். குரலைக் காடினாலாவது முந்தி மாதிரி சகஜமாக இருப்பாளோ என்று நினைச்சு "மேகலா.. நான் வசந்தன்" என்றான். அவளிடம் எந்தவிதமான மாறுதலும் இல்லை.

வெளியே விளையாடுவதை விட்டுட்டு உள்ள வந்த அந்தப் பெட்டைப்பிள்ளை "அன்ரி... இவன் ஆர்.. இவர் ஏன் அம்மாவை பாக்கிறார்" என்றது. கேட்ட விதத்தில் ஏக்கச்சாயல் அதிகம் இருந்தது. வசந்தனோ சுனாமியைப் கண்ணுற்றவனாக விதிர்த்தான்.

"இது.. இது.. மேகலாவின்ர பிள்ளையா" வசந்தனின் நிலையைக் காட்டும் ஆட்காட்டியானது அவனுடையது குரல். புயல் நேரத்துப் பூவை போல் தலை குனிந்தாள் வினிதா. எதைப் பற்றி இவன் கதைக்கக் கூடாது என்று நேர்ந்தாலோ அதைப்பற்றிக் கதைத்தாள் வேறெப்படி இருப்பாள். மிகவும் தாழ்ந்த குரலில் "ஓம்" என்றாள்.

"அந்தப் பெடியன்........................."

"..அவன் என்ர பிள்ளை"

"..................."

அமைதி அங்கே பிண்ணனி இசைத்தது. கொஞ்ச நேரந்தான். வசந்தன் வாய் திறக்காமல் கேட்டான்.

"இவையின்ட அப்பா"

மீண்டும் அமைதி பிண்ணனி இசை கோர்த்தது. அப்போது எங்கோ தூரத்தில் வாகனத்தின் இரைச்சல் பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கத்தில் வந்தது. பிள்ளைகள் இருவரும் பதட்டமானார்கள். கதிரையில் ஒளிந்தார்கள். மேகலா இன்னும் ஒடுங்கினாள். ஒருவிதமான மிரட்சி அவள் முகத்தில் படர்ந்தது. எதுவுமே புரியாதவனாய் வசந்தன் வினிதாவைப் பார்த்தான். அவளோ கதிரையில் இருந்த பிள்ளைகளைப் பார்த்தாள். பெருத்த இரைச்சலுடன் வீட்டைத்தாண்டிய ஆமி ஜீப் வசந்தனுக்கு புரியவைத்தது. அவன் தோளில் விழுந்த ஷேக்ஸ்பியரின் கை அதனை உறுதிப்'படுத்தியது'.

பாரதி
05-02-2009, 04:05 PM
மனமார்ந்த பாராட்டு அமரன்.

வழக்கு மொழியில் கதை சரளமாக செல்கிறது.

உண்மையான அன்பு மட்டும் எத்தனை வருடங்களானாலும் மாறுவதே இல்லை.

கதையின் கடைசி இரண்டு வரிகள் மனதைப் புரட்டிப்போட்டு விடுகின்றன.
இது கதையாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் மட்டுமே மனதில் இருக்கிறது.

செல்வா
05-02-2009, 07:20 PM
புரியாத பலவை புரியும் போது புரிந்தவை பல புரியாமல் போகும்.....
தெரியாத பலவை தெரியவரும் போது தெரிந்தவை பல தெரியாமல் போகும்...
காலத்தின் கோலங்களில்.... இதுவும் ஒன்று.....
மனதைப் பிசைந்த கதை.... வாழ்த்த முடியவில்லை.... நிதர்சனங்கள் தடையாகின்றன.

ரங்கராஜன்
06-02-2009, 02:59 AM
நான் மன்றம் வந்த பின்பு அமரனின் முதல் கதை இது, வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
07-02-2009, 05:16 AM
நிதர்சனம் புரியும்போது மனம் வலிக்கிறது. உள்ளத்தில் இருந்த உருவம், நேரில் பார்க்கும்போது கலைந்த ஓவியமாகிப்போனது. இப்படி எத்தனை எத்தனை விளைவுகள்...?

மனதை பிசைந்த கதை. சரளமான நடையில், அமரனின் சிந்தனைகளையும் தாங்கி கண் வழியே இறங்கி இதயத்துக்குள் அமர்ந்துவிட்டது.

கா.ரமேஷ்
07-02-2009, 05:59 AM
சாதாரன கதை என்றுதான் படித்தேன்... படித்து முடித்தவுடன்..
அமைதியாய் இரண்டு நிமிடம் அசையாமல் என்ன செய்து கொண்டிருந்தேன் என்றுகூட தெரியவில்லை...
நினைவு வந்த பொழுதுகளில் நிறைய வலிகளை உணரமுடிந்தது....

நிரன்
08-02-2009, 12:41 PM
மனமார்ந்த பாராட்டுக்கள் அண்ணா!

கதை மூலம் எம் மக்களின் நிலையை காட்டியுள்ளீர்கள்
இக்கதையில் நீங்கள் கூறியிருப்பது வெறும் கற்பனை
என என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை

இதற்கும் மேலக பல உள்ளன, இறுதிவரிகள் கண்களை கலங்கவைக்கறது

என்றும்
நிரன்

இளசு
12-02-2009, 08:06 PM
இருக்கும் வீடு, நிம்மதி, கௌரவம், தொழில்... இவை மட்டுமா?

கல்வி, கற்பு போன்ற இன்றியமையாதவையும் சேதமாகிவிடுகின்றன...

போர்கள்.....

இன அழிப்பு நோய்கள்...

போரில்லா உலகம் தோன்றும் அன்றுதான்
மனிதம் தோன்றும் நாள்..


அமரனின் ஆவணப்பதிவு என் ஆதங்கத்தை அதிகப்படுத்தியது...

aren
13-02-2009, 04:26 AM
இது கதையா அல்லது நிஜமா என்று தெரியவில்லை. ஆனால் வலிக்கிறது.