PDA

View Full Version : டென்த் ஏ காயத்ரிக்கு...



umakarthick
05-02-2009, 01:03 PM
டென்த் ஏ காயத்ரிக்கு...
நீ குடியிருந்த வீடு...
கைமாறி கைமாறி
கக்கடைசியில்
காயலான் கடையாகி
ஒட்டடை படிந்தது.



நீ தட்டச்சிய பயிலகம்...
ஒரு மழைக்கால இரவில்
மகள் ஓடிப்போன துக்கத்தில்
asdfgfக்கு மத்தியில்
உரிமையாளர் தூக்கில் தொங்க
நொடிந்தது.



நீ தரிசனம் தந்த கோயில்...
வெளவால் சந்ததி பெருகி
புராதன வாசத்தில்.



உன்னைக் காதலித்த
எங்கள் கவிதைகள்
பரணேறிய டைரித் தாளில்
கன்னி கழியாமல்.


தெரியும்.
மிலிட்டரிக்காரனுக்கு மணமாகி
நீ டெல்லியில் இருப்பது.



சப்தர்ஜங்கோ சர்தாஜி பேட்டையோ
சப்பாத்தியும், சால்னாவுமாய்
தேய்ந்து, துரும்பாகி
தூர்ந்திருக்கும் உன் வாழ்வு.



பேருந்தில்
டீக்கடையில் என
பொருள்வயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:



'காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?'
என் பதில்:
'பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ கிளாஸ் ரூம்ல'

- நா.முத்துக் குமார்

arun
05-02-2009, 04:56 PM
கடைசி வரிகளில் அவரின் வலி தெரிகிறது நன்றாக இருந்தது பகிர்வுக்கு நன்றி

aren
06-02-2009, 01:11 AM
டென் ஏ கிளாஸ் ரூமில் மட்டுமில்லை, அவர் மனதிலும் இன்றும் இருக்கிறார் என்றே இதிலிருந்து தெரிகிறது.

நல்ல கவிதை. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு என் நன்றிகள்.

umakarthick
06-02-2009, 09:39 AM
எனக்கு மிகவும் பிடித்த கவிதை நம்முடன் இயல்பாக பேசுவது போல அமைந்த கவிதை..இந்த மாதிரி கவிதைகள் எழுத நா.மு வால் தான் முடியும்

sathyamani
03-04-2009, 10:29 AM
மீண்டும் கிடைக்குமா காயத்ரியும், பாத்தாம் வகுப்பும்

shibly591
04-04-2009, 08:49 AM
ம்ம்ம்....(சில நினைவுகள் என்னை அதிகம் பேச விடுவதாயில்லை)

பகிர்வுக்கு நன்றிகள் நண்பரே

umakarthick
03-06-2009, 01:10 PM
நன்றிகள் பல

கா.ரமேஷ்
04-06-2009, 07:05 AM
பகிர்தலுக்கு மிக்க நன்றி,
பல நா.மு க்கள் வரிகள் வராததால் எழுதாமல் விட்டிருக்கலாம்.... இப்போது இதனை படித்து பழைய நினைவுகளில் புதைந்து போயிருக்கலாம்.....