PDA

View Full Version : பல கைகள் சிந்தும் பருக்கைகள்...அக்னி
02-02-2009, 10:46 AM
தினமொரு சுவை தேடிய நாவு...

சமைத்துவைத்திருந்ததை மறுத்துச்,
சமைக்கவைத்துண்ட கணங்கள்...

கோபவேளைகளில்,
பறக்கும் தட்டங்களாகிய
உணவுத் தட்டங்கள்...

கள்ளத்தீன் தின்று,
பசியடங்கிப் போனபின்
வீணடிக்கப்பட்ட உணவுகள்...

முதல்நாள் மீதத்தை
மறுத்தொதுக்கிய
மறுநாட்கள்...

தினமும் சாதமாவெனப்
பழித்துண்ட
பலநாட்கள்...

உணவு தேடி வந்ததால்,
அன்று தெரியாத அருமை..,
இன்று தெரிகின்றது...

சிந்தும் ஒரு பருக்கைச் சோற்றில்,
பல வெறுமை வயிறுகள்
தெரிகின்றன...

தவறிச் சிந்திப் போகையில்,
பொறுக்கிச் சேர்த்துக் கொள்கின்றேன்...

எங்கோ ஒரு மூலையில்
நிகழ்ந்துகொண்டிருக்கும்
பட்டினிச்சாவின் கொடுமையை
இந்தச் சோற்றுப் பருக்கை
போக்கிவிடாதுதான்...
ஆனால்,
பல கைகள் வீணடிக்கும் பருக்கைகள்
ஒருவனுக்கு ஒருவேளை உணவாகலாம்...
ஒருவேளை அவனுக்கு உயிராகலாம்...

புரியாமல்,
அன்றைய நான் ஒருவன்,
என்னைக் கேவலமாய்ப் பார்த்து
நகைக்கின்றான்...

.

செல்வா
02-02-2009, 11:09 AM
தினமொரு சுவை தேடிய நாவு...

சமைத்துவைத்திருந்ததை மறுத்துச்,
சமைக்கவைத்துண்ட கணங்கள்...

கோபவேளைகளில்,
பறக்கும் தட்டங்களாகிய
உணவுத் தட்டங்கள்...

கள்ளத்தீன் தின்று,
பசியடங்கிப் போனபின்
வீணடிக்கப்பட்ட உணவுகள்...

முதல்நாள் மீதத்தை
மறுத்தொதுக்கிய
மறுநாட்கள்...

தினமும் சாதாமாவெனப்
பழித்துண்ட
பலநாட்கள்...

உணவு தேடி வந்ததால்,
அன்று தெரியாத அருமை..,
இன்று தெரிகின்றது...

சிந்தும் ஒரு பருக்கைச் சோற்றில்,
பல வெறுமை வயிறுகள்
தெரிகின்றன...

தவறிச் சிந்திப் போகையில்,
பொறுக்கிச் சேர்த்துக் கொள்கின்றேன்...
அன்றைய நான்,
என்னைக் கேவலமாய்ப் பார்த்து
நகைக்கின்றான்...

இது வரை அருமையான கவிதை...
இதற்குப் பின் அறிவுரைக் கருத்துகள்.
ஆனால்....... அறிவுரைக் கருத்துக்களும்
கவிதையாக மாறின்.... கவின் மிகும்.
வாழ்த்துக்கள் அக்னி.

அக்னி
02-02-2009, 11:24 AM
செல்வா...
சிறு மாறுதல் செய்துள்ளேன்.

ஓவியனிடம் அவரது பெற்றோரைப் பற்றி விசாரிக்கையில்,

நான் ஒவ்வொரு கவளம் உணவை உட்கொள்ளும் போதும் வன்னியில் என் பெற்றோர் உள்ளடங்கலான மக்களுக்கு ஒரு வாய் தண்ணீருக்காவது இப்போது வழி இருக்குமோ..??,

என்னும் சிந்தனை, மனதைச் சோர்வடைய வைப்பதாகக் கூறியிருந்தார்.

இதுவே, என்னை எழுதத் தூண்டியது.

மனதில் வந்ததை, அப்படியே உடனடியாகத் தட்டச்சிவிட்டேன்...

நன்றி செல்வா...

பாரதி
02-02-2009, 01:53 PM
கருத்துக்கள் பழுக்கையில்
கவிதைகள் முளைக்கின்றன.
மன்றப்பலகையில் விழுந்த
பருக்கைகளை நானும்
சேமித்துக்கொள்கிறேன்.

இனிய வாழ்த்து அக்னி.

அக்னி
02-02-2009, 02:46 PM
உங்கள் வாழ்த்துக்கும், தனிமடல் வழிநடத்தலுக்கும் மிக்க நன்றி அண்ணா...

இளசு
02-02-2009, 07:34 PM
வீணாவதைத் தடுப்பது என்பது.
உருவாக்கம் செய்வதை ஒத்தது.

சாதப்பருக்கை மட்டுமன்றி
காலப்பருக்கைக்கும் பொருந்தும்!

விரதம் இருப்போம் விரயமாக்காது..!
எப்படியும் எவர்க்கும் உதவிடும் என்றாவது!


''உடன்'' கவிதைக்கு அண்ணனின் உள்ளார்ந்த பாராட்டுகள் அக்னி!

அமரன்
02-02-2009, 09:22 PM
விரல் சூப்பும் வயதில்
தந்தையை
விபரம் தெரிந்த பொழுதில்
சொந்த மண்ணை

பாடிப்பறந்த பருவத்தில்
கூடிப்பறந்த தோழமைகளை

விடலைக் தாண்டிப் பத்தாண்டாகியும்
மரணங்கள் விடலை.

அப்போதெல்லாம்..
சோறு இருக்கவில்லை
பருகப் பாலிருந்தது.

அதனால்
விரட்ட விரட்ட விரட்ட
ஒட்டி இருந்த உயிருடன்
ஒட்டி வாழ முடிந்தது.

இன்றோ..
பசுமாடு எங்கும் இல்லை
பசித்தவன் எவனுமில்லை..

உயிர் பசி எடுத்தவன்
பாதிப்பேரை
நரபலி எடுத்துக் கொண்டான்..

மிச்சமிருப்பவனோ
துச்சமென மிதித்து விட்டான்
உதிரம் கலந்துண்ண
எம்மனிதனுக்கு மனம் வரும்.

அங்குமுங்கும்
குவிந்து கிடக்கின்ற்றன பிணங்கள்
பனிநிலத்து பனைகளின்
வழங்கல் போலவே...

சிவா.ஜி
04-02-2009, 10:46 AM
என் அப்பாவிடம் வாழ்க்கையில் ஒரே முறை அடி வாங்கியிருக்கிறேன். அது....சோற்றுப்பருக்கைகளை தரையில் சிந்தியதற்கு. அன்றுமுதல் இன்றுவரை ஒவ்வொருமுறை உணவு உண்ணும்போதும் அந்த நினைவு கவளத்துக்கு முன் கவனத்துக்கு வரும்.

சிறந்த சிந்தனை அக்னி. வாழ்த்துகள்.