PDA

View Full Version : அது , அது மட்டுமே காதல்!ப்ரியன்
01-02-2009, 01:08 PM
அது , அது மட்டுமே காதல்! (http://priyanonline.com/?p=335)

கூடல்
சுவர்க்கம்;
ஊடல்
சிலுவை!

*

நனைந்து நீ
வருகையில்
என்னில்
ஆயிரம் சூரியன்கள்!

*

உன்னில் எனை
நிரப்பு;
என்னில் உனை
நிரப்பு;
அது
அது மட்டுமே காதல்!

*

கவிதை;
உன்னிதழ் சிந்தும்
எதுவும்!

*

நீ வழங்கிய
வலிகளுக்கு
ஈடாய்
என்னிடம் கவிதைகள்!

- ப்ரியன்.

ப்ரியன்
02-02-2009, 03:48 PM
அது , அது மட்டுமே காதல்! # 02 (http://priyanonline.com/?p=349)

இரட்டை கால்தடங்களை
எங்கு கண்டாலும்
மனம் நிரம்பிவிடுகிறது
கைக்கோர்த்து நாம் நின்றிருந்த
கணங்களால்!

*

மீன்கொத்திகளை
கேட்டிருக்கிறேன்;
உன் கண்கள்
கண்கொத்தி மீன்கள்!

*

தேவதைகளின்
உறைவிடம் விண் மட்டுமல்ல;
சில நேரங்களில்
எதிர் வீடும்!

*

காதல் -
சிலுவை;
யாரும் சுமக்காமல் இல்லை!

*

உருண்டு திரண்டு
வழிய காத்திருக்கும்
உன் ஒற்றை கண்ணீர்துளியினுள்
உறைந்துவிடுகிறது என்னுலகம்!

*

- ப்ரியன்.

அது , அது மட்டுமே காதல்! # 01 (http://priyanonline.com/?p=335)

இளசு
02-02-2009, 07:24 PM
மனங்கொத்தும் கவிதைகள்..

தூண்டல் துள்ளலும் .....
ஓரமாய் வலியும் ....

வாழ்த்துகள் ப்ரியன்!

ப்ரியன்
03-02-2009, 04:12 PM
அது , அது மட்டுமே காதல்! # 03 (http://priyanonline.com/?p=359)

நீ -
உயிரின்
வைகறை!

*

நீ -
இயல்பாய் தோன்றிய
கவி!

*

நீ -
என் கண்ணீரின்
தீபம்!

*

நீ -
என் காதலின்
முகாரி!

*

நீ -
சுவாசத்தின்
உயிர் வடிவம்!

*

- ப்ரியன்.

கா.ரமேஷ்
04-02-2009, 11:48 AM
எல்லா கவிதைகளுமே அருமை ப்ரியன்.

ப்ரியன்
04-02-2009, 05:28 PM
அது , அது மட்டுமே காதல்! # 04 (http://priyanonline.com/?p=363)

காதல் -
உயிரின்
பசி!

*

காதல் -
உயிர் கொண்டெரியும்
தீபம்!


*

காதல் -
மரணத்தின்
ஒத்திகை!

*

காதல் -
சுவர்க்கத்தின்
திறவுகோல்!

*

காதல் -
உயிர் தின்னும்
விலங்கு!

- ப்ரியன்.

அறிஞர்
04-02-2009, 06:21 PM
அது , அது மட்டுமே காதல்! # 04 (http://priyanonline.com/?p=363)
காதல் -
உயிர் தின்னும்
விலங்கு!

- ப்ரியன்.
காதல்
உயிர் வாழவைக்கும்
அமிர்தம்!

அறிஞர்
04-02-2009, 06:23 PM
காதல் -
மரணத்தின்
ஒத்திகை!

*

காதல் -
சுவர்க்கத்தின்
திறவுகோல்!
. எதிர்மறையாக போட்டு வாங்குகிறீர்கள்..
காதலுக்கு உருவம் இருந்திருந்தால்...
தங்களிடம் வந்து.. தங்களை ஏதாவது செய்திருக்கும்.

என்னவன் விஜய்
04-02-2009, 07:50 PM
காதல்
உயிர் வாழவைக்கும்
அமிர்தம்!

அறிஞர் எழுதி நான் படிக்கும் முதல் கவிதை இதுதான். என்ன ஆச்சர்யம்!!

நல்லாதான் இருக்கு தலைவா :icon_b:

ப்ரியன்
05-02-2009, 04:51 PM
அது , அது மட்டுமே காதல்! # 05 (http://priyanonline.com/?p=368)

கலைந்தாடும் கூந்தல்
காற்றில் வரைகிறது
உன்னழகை!

*

மச்சப்புள்ளிகளை இணைத்து
இறைவன்
இட்ட கோலம் நீ!

*

உன் முத்தத்தின்
ஈரத்தில்
காய்ந்துவிடுகிறது
என் காயம்!

*

சந்தித்த போது
படபடத்து கொண்டும்
பிரிந்திருக்கும் போது
பேசிக் கொண்டும்
நம் இதயங்கள்!

*

வா,
காதல் பூஜையில்
நம்மை பூவாய்
சமர்ப்பிப்போம்!

- ப்ரியன்.

ப்ரியன்
07-02-2009, 04:33 PM
அது , அது மட்டுமே காதல்! # 06 (http://priyanonline.com/?p=373)

முகம் அப்பிய மஞ்சள்
சிவக்கிறது
உன் நாணத்தால்!

*

என்
கவிதைகள்
உன்
அழகைப் பற்றின
சிறு குறிப்புகள்!

*

எதிர்வீட்டுக் குழந்தைகளுக்கு
நாம் தரும்
முத்தங்கள்
எங்காவது சந்தித்து
பேசிக் கொள்ளக்கூடும்!

*

உன்னைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது
நீ தரும்
முத்தமும்!

*

உன் நாணத்தை
அள்ளிப் பருகவேண்டும்;
எங்கே,
உன் இதழ்காட்டு!

- ப்ரியன்.

ப்ரியன்
07-02-2009, 05:46 PM
அது , அது மட்டுமே காதல்! # 07 (http://priyanonline.com/?p=381)

சிறுவயதில்
அடிக்கடி நீ
காணாமல் போய்விட்டுவாயென
உன் அம்மா சொன்னார்கள்;
ம்,
பெரிய சக்கரைக்கட்டியென
எறும்புகள் தூக்கிச் சென்றிருக்கும்!
*
மழலைகள் சூழ
அமர்ந்திருக்கையில்;
அவர்கள் சிறுதெய்வங்கள்
நீ பெருந்தெய்வம்!
*
கண்ணும் கண்ணும்
பேசிக் கொள்வதற்கும்
முத்தம் என்றே பெயர்!
*
புள்ளிகளாய்
நாம்;
அழகிய கோலமாய்
காதல்!
*
மனம்
தோகை விரித்தாடுகிறது;
ம்,
அது நீ
வருவதாற்கான அறிகுறி!

- ப்ரியன்.

ப்ரியன்
09-02-2009, 09:21 AM
அது , அது மட்டுமே காதல்! #8 (http://priyanonline.com/?p=387)

உன்னைப் பற்றிய
கனவுகளை தின்று
பெருத்து கிடக்கிறது
என்
படுக்கைத் தலையணை!

*

குளித்து
நீ வருவதற்குள்;
ஒரு சின்ன போரே
நிகழ்ந்துவிடுகிறது
அலமாரி சேலைகளுக்குள்;
உனைக் கட்டிக் கொள்ள!

*

நீ கட்டிக்கொள்ள
சேலைக்கும் பிறக்கிறது
காமம்!

*

நீ -
சுவர்க்கத்திற்கான
திசைக்காட்டி!

*

நட்சத்திரங்களை கூட
ஒளித்து வைத்துவிடுவேன்
உன் நினைவுகளை
எங்கே ஒளிப்பது?

- ப்ரியன்.

ஆதி
09-02-2009, 11:03 AM
கவிதை - 5

என்னை கவர்ந்த வரிகள் இவை ப்ரியன்

//கலைந்தாடும் கூந்தல்
காற்றில் வரைகிறது
உன்னழகை!

*
மச்சப்புள்ளிகளை இணைத்து
இறைவன்
இட்ட கோலம் நீ!
//

தங்கள் பெயர் போலவே வரிகளிலும் வழிகிறது ப்ரியங்கள்

அதிலும் இந்த வரிகள், ஒரு அழகிய காட்சியை மனதில் விரிக்கிறது..


//சந்தித்த போது
படபடத்து கொண்டும்
பிரிந்திருக்கும் போது
பேசிக் கொண்டும்
நம் இதயங்கள்!
//

தங்களின் மற்றவரிகளையும் ஆர ரசித்து அமர சுவைக்க காத்திருக்கிறேன்..

பாராட்டுக்கள்..

ப்ரியன்
10-02-2009, 02:49 AM
அது , அது மட்டுமே காதல்! #9 (http://priyanonline.com/?p=393)

உன்னை மையப்புள்ளியாய்
கொண்டே சுற்றுகிறது
என் உலகம்!

*

என் எல்லா
ஜாதகக் கட்டங்களிலும்
உன் பெயர்!

*

பிரிந்திருக்கும் சமயங்களில்
மெளனமாய் அழுதிருக்கும்
இதயங்கள் -
அருகாமையில்
சத்தமாய் பேசத் தொடங்கிவிடுகின்றன
நம்மை கையமர்த்திவிட்டு!

*

தொட்டு பேசியதற்கே
எனை பாவியாக்குகிறது
உன் நாக்கு;
கனவில் புக்கு பார்த்தால்
என்னை
என்ன சொல்லி ஏசும்?!

*

நீ இல்லா நான்
வெற்று காகிதத்திலான
கவிதை புத்தகம்!

- ப்ரியன்.

சிவா.ஜி
10-02-2009, 05:00 AM
காதல் மாதத்தில் காதல் சொட்டும் சுவையான வரிகள் ப்ரியன். ஒவ்வொரு ஒப்பீடலும் திகட்டாமல் இனிக்கிறது. சின்னச் சின்ன நகாசுவேலையுடன் கூடிய ஆபரணமாய் ஜொலிக்கிறது. வாழ்த்துகள். மேலும் பொழியட்டும் காதல் மழை.

ப்ரியன்
10-02-2009, 03:13 PM
அது , அது மட்டுமே காதல்! #10 (http://priyanonline.com/?p=397)

முத்தம்
நம் ஊடல் முறிவுக்கான
சமாதான ஒப்பந்தம்!

*

உன்னை என்னிடம் புதிதாயும்
என்னை உன்னிடம் புதிதாயும்
தரும் வல்லமை
ஊடலுக்கு பின்னான
அக்கணத்திற்கே வாய்த்திருக்கிறது!

*

ஊடல் முறிவு தருணத்தில்
உன் கண் தங்கும்
ஒற்றை துளி கண்ணீரில்
நதிமூலத்துளியின் தூமை!

*

நம் ஊடலுக்கான
சமாதானத்தோடு வருகிறாய்;
மெல்ல விடிய தொடங்குகிறது
என் மேல் கவிந்த இரவு!

*

நீ தந்துபோன
சில முத்தங்களும்
சில புன்னகைகளும்
போதுமாயிருக்கிறது;
ஊடல் முறித்து
திரும்பும் மட்டும்
என்னை உயிரோடு வைத்திருக்க!

- ப்ரியன்.

ப்ரியன்
11-02-2009, 03:33 PM
அது , அது மட்டுமே காதல்! #11 (http://priyanonline.com/?p=401)

நம் பிரிவின்
கடைசி புள்ளியில்
ஆரம்பிக்கிறது
அடுத்த சந்திப்பிற்கான
ஆயுத்தம்!

*

கடைசிவரை
பேசவதற்காக எடுத்து வந்த
வார்த்தைகள் பேசப்படமலேயே
திரும்புகின்றன;
நம் சந்திப்புகளில்!

*

பூங்காவின் வாசலில்
உனக்காக பூ வாங்க
அரைமுழம் அதகமாய்
அளக்கிறாள் பூக்காரகிழவி!

*

மூச்சு முட்டும்
தொலைவில் நாம்
சந்தித்துக் கொள்ளும்பொழுது
நீ மூச்சுவிடும் சிலையாகிறாய்;
நான் மூர்ச்சையாகிறேன்!

*

மேல் விழுந்து தங்கும்
இலைகளை தட்டிவிடாதே!

நம் சந்திப்பிற்கு
அதனடியை தேர்ந்ததற்கு
நன்றி பகன்று
ஆசிர்வதிக்கிறது அம்மரம்!

- ப்ரியன்.

ஓவியன்
18-02-2009, 02:10 PM
காதல் மாதத்தில்
ப்ரியனின்
கவி மழையில் நனைகையில்,
சொல்லத் தோன்றுகிறது
இது, இது மட்டுமே கவிதை...!!

வானதிதேவி
28-09-2009, 04:43 PM
அப்பப்பா இந்த காதல் தான் எத்தனை மனிதரை கவிதை பித்தனாக்கி தான் மட்டும் யுகயுகமாய் வாழ்ந்து கொண்டிருக்கறது.கவிதை பெண்ணாக உருக்கொண்டு ப்ரியனிடம் காதல் வரம் கேட்டாலும் ஆச்சர்யபடுவதிற்கில்லை.
அனுபவித்து எழுதியது போன்று உள்ளது.வாழ்த்துக்கள் ப்ரியன்.

பா.ராஜேஷ்
30-09-2009, 12:37 PM
அருமையான கவிதைகள்...
வசீகரிக்கும் வரிகள்..

பாராட்டுக்கள் ப்ரியன்...