PDA

View Full Version : நூர் பாத்திமா.....Nanban
08-09-2003, 08:29 AM
நூர் பாத்திமா.....

ஒரு தேவதையைப் போல
எல்லைகளைக் கடந்து
எங்கள் நாடு வந்தாய்.

தலையைச் சுற்றி
மூக்கைத் தொடும்
தலைவலியின்றி
தரைவழி வந்தாய்.

கிழிந்து கிடக்கும்
நம் உறவுகள் போலவே
உன் இதயம் முழுக்க
ஒட்டைகளோடு வந்தாய்.

கருமேகம் சூழ்ந்த
வானம் போலத்தான்
உன்னைப் பெற்றவர்களின்
முகத்திலும்
அருளின்றி இருந்தது -
தலைநகரத்தில்
நீங்கள் இறங்கிய பொழுது.

எல்லை தாண்டிய தீவிரவாதிகள்
எங்கள் ஜவான்களின் இதயத்தில்
ஓட்டை போட்டுக் கொண்டிருந்த பொழுது -
உன் இதயத்து ஓட்டையை
அடைப்பதற்கு எங்கள் நாட்டு
மருத்துவர்கள் உழைத்தனர்.

நொடிப்பொழுதில்
வெடிக்கும் குண்டுகளில்
செத்து வீழும்
அப்பாவி காஷ்மீரிகளின்
குருதி தெருவில் ஓடிய பொழுது,
எங்கள் நாட்டு மக்களின்
ரத்தமும் ஆக்ஸிஜெனும்
உன் உடலின் உள்ளே
புகுத்தப் பட்டுக் கொண்டிருந்தது.

மயக்கத்தில் நீயும்
கலக்கத்தில் உன் பெற்றவர்களும்
இருந்த பொழுது
நாங்கள் எல்லோரும் பிரார்த்தனையில்
இருந்தோம் -
'கடவுளே!
எங்களைத் தேடி வந்த
இந்த பிஞ்சைக் காப்பாற்று'
கூட்டுப் பிரார்த்தனையும்
மலர்க் கொத்துகளும்
நாட்டு எல்லைகளைக் கடந்து
உன் காலடியில் சமர்ப்பிக்கப் பட்டது.

பலகோடி மக்களின்
இதயங்களும் ஒருமித்து
உனக்காகத் துடிக்க
உன் இதயமும் பழுதில்லாமல்
துடிக்கத் தொடங்கியது.

உனக்காக செலவு செய்ய
உன் பெற்றோர்கள் செய்த ஏற்பாடுகள்
அனைத்தும் மறுத்து
எங்கள் நாட்டு மருத்துவர்கள்
தங்கள் உழைப்பை
உனக்கு அன்புக் காணிக்கையாக்கினர்.
இந்த அன்பிற்குப் பதில் அன்பு என -
உன் மருத்துவ செலவுத் தொகையும்,
வந்த அன்பளிப்புகளும்,
ஏழைக் குழந்தைகளின் இதயத்துக்காக
உன் பெற்றவர்களால்
அர்ப்பணிக்கப் பட்ட போது
எல்லோருக்கும் தெளிவானதே -
இரு நாட்டு மக்களும்
எதிரிகளல்ல,
சந்தர்ப்பம் கிடைத்தால்
சகோதரர்களும் ஆவர் என்று.

சில காலம் முன்னே
எலியும், பூனையுமாக
அடித்துக் கொண்ட
அரசியல்வாதிகளை
ஒதுக்கித் தள்ளிவிட்டு
மக்களின் அன்பை
வெளிப்படுத்த
ஒரு தேவதையாக
உன் வரவு ஆகியதே...
இனியாவது
உன் போல் தேவதைகள் மட்டும்
எங்கள் நாட்டிற்கு வரட்டும்.
சாத்தான்களின்
குண்டுகளும், வார்த்தகளும்
ஓடியே போகட்டும்....

சேரன்கயல்
08-09-2003, 10:18 AM
அழகாய் சொல்லியிருக்கிறீர்கள் நண்பன்...
நூர் பாத்திமாவுக்காய் நான் இதயம் கசிந்தது உண்மை ஆனால் நீங்கள் உங்கள் இதயக் கசிவை பெயர்த்து கவிபாடியிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் நண்பரே...

chudar
08-09-2003, 11:37 AM
கோபமும் - பிணக்குகளும் மறைய ஒரு ஊனம் தேவையா...? அடுத்த முறை வரும் Noor Fathima'க்கள் சோகமில்லாமல் வெண் புறாக்களை சுமந்து ஆனந்தமாக வரட்டும்.. கவிதை அருமை.

Hayath
08-09-2003, 12:39 PM
அருமையான கவிதை நண்பன் அவர்களே.....பாராட்ட வார்த்தைகள் வரவில்லை.மற்றும் கவிதை முடிவு ஒரு வரலாறை கூறுகிறது.

இக்பால்
09-09-2003, 06:17 AM
நண்பர் நண்பரே! என்னருகில் உள்ள பாகிஸ்தான் நண்பர் இந்தியாவில்
உள்ள முஸ்லீம்களுக்கு உருகுவார். மற்ற இன மக்களை நம்ப ஏனோத்
தயக்கம். எல்லொரும் நல்லவரே என எடுத்துக் கூறி வருகின்றேன்.
நூர்பாத்திமா நிகழ்ச்சி எனக்கு நல்ல ஆதரவாக அமைந்தது.இப்பொழுது
உங்கள் கவிதையையும் அவருக்கு மொழி பெயர்த்து சொல்ல இருக்கிறேன்.
இப்பொழுது அவர் பாகிஸ்தான் போயிருக்கிறார்.-அன்புடன் அண்ணா.

poo
09-09-2003, 04:07 PM
நெஞ்சைத்தொட்ட அந்த நிகழ்வை கவிதையாக்கி எனக்கொரு சூடு போட்டுவிட்டீர்!

பாராட்டுக்கள் நண்பனே!!!

பாரதி
09-09-2003, 06:04 PM
ஆம் நண்பா,
என்னுடன் பணிபுரியும் பல பாகிஸ்தானிய சகோதரர்கள் உண்மையில் மிகவும் நல்லவர்களே. அரசியல்வாதிகளும், மதவாதிகளும், சுயநலவாதிகளும்தான் நம்மை பிரித்தாள்கிறார்கள்.

இக்பால்
09-09-2003, 06:30 PM
இன்னொரு சம்பவம் ஞாபகம் வருகிறது. கொழும்பு நகருக்கு
போனமுறை சென்று இருந்தபொழுது ஒரு சிங்களப் சிறுபெண்
room girl-ஆக இருந்தார். தமிழ் தெரியவில்லை. ஆங்கிலத்தில்
பேசினார். 4 நாட்கள் தங்கியிருந்ததில் நன்றாக பழகி விட்டார்.
அவர் சொன்னார். தமிழ்க் காரர்கள் கூட இவ்வளவு நல்லவர்
ஒருவர் இருப்பார் என நினைத்தது கூட இல்லை என்றார்.
அந்த பயத்தால் தமிழரிடம் பேசியதும் இல்லையாம். நான்
சொன்னேன். பழகிப் பாருங்கள். எல்லோரும் நல்லவர் என
உணர்வீர்கள் என்று.-அன்புடன் அண்ணா.

இளசு
09-09-2003, 11:17 PM
பெருமித நிகழ்வு..
நுண்ணிய பதிவு..

வாழ்த்துகள் நண்பன் அவர்களுக்கு...

Nanban
11-09-2003, 09:05 AM
மனித இயல்பு எவருக்கும் இரங்கக் கூடியது. தனிமையில் நல்லவனாக இருக்கும் ஒருவன் பலருடன் இணையும் பொழுது வழி தவறிப் போகிறான்.அல்லது வழி நடத்திச் செல்லும் தலைமை தவறுதலாக அழைத்துச் செல்கிறது. வழி தவறிப் போகிறோம் என்றாலும், விலகிச் செல்ல இயலா மாயையில் சிக்குண்டுத் தவிக்கிறோம். நல்லதைச் சொன்னால், பழிக்கப் படுகிறோம். இனத்துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறோம். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் காட்டப்பட முடியும். குறிப்பாக - அயோத்தி பிரச்னையை எடுத்துக் கொள்ளுங்கள் - இஸ்லாம் எந்த ஒரு உருவ வழிபாட்டையும் அனுமதிக்கவில்லை. எந்த வடிவத்தையும் குறியீடாகக் கொள்ளவில்லை. ஈடு, இணையற்றவன் இறைவன் என்பதாலயே அவனுக்கு வடிவம் கிடையாது. இருப்பிடம் கிடையாது. எங்கும் நிறைந்தவனுக்கு ஏது இருப்பிடம்? முகம்மது நபி(ஸல்)க்குக் கூட சமாதி என்ற கட்டடங்கள் கிடையாது. எந்த ஒரு மனிதனுக்கும் நினைவிடங்கள் அமைப்பது மறுக்கப் பட்டுள்ளது. நாளடைவில் அந்த சமாதிகள் வழிபாட்டுத் தளங்கள் ஆகிவிடும். இறைவன் அந்தஸ்திற்கு அங்கு புதைக்கப்பட்டவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்பது தான் சமாதிகள் மறுக்கப்பட்ட காரணம். இஸ்லாத்தில் இறைவழிபாட்டிற்கு எந்த ஒரு கட்டிடங்களும் தேவையில்லை. தொழுகை நேரம் வந்து விட்டால், எந்த இடத்திலும் - சுத்தமான இடம் என்பது மட்டுமே முக்கியம் - ஒரு துண்டை விரித்து, கபா நோக்கி - உலக முஸ்லீம்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்த வேண்டுமென்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு தான் கபா - தொழுகையில் ஈடுபடலாம். இறைவன் ஏற்றுக்கொள்வான். தன்னை வழிபடும் தொழுகையளிகளின் உள்ளத்தைத் தான் இறைவன் நாடுகிறானே தவிர, தொழுகை நடக்கும் இடத்தின் ஆடம்பர தோற்றத்தை அல்ல.

இத்தகைய எளிமையான இஸ்லாம் மதத்தின் வழி வந்தவர்கள், எதற்காக ஒரு பாபர் மசூதியின் மீது அத்தனை ஈர்ப்புடன் இருக்க வேண்டும் என்று தான் புரியவில்லை. இஸ்லாத்தின் கொள்கைகளுக்கும், பாபர் மசூதிக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மாறாக இதை ஒரு தன்மானப் பிரச்னையாக, கௌரவப் பிரச்னையாக, முஸ்லீம்களின் egoவாக மாற்றிக் காட்டி விட்டனர் வழி நடத்திச் செல்லும் தலைவர்கள். தங்களின் முக்கியத்துவம் குறைந்து போய்விடக் கூடாது என்ற குறுகிய நோக்கம் கொண்ட தலைவர்கள், இஸ்லாத்தின் உயர்ந்த கொள்கைகளை, கோட்பாடுகளை எடுத்துக் கூறுவதை விட்டு விட்டு, இந்த கட்டிடம் தகர்க்கப்பட்டதால், இஸ்லாமிற்கு ஆபத்து என்று கூறிவிட்டனர். அயோத்தியில் நிகழ்வது - ஒரு நில உரிமைப் போராட்டம் மட்டுமே - மதங்களுக்கு இடையிலான போராட்டமாக அதை மாற்றியதில் தான் தவறே ஆரம்பித்தது.

விவேகமுள்ள தலைவர்கள் இருந்திருந்தால் - இப்படித் தான் பேரம் (negotiate) செய்திருப்பார்கள் -இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதற்குப் பதிலாக முஸ்லீம்களுக்கு மத்திய அரசில் ஒரு குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு கொடுத்து வேலை வாய்ப்பு தாருங்கள்; கல்விக்கூடத்தில் வாய்ப்புக் கொடுங்கள்; இப்படியெல்லாம் கேட்டிருந்தால் முஸ்லீம்கள் முன்னேறியிருப்பார்கள். ஆனால், தலைவர்களுக்கு இதிலெல்லாம் நாட்டமில்லை. தாங்கள் தலைவர்களாய் இருக்க வேண்டுமென்றால், பிரச்னைகளை நீட்டித்துக் கொண்டேதான் இருக்கணுமே தவிர, தீர்த்து விடக் கூடாது. (இது எல்லோருக்கும் பொருந்தும் ஒரு கூற்று தான்....)

பாரதி
11-09-2003, 09:24 AM
அன்பு நண்பா,
உங்கள் பதிவைக் கண்டேன்.
அதிலிருந்து நான் முற்றிலும் மாறுபடுகிறேன்.

இக்பால்
11-09-2003, 10:19 AM
பாரதி தம்பி, எந்த வகையில் மாறுபடுகிறீர்கள் என அழகாகக்
கூறுங்கள் பார்ப்போம். நண்பர் நண்பனும் பதில் தரும்பொழுது
நல்லபடி கையாள வேண்டுகிறேன். கருத்து வேறுபாடுகளைக்
களைந்த ஒரு மக்கள் தொகுதியாக இந்த மன்றத்தைக் காண
எனக்கு ஆவல். அண்ணன்,தம்பி, அக்கா, தங்கையாக வார்த்தையில்
மட்டும் இல்லாமல் உள்ளத்திலும் உணர, செயலிலும் காட்ட
கேட்டுக் கொள்கிறேன்.-அன்புடன் அண்ணா.

பாரதி
12-09-2003, 11:05 AM
அன்பு இக்பால் அண்ணா,

மறுப்பை சொல்ல விளக்க வேண்டும் எனினும் விளக்கமாக பதிக்கும் அளவிற்கு எனக்கு நேரம் கிடைப்பது கடினம். பணிச்சூழல் காரணம். 'எங்கும் நிறைந்தவன் பரம்பொருள்' என்பதில் இருந்து 'தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்'என்று சொல்லுவது வரை கடவுளைப் பற்றி ஏராளமான விசயங்கள் எல்லா மத நூல்களிலும் உண்டு.

விவேகானந்தர் அவருடைய பக்தியோகத்தில் சொல்லி இருக்கிறார் : கிருஷ்ணன் சொல்கிறான் - "நான் காசியில் பிறந்தேனா அல்லது மதுராவில் பிறந்தேனா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதே.. உனக்கு இட்ட கடமை என்னவோ அதை செய் - முக்தி பெறுவாய்" என்று.

அதிகம் எழுதினால் கருத்து வேறுபாடுகள்தான் அதிகமாகும். ஆகவேதான் தவிர்த்தேன். என் மறுப்பை பதிவு செய்தேன்.

Mr.பிரியசகி
13-09-2003, 07:00 AM
நண்பன்.....
உஙகள் கவிதையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.... அருமை..
கலங்கவைத்து விட்டீர்கள்.... உஙகளை பாராட்ட வந்தேன்... ஆனால் உஙகள் விவாத்தில் பங்கு கொள்ள... எனக்கு அனுபவம் காணாது... .. எனினும் உங்கள் கருத்துகளில்... எனக்கு பிடித்தவை...==>

"மனித இயல்பு எவருக்கும் இரங்கக் கூடியது. தனிமையில் நல்லவனாக இருக்கும் ஒருவன் பலருடன் இணையும் பொழுது வழி தவறிப் போகிறான்.அல்லது வழி நடத்திச் செல்லும் தலைமை தவறுதலாக அழைத்துச் செல்கிறது."நன்றி

இளசு
13-09-2003, 07:17 AM
மிக உன்னத உணர்வுகளை எழுப்பிய கவிதை.
மேற்கொண்டு நடக்கும் அலசல் சுவைப்பேதம் தரும் சாத்தியமுள்ளது.
கவிதையின் அலசலோடு நிறுத்திக்கொள்ளலாமே!
எங்கள் அருமை நண்பன் அவர்களே.. நான் சொல்வதில் சம்மதம்தானே?

தம்பி பாரதியின் முதிர்ச்சியான அணுகுமுறையை பாராட்டுகிறேன்.

karavai paranee
13-09-2003, 10:36 AM
அன்பு நண்பனின் பதிவு அருமை

வாழ்த்துக்கள்

இணையவேண்டும் அந்த கரங்கள்

balakmu
14-09-2003, 12:17 AM
அன்பு நண்பா!!

தங்கள் கவிதை
தங்க கவிதை!!

எத்தனை நூறு ஜின்னாக்கள்
வந்தாலும், எத்தனை நூறு முஷாரப்கள்
எதிரிகளாய் வந்தாலும்
எங்கள் இதயத்தை துளைக்க முடியாது
நாங்கள் (நூரயை போன்ற) நூறு
இதயங்களை காப்பவர்கள்
காயபடுத்துபவர்கள் அல்ல என்று
சம்மட்டியால் அடிப்பது
போலிருந்தது.

- அன்புடன் பாலா -

gans5001
15-09-2003, 01:29 AM
மயக்கத்தில் நீயும்
கலக்கத்தில் உன் பெற்றவர்களும்
இருந்த பொழுது
நாங்கள் எல்லோரும் பிரார்த்தனையில்
இருந்தோம் -
'கடவுளே!
எங்களைத் தேடி வந்த
இந்த பிஞ்சைக் காப்பாற்று'

ஒட்டு மொத்த கவிதையின் சாறாய் அமைந்த உணர்ச்சி மிக்க வரிகள். பாராட்டுகள்

இக்பால்
15-09-2003, 06:15 AM
பாரதி தம்பி...வேறுபாடுகளை அப்படியே மனதில் வைத்துக் கொள்ளாமல்
பேசி களைந்தெறிய வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் அப்படி
சொன்னேன். இந்த என் அணுகுமுறை அண்ணன் இளசு சொன்னது
போல் முதிர்ச்சி இல்லாத அணுகுமுறையாக தோன்றினால் என்ன
செய்வது? நண்பர் நண்பனில் கருத்தில் எது தவறு என உங்களுக்குப்
பட்டது என்பதை அறிந்து கொள்வதில் இன்னும் என் ஆவல் இருக்கிறது.
நேரம் பற்றாக்குறை இருப்பின் பரவாயில்லை நண்பரே. நானே யோசித்து
ஒரு முடிவிற்கு வந்து கொள்கிறேன். என் மனதில் பட்டதைச் சொல்ல
நம் மன்றம் உரிமை கொடுத்து இருப்பதால் சொல்கிறேன்.
-அன்புடன் அண்ணா.

இக்பால்
15-09-2003, 06:51 AM
இளசு அண்ணா கூட இப்படி எல்லாம் பேசுவாங்களா?
கவலையாகவும், ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
ஏன் இங்கே வந்தோம் என்றே மனசு நினைக்கிறது?!!!
பரவாயில்லை....-அன்புடன் அண்ணா.

Nanban
15-09-2003, 07:09 AM
பலவிதமான கருத்துகளும், விளக்கங்களும் எழும் பொழுது தான் விவாதங்கள் பயனுள்ளதாக அமைகிறது. அப்படி இருக்கும் பொழுது மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை என்று மறுப்பது தவறாகும். இந்த மன்றம் வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமல்லாது, ஆக்கபூர்வமான விஷயங்களையும் அலசி ஆராய்ந்து மன்ற உறுப்பினர்களுக்கு தெளிவையும், பல்வேறு கருத்துகளில் உகந்ததை எடுத்துக் கொள்ளவும் ஒரு வாய்ப்பினையும் கொடுக்க வேண்டும். இதுகாறும், மன்றம் அவ்வழியிலே சென்று உள்ளது. இங்கு அரசியல், சமயம், இலக்கியம், கவிதை, தொழில்நுட்பம் என்று சகலத்திலும் புலமை பெற்ற நண்பர்கள் உள்ளனர். அரசியல்வாதிகள் போல ஆதாயம் தேடும் நிர்பந்தங்கள் அல்லாது, நடுநிலைமையாக விமர்சிக்கும், கருத்து தெரிவிக்கும் நம் மன்ற நண்பர்களின் பொறுப்புணர்ச்சியை சந்தேகிப்பது நியாயம் அல்ல. ஆக பிரச்னைகளைக் கண்டு விலகிச் செல்லாமல், ஆக்கபூர்வமான கருத்துகளை நண்பர்கள் பதிவு செய்வதைத் தடை செய்ய வேண்டாம் என்பதே என் தாழ்மையான கருத்து.

எங்காவது விவாதம் வழி தவறி செல்கிறது என்றால், கண்டிப்பாக நண்பர் இளசு அவர்களுக்கு censor செய்யும் உரிமை உண்டு.

நண்பர் பாரதி அவர்களுக்கு, உங்களின் மாற்று கருத்தை அறிய ஆவல் உண்டு. பதிவு செய்யுங்கள்.

நன்றி.

இளசு
16-09-2003, 12:48 AM
பாரதி தம்பி...
(1)வேறுபாடுகளை அப்படியே மனதில் வைத்துக் கொள்ளாமல்
பேசி களைந்தெறிய வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் அப்படி
சொன்னேன்.
(2)இந்த என் அணுகுமுறை அண்ணன் இளசு சொன்னது
போல் முதிர்ச்சி இல்லாத அணுகுமுறையாக தோன்றினால் என்ன
செய்வது?
(3)நண்பர் நண்பனில் கருத்தில் எது தவறு என உங்களுக்குப்
பட்டது என்பதை அறிந்து கொள்வதில் இன்னும் என் ஆவல் இருக்கிறது.

(4)இளசு அண்ணா கூட இப்படி எல்லாம் பேசுவாங்களா?
கவலையாகவும், ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
ஏன் இங்கே வந்தோம் என்றே மனசு நினைக்கிறது?!!!
பரவாயில்லை..


என்னை மிகவும் கவர்ந்த இளவல் இக்பாலுக்கு,

என்னையும் அறியாமல் உங்கள் நல்ல மனசை புண்படுத்திவிட்டமைக்கு
முதலில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

இப்போது நான் பேசுவது மன்ற உறுப்பினனாய்.
பலர் கருத்தும், தலைவர் விருப்பமும் அறிந்து அதற்கேற்ப செயல்படும்
கண்காணிப்பாளனாய் அல்ல!

(1) ஒரு விடுதியில், ஒரே அறையில் தங்கி பலகாலம் பழகிய நல்ல அறிவு,
படிப்பு உள்ள இரு நண்பர்கள் கூட பாபர் மசூதி பற்றி
கடைசி வரை ஆரோக்கியமாக பேசி அனைத்து சந்தேகங்களையும் " களைந்து" கொள்வது
என்பது நல்ல உள்ளத்தின் ஆசையாக இருக்கலாம்.
நடப்பது வேறாக முடியும் என்பதே என் கணிப்பு.
மதமும் அரசியலும் இணைந்து மிகச்சிக்கலாகிவிட்ட பிரச்னை இது.
நம் மன்ற உறுப்பினர்கள் கிடைத்த நேரம், கணினி வசதிப்படி இங்கே
அந்த பிரச்னை பற்றி எழுதினால்,
முழுவிளக்கம் தெரியாமல், சொன்னவரின் இதயசுத்தி, த்வனி புரியாமல், மனத்தாங்கல், சங்கடம் இவையே விளையும்.

இதை ஒதுக்கிவிட்டு மனிதநேயமே நம் மதமாக நாம் இங்கே பழகவேண்டும் என்பது என் ஆசை.
நம்மால் பாபர் மசூதி பிரசினையை இங்கே பேசி தீர்க்க
முடியாது.
ஆனால், பேசினால் பலர் மனம் வெதும்ப வேதனைப்படும் நிலை வரும் என்பது உறுதி.
அறிவை மீறி உணர்ச்சி வேலை செய்யும் களம் இது.

மத அலசல்கள் தேவை - நண்பன் சொல்வது போல... பாஸீட்டீவ் அலசல்கள்..
மதநோக்குகளில் உள்ள ஒற்றுமைகள், மதச்சான்றோர் சொன்ன தத்துவங்கள்,ஞானிகளின் தேடல்கள்... இப்படி!

கலாம் வருங்கால சமுதாயம் எத்தனை வழிபாட்டு தலங்களை
விட்டுசென்றோம் என்று பார்க்காது. எவ்வளவு வலிமையான பாரதத்தை விட்டுச்சென்றோம் என்றே பார்க்கும்.[/color]

அந்த சில ஏக்கர் நிலத்தை வைத்து சில ஆட்சிகள் கவிழட்டும், பல உயிர்கள்
போகட்டும்... அது அரசியல் -மதவாதிகளின் கைங்கர்யம்!
இங்கே ஒரு மன்ற நெஞ்சமும் புண்பட்டுவிடக்கூடாது என்பதே என் கவலை!
(ஏற்கனவே கணக்கு ஆரம்பித்துவிட்டது.)

(2) ஒரு முறை கரவையை கதிர் என்றேன்..
உடனே பூ நான் பதரா என்றார்.
பாரதியின் அணுகுமுறை முதிர்ச்சி என்றதில்
இக்பாலின் கேள்வி முதிர்ச்சியின்மை என்ற அர்த்தம் வந்ததில் அதிர்ந்துவிட்டேன்.
நினைத்ததை எழுத்தில் கொண்டுவர என்னால் முடியும் என்ற கர்வம்
நான் நினைக்காததையும் கொண்டுவர முடியும் என்ற அளவுக்கு
மகாகர்வமாகிவிட்டது.

நேரில் பாராமல் எழுத்தில் பரிமாறும் எண்ணங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்
படலாம் என்ற என் கணிப்புக்கு இதுவே எடுத்துக்காட்டு!

(3) நீங்களும் நண்பனும் இந்த மடலுக்கு அடியில் மீண்டும் உங்கள்
விருப்பம் தெரிவித்தால், பாரதி மீண்டும் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

(4) அண்ணா என்றழைப்பது பேச்சுக்குத்தானா? உங்கள் அண்ணன் சொல்லிக்
கோபம் வந்தால் உரிமையில் கேட்டு, விளக்கம் பெற்று
சாந்தமாக மாட்டீர்களா? அண்ணன் " திட்டியவுடன்" நம் வீட்டுக்கு ஏன்
வந்தோம் என்று இருக்குமா?
இத்தனைக்கும் அண்ணனின் பாசம் புரிந்த தம்பி...
ஒன்று புரிகிறது --- என் மேல் வைத்த அளவு கடந்த அபிமானமே
ஒரு சுருதி மாறிய வரி
இந்த அளவுக்கு வலி கொடுக்க காரணம்..

ஒன்று புரிந்துகொள்ளுங்கள் இக்பால்..
என் அன்பை மறுதலித்து ஒருவர் போனால்
அவர் அன்பை இழந்ததற்காக நான் வருந்துவது குறைவே!
அவருக்காக என் மார்பில் சுரந்த அன்பைப்
பருகாமல் அவர் விலக,
நெறி கட்டி நான் படும் வேதனைதான் அதிகம்.

என் வேதனை உங்களால் பொறுக்கமுடியாது என்பதும் தெரியும்.


பி.கு:ஒரு கண்காணிப்பாளனாய் பண்பட்டவர் பகுதியில் கருத்துக்கணிப்பு
தலைப்பு தொடங்கலாம் என்பது என் எண்ணம்.
தலைப்பு : பாபர் மசூதி உள்பட்ட மத மோதல் தலைப்புகளை
இம்மன்றத்தில் " ஆரோக்கியமாக" விவாதிக்கலாமா?
உங்கள் அனைவரின் கருத்தும் அறிந்து, மற்ற கண்காணிப்பாளர்கள்,பப்பி அவர்கள், தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவின் முடிவுக்கு
விடுவோம். வரும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்.</span>

இக்பால்
16-09-2003, 05:39 AM
என்னை மிகவும் கவர்ந்த இளவல் இக்பாலுக்கு,

எனக்கு மட்டும் என்னவாம்? நான் முதன்முதலில் ஆசைஆசையாய்
அண்ணா என அழைத்த, நினைத்த முதல் ஆளாம் நீங்கள்.என்னையும் அறியாமல் உங்கள் நல்ல மனசை புண்படுத்திவிட்டமைக்கு
முதலில் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.


மன்னிப்பு எல்லாம் தம்பி அண்ணனிடம் எதிர்பார்க்கவில்லை. அது பாவம்.
நீங்கள் யார் மனதும் புண்படாமல் பேசுவதில் கருத்தாய் இருப்பீர்கள்.
உங்கள் அணுகுமுறை எனக்கு தெரிந்த ஒன்று. அதுதான் மனசில்
வைக்காமல் கேட்டு விட்டேன்.அண்ணன் " திட்டியவுடன்" நம் வீட்டுக்கு ஏன்
வந்தோம் என்று இருக்குமா?


என் மகள்களை(15,13 வயது) திட்டினால், இப்படித்தான் சொல்லுவார்கள்.
அறிவான குழந்தைகள் ஆதலால் அவர்கள் என் குழந்தைகளானாலும்,
அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஏனென்றால் இந்த வார்த்தைக்கு
பிறகு என்ன ஆச்சு என ஒன்று விடாமல் கேட்பேன். இப்பொழுது
நீங்களும்தான் கேட்கிறீர்கள்.என் அன்பை மறுதலித்து ஒருவர் போனால்
அவர் அன்பை இழந்ததற்காக நான் வருந்துவது குறைவே!


என் மனைவி என்னிடமோ, குழந்தைகளிடமோ " நான் இறந்தால்தால்
என் அருமை உங்களுக்குத் தெரியும்" என எப்பொழுதாவது சொல்லும்
பொழுது நான் இந்த வார்த்தையைச் சொல்ல தவறியதே இல்லை.

இளசு அண்ணா....கவலை வேண்டாம். நான் இந்நிகழ்ச்சியை அப்பொழுதே
மறந்துவிட்டேன். எங்கே சிரிங்க பார்க்கலாம்!

-அன்புடன் அண்ணா.

இக்பால்
16-09-2003, 05:52 AM
அன்பு இளசு அண்ணாவுக்கு,....என்பதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அன்புடன் அண்ணா என்பதை அன்புடன் தம்பி என படிக்கவும்.

( 5வருட பழக்கதோஷம். சொன்னால் புரியாது. அந்த டென்மார்க்
இணைய வலைப் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால்தான் புரியும்.
நேற்று முன் தின இரவு 2 மணி. டென்மார்க்கிலிருந்து ஒரு
தொலைபேசி அழைப்பு. "அண்ணா ...உங்களுக்கு ஒரு மறுமகளை
20 நிமிடங்களுக்கு முன் உங்கள் தங்கைப் பெற்று இருக்கிறார்.
பெயர் ஸ்ருதி. தாயும் சேயும் நலம்.". இதுதான் என் நிலை.)

இக்பால்
16-09-2003, 06:14 AM
நண்பர் நண்பனுக்கு,

நான் தனிமையாய் உணர்ந்தபொழுது நீங்கள் நீட்டிய ஆதரவுக்கரம்
எனக்கு மிக மன உறுதிக் கொடுத்தது. ஒரு உறுப்பினரின் தேவையை
உடனே நீங்கள் புரிந்து கொண்டது மிக்க சந்தோசம். இளசு அண்ணாவுக்கு என்றும் நம் ஆதரவு உண்டு எனச் சொல்வோமா? -அன்புடன் இக்பால்.

இளசு
17-09-2003, 08:58 PM
என் இளவலுக்கு
எனக்கு அண்ணன் கரிகாலன் போல்
என்றுமே நான் உங்கள் அண்ணாதான்!
உங்கள் பதில் மடல் தந்தது நெகிழ்ச்சி! மகிழ்ச்சி!!

இக்பால்
18-09-2003, 06:56 AM
இளசு அண்ணாவின் பதில் காண எனக்கு மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
:):):)

Nanban
23-09-2003, 08:37 AM
ஒரு விடுதியில், ஒரே அறையில் தங்கி பலகாலம் பழகிய நல்ல அறிவு,
படிப்பு உள்ள இரு நண்பர்கள் கூட பாபர் மசூதி பற்றி
கடைசி வரை ஆரோக்கியமாக பேசி அனைத்து சந்தேகங்களையும் " களைந்து" கொள்வது
என்பது நல்ல உள்ளத்தின் ஆசையாக இருக்கலாம்.
நடப்பது வேறாக முடியும் என்பதே என் கணிப்பு.
மதமும் அரசியலும் இணைந்து மிகச்சிக்கலாகிவிட்ட பிரச்னை இது.
மத அலசல்கள் தேவை - நண்பன் சொல்வது போல... பாஸீட்டீவ் அலசல்கள்..
மதநோக்குகளில் உள்ள ஒற்றுமைகள், மதச்சான்றோர் சொன்ன தத்துவங்கள்,ஞானிகளின் தேடல்கள்... இப்படி!

கலாம் வருங்கால சமுதாயம் எத்தனை வழிபாட்டு தலங்களை
விட்டுசென்றோம் என்று பார்க்காது. எவ்வளவு வலிமையான பாரதத்தை விட்டுச்சென்றோம் என்றே பார்க்கும்.

பி.கு:ஒரு கண்காணிப்பாளனாய் பண்பட்டவர் பகுதியில் கருத்துக்கணிப்பு
தலைப்பு தொடங்கலாம் என்பது என் எண்ணம்.
தலைப்பு : பாபர் மசூதி உள்பட்ட மத மோதல் தலைப்புகளை
இம்மன்றத்தில் " ஆரோக்கியமாக" விவாதிக்கலாமா?
உங்கள் அனைவரின் கருத்தும் அறிந்து, மற்ற கண்காணிப்பாளர்கள்,பப்பி அவர்கள், தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவின் முடிவுக்கு
விடுவோம். வரும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்
.

இளசு மற்றும் கலாம் சொல்வதில் முழு உடன்பாடு உண்டு எனக்கு. அதே சமயம், சில விவாதங்களை முழுமையாகத் தவிர்ப்பதும் நல்லதில்லை. இப்பொழுது எல்லோரும் நேரிடையாக பதிவுகளை பதிப்பித்து பின்னர் எல்லோரும் படித்து, ரசித்து, விமர்சித்து, சிலர் கோபப்பட்டு, சிலர் மனம் புண்பட்டு, பின்னர் தான் அந்தப் பதிவு தொடர்ந்து இருக்கலாமா, அல்லது தேவையான மாற்றங்கள் செய்யலாமா என்று கண்காணிப்பாளர்கள் ஆராயத் தொடங்குகிறார்கள். ஆனால், கொஞ்சம் சென்ஸிட்டீவான விஷயங்களில், பதிவை வெளியிடும் முன்பே, கண்காணிப்பாளர் குழுவிற்கு அனுப்பி அங்கேயே விவாதிக்கப்பட்டு, பின்னர் பதிவு செய்யப்பட வேண்டும். சென்ஸிட்டீவ்வான தலைப்புகளத் தொடங்கி வைப்பது கூட கண்காணிப்பாளர்களாகத் தான் இருக்க வேண்டும். இந்த ஒரு பக்கத்தில் மட்டும் - ஜனநாயகம் கிடையவே, கிடையாது என்றாக்கிவிட வேண்டும். தொடங்கப்பட்ட தலைப்பிற்கு வரும் ஒவ்வொரு கருத்துகளும், மேற்கண்ட விதிமுறைகளக் கொண்டு அலசி, ஆராய்ந்து பின்னர் வெளியிடப்பட வேண்டும். இது தொடர்பாக அங்கத்தினர்கள் யாவரும் PM செய்து கொள்ள அனுமதிக்கப் படக் கூடாது. இந்த பக்கத்திற்குள் நுழைவதற்கு, முன்னர் நடந்த விவாதங்களில், தர்க்கரீதியாக விவாதம் செய்தவர்களாகத் தேர்ந்தெடுத்து அனுமதிப்பது இன்னமும் பயன் விளைவிக்கும்.

இந்த ஒரு பக்கத்தை, சீரிய சிந்தனை உள்ளவர்களுக்கும், தர்க்கவாதிகளுக்கும், intellectual capability உள்ள அன்பர்களுக்கும் அர்ப்பணிப்பது சாலச் சிறந்ததாகும்.

இக்பால்
23-09-2003, 01:22 PM
நண்பர் நண்பனின் கருத்துக்கு நன்றி.-அன்புடன் அண்ணா.

poo
23-09-2003, 05:37 PM
நண்பன்.. தாங்கள் அடிக்கடி தளம் வந்தால் நலம்!

(நல்ல யோசனைகள் சொல்லும் உங்களை மிகவும் இழக்கிறோம்!!)

பாரதி
24-09-2003, 03:19 AM
நண்பனின் கருத்து நல்லதாகவே படுகிறது. கண்காணிப்பாளர்கள் விரைவில் கவனிப்பாளர்கள் என்று நம்புகிறேன்.

இளசு
24-09-2003, 08:11 PM
தலைவர் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்.

puppy
24-09-2003, 08:32 PM
நெறிபடுத்துணர்கள் அனைவருக்கும் ஒரே கருத்து இருப்பின் என்ன ஆகவேண்டுமோ அதை செய்யுங்கள்......தலைவருக்கு விபரத்தை தெரிவித்து
விட்டு ஆக வேண்டியதை செய்யுங்கள்...We like to empower all the moderators and do what is good for all.

எதாவது சந்தேகம் இருப்பின் என்னை தனி அஞ்சல் மூலம் தொடர்பு
கொள்ளுங்கள்:

பப்பி

இளசு
24-09-2003, 08:41 PM
நன்றி பப்பி அவர்களே...

ஆவன செய்கிறேன்.

balakmu
26-09-2003, 12:54 AM
அன்பு நண்பர்களான இளசு, இக்பால், மற்றும் நண்பருக்கு!! நான் ஒரே ஒரு கருத்தை மட்டும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எத்தனை நூறு ஜின்னாக்கள்
வந்தாலும், எத்தனை நூறு முஷாரப்கள்
எதிரிகளாய் வந்தாலும்
எங்கள் இதயத்தை துளைக்க முடியாது
நாங்கள் (நூரயை போன்ற) நூறு
இதயங்களை காப்பவர்கள்
காயபடுத்துபவர்கள் அல்ல என்று
சம்மட்டியால் அடிப்பது
போலிருந்தது.


ஆனால் இந்த மன்றத்தில் இது பற்றிய சர்ச்சை திசை மாறிச் சென்று, நம் இதயங்களை காயப்ப்டுத்திவிடுமோ என்று அச்சமாக உள்ளதது.

நாம் சகோதரத்துவத்தையும் தாண்டி ஏன் மனிதத்துவத்தை அடைய முயற்சி செய்யக் கூடாது?

எல்லோராலும் காந்தியாகிவிட முடியாது
அனால் காந்தியாக வேண்டுமென்ற
முயற்சியையாவது முறையாக
முயற்சிக்கலாமே!!


தவறாக எழுதியிருந்தால்
தயவு செய்து மண்ணிக்கவும்.

-அன்புடன் பாலா -

Nanban
26-09-2003, 04:26 PM
நெறிபடுத்துணர்கள் அனைவருக்கும் ஒரே கருத்து இருப்பின் என்ன ஆகவேண்டுமோ அதை செய்யுங்கள்......தலைவருக்கு விபரத்தை தெரிவித்து
விட்டு ஆக வேண்டியதை செய்யுங்கள்...We like to empower all the moderators and do what is good for all.

எதாவது சந்தேகம் இருப்பின் என்னை தனி அஞ்சல் மூலம் தொடர்பு
கொள்ளுங்கள்:

பப்பி

அனுமதி கிட்டியாகிவிட்டது....... நண்பர் இளசு அவர்களே, இனி ஆரம்பிக்க வேண்டியது தானே?

இளசு
29-09-2003, 02:25 AM
நண்பன் அவர்களே!
மென்பொருள் ஆளுமை இருந்தால் அல்லவா மேலே செயல்படுத்த?

சேரன்கயல்
29-09-2003, 04:56 AM
அருமையான ஆலோசனை நண்பன் அவர்களே...
தேவையில்லா சர்ச்சைகள், சஞ்சலங்கள் தவிர்க்க உங்களின் கருத்துக்கள் உதவக்கூடும்...

Nanban
08-10-2003, 08:47 AM
அனுமதி எல்லாம் கிட்டியாகி விட்டதா? இன்னும் எந்த அறிவிப்புமே வரவில்லையே? நண்பர் இளசு அவர்களே, இதைத் தொடர்ந்து பணிகள் ஏதும் நடக்கிறதா?

இளசு
09-10-2003, 04:15 AM
நண்பன் அவர்களுக்கு
நீங்கள் கேட்டபடிச்செய்ய கணினி வல்லுநர் தேவை.
மேலிடப்பார்வைக்கு வைக்கிறேன்.

முத்து
09-10-2003, 04:11 PM
கல்லுக்குள்ளும் ஈரமுண்டு...
அப்படியிருக்கும்போது
ஈரத்தைப் போதித்த திருநாட்டில்
ஒரு சின்னஞ்சிறு பூவுக்காய்
இறைவனிடம் இறைஞ்சியதில் வியப்பென்ன..?

எல்லைக் கொலைகளும் , கொடுமைகளும்..
மக்களின் உணர்வுகளைத் தூண்டி
அதில் குளிர்காயும் கேடுகெட்ட
அரசியல்வாதியின்
வெட்கங்கெட்ட வேலைகள்...
அனைத்து மக்களும் விழித்தெழ
மீண்டுமொருமுறை அவனையே
பிரார்த்திப்போம் ...

Nanban
13-10-2003, 08:27 AM
முத்து அவர்களுக்கு மிக்க நன்றி. (ஒரு வழியாக கணனியில் இருந்த பிரச்னையும் தீர்ந்து, இப்போ எல்லாவற்றையும் காண முடிகிறது.......)