PDA

View Full Version : கூர்க்காவின் பகல்- எஸ்.ராமகிருஷ்ணன்umakarthick
27-01-2009, 08:35 AM
கூர்க்காவின் பகல்- எஸ்.ராமகிருஷ்ணன்

படித்ததில் பிடித்தது..........
விழித்துக் கொண்டிருந்த எத்தனையோ பின்னிரவுகளில் அந்த நடைச்சப்தத்தை கேட்டிருக்கிறேன். யாருமற்ற தெருவில் தனியே விசில் அடித்தபடியே சைக்கிளை உருட்டிக் கொண்டு செல்லும் நாற்பது வயதை கடந்த கூர்க்காவை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். என்ன வேலையிது. எதற்காக இந்த மனிதன் தெருத்தெருவாக இரவில் சுற்றியலைகிறான் என்று புரியாமலும் கூட இருக்கும்.


ஒரு நாள் நேரத்திற்கு உறங்காமல் போனால் அடுத்தநாள் நமக்கு வேலை ஒடுவதில்லை. சதா எரிந்து விழுகிறோம். தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்கின்றவர்கள் கூட வருசம் முழுவதும் விழித்திருப்பதில்லை. இவர்கள் ஏன் தங்களை இப்படியொரு பணிக்கு ஒப்பு கொடுத்துவிட்டார்கள்.


நாம் உறங்க சென்ற பிறகு தான் கூர்க்காவின் உலகமே துவங்குகிறது. கூர்க்காவின் கண்கள் அடைத்து சாத்தபட்ட கதவுகளையும், யாருமில்லாத வீதிகளையுமே மட்டுமே காண்கிறது. அவனது காலடி படாத வீதிகளே இல்லை. இவ்வளவு மாபெரும் நகரை நு�ற்றுக்கும் குறைவான கூர்க்காகள் பாதுகாக்கிறார்கள்.


தோற்றத்தில் ஒன்று போல இருந்தாலும் கூர்க்காகள் ஒவ்வொருவரும் விசித்திரமானவர்கள். குணமாற்றம் கொண்டவர்கள். தேர்ந்த உடற்கட்டும், கூர்மையான பார்வையும் இயல்பாகவே அவர்களுக்கு அமைந்திருக்கிறது.

ஆனால் நான் அறிந்த கூர்க்காகள் பலரும் தங்களுக்கு கிடைத்த ஒரு வேலை என்று மட்டுமே காவல்பணியை செய்கிறார்கள். அவர்களுக்கும் நம்மை போலவே பயமும் இயலாமையும் உள்ளது. வருமானம் போதாமல் கடன்வாங்கி விட்டு வட்டிக்காரர்களிடமிருந்து தப்பியோடும் கூர்க்காகள் சிலரை அறிந்திருக்கிறேன்.


நாம் பயத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். கூர்க்காகள் வெளிப்படுத்துவதில்லை. பயம் மனித இயல்பில் ஒன்று. அதை சந்திப்பதற்கான துணிச்சல் மட்டும் நம்மிடமில்லை. அவர்கள் துணிச்சலானவர்கள்.

சென்னைக்கு வந்த புதிதில் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு கூர்க்கா எனக்கு அறிமுகமானார். முப்பது வயது கடந்த தோற்றம். கையில் டார்ச்லைட்டும், பழைய சைக்கிள் ஒன்றும் அவரிடமிருந்தது. கொச்சையான தமிழில் அவரால் பேச முடிந்தது.

நான் அறையில்லாமல் சென்னையில் அலைந்த நாட்களது. ஒரு நண்பனின் அறையில் படுக்க இடமில்லாமல் இரவெல்லாம் சுற்றியலைந்துவிட்டு தேநீர் குடிப்பதற்காக கடை தேடி அலைந்து கொண்டிருந்த மூன்று மணியளவில் அவர் என்னை தெருவில் நிறுத்தி விசாரணை செய்தார்

நானும் உங்களை போலவே இரவில் உறக்கமற்று சுற்றிதிரிகின்றவன் , உங்களுக்கு சம்பளம் தருகிறார்கள் எனக்கு அப்படி யாரும் தருவதில்லை என்று சொன்னேன். அவருக்கு சிரிப்பு வந்தது. எதற்காக இரவில் இப்படி சுற்றுகிறாய் என்று கேட்டார்.

எந்த ஒரு சிறப்பான காரணமும் இல்லை. பகலில் உள்ள பரபரப்பு இல்லாத வீதிகளும் வீடுகளும் அடைத்து சாத்தபட்ட கடைகளும் எனக்கு பிடித்திருக்கின்றன,

தெருவை ஒரு முறை நன்றாக திரும்பி பாருங்கள். எத்தனை பெரிய இரும்புகதவுகள், எவ்வளவு பூட்டுகள், வெளிகதவை மூடி, வாசற்கதவை மூடி, படுக்கையறையை மூடி என எத்தனை பாதுகாப்பு வளையங்கள். மனிதர்கள் யார் மீது இவ்வளவு பயம் கொண்டிருக்கிறார்கள். ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இடையில் ஒரு தும்பை செடி வளர்வதற்கு கூட இடமில்லாமல் ஏன் வீடு கட்டிக் கொள்கிறோம்.

இந்த இரவில் மின்னும் இத்தனை கோடி நட்சத்திரங்களும் இவ்வளவு ஏகாந்தமான காற்றும், பின்னிரவின் ஆகாசமும், பூ உதிரும் மரங்களும் ஏன் மனிதர்களுக்கு தேவையற்று போய்விட்டது என்று கேட்டேன். அவருக்கு நான் வேடிக்கையான ஆளாக தோன்றியிருக்க வேண்டும். கொஞ்சம் நடந்து போனால் டீக்கடை இருக்கும். ஒரு தேநீர் குடிக்கலாமா என்று கேட்டார்.

இருவரும் நடந்து போனோம். கடை திறந்திருந்தது.தேநீர் அருந்தியபடியே கூர்க்காவிடம் நீங்கள் இரவில் உறங்கி எவ்வளவு வருசமாகியது என்று கேட்டேன். அவர் சிரித்து கொண்டே அது பழகி போய்விட்டது. ஒரு நாளைக்கு ஆறுமணி நேர து�க்கம் போதும். நேரம் கிடைக்கும் போது து�ங்கி கொள்வேன் என்றார்.

இவ்வளவு வீடுகள் இவ்வளவு வீதிகளை சுற்றி வந்து உங்கள் பார்வையில் நகரம் எப்படியிருக்கிறது என்று கேட்டேன். அவர் தேநீர் குடித்தபடியே சொன்னார்

மனிதர்கள் இல்லாத போது தான் தெருக்கள் அழகாக இருக்கின்றன. பகலில் தான் எத்தனை சண்டை, சச்சரவு போராட்டங்கள். நல்லவேளை உறக்கம் என்ற ஒன்று மனிதர்களுக்கு இயல்பாக ஏற்பட்டுவிடுகிறது. இல்லாவிட்டால் எவ்வளவு பிரச்சனை யோசித்து பாருங்கள் என்றார்

அவர் சொன்னது முழுமையான உண்மை. மனிதர்கள் உறங்கும் போது அவர்கள் மட்டும் நிம்மதி கொள்வதில்லை. அவர்களோடு சேர்ந்து ஊரும் உலகமும் நிம்மதி கொள்ளவே செய்கிறது.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு பிறகு அவர் விடை பெற்று சென்றார். அதன் பிறகு சில வாரங்களுக்கு பிறகு ஒரு நாள் தேவிதியேட்டரின் பின்புறம் உள்ள ஒரு உணவகத்தில் அதே கூர்க்காவை சந்திக்க நேர்ந்தது. அவரோடு அவரது சகோதரன் போலவே சாயலில் இருந்த இன்னொரு கூர்க்கா இருந்தான். அவர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். என்னை பார்த்து சிரித்தபடியே கையசைத்தார்.

கூர்க்காவின் அறைக்கு நான் வரலாமா என்று கேட்டேன். அவர் வெட்கத்துடன் மிகச்சிறிய அறை என்று சொன்னார். பரவாயில்லை போகலாம் என்றதும் என்னை அவரது அறைக்கு அழைத்து போனார்.

புறாக்கூண்டு போன்று இருண்டு போயிருந்த ஒற்றையறை. அதனுள் மெல்லிய நாற்பது வாட்ஸ் பல்ப் எரிந்து கொண்டிருந்தது. ஒரேயொரு சூட்கேஸ். நாலைந்து உடைகள். சிவப்பு நிற பிளாஸ்டிக் வாளி. கெரசின் ஸ்டவ். நாலைந்து பாத்திரங்கள்.

கூர்க்கா தன் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்களை காட்டினார். புகைப்படத்தில் தனது குடும்பத்தோடு இருந்த அவரது முகத்தில் இருந்த சிரிப்பு இப்போது இல்லை. தனக்கு மாசம் ஆயிரத்தி இருநூறு ரூபாய் சம்பளம் என்றும் அதில் முந்நு�று ருபாய் போக மீதமுள்ளதை ஊருக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்று சொல்லி நேப்பாளத்தில் அதன் மதிப்பு அப்படியே இரண்டு மடங்கிற்கும் மேல் என்று சொன்னார். அவர்களைப் பொறுத்தவரை நமது ஊர் தான் வெளிநாடு.

இரவெல்லாம் விழித்து காவலிருக்கும் கூர்க்காவின் பகல் எப்படியிருக்கும் என்று கேள்வி மனதில் எழுந்தது. நான் கேட்காமலே அவரே சொல்லத் துவங்கினார்.

காலை அறைக்கு வந்தவுடனே உறங்க முடியாது. ஆறரை மணிக்கு உறங்கி பத்துமணிக்கு எழுந்துவிடுவேன். அதன்பிறகு சமைக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். மதியம் சில மணி நேர து�க்கம். அவ்வளவு தான் எங்கள் வாழ்க்கை. இந்த வேலையில் விடுமுறை என்பதே கிடையாது. ஊருக்கு ரெண்டு வருசத்திற்கு ஒரு முறை செல்வோம். அப்போது தேவையான அளவு உறங்கி கொள்வது உண்டு என்றார்

யோசிக்கையில் நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தை பார்க்கையில் கூர்க்காவிற்கு தன் பிள்ளைகள் நினைவிற்கு வராமலா போவார்கள். அல்லது பின்னிரவில் பூக்கும் மலர்கள் அவனுக்கு மனைவியை நினைவுபடுத்தாமலா இருக்கும். கூர்க்காவின் தனிமை சொல்லில் அடங்காதது. அது ஒரு ரகசிய வலி .

குடும்பத்தையும் குழந்தைகளையும் பிறந்த மண்ணையும் பிரிந்து வாழ்கின்றவர்கள் இயல்பிலே உறக்கமற்று போனவர்கள் தானே. கூர்க்காகளின் விழிப்பிற்கும் இது தான் காரணமா?என் கருத்து:


என் ஊரில் இருந்த கூர்காவின் முகன் இன்னும் நினைவிருக்கிறது எனக்கு, மாதம் ஒரு முறை வீட்டுக்கு வந்து வாசலில் நின்று 'சாப்'
என விநோதமாக கூப்பிடுவார், நான் பயந்து போய் வீட்டுக்குள் ஓடியிருக்கிறேன்..காலம் போக போக அம்மா கொடுத்த 5 ரூபாயை கூர்காவிடன் கொடுத்திருக்கிறேன்..அவர் சலாம் போடும் போதும் சந்தோசமாய் இருக்கும் ..சில சமயம் கூச்சாமாயிருக்கும் நமக்கு சலாம் போடுகிறாரே என..


நான் 10 வகுப்பு படிக்கும் போது என நினைக்கிறேன் அந்த கூர்காவை பார்க்கவே முடியலை..இரவில் 11 30 மணிக்கு கேட்கும் அவரின் விசில் சத்தம் இல்லாதது எதையோ இழந்தது போல இருந்தது..விசாரிக்கையில் அவருக்கு பேய் பிடித்து விட்டது என்றார்கள்..கொஞ்ச நாளில் இன்னொரு இளைஞன் வர ஆரம்பித்தான்..அவரின் மகனாகவோ மருமகனாகவே இருக்க கூடும்...

இப்போதெல்லாம் ஊருக்கு போகும் போது அவரை பார்க்கவே முடிவதில்லை

பாரதி
30-01-2009, 05:02 PM
உங்களுக்குப் பிடித்ததைப் படித்தேன் கார்த்திக்.

கணினி யுகத்தில் எனது வாசிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவது வருத்தமாகத்தானிருக்கிறது.

இராமகிருஷ்ணனின் படைப்புகளில் தனிமைக்கும், இருளுக்கும், இயற்கைக்கும் உள்ள தனித்தன்மைகள் அழகாக வெளிப்பட்டிருக்கும். வார்த்தைகளின் வர்ணனையில் நாமும் ஒன்றிப்போகும் அளவிற்கு அவருடைய விவரிப்பு மிகவும் வசீகரமானது. சாதாரண மனிதர்களிடையே இருக்கும் பிரச்சினைகளையும், அன்பையும் மனதில் தங்கும் அளவிற்கு எழுதும் சக்தி படைத்தவை அவருடைய படைப்புகள். அவை உங்களையும் கவர்ந்ததில் வியப்பேதுமில்லை.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி கார்த்திக்.

arun
31-01-2009, 03:47 AM
இந்த உலகில் தேவைகள் பூர்த்தியாக வேண்டும் என்றால் பணம் தேவை பணம் வேண்டும் என்றால் சில நேரங்களில் ஏதேனும் ஒன்றை இழக்க வேண்டி உள்ளது அதே நிலைமை தான் இந்த கூர்க்காக்களின் நிலைமை

umakarthick
05-02-2009, 01:56 PM
எஸ்.ராவின் அழகான எழுத்துக்கள் அவர் கண்ட காட்சிகளை அப்படியே நம் முன் கொண்டு வரும்..கூர்க்காக்களை நாமும் தான் தினமும் பார்க்கிறோம் ஆனால் அவர்களது வாழ்க்கையில் இவ்வளவு வேதனைகள் உள்ளது என்பதை இவ்வெழுத்தின் மூலமாகத்தான் அறிகிறோம்