PDA

View Full Version : போற்றுவோம் குடியரசு..!!சிவா.ஜி
26-01-2009, 05:47 PM
முப்புறமும் சூழ்ந்த அலைகள்
மகுடமாய் தலையில் மலைகள்
நாற்திசை காக்கும் அன்னையவள்
ஞாலத்தில் அவளுக்கினை யாருளர்?

அந்நிய அச்சுறுத்தல் ஆயிரமுண்டு
அனைத்தையும் அழிக்கும் உரமுண்டு
என் அன்னைதேசத்தில் வீரமுண்டு
எதிரிக்கும் இரங்கும் ஈரமுண்டு...

வடமிருந்து தென்னோக்கி
எனைத்தாங்கும் என் தாயின் கரம்
அவள் சேயாய் நான் பிறந்தது
ஆண்டவன் எனக்களித்த வரம்

அவனியில் ஆகப்பெரிய குடியரசு
அவளுக்குமுன் தலை தாழ்த்தும் முடியரசு
அனைத்திலும் வளர்ந்து வரும் வல்லரசு
அகிலமே விழிவியக்கும் நல்லரசு

அறுபதாம் குடியரசுக் கொண்டாட்டம்
ஆச்சர்யத்தில் அடுத்த நாட்டின் திண்டாட்டம்
நாமெல்லாம் இத்தோட்டத்தின் வண்டாட்டம்
நல்லதொரு நாட்டின் பூச்செண்டாட்டம்!

போற்றுவோம் குடியரசு
ஏற்றுவோம் அதன் புகழ்!
வாழ்க பாரதத் திருநாடு!

நிரன்
26-01-2009, 05:57 PM
குடியரசு தின நாளன்று அதற்குப் பொருத்தமான கவிதை

கவிதையின் வரிகளின் பினைப்பு மிக நன்றாகவுள்ளது
வாசிக்கும் பொழுது கவிதையில் ஒரு நயத்தை உணர முடிகிறது

மிக அருமை சிவா அண்ணா வாழ்த்துக்கள்

இந் நந்நாளில் நாட்டு மக்கள் எல்லாம் நலமாக வாழவும்
அமைதியாக வாழவும் இறைவனைப் பிரார்த்திப்போம்

சிவா.ஜி
26-01-2009, 06:02 PM
நன்றி நிரன். உங்கள் வாழ்த்துகள் பலிக்கட்டும் நாட்டுமக்கள் நலமாக வாழட்டும்.

அக்னி
26-01-2009, 06:05 PM
வணங்கும், போற்றும், வாழ்த்தும், பெருமிக்கும்
கவிதை...

வாசிக்கையில் இசையும் தன்னாலே இழைந்து இனிமையூட்டுகின்றது.
அவ்வாறான அழகிய சொல்லாடல்கள்...

ஒரு தேசத்திற் பிறந்ததற்காய், ஒவ்வொரு குடிமக்களும் பெருமை கொள்ளுவராயின்,
அதுவே அத்தேசத்திற்கு உயர் சிறப்பு...

அத்தகைய சிறப்பை இந்தியா தன்னகத்தே கொண்டிருப்பதால்,
இந்தியக்குடிமக்கள் ஒவ்வொருவரும் என்னைப்பொறுத்தவரையிற் பாக்கியவான்கள்...

அழகிய கவிதைக்கு வாழ்த்துகள்...
சுதந்திரதின நல்வாழ்த்துகள்...

சிவா.ஜி
26-01-2009, 06:10 PM
அழகான வரிகளில் என் மனதை மகிழ்வுறச் செய்துவிட்டீர்கள் அக்னி.

ஒரு தேசத்திற் பிறந்ததற்காய், ஒவ்வொரு குடிமக்களும் பெருமை கொள்ளுவராயின்,
அதுவே அத்தேசத்திற்கு உயர் சிறப்பு...

அதிலும் இந்த வரிகள்...நூற்றுக்கு நூறு உண்மை.

அன்றே பாரதி சொன்னான்...
“முப்பதுகோடி முகமுடையாள்
உயிர் ஒன்றுடையாள்
செப்புமொழி பதினாலுடையாள்
எனில் சிந்தனை ஒன்றுடையாள்”

என்று. எத்தனை அபிப்பிராய பேதமிருந்தாலும் பிறந்தநாடு என்பதில் பெருமைகொள்வதுதானே நல்ல குடிமகனுக்கு அழகு.

மிக்க நன்றி அக்னி.

(சுதந்திரதினமல்ல...குடியரசுதினம்)

பாரதி
26-01-2009, 06:20 PM
படிக்க மிக இனிமையாக இருக்கிறது சிவா. தந்தையர் நாட்டிற்கிணை இல்லைதான்! குடியரசு தினத்திற்கேற்ற கவிதை. மனம்திறந்த பாராட்டு சிவா.

காலடியில் கதறும் குரல் காதருகில் கேட்கவில்லையோ என்ற மனக்குறையுடன் வாழும் மக்களின் குறை அகலும் நாள் என்றோ..?

சிவா.ஜி
26-01-2009, 06:28 PM
மிக்க நன்றி பாரதி.
“எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே
ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே”

அக்னி
26-01-2009, 06:30 PM
உங்கள் கவிதையை வாசித்து முடிந்ததும்,
மகாகவியின்,
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு”
என்னும் கவிதை மனதில் நிழலாடியது...

அந்தக் கவிதையை வாசிக்கும் போது சொல்லமுடியாத ஓர் உணர்வெழும்.
அத்தகையதோர் உணர்வை உங்கள் வரிகளும் எனக்குத் தந்தன.எத்தனை அபிப்பிராய பேதமிருந்தாலும் பிறந்தநாடு என்பதில் பெருமைகொள்வதுதானே நல்ல குடிமகனுக்கு அழகு.
எனக்கு ஒரு உறுதிப்படுத்தும் சான்றிதழ் தேவைப்பட்டபோது, அதனைத் தருவதற்கு நான் பிறந்த நாட்டரசு, மறுத்துவிட்டது.
தற்போது நான் அகதி அந்தஸ்துக் கோரி, ஐரோப்பிய நாடொன்றிற் தங்கியிருப்பதனால்,
எனது அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களைக் காட்டியும்,
என்னைத் தனது நாட்டின் பிரஜையாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

இப்போ நான் எந்த நாட்டுக் குடிமகன்?

உரிமையே இல்லாதவிடத்து எப்படி என்னாற் பெருமை கொள்ள முடியும்?(சுதந்திரதினமல்ல...குடியரசுதினம்)
ஆமாமா...
ஆகஸ்ட் 15 தானே இந்தியச் சுதந்திரதினம்...
மாறிவிட்டது.
மன்னிக்க.

குடியரசுதின நல்வாழ்த்துகள்...

சிவா.ஜி
26-01-2009, 06:40 PM
எனக்கு ஒரு உறுதிப்படுத்தும் சான்றிதழ் தேவைப்பட்டபோது, அதனைத் தருவதற்கு நான் பிறந்த நாட்டரசு, மறுத்துவிட்டது.
தற்போது நான் அகதி அந்தஸ்துக் கோரி, ஐரோப்பிய நாடொன்றிற் தங்கியிருப்பதனால்,
எனது அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களைக் காட்டியும்,
என்னைத் தனது நாட்டின் பிரஜையாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

இப்போ நான் எந்த நாட்டுக் குடிமகன்?

உரிமையே இல்லாதவிடத்து எப்படி என்னாற் பெருமை கொள்ள முடியும்?

...

வேதனைதான் அக்னி. பெற்றோரே இல்லாத குழந்தையிடம் சென்று, என் அம்மா என்னை முத்தமிட்டார்கள், என் அப்பா என்னை ராட்டினத்தில் சுற்றினார் என்றெல்லாம் சொல்லும்போது அந்த பிஞ்சு நெஞ்சத்துக்கு எத்தனை வேதனையிருக்கும்...? அந்த வேதனையை நான் உங்கள் எழுத்தில் உணர்கிறேன் அக்னி.

நான் பொதுவாக சொன்னேன். ஆனால் சில நாடுகள்(சில ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட) பிரஜைகளை ஒரு பொருட்டாய் மதிப்பதில்லை. அப்படியிருக்கும்போது எப்படி பெருமைகொள்ள முடியும்?

வருந்துகிறேன் அக்னி.

அக்னி
26-01-2009, 06:46 PM
வருந்துகிறேன் அக்னி.
உங்கள் மென்மையான மனம் எனக்குத் தெரியும்.
அதனால், இந்தப்பதிவை இடும்முன்னர் நான் யோசித்தேன்.

ஆனால், சிவா.ஜி...
எனக்கு வருத்தம் ஏதும் இல்லை.
பாசம் தந்திருந்தாற்தானே, பாசம் வைக்கத் தோன்றும்...
பாசம் வைத்தாற்தானே, இழக்கையில் அல்லது இல்லாமையில் வேதனை தோன்றும்...

முதலே கோணலாகிவிட்டதால், முற்றும் கோணலாகிவிட்டது.
இனி நேராகுமா என்பதுதான் தெரியவில்லை.

சரி. இதை இப்பிடியே விட்டுவிடுவோம்.
உங்கள் அழகுக்கவித்திரி, திசை மாறுவதைத் தவிர்ப்போம்.