PDA

View Full Version : ஏழை வீட்டுச் சுவர்கள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
25-01-2009, 04:51 PM
குண்டும் குழியுமான
அன்றாடங் காய்ச்சிகளின்
அவலமான உடல் போல்
ஆயிரத்தெட்டு விரிசல்களுடன் நிற்கும்
அவர்கள் வீட்டின் காரைச் சுவரும்

குட்டித் தீவுகள்
பெரும் கண்டங்கள்
மலைப் பிரதேசங்கள்
அனைத்தின் வரைபடங்களும்
அச்சுப்பிசகாய் வெடித்திருக்கும்

அபாயகரமான பகுதிகளையும்
அப்பட்டமாய் குறித்திருக்கும்
பெருசுகளின் வெற்றிலைச் சிதறல்கள்

மதிப்பில்லா சுவற்றின் மீதும்
பல நுறு ரூபாய்கள்
வரிசையாய் தொங்குகின்றன
பால் கணக்கு பாக்கிகளாய்

தானே தாங்குவோர் வேண்டி நிற்க
அவசர கதியில் அப்படியே
சாய்த்துச் சென்ற வாகனங்களை
சாயாமல் தாங்கி நிற்கின்றன
இழுத்துப் பிடித்து.

குருவி விஜய்யும்
பில்லா அஜீத்தும்
அமைதியாய் அடங்கியிருக்கிறார்கள்
சுவற்றின் இரண்டு ஓரங்களிலும்

ஆனால் சீமான் வீட்டுச் சுவர்கள் மட்டும்
அவர்களைப் போல் வலுத்து உறுதியாய்
வெறுமனாய் காட்சி தருகின்றன
காலணா பிரயோஜனங்களற்று.

சுகந்தப்ரீதன்
26-01-2009, 04:03 AM
"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினிலே ஓலைக் குடிசைக்கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்"-
என்ற பாடல்தான் சுனைத் அண்ணா நினைவுக்கு வருகிறது உங்கள் கவிதையை கண்டதும்..!!

காலணா பிரஜோனமற்று மட்டுமல்ல.. மீறினால் தண்டிக்கபடுவீர்கள் என்று மிரட்டிக்கொண்டு வேறல்லவா இருக்கிறது..!!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
27-01-2009, 03:39 PM
மிகச்சரியாக சொன்னீர்கள் சுகந்தா.

தென்னாட்டு சிங்கம்
28-01-2009, 02:39 AM
எஸ். எம். ஹஸனீ அவர்களின் கவிதை வரிகளில் இருந்து, பாமரனுக்காய் பரிந்து பேசும் பாட்டாளியின் மனதை காண்கிறேன்.. கவிதை வரிகள் இன்றைய ஏழைகளின் அன்றாட பிரதி பலிப்பு.. ஆனால் என்ன செய்ய.. நம்மால் இதுபோல் கவிதைகளை படிக்கும் போது மட்டுமே அந்த நிமிடங்களில் ஆதங்கப் படுகிறோம்.. அடுத்த நிமிடமே நம் ஆதர்சன வாழ்வை நோக்கி சென்று விடுகிறோம்.. இதுதானே நம் வாழ்க்கை..

முடிந்தால் நம்மை சுற்றி உள்ள ஏழைகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்..

ஆதி
30-01-2009, 11:40 AM
நல்ல கரு ஜூனத்

//ஆனால் சீமான் வீட்டுச் சுவர்கள் மட்டும்
அவர்களைப் போல் வலுத்து உறுதியாய்
வெறுமனாய் காட்சி தருகின்றன
காலணா பிரயோஜனங்களற்று.//

ஆனால் இந்த வரிகள்.. தலைப்போடு முடிப்பில்லாமல் கவிதையை முடிக்கிறதோ என்று தோன்றுகிறது.. விளக்குங்களேன்.. மகிழ்வேன்..

வாழ்த்துக்கள்..

இளசு
01-03-2009, 09:42 PM
உலக அழகியும் பெண்..
பொன்னுத்தாயி அம்மாவும் பெண்..

பலனளிக்கும் பிறப்பொன்று - Utilitarian
அலங்காரப் பிறப்பொன்று - Decorative..

குரோட்டன்ஸுக்கும் கத்திரிக்கும் உள்ள வித்தியாசம் போல..


ஏழை வீட்டுச் சுவருக்குத்தான் எத்தனை எத்தனை பயன்பாடுகள் -
வரைபடமாக
கணக்கேடாக
வெற்றிலைச் சாறுதாங்கியாக ( அபாய அறிவிப்பு - அபாரம்..)
மிதிவண்டி சாய்ப்பகமாக!

இன்னும்
ஒப்பாரி சளி சிந்தி துடைக்கலாம்..
எண்ணெய்ச்சிக்கு தலைசாய்த்து அயரலாம்
பயமின்றி பிள்ளை படம் வரையலாம்
எரவாண இடைவெளி ஃஷெல்ஃப் ஆக்கலாம்
வறட்டி தட்டலாம்
சுரை படரலாம்
சிலந்தி வசிக்கலாம்
தெருநாய்க்கு நிழல் தரலாம்பல பிள்ளைகள் பெற்ற தழும்பு வயிறு - ஏழைச் சுவர்!
மழமழ மலடி வயிறு - பணக்காரன் சுவர்!


பாராட்டுகள் ஜூனைத்!