PDA

View Full Version : அப்பாஆதவா
25-01-2009, 04:32 AM
சென்ட்ரல் வந்திறங்கிய போது மணி ஆறு.

இறங்கிய பின்னர் சற்றே பயம் தொற்றியது. டிக்கெட் இல்லாமல் பயணிப்பது அதுவே முதல் முறை. இன்னும் சொல்லப் போனால் ரயிலில் பயணிப்பதே அதுதான் முதல் முறை. நான் நினைத்ததைப் போல எந்த ஒரு ரயில்வே அதிகாரியும் டிக்கெட் சோதனை செய்யாதது என் அதிர்ஷ்டம்.

திருட்டுப் பூனையைப் போல செண்ட்ரலைவிட்டு வெளியேறி ஏதாவது ஒரு ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடலாம் என்று முடிவெடுத்தேன். சென்னை எனக்குப் புதியது என்பதாலும் சென்னையில் எந்த ஒரு உறவினரும் இல்லாததாலும் தங்குவதற்கோ, காலைக் கடன்களை செவ்வனே முடிப்பதற்கோ எந்த வசதியும் இல்லாத நிலையில் செண்ட்ரலுக்கு அருகே உள்ள ஒரு ஹோட்டலுக்குச் சென்றேன். நன்றாக சாப்பிட்டுவிட்டு வெளியேறிய போது மணி எட்டு. செண்ட்ரலிலிருந்து பாரிமுனைக்கு நடந்தே சென்றேன் அங்கே ஏதேனும் வேலை கிடைக்கலாம் என்ற யோசனையில்.

அப்போதுதான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது ஹோட்டலில் வேலை செய்தால் தங்குமிடமும் கிடைக்கும் சாப்பாட்டிற்கும் பிரச்சனை இருக்காது என்று. ஆனால் எடுத்த எடுப்பிலேயே ஒரு நல்ல வேலை ஹோட்டலில் கிடைக்க வாய்ப்பில்லை. ஆதலால் சற்றே சங்கோஜமும் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. சில ஹோட்டல்களில் நுழைந்து வேலை கேட்டதும், அவர்கள் கேட்டது, " துணிமணியெல்லாம் கொண்டுவரலையா?" என்பதுதான். காரணம், ஏராளமான ஹோட்டல்களில் பணிபுரிபவர்கள் என்னைப் போல ஊரில் சொல்லாமல் கொல்லாமல் ஓடிவந்தவர்களாகத்தான் இருக்கும். சென்னையில் தங்குமிடம் கிடைக்காமல் ஹோட்டலில் வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்களாக இருப்பார்கள். ஆதலால் எப்போது வேண்டுமானாலும் ஒரு ஹோட்டலை விட்டு இன்னொரு இடத்திற்குத் தாவிவிட முடியும்.. துணிமணி இருந்தால் அது அந்த ஹோட்டல் நிர்வாகிகளுக்கு சற்றேனும் திருப்தியாக இருக்கலாம். இது என் கருத்து. அப்படி இருந்தும் என் நிலையைக் கருத்தில் கொண்டு ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்தது. சமையல் பாத்திரங்கள் கழுவும் வேலை.

இப்படித்தான் கொஞ்சநாட்கள் சென்றது. வீட்டை விட்டு ஓடிவந்த நினைவுகள் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்போது கண்களில் நீர் துளிர்க்கும் சில சமயங்களில் வீட்டுக்குத் திரும்பிவிடலாமா என்று கூட யோசிப்பேன். சில நிமிடங்களில் நானே என் முடிவை மாற்றிக் கொள்வேன். அதற்குக் காரணம் இருக்கிறது. எனது குடும்ப பிண்ணனி ; என் உறவினர்கள் யாவரும் பெரும் பொறுப்பில் இருப்பவர்கள். ஓடிப்போனவன் என்று என்னை ஏளனம் செய்யக் கூடும் என்பதால் அவ்வித ஏளனங்களைத் தாங்கத் திராணியில்லாமல் முடிவை மாற்றிக் கொள்வேன்.

மூன்றுமாதங்கள் கடந்த நிலையில் எனக்கு ஹோட்டல் வேலை கசத்தது. சென்னையில் Ads என்ற பத்திரிக்கை மாதம் ஒருமுறை வெளிவந்துகொண்டிருந்தது. எந்த தகுதியுமில்லாத நமக்கு ஏதேனும் வேலை கிடைக்குமா என்ற நப்பாசை எழுந்தது, விளைவு.. ads கைகொடுக்க, ஒரு சிறு அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலை கிடைத்தது.. ஹோட்டலில் வேலை செய்த அந்த மூன்று மாதங்களில் எனக்கான தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டேன். சென்னையைப் பற்றிய விபரங்களும் ஓரளவு தெரிந்தன. புதிதாக சேர்ந்த அலுவலகத்தில் தங்கிக் கொள்ளலாம் என்பதால் தங்குமிடம் பிரச்சனை இல்லாமல் போனது.

என்னதான் ஊரைவிட்டு ஓடி வந்துவிட்டாலும் என் வீட்டு ஞாபகம் என்னை தினமும் இரவு அழுகச் செய்யும். கடிதங்கள் எழுதத் தோன்றும். நாட்கள் இப்படியே சென்றுகொண்டிருந்தது. ஓர்நாள் இரவு மிகவும் அழுது களைத்த கையோடு ஒரு கடிதத்தில் என்னைக் குறிப்பிட்டு வீட்டுக்கு அனுப்பினேன். அனுப்பிய சமயத்தில் சற்று பயம் என்றாலும் பாசம் பயத்தை மறைத்தது...

இப்படி பாசம் வைத்திருப்பவன் ஓடி வந்ததும் ஆச்சரியமான விசயம் அல்லவா?

என்னுடன் பிறந்தவர்கள் மூவர் ; என்னோடு சேர்த்து நான்கு பேர். அதில் ஒரு சகோதரியும் அடக்கம். பொருளாதாரப் பிரச்சனையில் உழன்றுகொண்டிருந்த அப்பாவை வாட்டி வதைக்கும் அம்மாவும், எதற்கெடுத்தாலும் குறைசொல்லி அப்பாவிடமோ அம்மாவிடமோ அடிவாங்கிக் கொடுக்கும் தம்பிகளும் எனது ஓட்டத்திற்குக் காரணமாக இருந்தார்கள். இத்தனைக்கும் எனக்கு வயது பதினான்கைத் தாண்டவில்லை. பத்தாம் வகுப்பும் முடிக்கவில்லை. அப்பாவின் அதீத கண்டிப்பு எனக்கு அவர் இழைக்கும் குற்றமாகத் தெரிந்தது. அம்மாவின் நியாயக் கோபங்கள் எனது அந்த வயதிற்குப் பாகற்காயாக இருந்தது.. என்றாலும் ஏதோ ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருந்த பாசத்தைத் தீண்ட அவர்கள் ஒருமுறையேனும் என்னுடம் பாசமாக இருக்கவில்லை என்பதுதான் எனது ஓட்டத்தின் மிகப்பெரும் காரணமாக அமைந்தது.

முன்னெச்சரிக்கையாக கடிதத்தில் எனது முகவரியைக் குறிப்பிடவில்லை. ஆகவே பதில் கடிதமோ அல்லது வீட்டிலிருந்து ஆட்களோ வருவார்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சில மாதங்கள் சென்றன. மறுபடியும் கடிதம் எழுதவேண்டும் என்ற எண்ணம் பிறக்கவில்லை.. சென்னைக்கு வந்து என்னைத் தேடி அடித்து இழுத்துச் செல்வார்கள் என்ற அச்சம் இருந்ததால் முதற்கடிதத்தோடு நிறுத்திக் கொண்டேன்.

அன்றொருநாள் எனது அலுவலக வெளி வேலைகளை முடித்துவிட்டு திரும்புகையில் எனது அலுவலகத்தில் அப்பாவும் அவர் நண்பரும் அமர்ந்திருக்கக் கண்டு திகைப்புற்றேன்.ஆம், என்னை இத்தனை மாதங்களும் தேடிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். என்னைக் கண்டிப்புடன் வளர்த்த அதே அப்பா...

கைகால்கள் நடுநடுங்க அலுவலகக் கோப்புகளை முதலாளியிடம் கொடுத்துவிட்டு அப்பா அமர்ந்திருந்த பக்கம் திரும்பினேன். எந்தவித சலனமின்றி அமர்ந்திருந்த அவர் என்னைக் கூட்டிக் கொண்டு போவதற்காகத்தான் வந்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன். அவருடன் வந்திருந்த நண்பன் சென்னை நண்பராக இருக்கலாம். அல்லது சென்னையை அறிந்த நண்பராக இருக்கலாம். அவர் என்னிடம் பேசிய முதல் வாசகமே " அம்மாவுக்கு உடல் சரியில்லை " என்பதுதான்.

என்னைக் கூட்டிக் கொண்டு போகத்தான் சொல்கிறார் என்பது நான் அறிவேன். ஏனெனில் என் அம்மாவைப் பற்றி நான் அறிந்ததைக் காட்டிலும் வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். மிகவும் தைரியசாலி என்பதைவிட ஒருவரை நினைத்து உருகித் தேயும் அளவிற்கு அவரின் மன உறுதி இல்லை என்பது நான் அறிந்த விசயம். என்றாலும் அப்பா சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம். முன்பு வீட்டில் இருந்த பொழுதில் கூட அதிகம் அவரிடம் பேசமாட்டேன். இப்பொழுது தலைகுனிந்து நிற்கும் நான் அவரிடம் என்ன பேசமுடியும்? மெல்ல தலையாட்டிவிட்டு ஊருக்குப் பயணமானேன்.

சென்னையைப் பார்த்திராத அப்பா, உடன் வந்த நண்பரைக் கொண்டு சென்னையை ஒருநாள் சுற்றிப் பார்த்துவிட்டு என்னை ஊருக்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எதிர்பார்த்திருந்ததைப் போல என் அம்மாவுக்கு உடல் நிலை அப்படி ஒன்றும் கவலைக்கிடமாக இல்லை. சற்றே நிம்மதி என்றாலும் ஊருக்குத் திரும்பிய என்னைப் பார்ப்பதற்காகவே வரும் உறவினர்களில் பலர் வாய் கூசும் வார்த்தை கொண்டு தூற்றினார்கள். நான் எதிர்பார்த்ததைப் போல உறவினர்கள் மத்தியில் எனது பெயர் சொல்வதற்கும் கெட்டுப் போயிருந்தது.. தினம் தினம் அழுது புழங்கினேன். இதெல்லாவற்றையும் விட, என்னை மற்ற சகோதர சகோதரியைக் காட்டிலும் ஒதுக்கி வைத்தார்கள். அது எனக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையைத் தோற்றுவித்தது... இன்னும் சில நாட்களில் பழைய பாடம் திரும்பி படிக்கப்பட்டது.. காரணமில்லாமல் அப்பாவிடமும், காரியமில்லாமல் அம்மாவிடமும் அடிவாங்க,... மீண்டும் ஓடினேன் சென்னைக்கு,.........

வாழ்க்கையில் இப்படி வீட்டைப் புரிந்துகொள்ளாமல் ஓடியவர்கள் அதிகம். வீட்டைவிட்டு ஓடும் அத்தனைபேரும் நல்ல காரணத்தை வைத்திருப்பதில்லை. இம்முறை எந்த கடிதப் போக்குவரத்தும் இருக்கப் போவதில்லை என்ற முடிவு எடுத்தேன். எனக்குத் தெரிந்த அதே சென்னைக்கு, அதே அலுவலகத்திற்குச் சென்றேன். காலம் என்னை ஓரிருமுறை அலைகழித்தது. அனுபவப் பாடத்தைப் படிக்க வைத்தது. சில வாரங்கள் சென்றிருக்கும், மீண்டும் அப்பா... இம்முறை ஒரு பெட்டியுடன் வந்திருந்தார். " உனக்கு சென்னையிலேயே இருக்கப் பிடித்திருந்தால் இங்கேயே இரு ; எங்களை வெறுத்து கொல்லவேண்டாம் " என்று பணிவுடன் பெட்டியைக் கொடுத்தார்.. அதில் எனது உடை, நான் தங்கிக் கொள்ள பணம் என சில பொருட்களைத் திணித்திருந்தார்....

அவர் செல்லும் போது அவருக்கு வெளிபடுத்தத் தெரியாத அன்பை என்னிடம் கொட்டிவிட்டு சென்றிருந்தார்..

மதி
25-01-2009, 04:38 AM
நிறைய அப்பாக்கள் இப்படித்தான் ஆதவா. அன்பை வெளிப்படுத்தத் தெரியாது. பாசம் காட்டினால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்களோ என்ற பயம் கூட காரணமாய் இருக்கலாம். அதைப்புரிந்துக் கொள்ளாமல் வழி தடுமாறிப்போன பிள்ளைகளும் உண்டு.

நல்லதொரு கதைக்கு பாராட்டுக்கள் ஆதவா.

அன்புரசிகன்
25-01-2009, 05:57 AM
ஒருவர் செய்யும் தவறுக்கு அவர் சார்ந்தோரயே புறக்கணிக்கும் நிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை.........

சுகந்தப்ரீதன்
25-01-2009, 09:56 AM
இயலாமையின் வெக்கையில் வெடிக்கும் கோபங்களில் பாசங்கள் பலநேரம் பலமிழந்ததுபோல் தோன்றிவிடுகின்றன ஆதவா..!! அதனால்தான் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருந்துக் கொண்டே இருக்கிறதோ என்றுக்கூட எண்ண தோன்றுகிறது..!!

பாசத்தை வெளிப்படுத்த தெரியாத தந்தையும் அதை புரிந்துக்கொள்ள தெரியாத மகனும் இறுதியில் ஒருநிகழ்வில் ஒன்றுபடுவதாய் அமைத்தது சிறப்பு..!! என்ன ஒன்னு கதையை கடகடவென வேகமா சொல்லிட்டு போறியே அதுதான் ஏன்னு புரியலை எனக்கு..?!

வாழ்த்துக்கள் தொடருங்கள் ஆதவா..!!

ரங்கராஜன்
25-01-2009, 12:12 PM
டேய் ஆதவா
நீ சொல்ல வந்த கரு நல்லா இருக்குடா, சில விஷயங்களில் கோட்டை விட்டு இருக்கிறாய்.

1) கதையை எழுதும் பொழுது உன் பார்வையில் இருந்து சொல்கிறாயா? அல்லது மூன்றாம் பார்வையில் இருந்து சொல்கிறாயா? என்று முடிவு செய்துக் கொள். மூன்றாம் பார்வை எப்பொழுதும் சுலபம், என்ன ரயிலை விட்டு இறங்கினேன் என்பதற்கு பதில் ராமு/ராஜூ/மதன் ரயிலை விட்டு இறங்கினான். என்று எழுத வேண்டும். உன்னுடைய பார்வையில் இருந்து எழுதும் பொழுது மிகவும் கவனமாக எழுத வேண்டும், எனென்றால் வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும், இல்லையென்றால், அது டைரி எழுதுவது போல ஆகிவிடும்.

2) கதையை சிந்திக்கும் பொழுது அதில் சொல்ல வரும் கருவை எந்த அளவுக்கு ஆழமாக வாசகரின் மனதில் ஏற்ற முடியும் என்று பார்க்கவேண்டும்.

3) சம்பவங்களை கோர்வையாக எழுத வேண்டும்.

4) அப்பாவின் பாசத்தை பற்றி சொல்லும் பொழுது அவரின் முக உணர்ச்சிகள், செயல்களை உன்னிப்பாக எழுத வேண்டும்.

5) கடைசி இரண்டு பத்தியில் அவசரப்பட்டு இருக்கிறாய், மாணவன் ஆசிரியரிடம் புகார் சொல்வது போல ஆகிவிட்டது டா.

6) முடிவு என்பது எதையாவது ஒன்றை உணர்த்த வேண்டும்.

நீ கதையை எழுதும் பொழுது உன்னுடைய சில சொந்த அனுபவங்கள் உன்னை தொந்தரவு செய்து இருப்பது புரிகிறது, நிஜத்தையும் கற்பனையையும் கலக்கும் பொழுது சதவீதத்தை முன்பே முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.

இவை எல்லாம் உனக்கு தெரிந்ததே, நீ தப்பாக எடுத்து கொள்ள மாட்டாய் என்ற எண்ணத்தில் தான் பதித்தேன், நீ தப்பாக எடுத்துக் கொண்டாய் என்றால் திருப்பூர் வந்து உன்னை உதைப்பேன்.

ஆதவா
26-01-2009, 01:07 AM
மிக்க நன்றி மதி. என் நிலைமையும் அப்படித்தான்.. நாளை நான் எப்படி நடந்து கொள்ளப்போகிறேன் என்ற கனவும் இன்று உண்டு.
நன்றீ மதி
----------------------------
அன்புரசிகன்,
நீங்கள் சொல்வது யோசிக்கவேண்டியதாக உள்ளது. ஒருவருக்காக, மற்றவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!!!
நன்றி அன்பு..

----------

நன்றி சுபி.. உந்த இடைவெளியை சற்று நீக்கி, நண்பர்களைப் போன்று இருப்பவர்களுக்குத்தான் தெரியும்.... அந்த வாய்ப்பு எல்லாருக்கும் அமைவதில்லை...

கதை இழுக்கவேண்டாம் என்று உடனடியாக முடித்துக் கொண்டேன்..

----------------------------------------

மிக மிக நன்றி தம்மூ!

இதைத்தான் எதிர்பார்த்தேன்.. ஒரு நல்ல கதாரசிகனாக இருக்கும் நான், ஒரு நல்ல கதை படைப்பாளியாக என்றும் ஜொலித்ததில்லை.. அதைவிட, ஜொலிக்க விருப்பப்பட்டதில்லை.. என் கவிதைகளுக்குக் காட்டும் கவனத்தை கதைகளுக்குக் காட்ட விருப்பப்பட்டதில்லை.... இது முழுமுதற்காரணம்.. மேலும் கதை எழுதுவதே, ஒரு வெறுமையைப் போக்கத்தான்...

அடுத்து.//

நீ சொன்ன அனைத்தும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கருத்துக்கள்.. அதை பின்வரும் கதைகளில் உபயோகப்படுத்த முயலுவேன்... ஏனெனில் பின்னூட்டங்களை, வளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும் பலரில் நானும் ஒருவன் என்பது மன்றம் அறிந்தது...

உன் விமர்சன உத்தி, எனக்கு பாடம் நடத்தியைத் போன்று அருமையாக இருந்தது... இதற்கு முன் பென்ஸ் மட்டுமே எனக்கு கதை விமர்சனத்தைக் காரமாகக் கொடுத்திருந்தார்.....

நன்றிடா....

arun
03-02-2009, 05:26 PM
அவர் செல்லும் போது அவருக்கு வெளிபடுத்தத் தெரியாத அன்பை என்னிடம் கொட்டிவிட்டு சென்றிருந்தார்..

ஆம் பாசத்தை வெளிப்படுத்த தெரியாமல் பலர் இருக்கின்றனர் சற்றே நெகிழ்சியான கதை பாராட்டுக்கள்

ஐரேனிபுரம் பால்ராசய்யா
04-02-2009, 05:52 AM
வழி தவறிச்செல்லும் ஒரு ஆட்டுக்குட்டியை தேடும் இடையனைப்போல, தனது மகனைத்தேடி அலையும் தந்தையின் மனமெங்கும் தனது மகனைப்பற்றிய எதிர்கால சிந்தனைகளை தெளிவாகப் பதிவாக்கியிருந்தது இந்த கதை. காலம் என்னை ஓரிருமுறை அலைகழித்தது போன்ற நயமான வரிகள் இருப்பது பாராட்டுக்குரியது.

இளசு
01-04-2009, 08:30 PM
வலிந்து சிக்கல்களை உருவாக்கிக் கொள்வது -
மனித உறவுகளின் தனிச்சிறப்பு..

வாய்விட்டு சொல்லாதவை..
சொன்னாலும் தெளியாதவை..

என சிக்கல்களுக்கு பக்கபலங்களும் நம் பண்பே..

பெற்றோர் - மகன் உறவுகளில் இச்சிக்கல்களுக்கு வாய்ப்பதிகம்..
வயதுவந்த மகள் -தாய் இடை நிலவும் அந்நியோன்யம்
இருபால் பெற்றோரிடமும் மகனுக்கு தரிப்பதில்லை..

எடுத்த கருவை சிறப்பாய்ச் சொன்னதற்கு பாராட்டுகள் ஆதவா..

சுகந்தனின் பின்னூட்டம் செழுமை!

தக்ஸின் ஆய்வும் உன் ஏற்புரையும் - மன்றத்துக்குப் பெருமை!!

அறிஞர்
01-04-2009, 09:13 PM
நல்ல கதை ஆதவா..
பலருக்கு
இருக்கும்பொழுது இருக்கும் தெரியாத அருமை...
தொலைத்த பின் தெரியும்.....
---------
அந்த வயதில் பல வாலிபர்களுக்கு மனதில் ஏற்படும் எண்ணங்கள்.. கதை வடிவில்...

விகடன்
02-04-2009, 05:43 AM
பெற்றாரின் கண்டிப்பை தவறாகப் புரிந்துகொள்ளும் இளமைப்பருவம், சிறுவயதில் எடுக்கப்படும் செப்பனிடப்படாத முடிவுகள் என்பவற்றை சிறப்பாக கதையில் சொல்லிவிட்டீர்கள் ஆதவா.
இருந்தாலும் இலங்கை, இந்தியா போன்ற சில நாடுகளில் பெற்றார் கண்டிப்பு அகோரந்தான். காரணம் பொருளாதார நிலமையா? அல்லது சமூகக் கட்டுப்பாடா?? தெரியவில்லை.
கண்டிப்பு இருக்கத்தான் வேண்டும். ஆனால், அது ஒருவரை சிந்தித்து சரியான பாதையினை தெரிந்து தெளிவுடன் பயணிக்க உதவவேண்டுமே அன்றில் சினத்தை மட்டும் வரவழைக்கக் கூடாது.
கண்டிப்பு கண்ணியமாக இருத்தல் வேண்டும். காட்டுமிராண்டித்தனமாக இருக்கக்கூடாது.

பா.ராஜேஷ்
02-04-2009, 06:11 AM
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் கண்டிப்பு என்றே ஏறக்குறைய நிர்ணயிக்கப் பட்டுவிட்ட நாட்டில் அபியும் நானும் திரைப்படம் பார்ப்பவகளில் பெரும்பாலோர் ஏக்கத்துடன்தான் திரும்புவார்கள். படித்த அப்பாக்களிடம் கண்டிப்பு கனிவாக இருப்பது பாராட்டிற்குரியது.
வாழ்த்துக்கள் ஆதவா.

பா.ராஜேஷ்
02-04-2009, 06:11 AM
அம்மா என்றால் அன்பு
அப்பா என்றால் கண்டிப்பு என்றே ஏறக்குறைய நிர்ணயிக்கப் பட்டுவிட்ட நாட்டில் அபியும் நானும் திரைப்படம் பார்ப்பவகளில் பெரும்பாலோர் ஏக்கத்துடன்தான் திரும்புவார்கள். படித்த அப்பாக்களிடம் கண்டிப்பு கனிவாக இருப்பது பாராட்டிற்குரியது.
வாழ்த்துக்கள் ஆதவா.

த.ஜார்ஜ்
10-04-2009, 12:14 PM
இதே போன்ற ஒரு கதையை இதே தலைப்பில் 1998-ல் நான் எழுதியிருக்கிறேன்.படிக்கிறீர்களா?.இங்கே சுட்டுங்கள்http://www.tamiltheru.blogspot.com

xavier_raja
15-04-2009, 01:09 PM
நானும் ஒருவகையில் இதுபோன்று என் பிள்ளைகளிடன் நடந்துகொள்ளுகிறேன் நண்பர்களே.. (இந்த அளவுக்கு அல்ல) என் இரண்டு பெண் பிள்ளைகளும் என்னை கண்டால் பயப்படுவார்கள்.. ஆனால் என் தந்தையிடம் (அவர்கள் தாத்தாவிடம்) மிகவும் நன்றாக பழகுவார்கள்.. (என் காலத்தில் என் தந்தையை பார்த்தால் என் குலை நடுங்கும், நான் வாங்காத அடி இல்லை).. வீட்டில் உள்ள எல்லோரும் செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுவிடுவார்கள் என்று நான் அவர்களிடன் கண்டிப்பாக இருக்கிறேன்.. இது தவறா நண்பர்களே.. ஆனால் அவர்களிடத்தில் மிகவும் பிரியம் வைத்திருக்கிறேன்..

Tamilmagal
15-04-2009, 01:56 PM
பல பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவில் இருக்கும் மிகபெரியபிரசனை இது, ஆனால் தவிர்க்ககுடிய பிரசனை தான்.

சிந்திக்க வைக்கும் கதை.
பதிவுக்கு நன்றி.

Tamilmagal
15-04-2009, 02:16 PM
நானும் ஒருவகையில் இதுபோன்று என் பிள்ளைகளிடன் நடந்துகொள்ளுகிறேன் நண்பர்களே.. (இந்த அளவுக்கு அல்ல) என் இரண்டு பெண் பிள்ளைகளும் என்னை கண்டால் பயப்படுவார்கள்.. ஆனால் என் தந்தையிடம் (அவர்கள் தாத்தாவிடம்) மிகவும் நன்றாக பழகுவார்கள்.. (என் காலத்தில் என் தந்தையை பார்த்தால் என் குலை நடுங்கும், நான் வாங்காத அடி இல்லை).. வீட்டில் உள்ள எல்லோரும் செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுவிடுவார்கள் என்று நான் அவர்களிடன் கண்டிப்பாக இருக்கிறேன்.. இது தவறா நண்பர்களே.. ஆனால் அவர்களிடத்தில் மிகவும் பிரியம் வைத்திருக்கிறேன்..

நன்பரே,
குழந்தைகளிடம் கண்டிப்பக இருப்பதில் தவறில்லை, ஆனால் கண்டிப்பு எல்லைகளை மீறாமல் இருக்கவேண்டும்!
மேலும் செல்லம் கொடுத்தால் குழந்தைகள் கெட்டுவிடுவார்கள் என்று நினைக்காமல், குழந்தைகள் தவறு செய்தால் தவறை அன்பாக எடுதுக்கூறி அவர்களுக்கு புரியவைப்பது சிறந்தது !
(பிள்ளைகள் பெற்றோரிடதில் பயத்தை காட்டுவதை விட பாசத்தை/அன்பைக்காட்டவேண்டும் என நான் நினைக்கிறேன்)