PDA

View Full Version : நீ வந்தது விதியானால் (சிறுகதை-26)



ரங்கராஜன்
24-01-2009, 09:19 AM
நீ வந்தது விதியானால்

நகரத்தின் நடுவில் இருக்கும் உயரமான கட்டிடம், காலையும் இல்லாமல் மதியமும் இல்லாமல் அனல் காற்று வீசிக் கொண்டு இருந்த மந்தமான வேளை, கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்த வீட்டு வாசலில் காலணிகள் நிரம்பி இருந்தது, ஆண்கள் செருப்பும் பெண்கள் செருப்பும் சரி பாதியாக கலந்து இருந்தது. ஹாலில் பெரியவர்கள் அனைவரும் சாவகாசமாக டி.வி பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தார்கள். தரையில் பல வகையான பழங்களுடன் தட்டுகள், கீழே சிந்திய பூக்கள், காபி இருந்து காலியான டம்பளர்கள் இருந்தன. கிச்சனில் கீழே இரைக்கப்பட்ட மிச்சர்கள் ஸ்வீட்டுகள், அடுப்பில் பால் பொங்கிய கரை, மாடத்தில் காபி சிந்திய கரைகள் இருந்தன. உள் அறையில் அலங்காரத்துடன் இருந்த பெண்ணிடம், அவளைவிட அலங்காரத்தில் இருந்த அவளின் அம்மா, அத்தைகள், சித்திகள், மாமிகள் எதோ சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
அந்த வீட்டின் உள் பக்கமாக இருந்த பால்கனியில் இருந்து பார்த்தால் பாதி சென்னை தெரியும். அந்த பால்கனியில் ஊத நிற சட்டையும், கருப்பு நிற ஃப்ண்டும் அணிந்துக் கொண்டு அங்கு இருந்த நாற்காலியில்
அமர்ந்து இருந்தான் ராகவன், கையில் புத்தகத்துடன்.

அந்த புத்தத்தின் அட்டையில் “லாஸ் ஆஃப் ஜெனிட்டிக் இன்ஜீனியரிங்” என்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். சிறு நேரத்தில் யாரோ கனைப்பது போல இருந்தது. ராகவன் நிமிர்ந்து பார்த்தான். தலை நிறைய மல்லிகைப் பூவுடன், மாம்பழ நிற புடவையில், அதிகமான மேக்கப்பில், உதடு சாயம் காய்ந்த நிலையில் நின்றுக் கொண்டு இருந்தாள் மலர்விழி.

“சாரி சாரி, வாங்க உக்காருங்க எப்ப வந்தீங்க” என்று ராகவன் அவளை பார்த்து சொன்னான்.

அவளும் தயங்கிய வாரே அமர்ந்து “ நான் வந்ததுக்கு அப்பறம் நீங்க மூன்று பேஜ் படிச்சீட்டீங்க” என்று வெட்கத்துடன் சிரித்தாள்.

“அப்படியா சாரிங்க, நான் படிக்கு பொழுது பக்கத்தில எது நடந்தாலும் எனக்கு தெரியாது, என்னை நீங்க கூப்பிட்டு இருக்கலாமே” என்றான்.

“சரி நீங்களே பாப்பீங்கனு பார்த்தேன், நீங்க என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க” கண்களை கீழே பார்த்தபடி.

“உங்க பெயர் என்னங்க” என்றான் ராகவன் அவளை பார்த்து. முதல் முறையாக அவனை சிரித்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் மலர்விழி.

“பேர் தெரியாம தான் பெண்ணு பார்க்க வந்தீங்களா?” கேலி சிரிப்புடன் கேட்டாள்.

“ஆமாங்க, உங்க பேர் சொல்லுங்க” என்றான் எந்த சிரிப்பும் இல்லாமல்.

“மலர்விழி”

“ஓ மலர்விழி யா? நல்ல தமிழ் பெயர்”

“ஆமாம் எனக்கு தமிழ்-னா உயிர்”

உற்சாகமானவன் “அப்படியா, அப்ப நிறைய புத்தகங்கள் எல்லாம் படிப்பீங்களா?”

“உம் நிறைய படிப்பேன்”

“அப்படியா, நானும் புத்தகப் விரும்பி தான். நான் படித்தது கூட M.lib (library science). நானே விரும்பி தான் இந்த படிப்பை எடுத்தேன். இப்போ மும்பை நேஷனல் நூலகத்தில் வேலையில் இருக்கிறேன், சரி உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்"

“அரவிந்.. அடிக்கா ................... ராபின்.. ஷர்மா, அப்புறம் ....”

“ஏங்க தமிழ் என் உயிரு-னு சொன்னீங்க”

“ஆமாங்க குமுதம், ஆனந்த விகடன் எல்லாம் வாரம் தவறாம படிப்பேன்”

பெருமூச்சு விட்டவனாக “சரி எதோ பேசணும்-னு வரச் சொன்னீங்களே, அதைப்பத்தி சொல்லுங்க”

“சும்மா தான், என் ஃப்ரண்ஸ் பேச சொன்னாங்க”

“அப்படியா, நான் உங்க ஃப்ரண்ஸல யாரை கல்யாணம் செய்துக் கொள்ள போறேன்” என்றான் சிரித்துக் கொண்டு.

“ஆ அவங்களை இல்ல, என்னை தான் .......” என்று அவளை அறியாமல் அலறினாள்.

“அப்புறம் என்ன, நீங்களே பேச வேண்டியது தானே, அவங்க சொல்லி தான் செய்வீங்களா”

“அப்படி இல்ல எனக்கு இதுல எல்லாம் பழக்கம் கிடையாது”

“அப்ப நான் மட்டும் என்ன வாரத்திற்கு ஐந்து முறை பெண் பார்க்கும் வேலையா பார்க்குறேன், எனக்கும் இது தான் முதல் முறை. இன்னும் கேட்டால் பெண்ணிடம் பேசுவதே இது தான் முதல் முறை. சின்ன வயதில் இருந்து புஸ்தகம் மட்டும் தான் என்னுடைய நண்பர்கள்”

“அப்படியா? எனக்கு அப்படி தான்..” என்று அவள் முடிப்பதற்குள், ராகவன் குறுக்கிட்டு

“என்ன ராணி, தினத்தந்தி, மங்கையர் மலர் தானே” என்றான் முகத்தில் அறைந்தார் போல.

மலர் அமைதியாக இருந்தாள்.

“இங்க பாருங்க மலர், உங்க ஃப்ரண்ஸ் உங்களுக்கு தப்பா சொல்லி கொடுத்து இருக்காங்க. நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு அது பிடிக்குனு சொல்ல சொல்லி. எனக்கு நல்லா புரியுது உங்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லை என்று, அப்படி உங்களுக்கு இருந்து இருந்தால் நான் என்ன புத்தகம் இப்போ படிச்சினு இருந்தேன்னு ஒரு வார்த்தையாவது கேட்டு இருப்பீங்க அல்லது கவனிச்சாவது இருப்பீங்க. கவனிச்சீங்களா?” என்று அவளை நோக்கி கேட்டான்.

அவள் இல்லை என்பது போல தலையை ஆட்டினாள். அப்புறம் அவனே பேச்சை தொடர்ந்தான்.

”அப்படி செய்வது தான் ஒரு புத்தக பிரியரின் முதல் அடையாளமாக இருக்கும்,....... எதோ பேப்பர்களில் சமீபத்தில் வந்த சில பெயர்களை சொல்லி பிடித்த எழுத்தாளர்கனு பொய் சொல்லிறீங்க, சரியா” என்றான் அவளின் கண்களை பார்த்து.

“அப்படி இல்ல, ஆனா.......”

“புத்தகம் படிக்காது ஒண்ணும் தேச துரோக குற்றம் அல்ல, ஆனால் பொய் சொல்வது கிட்டதட்ட அப்படி தான்” என்றான் தீர்மானமாக.

மலர்விழியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது, எப்பொழுது வேண்டுமானால் அவை கண்களை தாண்டும் நிலையில் இருந்தது. அவள் தழு தழுத்த குரலில்

“அப்ப என்னை உங்களுக்கு பிடிக்கவில்லையா” என்றாள் ராகவனின் கண்களை பார்த்து.

ராகவன் பெருமூச்சுடன் தன்னுடைய பேனாவை எடுத்து ஒரு பேப்பரில் எதோ எழுதி அவளின் விரல்கள் அவள் மேல் படாமல் அவள் கையில் பேப்பரை வைத்து விட்டு பால்கனியில் இருந்து வெளியே வேகமாக சென்றான். ராகவன் சென்றவுடன் மலர்விழியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது, அந்த பேப்பரை பிரிக்க பயந்தாள், கைகள் நடுங்கிய வாரே பிரித்தாள். அதில்

“என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?” என்று எழுதி இருந்தது. மலர்விழிக்கு அழுகை இன்னும் அதிகமானது, அந்த பேப்பரை முகத்தில் மூடியபடி அழுதாள். அவளுடைய தோழிகள் சந்தோஷத்தில் கத்திக் கொண்டே வந்தார்கள், மலர்விழியை பார்த்து

“ஏய் என்ன டீ அழுவுற, மாப்பிள்ளையை அதுக்குள்ள பிரிய முடியலையா?” என்று கிண்டல் செய்தனர்.

“போங்கடீ எல்லாரும், உங்களால தான் அவர் என்னை வேண்டாம்னு சொல்லீட்டு போய்டாரு, நீ என்னுடைய விதி-ன்னு சொல்லிட்டு போய்டாரு, பாரு எழுதி குடுத்துட்டு போயிட்டார்” என்று அழுதாள்.

“என்னடீ உளற, அடுத்த மாசம் கல்யாணம் வச்சீக்கலாம்னு சொல்லீட்டு போறாங்க, நீ லூசு மாதிரி பேசற. குடு அத” என்று தோழிகள் அந்த பேப்பரை வாங்கி பார்த்து விட்டு சிரித்தார்கள்.

“லூசே தாண்டீ நீ, முழுசா படி பைத்தியமே” என்று அவளிடம் பேப்பரை கொடுத்தாள் ஒரு தோழி.

“ என் வாழ்வில் நீ வந்தது விதியானால்?
நீ எந்தன் உயிர் அன்றோ”

என்று பேப்பரின் கீழே கடைசியில் எழுதி இருந்தது. மலர்விழியின் முகம் வெட்கத்தால் பூரித்தது.

பி.கு : இந்த வரிகள் “பூங்காற்று புதிதானது” என்ற பாடலின் கடைசியில் வரும் வரிகள், மூன்றாம்பிறை படத்தில் வருவது.

தீபா
24-01-2009, 09:39 AM
பிறந்தநாளும் அதுவுமா, மாப்பிள்ளை, பெண்பார்க்கும் படலம், புத்தகம், என்று ஒரே கோலாகல கதைதான் கொடுத்திருக்கிறீர்கள் திரு.தக்ஷ்ணாமூர்த்தி அவர்களே. (சீக்கிரமே டும்டும் ஆ?)

பெண்பார்க்கும் படலம் குறித்து, யாரிடம் கேட்டால் சரியாக இருக்கும்?? நம்ம திரு.மதி..???? திரு.தாமரை???
நீங்கள் பெண் பார்க்கும் பொழுது, அந்த பெண்தான் உங்களை அழவைக்கும் என்று நினைக்கிறேன்.

கதை கடலில் செல்லும் கப்பலைப் போன்று நீர் தழுவிச் செல்கிறது. நீர்மூழ்கவுமில்லை, மூழ்கிக் கப்பலாகவும் இல்லை. வாழ்த்துக்கள் சார்... இன்னும் பல படைப்புகள் எழுதி பிரமிக்க வைக்கவும்....

(முதல் பின்னூட்டத்திற்கு 100 ஐகாஷ் தருவதாக வாக்களித்தீர்களே.... எப்போது தரப்போகிறீர்கள்?)

ஐரேனிபுரம் பால்ராசய்யா
24-01-2009, 11:41 AM
கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு விசயங்களும் கவனித்து எழுதியிருப்பது பலரது கவனத்தைப் பெறுகிறது. நல்ல நயமான நடையில் துவங்கி இனிதே முடித்திருப்பது சிறப்பு. பாராட்டுக்கள்

ரங்கராஜன்
24-01-2009, 11:51 AM
கட்டிடத்திலுள்ள ஒவ்வொரு விசயங்களும் கவனித்து எழுதியிருப்பது பலரது கவனத்தைப் பெறுகிறது. நல்ல நயமான நடையில் துவங்கி இனிதே முடித்திருப்பது சிறப்பு. பாராட்டுக்கள்


நன்றி ராசய்யா
உங்களின் விமர்சனம் நன்றாக உள்ளது. தொடருங்கள்.

இளசு
24-01-2009, 05:55 PM
சுஜாதா போன்ற தேர்ந்த எழுத்தாளர்களின் நேர்த்தியை
முதல் பாதி வர்ண்னைகள் ஒவ்வொன்றிலும் கண்டேன்..


குறும்பான '' பெண்ணைவிட அதிக அலங்காரத்தில் அம்மா...'' - அதன் உச்சம்!


கவியரசனின் வரிகளை மிக அழகாய்ப் பொருத்திய கதைமுடிவால் கவரப்பட்டேன்..

ஒத்த ரசனைகள்தான் ஈர்க்குமென்றால் -
ஏன் ஒத்த துருவங்கள் விலகல் இயற்கையில்?

Complementary - ஆக
நம் பின்னத்தை முழுமை செய்யும் இன்னொரு பின்னம்தானே
தக்க இணை?

காதல் என்றால் என்ன? ஈர்ப்பு என்றால் என்ன?
எந்த விசைகள் இந்த ஆதிதொட்ட பந்தத்தை முடுக்குகின்றன?

கட்டுரை எழுத இன்னும் வேகம் கூடிவிட்டது தக்ஸ்..

நல்ல கதைக்குப் பாராட்டுகள்!

அமரன்
24-01-2009, 06:27 PM
பெண்பார்க்கும் படலத்தை தேர்ந்த படப்பிடிபாளன் போல் ஆல்பமாக்கி உள்ளீர்கள் தக்ஸ். எழுத எதுவும் கிடைக்கவில்லை என்று சலித்துக்கொள்ளும் என்னைப் போன்றவர்களுக்கு மத்தியில் கண்டதை எல்லாம் எழுதி கவரும் உங்களை நினைத்து பிரமிக்கிறேன். கூடவே அண்ணனையும் நினைத்து. இவருக்கு மட்டும் பிரத்யேகமான செல்களை படைத்தானோ இறைவன். நோக்காத கோணத்தில் நோக்கி நோக்கியா போல் படைப்புடன் இணைந்து கருத்தூட்டுகிறாரே.

ஆதவா
25-01-2009, 01:16 AM
சுஜாதா போன்ற தேர்ந்த எழுத்தாளர்களின் நேர்த்தியை
முதல் பாதி வர்ண்னைகள் ஒவ்வொன்றிலும் கண்டேன்..


குறும்பான '' பெண்ணைவிட அதிக அலங்காரத்தில் அம்மா...'' - அதன் உச்சம்!


கவியரசனின் வரிகளை மிக அழகாய்ப் பொருத்திய கதைமுடிவால் கவரப்பட்டேன்..

ஒத்த ரசனைகள்தான் ஈர்க்குமென்றால் -
ஏன் ஒத்த துருவங்கள் விலகல் இயற்கையில்?

Complementary - ஆக
நம் பின்னத்தை முழுமை செய்யும் இன்னொரு பின்னம்தானே
தக்க இணை?

காதல் என்றால் என்ன? ஈர்ப்பு என்றால் என்ன?
எந்த விசைகள் இந்த ஆதிதொட்ட பந்தத்தை முடுக்குகின்றன?

கட்டுரை எழுத இன்னும் வேகம் கூடிவிட்டது தக்ஸ்..

நல்ல கதைக்குப் பாராட்டுகள்!

எனக்கென்னவோ, இயற்கை சொல்வது சரியென்றுதான் தோன்றுகிறது அண்ணா.

ஒத்த துருவங்கள் ஈர்ப்பதில்லை.... தம்பதியர், ஒத்த குணத்தையே சார்ந்தவராக இருப்பின்.. வாதங்கள் மட்டுமே பெருகும் தவிர, ஈர்த்து, கவருவதில்லை அல்லவா....

இனிய தம்மூ.... நல்ல தரமான கதை எழுதும் உனக்கு, தரமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்களடா...

மதி
25-01-2009, 03:14 AM
அட அட அட....
பொண்ணு பாக்கற இடம் இப்படி தான் இருக்குமோ..?? இதுவரை இந்த அனுபவமில்லை..

அப்புறம் தக்ஸ்... நேத்து பாத்த பொண்ணு பிடிச்சிருந்ததா... ??அதுக்கும் சேர்த்து ட்ரீட் எப்போ??

அழகான நீரோடை போல் ஆரம்பித்து நடுவில் லகலகப்பூட்டி முடிவில்... அச்சாரமாய் விதியை விளையாடவிட்டுவிட்டீர். வாழ்த்துகள்..

நினைத்ததும் கதை எழுதுவது எப்படின்னு ஒரு வகுப்பெடுத்தால் புண்ணியமா போகும்..

ரங்கராஜன்
25-01-2009, 03:26 AM
அப்புறம் தக்ஸ்... நேத்து பாத்த பொண்ணு பிடிச்சிருந்ததா... ??அதுக்கும் சேர்த்து ட்ரீட் எப்போ??

..

நன்றி மதி
என்னது பெண்ணா?, எனக்கு பெண் பார்க்கறதா இருந்தா பிளைண்டு ஸ்கூல் தான் பார்க்கணும்.

மதி
25-01-2009, 04:16 AM
நன்றி மதி
என்னது பெண்ணா?, எனக்கு பெண் பார்க்கறதா இருந்தா பிளைண்டு ஸ்கூல் தான் பார்க்கணும்.
ஐ....ஐ..... தமாசெல்லாம் பண்ணக்கூடாது.. ஆமா...

மதி
25-01-2009, 04:32 AM
தக்ஸ்... உன் அனுமதியுடன்... தொடர்ச்சியாக....

முதலிரவு...

பரபரப்புடன் ராகவன் அமர்ந்திருக்க கையில் பால் சொம்புடன் மலர்விழி வந்தாள். (எல்லா படத்துலேயும் இப்படித் தான் காமிக்கறாங்க) முகமெல்லாம் வெட்கத்தால் சிவந்திருக்க ராகவனை ஏறிட்டாள். கையில் வழக்கம் போல புத்தகம். முகம் அஷ்டக்கோணலாகியது. க்கும் என முனகினாள். கவனம் கலைந்தான் ராகவன்.

"வந்து நேரமாச்சா..??? வர்ற வரைக்கும் புக் படிக்கலாமேன்னு"

"அது சரி.. பொண்ணு பாக்கற அன்னிக்கும் இதே மாதிரி தான் புக் படிச்சீங்க... இன்னிக்குமா?"

"அதான் ஏற்கனவே சொல்லிருக்கேனே.. இந்தப்பழக்கம் என் நண்பன் தக்ஸால் வந்துச்சு. சரியான புத்தகப் பைத்தியம்.."

"முதல்ல அவரை கட்டி வச்சு உதைக்கணும். ஆமா அவருக்கு கல்யாணமாயிடுச்சா..??"

"இன்னும் இல்லே.. நல்ல பொண்ணா ஃப்ளைஸ்ட் ஸ்கூல்ல தேடிக்கிட்டு இருக்கான். கேட்டா அபத்தமா ஏதாச்சும் காரணம் சொல்லுவான்.. செம சீன் பார்ட்டி..."

"அட.. உங்கள விடவா..."

"என்னது.. நானா.. சீன் பார்ட்டியா...??"

"பின்ன.. என்னவோ பெரிய மேதாவி மாதிரி தலையணை மாதிரி இத்தோத்தண்டி புக்க தூக்கிட்டு யாராச்சும் பொண்ணு பார்க்க வருவாங்களா...

இதுல சீரியஸா படிக்கற மாதிரி சீன் வேற... அப்பவே புரிஞ்சிடுச்சு.. மாமன் கவுக்க ட்ரை பண்றார்ன்னு.. அதான் நானும் அப்படி சீன் விட்டேன்.. அம்புலிமாமா...குமுதம்..படிப்பேன்னு. போதாக்குறைக்கு ஐய்யா.. அட்வைஸ்.. வேற.. உண்மைய சொன்னா.. நானும் புத்தகப்பைத்தியம் தான்... நாமும் கொஞ்ச நேரம் சீண்டலாம்னு தான்.."

"அடிப்பாவி.. ஏமாத்தினியா..நீ"

"பின்ன நீங்க மட்டும்.. பழம் கணக்கா சீரியஸ் லுக் குடுத்தா நம்பிடுவோமா?? எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதக் கண்டுபிடிக்க மாட்டோமா..."

"அடிக்கள்ளி.... இது தெரியாம போச்சே.. ஏதோ ஒன்னும் தெரியாத பொண்ணுன்னுல்ல... நம்பி ஏமாந்துட்டேன்...."

"என்ன தெரியும்.. என்ன தெரியாதுன்னு.. கொஞ்சம் கொஞ்சமா புரியும்..."

நீண்ட நேரத்துக்கு அறைக்குள் சிரிப்பொலி கேட்டுக்கொண்டிருந்தது.

-----------------
ஏதோ தக்ஸ்.. என்னால முடிஞ்சது... ஹிஹி

ரங்கராஜன்
25-01-2009, 06:43 AM
நல்லா இருக்கு மதி, அனுபவம் பேசுதோ

சிவா.ஜி
25-01-2009, 02:27 PM
இளசு சிலாகித்த அதே விஷயங்கள்தான் என்னையும் கவர்ந்தது இந்தக்கதையில். நான் முன்பே சொன்னதைப்பொல சுற்றி நடப்பதை உற்று கவனிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறது தக்ஸ். கவனித்ததை எழுத்தில் மேலும் மெருகேற்றித் தருவதில் அசத்துறீங்க.

சில நேரங்கள்ல இப்படித்தான் சில பேர் அய்யோ எனக்கு பிடிச்சது இவளு(னு)க்கு பிடிக்கலையே இவன்(ள்) கூட எப்படி வாழப்போறோம்ன்னு அவசரப்பட்டு முடிவெடுத்துடுவாங்க. ஆனா ஒரே ரசனையுள்ளவங்ககிட்டதான் ஆதவா சொன்ன மாதிரி கருத்து வேறுபாடு வரும். ரொம்ப நெருங்கிட்டா சின்னச் சின்ன குறையெல்லாம் கண்ணுக்குத் தெரியுமே அந்தமாதிரி.

ஆனா இந்தக் கதை நாயகன் ரொம்பத் தெளிவாவே இருக்கிறார்.(நம்ம தக்ஸ் மாதிரியே) நல்ல நடை, நல்ல முடிவு. வாழ்த்துகள்+பாராட்டுக்கள் தம்பி.

samuthraselvam
04-02-2009, 10:15 AM
அண்ணா கதையா இது? இது நிஜ அனுபவம் போல் இருக்கே? பெண்பார்க்க மாப்பிள்ளை வருகிறார் என்றால் அந்த பெண் வீடு எப்படி இருக்கும் என்பதை உங்கள் கதையின் முதல் பத்தியில் அறிந்துகொள்ளலாம். பழங்கள், பூக்கள் முதல் கீழே படிந்த காபி கரை, பெண்ணைவிட அதிக அலங்காரத்துடன் இருக்கும் மற்ற பெண்கள் வரை அனைத்தும் அந்த வீட்டில் இருக்கும்.
தோழிகளின் பேச்சை கேட்டு மாப்பிள்ளைக்கு பிடித்ததையே தனக்கும் பிடிக்கும் என்று சொல்லும் (இப்படித்தான் என் அண்ணி இருக்கணும்னு ஆசையோ?) நல்ல எதார்த்தமான கதாப்பாத்திரத்தை கதாநாயகியாக சித்தரித்து கட்டி இருக்கிறீர்கள். மலர்விழிக்கு ஒரு சபாஷ்.
மதி அவர்கள் சொன்ன கதையின் தொடர்ச்சி போல் பெண்பார்க்க செல்லும் போதும் புத்தகத்தை சுமப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். பெண்பார்க்க செல்லும் ஒரு ஆண் எவ்வள்ளவு ஆர்வமாக பெண் எப்போது வருவாள் என்று (ஜொள்ளுவிட) காத்திருப்பார். இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் பெண் பார்க்க சென்றதில்லைஎன.

முடிவு அருமை
அதன் தொடர்ச்சி அட.. அட... எப்படிப்பா உங்களால் மட்டும் முடியுது. நல்ல இருக்குங்க(மதி அவர்களுக்கு).

ரங்கராஜன்
04-02-2009, 03:24 PM
பெண்பார்க்க செல்லும் போதும் புத்தகத்தை சுமப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர். பெண்பார்க்க செல்லும் ஒரு ஆண் எவ்வள்ளவு ஆர்வமாக பெண் எப்போது வருவாள் என்று (ஜொள்ளுவிட) காத்திருப்பார். இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் பெண் பார்க்க சென்றதில்லைஎன.


நன்றி மா
உன்னிடம் பிடித்ததே, எதுவாக இருந்தாலும் மனதில் பட்டதை சொல்கிறாய் என்னை போலவே, எந்த மாப்பிள்ளையும் பெண் பார்க்கும் பொழுது புத்தகத்தை தூக்கிக் கொண்டு செல்ல மாட்டான், அப்படி சென்றால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த கதை.