PDA

View Full Version : அச்சம் தவிர்



எஸ்.எம். சுனைத் ஹஸனீ
21-01-2009, 03:54 PM
அப்படியே தொடர்ந்திரு
ஆவியுடைக்கும் அச்சம் தவிர்
மினுமினுப்பேறிய முன்னங் கொம்புகளும்
காய்ச்சு வலுத்த கருவேலங் கால்களும்
உன் தொடரலைத் துவட்ட எத்தனிக்கும்
மாட்டினில் சாவு
மாட்டாவிடினும் சாவு
துரத்துதலினூடே இதையுமிருத்திக்கொள்
இதயமிரைக்க ஓடு இணைந்தேயதனுடன்
அந் நிழல் கூட உன் இலட்சிய இலக்காகட்டும்
அதைத் தொடுதல் உன் வானமாகட்டும்
கொடுத்துப் பின் திமிரும் அதன் திமில்
இறுகக் கரம் பற்றும் செங்கோலாகட்டும்
முன் விட்டு பின் பற்றும் வாலும்
ஒத்துக்கொள்ளாதிருக்கட்டும் உன்னியலாமையை
தொப்பென தள்ளி பாய்ந்தொளிந்தோடியதையும்;
உன்னை பயந்தோடியதாயச் சொல்லி
நன்றாய் நகைந்து மகிழ்
வாலும் கொம்புகளுமற்ற
இரு கால் மனித மாடுகளிடமெப்பொழுதாவது
இயலுமாக உதவிடுமுனக்கு
அவ்வியலாமை கூட.

சிவா.ஜி
21-01-2009, 04:22 PM
ஏறுதழுவுதல் வீரம். அது முட்டித்தள்ளி முதுகு பிளந்தாலும் வீரத்தின் சாரம்.

கொம்பிருக்கும் மாடு...தானாய் நம்மை முட்டுவதில்லை. ஆனால்...விஷமிருக்கும் மனிதர்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குவார்கள். அங்கு வீரம் எடுபடாது. இருப்பினும் எதையும் முட்டிப்பார்த்துவிடும் அந்த துணிவு நிச்சயம் அவசியம்.

ஜல்லிக்கட்டு சமயத்தில் அதை சொல்லிக்கட்டிய கவி வரிகள் அருமை. வாழ்த்துகள் ஜுனைத்.

இளசு
21-01-2009, 10:41 PM
புதிய பார்வை.. புதிய கோணம்..

பழகிய நிகழ்வுகளையும் பளிச்சென புதிதாய்ப் பார்க்க வைக்கும் திறம்..

வியக்கிறேன் ஜூனைத்!

ஆதவா
22-01-2009, 01:13 AM
வீரம் என்பது எழுதப்படும் வார்த்தைகளில் கூட இருக்கிறது.. வெறியேற்றப்பட்ட ஒரு மாட்டை அடக்குதலே வீரமென்றால் மற்றவை எங்ஙனம் கருதப்படும்?

மாட்டை அடக்கியவர்கள் மனிதனை அடக்குவார்களா?? ஆமென்றால் அது வீரம்...

பாராட்டுக்கள் ஜுனைத்

நாகரா
22-01-2009, 02:27 AM
கொம்புகள் இல்லாமலே
முட்டும் மனித மாடுகளை விடக்
கொம்புகளால் முட்டும்
எருது மாடுகள் எவ்வளவோ மேல்!
ஜல்லி விரட்டைப் படம் பிடித்து
மனித மாடுகளைச் சாடும்
நவகவிதை அருமை
வாழ்த்துக்கள் ஹஸனீ

அக்னி
23-01-2009, 12:25 PM
மனிதனைத் தோற்கடிக்க,
மனிதனே கொம்பு சீவி விடுகின்றான்...

வெறியேற்றப்பட்ட,
அம்புகளாய்ச் சீறிப் பாயும் காளைகள்,
அடக்கப்பட்டாலும், அடங்காவிட்டாலும்,
தோற்பது மனிதன்தானே...

வாழ்க்கைக் களத்தில்,
ஏவி விடுகின்றான் ஒரு மனிதன்.
எதிர்கொள்கின்றான் இன்னுமொருவன்.
நேர்மையான வீரம், நேரிடையான மோதல்,
இல்லாமலே போய்விட்ட களத்தில்,
மிதிபட்டபடி, குற்றுயிராய்க் கிடக்கின்றது,
மனிதம்...
அதைக் காக்க இயலாத மனிதர்கள்,
வெற்றியைக் கொண்டாடிக்கொண்டும்..,
தோல்விக்காய் வருந்திக்கொண்டும்...

பாராட்டுக்கள் எஸ்.எம். சுனைத் ஹஸனீ அவர்களே...