PDA

View Full Version : புதிய ஒளி....!சிவா.ஜி
21-01-2009, 02:47 PM
ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு வந்திருந்தான் குமார். மாவட்டத்தின் தலைநகரென்றாலும் இப்போதும் நகரத்தின் நடுவே சந்தை கூடுவது இன்னும் அந்த மக்களின், பழமையின் மீதான பிடிப்பை பறைசாற்றியது. ஆனாலும் அந்த சந்தையில் கிடைக்கும் சில பொருட்கள் சாதாரணக் கடைகளில் கிடைப்பதில்லையென்பதும் உண்மைதான். தன் வீட்டுத் தோட்டத்திற்காக ஒரு மண்வெட்டியை வாங்க வந்திருந்தான் குமார்.

அவன் என்று சொன்னாலும் 42 வயதாகிறது. தான் பிறந்து வளர்ந்த ஊருக்கு 20 வருடம் கழித்து திரும்ப வந்திருக்கிறான். சுற்றித் திரிந்து சம்பாதித்ததெல்லாம் போதுமென தீர்மானித்து சொந்த ஊரின் காற்றை சுவாசிக்க விருப்பப்பட்டு வந்தவனுக்கு அந்தக் காற்றில் இருந்த மாசு உயிரை நெருடியது.இந்த மாசு தொழிற்சாலைகளிலிருந்தோ, மக்கிப் போன குப்பைகளிலிருந்தோ உருவானதல்ல. மக்கிப்போன மனிதர்களின் மனங்கள் உருவாக்கிய அந்தக் குப்பைகளின் நெடிதான் அவன் மனதை வருத்தியது.

தான் சிறுவனாய், இளைஞனாய் திரிந்து அலைந்த அந்த ஊர், இப்போது பல மாற்றங்களுடன், புதிய வர்ணம் பூசிய பெரிய குப்பைத் தொட்டியாய் காட்சியளிக்கிறது.இதோ இங்கே காணும் இந்த சந்தைகூட இரு பிரிவுகளாய் பிரிந்திருக்கிறது. காதர்பாயும், சன்னாசிக் கவுண்டரும் பக்கத்துக்கடைக்காரர்களாக, கருவாடும், கடலைக்காயும் விற்றுக்கொண்டிருந்த சந்தை....இப்போது அவரவருக்கென்று தனிப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் தங்கள் ஒற்றுமை குலைந்ததைப் பற்றின எந்தவித உறுத்தலுமில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது.

தனக்குத் தேவையானதை வாங்கிக்கொண்டு, தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தவனை பின்னாலிருந்து யாரோ ஒருவன், தோளைத் தொட்டு திருப்பினான். திரும்பிப்பார்த்தவன், சற்று நேரத்திலேயே அவனை அடையாளம் கண்டுகொண்டான். நௌஷாத். தன்னுடன் பத்தாவதுவரை படித்து பாதியில் படிப்பைவிட்டவன். அந்தக் காலத்தின் மிக நெருங்கிய நன்பன். வேலை கிடைத்து வெளியூருக்குப் போனவன் 20 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறான்.

“என்னடா குமார்...அடையாளம் தெரியலையா? நான்தாண்டா நௌஷாத்..”

“அடடே நௌஷாத் நல்லாருக்கியாடா?”

”நல்லாருக்கேண்டா...உன்னைப் பாத்து எத்தினி வருஷம் ஆச்சு...ஆனா எப்படி சட்டுனு அடையாளம் கண்டுபிடிச்சிட்டேன் பாத்தியா...”

சந்தோஷமாக சொன்னவனை...சற்றே சங்கடத்துடன் பார்த்தான். முன்பே அவனை சில இடங்களில் பார்த்திருந்தும், அவனை ஓடிச் சென்று சந்தித்துப் பேசாமல் வந்து விட்டதை எண்ணி ஒரு குற்ற உணர்ச்சி.

“அதானே...எப்படி கண்டுபிடிக்காம இருப்பே? நீ, நான், லொடுக்கு சுரேஷ், நாகராஜன் எல்லாரும் சேர்ந்து சுத்தாத இடமேயில்லையே...இப்ப என்னடா பண்ணிக்கிட்டிருக்கே?

”பத்தாவது பாதியிலேயே விட்டுட்டு மாமாவோட சைக்கிள் கடையில வேலை செஞ்சிட்டிருந்ததுதான் உனக்குத் தெரியுமே...இப்ப நானே ஒரு சைக்கிள் கடை வெச்சிருக்கேன். சேல்ஸ் அண்ட் ரிப்பேர்...அய்யா இப்ப ஒரு மொதலாளி தெரியுமா?”

“சந்தோஷம்டா..நான் இப்ப இங்கயே வந்துட்டேன். இனி இங்கதான். சரி எத்தனை பசங்க உனக்கு?”

“ரெண்டு பொண்ணு, ஒரு பையன். பையனுக்கு இப்பதான் பன்னெண்டு வயசாவுது. பொண்ணுங்களுக்கு நிக்காஹ் பண்ணி அனுப்பிட்டேன். பையன் ரிஸ்வான் ஏழாவது படிச்சிட்டிருக்கான்...உனக்கு?”

“ஒரு பொண்ணு ஒரு பையன். பொண்ணு காலேஜ்ல படிக்கறா...பையன் ஆறாவது படிக்கறான்.”

”எங்கடா உங்க வீடு? அம்மாவும் கூடத்தானே இருக்காங்க...பாக்கனுண்டா..எத்தினி வருஷமாச்சு அம்மாவ பாத்து. அப்படியே உன் பசங்களையும் பாக்கனும்...”

அதை சொன்னதும் மாறிய குமாரின் முகத்தைப் பார்த்து,

“என்னடா...நான் உங்க வீட்டுக்கு வரக்கூடாதா?”

“அப்படியில்லடா...நிலைமை இப்ப முன்னமாதிரி இல்ல...தப்பா நினைச்சுக்காத...நானும் உங்க வீட்டுக்கு வரமுடியாது....நீயும் எங்க வீட்டுக்கு வரமுடியாது”

அதிர்ச்சியுடன் நௌஷாத்,

“டே...குமார்....என்..என்னடா...இப்படி சொல்ற..”

நிஜமான கவலை தோய்ந்த முகத்துடன் நௌஷாத் கேட்டதும்,

“நௌஷாத்...உனக்கு ஞாபகம் இருக்காடா..? நம்ம சின்ன வயசுல..தீபாவளிக்கு நீ எங்க வீட்டுக்கு வந்து எங்களோட காலையிலேயே குளிச்சுட்டு, பூஜையெல்லாம் பண்ணிட்டு, பட்டாசு வெடிப்போமே...”

“ஆமாடா...நீயும் ரம்ஜானுக்கு எங்கவீட்லதான் இருப்பே. நமாஸ் படிக்கும்போது எங்களை மாதிரியே நீயும் பக்கத்துலருந்து பண்றதைப் பாத்து எங்க அப்பாஜானும், அம்மியும் அவ்ளோ சந்தோஷப்படுவாங்க...எங்களுக்கு அல்லா கொடுத்த இன்னொரு மகன்னு சொல்லுவாங்களே”

“மாரியம்மன் பண்டிகைக்கு நீயும் சனாவுல்லாவும் எங்ககூட வந்து சாமி தூக்குவீங்களே...”

“அதே மாதிரி நீயும், நாகராஜனும், சுரேஷும் எங்ககூட உரூஸ் சந்தனக்கூடு திருவிழாவுக்கு வந்து ஊதுபத்தி ஏத்தி வெச்சுட்டு,ஜீராவுல முக்கின ஸ்வீட்டெல்லாம் சாப்புடுவீங்களே?”

அந்தக்கால நினைவுகளில் மூழ்கி சந்தோஷமான அந்தக்கணங்களில் சஞ்சாரித்துக்கொண்டிருந்தவனை குமாரின் பேச்சு நிகழ்காலத்துக்கு கொண்டுவந்தது.

“இப்ப உன் பையன் எந்த வீட்டுக்காவது தீபாவளிக் கொண்டாடப் போறானா? இல்ல எந்த மாரியம்மன் பண்டிகைக்காவது போய் அட்லீஸ்ட் கூழ் வாங்கிக் குடிக்கிறானா? சொல்லுடா...அதே மாதிரிதான் என் பையனும் எந்த வீட்டுக்கும் ரம்ஜான் கொண்டாடப் போறதில்ல...மசூதிக்குப் போய் நோன்புக் கஞ்சி வாங்கிக் குடிக்கறதில்ல...ஏண்டா?”

பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றான் நௌஷாத்.

“சரி வண்டியில உக்காரு”

சொன்னக் குமாரை புரியாமல் பார்த்தவன், அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவனைப்போல பின் இருக்கையில் அமர்ந்தான்.


நேராக கடைத்தெருவிலிருந்த அந்த பழைய மசூதிக்கு முன்னால் வந்து வண்டியை நிறுத்தினான் குமார். பள்ளிவாசலும், ஒரு பிள்ளையார்கோவிலும் அருகருகே அமைந்திருந்த இடம். பிள்ளையார் கோவிலுக்கு சொந்தமான சில கடைகள் கோவிலையொட்டியும், மசூதிக்கு சொந்தமான சில கடைகள் அதனையொட்டியும் அமைந்திருந்தன. பள்ளிவாசலின் அருகிலிருந்த அந்தக்கடையைக் காண்பித்து...

“இந்தக் கடை ஞாபகம் இருக்கா?”

“ஏன் இல்லாம...நம்ம நாகராஜன் ஆறாவதோட படிப்பை நிறுத்திட்டு அவங்க அப்பா இங்க வெச்சிருந்த சலூன்லதான் வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். அவங்க அப்பா இறந்ததுக்கப்புறமும் இதே கடையிலத்தானே இருந்தான்.”

“எத்தனை வருஷமா இந்தக் கடை அவங்ககிட்ட இருந்திச்சி தெரியுமா?”

“எனக்குத் தெரிஞ்சி அவங்க அப்பாவே இந்தக் கடையில 20 வருஷமா இருந்தார், அதுக்கப்புறம் நாகராஜன் ஒரு 15, 16 வருஷம் இருந்தான்”

“அத்தனை வருஷமா இருந்தவங்களை ஒரே நாள்ல வெளியேத்திட்டாங்க....ஏன் தெரியுமா? பள்ளிவாசலுக்கு சொந்தமான கடையில முஸ்லீம் மட்டும்தான் இருக்கமுடியுமாம். இன்னைக்கு இதே தெருவுல வேற கடையில கூலிக்கு முடிவெட்டிக்கிட்டிருக்கான்...இதுமட்டுமில்ல..அங்க பார் தள்ளுவண்டியில வாழைப்பழம் வெச்சி வித்துக்கிட்டிருக்காரே ரஹமத்துல்லா பாய்...அவர் எங்க கடை வெச்சிருந்தார்ன்னு தெரியுமில்ல..?...”

அமைதியாய் இருந்த நௌஷாத்தை பார்த்துவிட்டு குமாரே தொடர்ந்தான்.

“இதோ பக்கத்துல இருக்கிற பிள்ளையார் கோவில் கடையில பழம், பூ, வெத்தல வித்துக்கிட்டிருந்தார். அவரையும் வெளியே தள்ளிட்டாங்க...அவரு இந்து இல்லையாம். என்னடா நடக்குது இங்க? எங்கேயோ யாரோ போடற சண்டைக்கு நாம ஏண்டா நம்ம ஒத்துமையை பலிகொடுக்கனும்? உன்னை ஏன் எங்க வீட்டுக்கு வரவேண்டான்னு சொன்னேன் தெரியுமா.....?”

குமாரின் கேள்விகளுக்கு பதிலில்லாமல், அவனது கடைசிக் கேள்விக்கு பதிலறியும் ஆவலுடன் அவனுடைய முகத்தைப் பார்த்தான் நௌஷாத்.

“என் பொண்ணு காலேஜ்ல படிச்சிகிட்டிருக்கான்னு சொன்னேனே அது பொய். அவ செத்துபோய்ட்டா...ஆமா...இப்ப சமீபத்துல மும்பையில நடந்த தீவிரவாதிகளோட துப்பாக்கிச் சூட்டுல உயிரைவிட்டுட்டா....அதுக்கப்புறம் அங்க இருக்க மனசில்லாம, எல்லா மதத்துக்காரங்களும் தாயா பிள்ளையா பழகற நம்ம ஊருக்கே போயிடலான்னு முடிவு பண்ணி இங்க வந்துட்டோம். வந்து ஒரு மாசமாச்சு. ஆனா நான் இப்ப பாக்குற இந்த ஊர் நாம சின்ன வயசுல சுத்தித் திரிஞ்ச ஊராடா? சரி..இதுல உன் குத்தம் என்னன்னு கேக்கறியா? உன்மேல எந்தக் குத்தமும் இல்லடா...ஆன எங்கம்மாவையும், என் மனைவியையும் நெனைச்சுப்பாரு. உயிரையே வெச்சிருந்த பேத்தி செத்துபோனதுக்கும், 18 வருஷமா வளர்த்த மகள் செத்ததுக்கும் உன்னோட மதத்துக்காரங்கதான் காரணம்ன்னு வெறுப்போட இருக்கிறவங்க உன்னை எப்படிடா வரவேற்பாங்க....?”

குமார் சொன்னதைக் கேட்டு நௌஷாத்தின் உடல் அதிர்ந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. குமாரின் கைகளைப் பிடித்துக்கொண்டான். சூடான அவனது கண்ணீர் குமாரின் கைகளை நனைத்தது.

“அதனாலத்தாண்டா உன்னை நான் வீட்டுக்கு கூப்பிடல. நிலைமை இப்ப சரியில்லடா. மனசக் குறுக்கிக்கிட்டு அலையறாங்க மனுஷங்க. குரானும், கீதையும் சொல்றத மூளையால வாசிக்காம, மனசால வாசிச்சுப்பாத்தா...அந்த புனித நூல்கள் என்ன சொல்லுதுன்னு புரியும். தவறான வழிகாட்டுதல்ங்கற ஒரு அழுக்கு மூளையில படிஞ்சிருக்கும்போது, படிக்கற எதுவும் அப்படித்தானிருக்கும். நீ என்னை இந்துகுமார்ன்னோ, நான் உன்னை முஸ்லீம் நௌஷாத்துன்னோ நினைக்காம...வெறும் குமாரா...வெறும் நௌஷாத்தா நினைச்சா எந்த பிரச்சனையுமில்ல.”

“இன்னைக்கு வரைக்கும் நான் அப்படித்தானேடா நெனைச்சுக்கிட்டு வரேன். நேத்துகூட சுரேஷ் வீட்டு விசேஷத்துக்குப் போய்ட்டு பூஜையிலயும் கலந்துகிட்டுதானடா வந்தேன். எப்படிடா உன் பொண்ணை அந்த ஹராமிங்க....மனசே வெடிச்சுடும்போலருக்குடா....அல்லா....”

“உன்னையும் என்னையும் போல இருக்கறவங்களால இந்த மாதிரி பிரச்சனை வருதுன்னு நினைக்கறயா...இல்லடா. நாமல்லாம் பாதிக்கப்படறவங்க. அங்கொண்ணும் இங்கொண்ணுமா நடந்த செயல்களை ஊதிப் பெருசாக்கி எல்லாத்துக்கும் ஏதோ ஒரு முஸ்லீம் இயக்கத்தைப் பொறுப்பாக்கி அதை வெளிச்சம் போட்டுக் காட்டுற இந்த மீடியாக்காரங்களும், எல்லா முஸ்லீமுமே அப்படிப்பட்டவங்கதான்னு நினக்கறதுக்கு காரணம். முஸ்லீமுக்கு வீடு வாடகைக்கு கொடுக்கக்கூடாது, வீட்டை விக்கக்கூடாது, கடையை வாடகைக்கு கொடுக்கக்கூடாது, தன் பையன் முஸ்லீம் பையனோட பழகக்கூடாதுன்னு ரொம்ப தப்பா நினைக்கவெச்சிட்டாங்களே......என்னத்தடா சொல்றது?”

அசையாமல் நின்று கேட்டுக்கொண்டிருந்த நௌஷாத், சட்டென்று திரும்பி விருவிருவென்று நடந்து மறைந்துவிட்டான். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த குமாரின் கண்களில் அவனையறியாது கண்ணீர் பெருகியது.


வீட்டுக்குத்திரும்பிய குமாரின் முகவாட்டத்தை அவன் வண்டியிலிருந்து இறங்கும்போதே கவனித்துவிட்ட அவன் மனைவி,

“என்னங்க என்ன ஆச்சு...ஏன் டல்லா இருக்கீங்க?”

“ஒண்ணுமில்லப்பா....கொஞ்சம் டயர்ட் அதான்......”

“இல்ல என்னவோ நடந்திருக்கு....என்கிட்ட என்ன ஒளிவு மறைவு...சொல்லுங்க என்ன் ஆச்சு?”

“என்னோட ஸ்கூல் ஃபிரெண்ட் நௌஷாத்தை பாத்தம்ப்பா...”

குமார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய அம்மா அங்கு வந்து,

“யாரு...யாருப்பா அந்த நௌஷாத்?” என்று கேட்க,

“அம்மா...மறந்துட்டியாம்மா...என் ஃபிரண்டும்மா...என்கூட படிச்சவன். எத்தனைவாட்டி நம்ம வீட்டுக்கு வந்திருக்கான். எல்லா தீபாவளிக்கும் வந்துடுவானேம்மா...அவன்ம்மா”

அம்மாவின் முக உணர்ச்சி அவன் சொன்னதை விரும்பவில்லையென்பதை அப்பட்டமாகக் காண்பித்தது. அதைப் பார்த்ததும், பதட்டமாய்,

“அம்மா...அவன் என்னம்மா பண்ணுவான்? பாவம்மா அவன். நான் திரும்பி இங்கேயே வந்துட்டேன்னு சொன்னதும் அவன் மொதவேலையா கேட்டதே அம்மா எப்படி இருக்காங்க? அம்மாவப் பாத்து எத்தினி நாளாச்சுன்னுதாம்மா...அவனைப் பாத்தும் நம்ம வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வராதது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கும்மா”

“டே குமார்...உன் பொண்ணு....என் பேத்தி....கடவுளே....அவனுங்களை எப்படிடா....?”

“உன் வேதனை எனக்குப் புரியுதும்மா. ஆனா பாவம், இவனும் நம்மள மாதிரிதான். இவன் என்னம்மா தப்பு செஞ்சான். எவனோ எங்கையோ செய்யற தப்புக்கு இவனை மாதிரி ஒரு நல்ல மனுஷன் தண்டிக்கப்படலாமா?

அப்பாவின் கலங்கிய முகத்தையும், பாட்டியின் வெறுப்பையும் பார்த்து பயந்துபோன குமாரின் மகன் மெள்ள அவனருகே வந்து அமர்ந்தான். பயத்தால் அரண்டுபோன மகனைப் பார்த்ததும், பெற்ற உள்ளம் கேட்காமல் அவனைத் தூக்கி மடிமேல் அமர்த்திக்கொண்டு, அவனுடைய தலைமுடியை ஒரு கையால் கோதிக்கொண்டே,

“கார்த்திகாவோட சாவப்பத்தி கேட்டதும் அவன் துடிச்ச துடிப்பு...நிஜம்மா. அங்க நான் மதத்தைப் பாக்கல....நல்ல மனுஷனைப் பாத்தேன். இவனை மாதிரி இருக்கறவங்கதான் அதிகம்மா. ஏதோ கொஞ்சம் பேர் செய்யறதை வெச்சு எல்லாரையும் நாம வெறுக்க முடியுமாம்மா? கொஞ்சம் நெனைச்சுப்பாரும்மா....நாங்க எப்படி பழகினோன்னு...உன் கையால எத்தினி வாட்டி அவனுக்கு சோறு போட்டிருப்பே....அதே மாதிரி அவங்கம்மா கையால எத்தினி வாட்டி நான் சாப்பிட்டிருப்பேன்...அதெல்லாம் பொய்யாம்மா?”

மகன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அந்த தாயை கலங்கவைத்தது.

“தப்புதாம்ப்பா....அவனை மட்டுமில்ல அவனோட பொண்டாட்டி, புள்ளைங்களயெல்லாம் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வா. ரொம்ப வருஷமாச்சு என் மகனைப் பாத்து.”

மன வேதனையெல்லாம் அகன்று முகம் மலர்ச்சியானக் கணவனைப் பார்த்த குமாரின் மனைவி,

“நாளைக்கே கூட்டிட்டு வாங்க...” என்றாள்.


மனசெல்லாம் நொறுங்கிய நிலையில், நௌஷாத் வீடு திரும்பும்போது மாலை ஐந்து ஆகிவிட்டது. தன் வீட்டுக்கு முன்னால் ஒரு சிறு கூட்டம் இருப்பதைப் பார்த்தவன் நடையை எட்டிப்போட்டான். நௌஷாத்தின் மகன் தலையில் கட்டுடன் அழுதுகொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் நௌஷாத்தின் தம்பி, வளைகுடா நாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்தவன் ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்தான்....

“அந்த இந்துப் பையனுக்கு என்னா திமிர் இருந்தா நம்ம பையனை அடிச்சிருப்பான்? அவனுங்களுக்கு ஒரு பாடம் சொல்லிக்கொடுக்கனும். நாம யாருங்கறதை காமிக்கனும். வாங்கடா...”

என அருகிலிருந்த அவனுடைய நன்பர்களை அழைத்தவனை நோக்கி வேகமாகச் சென்ற நௌஷாத், ஓங்கி அறைந்தான்.

பொறிகலங்கிப்போனவன் ஆத்திரத்துடன் அடித்தது யாரெனப் பார்த்து, அண்ணனை அங்கே கண்டதும், அதிர்ச்சியானான்.

“பாய்சாப்...உங்களுக்கென்னா பைத்தியமா...உங்கப் பையனை அந்த இந்.....அவன் சொல்லி முடிப்பதற்குள் மீண்டும் அறைந்தான் நௌஷாத்.

“என்னடா நெனைச்சுக்கிட்டிருக்கீங்க நீங்க. அவங்க சின்னப்பசங்க. ஒரு பையன் இன்னொரு பையனை அடிச்சிருக்கான். நாளைக்கே அவங்க ஒண்ணா சேந்து விளையாடுவாங்க. அதுல மதச்சாயம் பூசி சாதாரணமா முடிய வேண்டியதை சம்பவமாக்கப் போறீங்களா? நம்ம அப்பாஜான் நம்மளை அப்படி வளக்கலையேடா...எப்படிடா இந்த சைத்தான் புத்தி உனக்கு வந்தது. நெனைச்சுப்பாருடா நம்ம சின்ன வயசு காலத்தை. அதே இப்பத்த நிலைமையையும் பாரு தப்பு எங்கருந்து உருவாகுதுன்னு. எதுக்குடா வெறுப்பு? ஒரு நிமிஷம் நம்ம முன்னால நிக்கறது யாருன்னு மனசைக் கேட்டுப்பாத்தா...எல்லா வெறுப்புமே மறைஞ்சிடும்.

மாங்கா தோப்பை குத்தகைக்கு எடுக்க பெருமாள் கவுண்டர் வீட்டுக்கு அப்பா போகும்போது நம்மளையும் நிறைய வாட்டி கூட்டிட்டு போயிருக்கார். அப்ப அவங்க வீட்ல நம்ம எப்படி நடத்தினாங்க கொஞ்சம் நினைச்சுப் பாருடா. சொந்தப் பிள்ளைங்க மாதிரி மோர் குடுத்து, பலகாரம் குடுத்து....எவ்ளோ பாசம்டா. இப்ப அதுமாதி ஏன் இல்ல. துலுக்கன வீடு சேக்கக்கூடாதுன்னு சொல்றாங்க ஏண்டா? யாரோ எங்கையோ அவங்க ஆதாயத்துக்காக மதத்தோட வெளையாடுறாங்க, அதுக்கு நாமதான் பலியா? நீ படிச்சி என்னத்தடா கிழிச்ச? மனுஷனா நடந்துக்க ஒதவாத படிப்பு உனக்கு எதுக்குடா? ச்சே...அப்பாஜானைப் பாருடா...கண்ணுல தண்ணியோட அவர் படற வேதனையைப் பாருடா....இந்த தலைமுறை இப்படியாயிடிச்சேன்னு அவர் மனசு நொந்துபோய் உக்காந்திருக்கறத பாருடா....தயவு செஞ்சி மனுஷனை மனுஷனா பாருங்கடா...இதுக்கு மேலயும் நீங்க அங்க போய் அவங்களை வெட்டனுன்னு நினைச்சீங்கன்னா என்னையும் நம்ம அப்பாஜானையும் வெட்டிட்டுப் போங்கடா...”

நௌஷாத் பேசிய எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய அப்பா...தள்ளாடி எழுந்துவந்து மகனைக் கட்டிக்கொண்டார். அடுத்து தன் தலையை தன் இளைய மகனுக்கு முன்னால் நீட்டினார்.

அண்ணனின் பேச்சையும், அப்பாவின் அந்த செய்கையையும் பார்த்ததும் அவனுக்கு தன்னையறியாமல் ஒரு வேதனை தோன்ற...அப்படியே மடங்கி சரிந்து அப்பாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு,

“என்னை மன்னிச்சுடுங்க அப்பாஜான்.” என்றான்.

இவர்கள் அணிதிரள்வதைக் கேள்விப்பட்டு அடுத்த தெருவின் அந்தப் பையனின் சொந்தக்காரர்கள், இவர்களுக்கு முன்பே இவர்களைத் தாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் கூட்டமாக வந்தவர்கள் நௌஷாத் பேசியதையும், அதற்குமேல் நடந்ததையும் பார்த்துவிட்டு, தங்கள் கையிலிருந்த ஆயுதங்களை தரையில் வீசிவிட்டு, நௌஷாத்தையும் அவன் தம்பியையும் அணைத்துக்கொண்டார்கள். அனைவர் கண்களிலும் கண்ணீர்தாரை. அதன் வழியே எல்லோருடைய அழுக்கும் கரைந்துபோய்க்கொண்டிருந்தது. குமாரும், நௌஷாத்தும் மீண்டும் தங்களின் பால்ய காலத்தின் சுகத்தை அனுபவிக்கப்போகிறார்களென்பதில் சந்தேகமேயில்லை.

ஒரு நல்ல விதை ஊன்றப்பட்டிருக்கிறது. அது விருட்சமாய், வனாந்திரமாய் பரவி மனிதத்தை விளைவிக்கும் என்ற புதிய நம்பிக்கை பிறந்த அந்த நேரத்தில், பக்கத்து பள்ளிவாசலிலிருந்து கேட்ட பாங்கும், பிள்ளையார்கோவிலில் இருந்து எழுந்த மணியோசையும் அதை உறுதிசெய்தன.

இளசு
21-01-2009, 10:00 PM
அன்பு சிவா

மிக அவசியமான கருவை எடுத்து,அலசி, தீர்வோடு சொன்ன முழுமையான சிறுகதை!

சாதிக்கலவர ஊர்வலங்களில் பள்ளி மாணவர்களைக் கண்டு பதைத்திருக்கிறேன்..

ஒரு ஆண் படித்தால் - அவன் உயர்வான்..
ஒரு பெண் படித்தால் - ஒரு குடும்பம் உயரும் என்பார்கள்..

ஒரு வளர்ந்த மனிதன் கெட்டால் - அது ஒரு கிளை முறிவு!
ஒரு வளரும் சிறுவன் கெட்டால் - அது வேரழிவு..!

அடுத்த தலைமுறைக்கான தற்காப்பு -
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு ஏற்றாமல் காப்பதே!

பாராட்டுகள்!

பாரதி
22-01-2009, 06:06 AM
மனங்கனிந்த பாராட்டு சிவா.

மனிதர்களில் இருக்கும் மனிதங்களை வெளிக்கொணரும் மிக நல்ல கதை. ஒரு நிகழ்வை வைத்து ஒரு சமூகத்தை வசைபாடும், வாக்குகளை அள்ள முற்படும் அரசியல்வாதிகள் நிறைந்த காலத்தில் வசிக்கும் நமக்கு இது போன்ற கதைகள் அவசியமானவை. பெயர்களை வைத்து உயிர்களை வாங்கும் கொடுமைக்காரர்கள் என்றுதான் உணரப்போகிறார்களோ, அன்பே தெய்வம் என்பதை.

மதங்களை மாய்ப்போம்; மனிதர்களாவோம்.

ஆதவா
22-01-2009, 06:41 AM
இன்றைய சூழ்நிலைக்கு மிகத் தேவையான கரு. இஸ்லாமிய நண்பர்களும், மனிதர்கள்தானே... சிறுபான்மையராக இருத்தல் அவர்களின் குற்றமா? யாரோ தூபம் போட, யாரோ அடிவாங்கும் இந்தச் சூழ்நிலை உருவாக யார் காரணம்/??

ஒவ்வொரு இந்தியனுக்கும், எம்மதம் சார்ந்தவனாக இருந்தாலும், முதலில் அம் மத கொள்கைப்படி நடந்துகொள்ளவேண்டும்... எந்த ஒரு மதமும் உயிர் கொல்லுதல், கற்பழித்தல், கொள்ளையடித்தல், போன்ற அநாகரீக செயல்களை கண்டிக்கிறது.. அதேசமயம் அமைதியை விரும்பி வலியிறுத்துகிறது.... ஆக மதவெறி உள்ளவர்கள் அவரவர் மதக் கொள்கைகளை கடைபிடியுங்கள்!!!!

எனக்கு மன்றம் தந்த இசுலாமிய நண்பர்களே உள்ளார்கள்.. பள்ளிக் காலங்களில் இருந்தவர்கள், மற்றவர்களைப் போன்றே காணாமல் போனார்கள்...

சென்ற வருடம் வரை, ரம்ஜான் கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.... குறைந்தபட்சம் (எங்கள் வீட்டில்) மாமிசமாவது செய்வார்கள்...

நல்லதொரு கதை சிவா.அண்ணா. நீங்கள் கதையின் இறுதியில் ஏதேனும் புதுமுடிச்சு வைத்திருப்பீர்களோ என்று எண்ணியே வந்தேன்..

ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-01-2009, 08:24 AM
மனங்களை பார்க்காமல் மத்ங்களைப் பார்க்கும் இன்றைய சமூகத்துக்கு சாட்டை அடி தந்திருக்கிறது இந்த இனிய கதை. கலவரங்கள் தலைதூக்கும்போதெல்லாம் எளிதில் குற்றம் சுமத்தப்படும் ஒரு சமூகத்தின் மீது படிந்திருந்த ஈரம் நெஞ்சில் நிற்கிறது பாராட்டுக்கள். புதிய ஒளி புகழின் ஒளி

சிவா.ஜி
22-01-2009, 02:02 PM
ஒரு வளர்ந்த மனிதன் கெட்டால் - அது ஒரு கிளை முறிவு!
ஒரு வளரும் சிறுவன் கெட்டால் - அது வேரழிவு..!

அடுத்த தலைமுறைக்கான தற்காப்பு -
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சு ஏற்றாமல் காப்பதே!
பாராட்டுகள்!

கதையின் வேரை உணர்த்தும் வரிகள். பிஞ்சுகள் பிஞ்சுகளாகவே வாழட்டும். நஞ்சை ஏந்தி வளர்ந்தால் நாளைய உலகம் நரகம்தான். அனைவருக்குள்ளும் இருக்கும் மனிதத்தை வெளிக்கொணர வேண்டுமென்பதே என் அவா.

பின்னூட்டக் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி இளசு.

சிவா.ஜி
22-01-2009, 02:05 PM
ஊருக்குப் போன வேகத்திலேயே கதை வாசித்து பின்னூட்டமிட்ட உங்களின் செயல் என்னை நெகிழ வைக்கிறது பாரதி. உண்மைதான்...எல்லோரிடத்தும் மனிதமுள்ளது சில காரணிகளால் அவை மறைந்திருக்கிறது. நல்ல நட்பு பாராட்டுதலின் மூலம் அதை நிச்சயம் வெளிக்கொணர முடியும்.

பாராட்டுக்கு மிக்க நன்றி பாரதி.

சிவா.ஜி
22-01-2009, 02:09 PM
ஆதவா, உங்களின் கருத்துபடி அனைவரும் தங்கள் மதம் சொல்வதை அப்படியே கடைபிடித்தால் மிக நல்லது. ஆனால் எல்லா மதத்திலும் அது சொல்லுவதை திரித்துக்கூறி திசை திருப்புபவர்கள் இருப்பதால்தான் இத்தனை பிரச்சனையுமே.

நல்ல நட்பின் மூலம் நல்ல சூழலை உருவாக்க முடியும் எனத்தான் சொல்ல வந்தேன். வேறு ஏதும் முடிச்சு வைக்க நினைக்கவில்லை. நல்லதொரு பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஆதவா.

சிவா.ஜி
22-01-2009, 02:10 PM
நான் மதிக்கும் நல்ல கதாசிரியர் ஐ.பா.ரா அவர்களின் பாராட்டு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி ஐ.பா.ரா.

ஆதவா
22-01-2009, 02:15 PM
ஆதவா, உங்களின் கருத்துபடி அனைவரும் தங்கள் மதம் சொல்வதை அப்படியே கடைபிடித்தால் மிக நல்லது. ஆனால் எல்லா மதத்திலும் அது சொல்லுவதை திரித்துக்கூறி திசை திருப்புபவர்கள் இருப்பதால்தான் இத்தனை பிரச்சனையுமே.

நல்ல நட்பின் மூலம் நல்ல சூழலை உருவாக்க முடியும் எனத்தான் சொல்ல வந்தேன். வேறு ஏதும் முடிச்சு வைக்க நினைக்கவில்லை. நல்லதொரு பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஆதவா.

இப்போதும் அதுதான் பிரச்சனை அண்ணா... இஸ்லாம் கூறும் நல்வார்த்தைகளைக் கடைபிடிக்காதவர்கள் எங்ஙனம் இஸ்லாமியர்களாக இருக்கமுடியும்???

திசை திருப்பிகள் எல்லா மதத்திலும் உண்டு... ஆனால் அதை ஆராய்பவர்கள் ரொம்பவே குறைவு...

செல்வா
22-01-2009, 09:11 PM
எனது வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன் அண்ணா... காலமாற்றத்தை கண்முன்னால் நான் காண்பது போல் நீங்களும் பார்க்கிறீர்கள்.
என்று தணியும் இந்த மதவெறி துவேசம் என்று கேட்பதை விடுத்து. மாறத்துவங்கிவிட்டோம் நாங்கள் என்பதாக முடித்திருப்பது சிறப்பு.
மதவெறியைப்பற்றிப் பல படைப்புகள் எழுதினாலும் இன்னும் சரியாகப் பிரச்சனையின் வேரையோ அதைக்களையும் வழியோத் தொடவில்லை என்றே நான் எண்ணுகிறேன்.
தொடர்ந்து தேடுவோம்.... இந்த மதவெறிக்கு சாவுமணி அடிக்க .....

ரங்கராஜன்
23-01-2009, 03:19 AM
சிவா அண்ணா
சூப்பரான கதை அண்ணா, இந்த கதையை நான் இப்பொழுது தான் படித்தேன். இதை முன்பே படித்து இருந்தால் என்னுடைய வோட்டையும் கண்டிப்பாக இந்த கதைக்கு தான் போட்டு இருப்பேன். மொத்தத்தில் சிறந்த கதையாசிரியர் விருதுக்கு தகுதியான கதை இதுவே..............

இந்த மாதிரி ஒரு முதிர்ச்சியான கதையை எழுத்தில் அனுபவம் இருக்கறவங்க தான் எழுத முடியும். ஏனென்றால் நீங்கள் எடுத்துக் கொண்ட களம் அப்படிபட்டது, கத்தி மேல் நடப்பது போன்றது. அருமையாக நகர்த்தி சென்று இருக்கிறீர்கள்.

இதில் வரும் தப்புகளுக்கு மதத்தை காரணம் காட்டாமல் மனிதர்களை காரணம் காட்டி இருப்பது அருமை, உண்மையும் அதுதான் அவர்களின் வெறுதனத்தில் எத்தனை குடும்பங்கள் அழிக்கிறார்கள் அவர்கள். அவர்களை எல்லாம் மனிதர்களாகவே முதலில் பிரிக்க கூடாது, மனிதர்களே இல்லை என்ற பொழுது எங்கு இருந்து வந்தது மதம். அவர்கள் எல்லாம் விலங்குகள்.

நான் என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் பல இடங்கள் மாறிக் கொண்டே இருந்தேன். நான் எட்டாவது வரை இருந்தது ஒரு கிறிஸ்துவர் வீட்டில், அதன் பின் நான்கு வருடம் என்னை வளர்த்தது ஒரு முஸ்லீம் வீடு. இவர்கள் அனைவரின் வீட்டிலும் நான் எந்த வேறுபாட்டையும் பார்க்கவில்லை. எல்லா மதத்திலும் அம்மா ஒன்று தான் அன்பை கற்று தருவார், அப்பா ஒன்று தான் ஒழுக்கத்தையும், அறிவையும் கற்று தருவார்.

அதனாலே என்னவோ எனக்கு சிறு வயதில் இருந்து மனிதர்களை மனிதர்களாக தான் பார்க்க தோன்றுகிறதே தவிர மதங்களால் அல்ல. உங்கள் கதையில் வரும் குமாரும், நௌஷாத் மனிதர்கள். இவர்களை போல மனிதர்களால் தான் மதத்தை அழிக்க முடியும். நம்முடைய வருங்கால தலைமுறைக்கு இந்த மாதிரி ஒரு மோசமான மத வைரஸை நாம் பரப்பக்கூடாது. அவர்கள் எல்லாரும் பிற்காலத்தில் அறிவால் பிரிய வேண்டுமே தவிர மதத்தால் அல்ல.

நான் நினைத்தேன் கண்டிப்பாக வருங்காலத்தில் மதங்கள், ஜாதிகள் கண்டிப்பாக இருக்காது என்று, ஆனால் என்னுடைய நண்பன் வீட்டில் இருக்கும் மூன்று வயது பெண் குழந்தையிடம்

”பாப்பா உன் பெயர் என்ன பாப்பா” என்றேன்.

“என் பெயரா ...உம்......ம்ம்....... மதுமிதா ($$$$$) (”தன்னுடைய ஜாதி பெயரையும் பின்னாடி சேர்த்து சொன்னது) .

எனக்கு தூக்கிவாரிப்போட்டது, என் நண்பனிடம்

“டேய் என்னடா இது பிஞ்சு குழந்தையின் மனதில் ஏண்டா இப்படி ஏத்துறீங்க”

“சமுதாயத்துல அவளுக்கு இந்த பெயரால் கண்டிப்பா மரியாதை கிடைக்கும் டா”

“சந்தோஷம் டா” என்று அந்த இடத்தை விட்டு வந்துவிட்டேன்.

காரணம் யாரையும் மாற்றுவது என்னுடைய வேலை அல்ல, என்னுடைய குழந்தைக்கு கண்டிப்பாக இப்படி ஒரு விஷத்தை மனதில் விதைக்க மாட்டேன். மனிதர்களை மனிதர்களாக மட்டும் பார்க்க கற்று தரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

உங்களின் கதையின் வாயிலாக பலர் மனதில் இருக்கும் வெறு அழிந்தது என்றால் உங்கள் கதையின் வெற்றி அதுதான். யாருமே போட்டியிட வில்லை அதனால், எனக்கு இந்த விருதை பார்க்கும் பொழுது கூச்சமாக இருக்குனு சொன்னீர்களே, எத்தனை பேர் போட்டியிட்டாலும் இந்த கதைக்கு தான் விருது கிடைத்து இருக்கும். வாழ்த்துக்கள் குரு.

ஆதவா
23-01-2009, 05:35 AM
மூர்த்தி... இன்னிக்கித்தான் உறுப்பிடியா பின்னூட்டம் போட்டிருக்கே!!!!! வாழ்த்துகள்

அமரன்
23-01-2009, 03:13 PM
அருமை சிவா.
பலரது உள்ளக்கிடக்கை உங்கள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது.
பலரது உள்ளப் பள்ளங்களை உயர்வாக நிரவி இருக்கிறது.

மனம்-மதம் ஓரெழுத்து வேறுபாடு.
ஆனால்
பிடிக்கும் விசயம் மாறுபட்டால் விளைவு மிகப்பெரிய வேறுபாடு.

எங்கள் ஊரில் பள்ளிகளி பெயரிலியே மதம் இருக்கும்.
......கிருஸ்தவப்பள்ளி
.......இந்துப்பள்ளி.
........முசுலிம் பள்ளி.

பள்ளியின் தொடர்ச்சியாக கல்லூரியும் இருக்கும்.
கல்விதானாம் மூலதனம் எல்லாரும் சொல்வது.
ஏட்டுக்கல்வியும் சரி பட்டுபடிப்பதும் சரி சர்வநாசம் விளைய அல்லவா விதைக்கிறது.
இப்படிப்பல கதைகள் வந்துகொண்டேதான் இருக்கிறன.
வருமளவுக்கு சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

சிவா.ஜி
24-01-2009, 02:47 PM
ஆஹா....தக்ஸின் நீண்ட பின்னூட்டம்...எத்தனையோ செய்திகளை சொல்கிறது. ஜாதி, மதம் இதெல்லாம் எதற்கு? மனிதனை மனிதனாக பார்த்தாலே உலகம் அமைதியாய் இருக்குமே. தக்ஸின் அந்த நன்பரின் குழந்தை தன் பெயரோடு தன் சாதிப்பெயரையும் சேர்த்து சொன்னதை படித்ததும் தூக்கிவாரிப் போட்டது. என் இரு குழந்தைகளுக்கும் தங்கள் சாதி என்னவென்றே தெரியாது. பிஞ்சு உள்ளங்களில் ஏன்தான் இப்படி நஞ்சை விதைக்கிறார்களோ?

பாராட்டுக்கு நன்றி இளவலே.

சிவா.ஜி
24-01-2009, 02:53 PM
கல்விதானாம் மூலதனம் எல்லாரும் சொல்வது.
ஏட்டுக்கல்வியும் சரி பட்டுபடிப்பதும் சரி சர்வநாசம் விளைய அல்லவா விதைக்கிறது.
இப்படிப்பல கதைகள் வந்துகொண்டேதான் இருக்கிறன.
வருமளவுக்கு சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

வேதனைதான் அமரன். கல்வி போதிப்பது என்ன? ஆரம்பக் கல்வியிலேயே சாதியும், மதமும் சேர்ந்துவிட்டால், இறுதிவரை அந்த நோய் ஒட்டிக்கொண்டுதானே இருக்கும். இதில் நமது அரசுகளும் அதை வளர்ப்பதுதான் அவலத்தின் உச்சம். விண்ணப்ப தாள்களில் எப்போது சாதி, மதத்தை ஒழிக்கிறார்களோ அப்போதுதான் சிறிதாவது மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள் துளிர்விடும்.

ஆனால் அரசியல்வாதிகள் அப்படி நடக்கவிடமாட்டார்கள். வாக்கு வங்கிகள் அல்லவா இந்த இரண்டும்.

நல்லதொரு அலசலுக்கு நன்றி அமரன். விருதைவிட எனக்கு இப்படிப்பட்ட பின்னூட்டங்கள்தான் மதிப்பு கூடியது.

சிவா.ஜி
24-01-2009, 02:55 PM
மதவெறியைப்பற்றிப் பல படைப்புகள் எழுதினாலும் இன்னும் சரியாகப் பிரச்சனையின் வேரையோ அதைக்களையும் வழியோத் தொடவில்லை என்றே நான் எண்ணுகிறேன்.
தொடர்ந்து தேடுவோம்.... இந்த மதவெறிக்கு சாவுமணி அடிக்க .....

நிச்சயம் செல்வா. மதம் பிடித்த மதத்தை அழிக்க நம்மாலான எதையாவது செய்ய வேண்டும். குறைந்தபட்சம் நமது குழந்தைகளுக்காவது சிறிய வயதிலிருந்தே அந்த துவேஷம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எல்லா மாற்றங்களும் நம்மிடமிருந்துதானே தொடங்குகிறது.

நன்றி செல்வா.

அமரன்
24-01-2009, 05:15 PM
விண்ணப்பத்தாள் கூடப் பரவாயில்லை சிவா.

கிருத்தவக்கல்லூரி, இந்துக்கல்லூரி, முஸ்லிம் கல்லூரி, பௌத்தக் கல்லூரி, சோனகர் தெரு, பௌத்தலோக மாவத்தை, தெருக்கள் பலவற்றுக்கு சாதிம் மதப் பெயர். இப்படி எங்கெங்கும் காணிடும் சகதிகளை பூசிக்கொள்ளத்தான் முடிகிறது. விரும்பினாலும் விலகிப் போக இடமில்லாதோரும் உண்டு.

சிவா.ஜி
24-01-2009, 05:41 PM
வேதனைதான் அமரன். தமிழகத்தில் எந்த தெருவுக்குமே சாதிப்பெயர் இருக்கக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அது தெருப்பெயர்களுக்கு மட்டுமே...ஆனால் தேர்தல் என்று வரும்போது சாதியும், மதமும்தான் முக்கிய இடம் வகிக்கிறது. முடிந்தவரை முயற்சித்து அடுத்து வரும் தலைமுறையிலாவது சாதியும், மதமும் இல்லாத நிலையை கொண்டுவரவேண்டும். (நிச்சயமாக இது முடியாதக் காரியம்தான், ஆனாலும் முயல்வதில் தவறில்லை)