PDA

View Full Version : அவன்-கடவுள்



kulirthazhal
21-01-2009, 02:11 PM
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.

அந்த
பிறப்பின்போது
விண்ணில் ஏதும்
மின்னவில்லை.

அவன்
அறிவினை யாரும்
ஏந்திக்கொள்ளவில்லை.

அங்கே
ஒற்றையடிப்பாதைகளை
அவன் நேசிக்கவில்லை,
யாரையும்
வழிமறிக்கவும் இல்லை.
அவன் பாதங்களின்
பத்துக்கண்களும்
பார்த்ததெல்லாம் பாதைதான்.

அவன் பாதத்தால்
வரையப்பட்ட
ஒற்றையடிப்பாதையும்
தனிமையில்....
சில புற்கள்மட்டும்
தலைகாட்ட தயாராய்....,

கண்கள்கொண்ட
யாவரும்
கண்டபோதிலும்
அவனின்
பாதத்தில் பூத்த
செந்துளிகளையே
பாதையின்
வாய்ப்பாடாக்கினர்.
கோட்பாடுகள் சொல்வதெல்லாம்
"முதல் பாதைக்குமுன்
ஓர் பாதம்
அஞ்சாமலிருந்தது".

நடந்துசென்றான்,
தொடர்ந்து நடவாததால்
கடந்துபோனான்,
நிழல் கரையும்வரை
விழியில் நின்றான்.
எங்கேயோ
அவன் அவனுக்காய்
நிம்மதியாய்......,

என்றாலும்
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.

ஈக்கள் மொய்க்காத
வலைக்குள்ளே அழுது,
ஆசானின்
அறிவை மென்று
செரித்து,
தந்தையின் சிறகை
போர்த்திக்கொண்டு
தலையில்கூட
அனல்படாமல் பறந்து,
இலக்கணத்துக்குள்
வலைப்பட்டு
இல்வாழ்க்கை செழித்து
இல்லாமல் போன
எத்தனையோ பிறப்பைப்போல்
அவனும்
முடிவானோ!!!

என்றாலும்
உலகம்
யாசித்துக்கொண்டதும்,
பேசிக்கொண்டிருப்பதும்,
எனக்கொன்றும்
புரியவில்லை.

-குளிர்தழல்.

இளசு
21-01-2009, 10:33 PM
அச்சில் வார்க்கப்பட்ட வாழ்க்கையை
அவசரகதியில் கடக்கும் கூட்டம்..

இன்னொரு மெஸ்ஸையா வந்தாலும்
இனம் காணல் மிக அரிதுதான்..


பாராட்டுகள் குளிர்தழல் அவர்களே!

kulirthazhal
30-01-2009, 07:09 AM
அச்சில் வார்க்கப்பட்ட வாழ்க்கையை
அவசரகதியில் கடக்கும் கூட்டம்..

இன்னொரு மெஸ்ஸையா வந்தாலும்
இனம் காணல் மிக அரிதுதான்..


பாராட்டுகள் குளிர்தழல் அவர்களே!

ஆழமான கவிதைகள் பெரும்பாலானோர்க்கு புரியாமல் போவது வருத்தமளிக்கிறது என்றாலும் அதில் வியப்பு ஒன்றும் இல்லை.

சரியாக விமர்சித்ததற்கு நன்றி இளசு அவர்களே.

இளசு
02-02-2009, 08:41 PM
நல்லவற்றைக் காலம் இனம் காணும்..

நம்பிக்கை (இன்னும்) இருக்கிறது...!

உங்கள் படைப்புகளைத் தொடருங்கள் குளிர்தழல் அவர்களே!

நாகரா
03-02-2009, 12:26 AM
இருதயம் மூடிய கதவைத்
தட்டிக் கொண்டே
திறக்க யாசித்துக் கொண்டும்
இழுத்து மூடிய காதுகளைத்
தட்டிக் கொண்டே
குருமொழி பேசிக் கொண்டே
இன்னும் அவன் இருக்கிறான்
என்றாலும் அன்பாம் அவன்
எம்மறிவில் எட்டவில்லை!

கவிதை அருமை, வாழ்த்துக்கள் குளிர்தழல்

kulirthazhal
09-02-2009, 07:33 AM
இருதயம் மூடிய கதவைத்
தட்டிக் கொண்டே
திறக்க யாசித்துக் கொண்டும்
இழுத்து மூடிய காதுகளைத்
தட்டிக் கொண்டே
குருமொழி பேசிக் கொண்டே
இன்னும் அவன் இருக்கிறான்
என்றாலும் அன்பாம் அவன்
எம்மறிவில் எட்டவில்லை!

கவிதை அருமை, வாழ்த்துக்கள் குளிர்தழல்

நன்றி நாகரா அவர்களே!

அவன் எங்கும் தொலைந்து போவதற்கில்லை,
உறங்கிக்கொண்டு இருக்கிறான் உள்ளுக்குள்....

இளசு
10-02-2009, 07:40 PM
இருதயம் மூடிய கதவைத்
தட்டிக் கொண்டே
திறக்க யாசித்துக் கொண்டும்
இழுத்து மூடிய காதுகளைத்
தட்டிக் கொண்டே
குருமொழி பேசிக் கொண்டே
இன்னும் அவன் இருக்கிறான்
என்றாலும் அன்பாம் அவன்
எம்மறிவில் எட்டவில்லை!



எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே - அவர்
ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!!

குளிர்தழலின் கவிதைக்கேற்ற
பின் -ஊட்டக் கவிதை!
வாழ்த்துகள் நாகரா அவர்களே!

ஷீ-நிசி
11-02-2009, 12:25 PM
கவிதை பல எண்ணங்களை கொண்டு வார்க்கபட்டிருக்கிறது.... நிச்சயம் என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை... இயலாததாலே இதில் தரத்தில் சிறு குறையுமில்லை...


கோட்பாடுகள் சொல்வதெல்லாம்
"முதல் பாதைக்குமுன்
ஓர் பாதம்
அஞ்சாமலிருந்தது".

மிக ஆழமான கோட்பாடு! சிந்தித்துப்பார்த்தால் அட ஆமாம் என்று சொல்கிறது மனம்!

தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துக்கள்!

செல்வா
19-02-2009, 11:53 PM
நட்ட கல்லும் பேசுமோ நாதன்னு(உனக்கு)ள்ளிருக்கையில்

உள்ளத்திலுள்ளானடி அதை நீ உணர வேண்டுமடி

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே....

தேடல் துவங்கிய நாளிலிருந்தே துவங்கி
முடியாது இன்னும் நீளும் தேடல்.....

தேடலில் துவங்கி விரக்தியில் முடிகிறதோ....

அதற்கு அருமையான பின்னூட்டம் நாகரா அண்ணாவிடமிருந்து...

வாழ்த்துக்கள்...