PDA

View Full Version : தெய்வம்ஐரேனிபுரம் பால்ராசய்யா
21-01-2009, 12:52 PM
ஸ்கூல் வேன் பீஸ் கட்ட வந்த நான் அப்படியே என் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்லலாமென தீர்மானித்து, பக்கத்து கடைக்குச் சென்று நான்கு பைவ்ஸ்டார் சாக்லெட் வாங்கிக்கொண்டேன்.

முதலில் எனது மூத்த மகன் இளமதியன் படிக்கும் ஆறாவது வகுப்பு எங்கிருக்கிறதென்று கேட்டு தெரிந்துகொண்டு மாடிப்படியேறினேன். தூரத்தில் என் வருகையைப் பார்த்ததும் பாதி சாப்பிட்ட கையோடு வேகமாக ஓடி வந்து என் கைகளை பிடித்துக்கொண்டான். அவனை வாரி அணைத்து வாங்கி வைத்திருந்த பைவ்ஸ்டார் சாக்லெட்டில் இரண்டை அவனுக்குத் தந்தேன். சாக்லெட் கிடைத்த சந்தோஷத்தில் மீதி சாப்பாடு அவனுக்கு மறந்து போனது.

’' மதிவதனி படிக்கிற கிளாஸ் ரூம் எங்கே இருக்கு?'' என்றேன்.

''நீங்க இங்கேயே இருங்க மம்மி நான் போயி தங்கச்சிய கூட்டிகிட்டு வர்றேன்!'' கைகளை அவசரமாக கழுவிவிட்டு வேகமாக ஓடினான்.

குழந்தைகள் ஒவ்வொருவரும் நீலம் வெள்ளை சீருடையில் உட்கார்ந்து சாப்பிடுவது பார்ப்பதற்க்கு ரம்மியமாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் மகன் மட்டும் திரும்பி வந்தான்.

’’மம்மி தங்கச்சி சாயந்தரம் வீட்டுல வந்து உங்கள பார்த்துக்கிறேன்னு சொல்லி அனுப்பியிட்டா!'' எனக்கு பகீரென்றிருந்தது.

மாலை ஐந்து மணிக்கு வேனிலிருந்து இறங்கி வேகமாக வந்தாள் மதிவதனி.

‘’சாரி மம்மி ஸ்கூல்ல உங்கள பார்க்க ஏன் வரல தெரியுமா? நான் வந்தா கூடவே என் தோழி நிவேதாவும் வருவா, நீங்க என்ன தூக்கி வெச்சு கன்னத்துல கிஸ் பண்ணி சாக்லெட் கொடுப்பீங்க, இதெல்லாம் நிவேதா பாத்தா அவ மனசு கஸ்டமாயிடும் பாவம் அவ போன மாசம் நடந்த பஸ் ஆக்சிடென்டுல அவ அம்மா இறந்துட்டாங்க அவளுக்கும் அம்மா இருந்திருந்தா இது மாதிரி சாக்லெட்டெல்லாம் வாங்கி கொடுத்திருப்பாங்கன்னு ஒரு பீலிங் வருமில்ல அதனாலதான் உங்கள பார்க்க வரல!'' மகளின் செயலை நினைத்து அவளை கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டேன்.

ஆதவா
21-01-2009, 01:25 PM
புத்திச்சாலி மகள்... கொஞ்சம் ஓவர் புத்திச்சாலி...

குறுங்கதைக்குப் பாராட்டுக்கள் சார்..

தமிழ் பெயர்கள் வசீகரிக்க வைக்கின்றன.

நிரன்
21-01-2009, 03:17 PM
குருங்கதை ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களே!!!

உங்கள் நிறைய குறுங்கதைகளைப் படித்து விட்டேன்
அது எப்படியோ தெரியல்ல அந்தக் கருவை அப்படியே
எடுத்துக் காட்டுகி்றது உங்கள் குறுங்கதைகள்


நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்

சிவா.ஜி
21-01-2009, 03:26 PM
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பதை நிரூபிக்கும் குறுங்கதை. கள்ளமில்லா அந்த பிஞ்சு நெஞ்சங்களைப்போல ஒவ்வொருவருக்கும் இருந்தால் இந்த உலகமே அமைதியாக இருக்குமே..!

வாழ்த்துகள் ஐ.பா.ரா.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
22-01-2009, 04:17 AM
புத்திச்சாலி மகள்... கொஞ்சம் ஓவர் புத்திச்சாலி...

குறுங்கதைக்குப் பாராட்டுக்கள் சார்..

தமிழ் பெயர்கள் வசீகரிக்க வைக்கின்றன.

அன்புள்ள ஆதவன் அவர்களுக்கு,

அந்த இரு குழந்தைகளின் பெயர்கள் எனது குழந்தைகளின் பெயர்களே. பாராட்டியமைக்கு நன்றி.

அன்புரசிகன்
22-01-2009, 05:05 AM
இந்த சிறுவயதில் உள்ள தெளிவு அசத்தலானது... சிறப்பான குறுங்கதை...

பாரதி
22-01-2009, 06:27 AM
மிக நல்ல கதை இராசய்யா!
மற்றவர்களைக்குறித்தும் யோசிக்கும், நேசிக்கும் குழந்தை மனம் தெய்வத்திற்கு ஒப்பானதே. சிலவரிகளில் சிந்தனையைத் தூண்டும் நல்ல கதைகளைத்தரும் உங்களை மனதார பாராட்டுகிறேன்.

ஆதவா
22-01-2009, 06:55 AM
அன்புள்ள ஆதவன் அவர்களுக்கு,

அந்த இரு குழந்தைகளின் பெயர்கள் எனது குழந்தைகளின் பெயர்களே. பாராட்டியமைக்கு நன்றி.

ஆஹா.... வாழ்த்துக்கள்.... உண்மையிலேயே உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறேன் ஐயா...

arun
22-01-2009, 07:42 PM
அருமையான மனதை நெகிழ வைத்த குறுங்கதையை கொடுத்தமைக்கு பாராட்டுக்கள்

இளசு
22-01-2009, 08:01 PM
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.

மிக அழகான கதை..

மிக அழகான குழந்தை பெயர்கள் ( தனிப்பட்ட வாழ்த்துகள்..)

ஐ.பா.ரா - நம் மன்றத்தின் அணிகலன்!

பிரபல வார இதழ்களில் எழுதியபடி
நமக்கும் வழங்கும் உங்கள் மனதுக்கு என் வந்தனம்..

ஐரேனிபுரம் பால்ராசய்யா
23-01-2009, 04:48 AM
இனியவர்களுக்கு,
நிறைய குட்டி கதைகளை முதலில் நம் மன்றத்தில் பதியவிட்டு பின்பு வார இதழ்களுக்கு அனுப்புகிறேன், அதில் சில வெளியாகின்றன. முதன்முதலாக கிடைக்கும் பாராட்டு உங்களிடமிருந்து தானே அதற்கு பவர் அதிகம். பின்னூட்டமிட்ட நல்ல இதயங்களுக்கு நன்றி.

ஓவியன்
24-01-2009, 04:24 AM
குழந்தைகளுக்கு இலகுவில் புரிவது நமக்கு இலகுவாகப் புரிவதில்லைத்தான்...

ஏனென்றால் குழந்தைகளைப் போல எல்லோரையும் சரி சமனாக பார்க்கும் நிலை நம்மை விட்டுக் கடந்து போய் விட்டதோ என்னவோ..??

மிக அழகான கருவினைச் சுமந்த கதை, மனதாரப் பாராட்டுகிறேன்..