PDA

View Full Version : நிறைவுற்ற நினைவுகள்...!



வசீகரன்
21-01-2009, 06:43 AM
மெல்ல தாலாட்டிடும்
நினைவுமேகங்கள்...
தென்றலாய் வருடிச்செல்லும்
எண்ணத்திவலைகள்...

மழையாக பொழிந்து உலகம்
சிலிர்த்த நேரம்
கை கோர்த்து நனைந்து
நடந்த தடயங்கள்...

வசந்த வானில் மலர் சொறிந்த
நந்தவனங்களில் மரநிழல்களில்
தோள்சாய்ந்து மனம் முழுதும்
ஆசைகள் சுமந்து
பேசிய கனவுக்காலங்கள்...

கோடை வெம்மையில் பேருந்து
பயணங்களில் வியர்வை பிசுபிசுப்புடன்
ஒட்டி உறவாடி பயணித்த நாட்கள்...

சாலையோர அண்ணா கடையில்
நீயும் நானும் போட்டிபோட்டு
முண்டியடித்து
கை வியர்வை கலந்த
மோர்பானம் பருகிய
நினைவுகள்...

கூதற்காற்றில் கைகள்
இறுகபற்றிக்கொண்டு ஆசுவாசமாய்
ஆலயம் சென்ற
அதிகாலை நேரங்கள்...

பரபரப்பான உலகில் நடந்து
செல்லுகையில்
ஏனோ திடீரென நினைவடித்து
நான் சிரித்து விட
அருகில் செல்வோர்
ஆச்சரியமாய்
பார்த்து விட வைத்த நினைவுகள்...

பழைய பாடபுத்தகங்களை
திறந்து பார்க்கும் போதெல்லாம்
வந்து விடும்
நினைவுகள்...நினைவுகள்...இதயம் முழுதும்
உன் இனிய நினைவுகள்...

காலமேகங்களாய் கலைந்தோம்...
நிறைய பயணங்களை கொண்டோம்...
அனுபவங்களை சேகரித்தோம்...

இன்றும் பார்க்கிறோம்...

எனினும்
பரிமாற்றங்களில் ஒளியில்லை...
புன்னகைக்கிறோம்
பூக்கள் இல்லை...
சிரிக்கிறோம்
சிரிப்பில் உயிர் இல்லை...

நாம் நமது இளமைக்காலங்களை
கடந்து விட்டோம்
இல்லையா தோழி...

நமது இனிமைக்குறும்புகள்
இத்துடன் நிறைவுற்றன
இல்லையா தோழி...!

ஓவியன்
21-01-2009, 06:58 AM
காலமேகங்களாய் கலைந்தோம்...
நிறைய பயணம் கொண்டோம்...
அனுபவங்களை சேகரித்தோம்...
இன்றும் பார்க்கிறோம்..


நாமாகக் கலைத்தவை சில,
தானாகக் கலைந்தவை சில,
விட்டு வந்தவை சில,
விட்டுப் போனவை சில,

எல்லாம் சேர்ந்துதான்
நாம் சேகரித்த அனுபவங்கள்..!! :D

பாராட்டுக்கள் வசீ, அனுபவித்து எழுதியிருக்கீங்க போல..!!

ஆதி
21-01-2009, 08:32 AM
முகிழ்ந்து வரும்
முன்றைய நினைவுகளில்
மூழ்கிப் போகிற
அநுபவத்தின் சுகமே தனி

நுண்மையாய் இதழ்
நுனியில் விரிகிற முறுவலோடும்
திடதிரவமாய் மூழும்
கனத்தினோடும்
கறந்த கவிதையென்றும்
புரிய முடிகிறது..

வேலி மிசையோடும்
செந்தலைக் கரட்டானாய்
தலையும் அசைக்கிறது
ஏக்கத்தோடு தொல் நினைவுகள்
இக்கவிதையை வாசிக்கையில்..

இருப்பினும்
வந்தவை யாவும்
வடுவின்றி மாயும்
என்பதை நினைவாடுகையில்
தனக்கு தானே
சமாதானமாகிக் கொள்கிறது மனது..

வயப்படுத்தும் மழை வரிகளுக்கு
வாழ்த்தும் பாராட்டும் வசீகரன்..

வசீகரன்
21-01-2009, 10:32 AM
நாமாகக் கலைத்தவை சில,
தானாகக் கலைந்தவை சில,
விட்டு வந்தவை சில,
விட்டுப் போனவை சில,

எல்லாம் சேர்ந்துதான்
நாம் சேகரித்த அனுபவங்கள்..!! :D

பாராட்டுக்கள் வசீ, அனுபவித்து எழுதியிருக்கீங்க போல..!!

உண்மைதான் ஓவியரே... அனுபவித்து எழுதிய எழுத்துக்கள்தான்....

கடந்த நிகழ்வுகளை எப்போது கடந்து சென்றாலும்
ஏதோ ஒரு இனம் புரியாத இனிமை...
அதற்காகவே எழுதினேன்...

பாராட்டியமைக்கு நன்றிகள் பல தங்களுக்கு..!

வசீகரன்
21-01-2009, 10:41 AM
இருப்பினும்
வந்தவை யாவும்
வடுவின்றி மாயும்
என்பதை நினைவாடுகையில்
தனக்கு தானே
சமாதானமாகிக் கொள்கிறது மனது..

வயப்படுத்தும் மழை வரிகளுக்கு
வாழ்த்தும் பாராட்டும் வசீகரன்..

மிக்க நன்றி ஆதி... தங்களின் பின்னூட்ட கவி வெகுஅழகு...

நினைவுகள் ஊடே பயணிக்கும் போதுதான் நாம் நம்மை
உணர்கிறோம்...

மிக்க நன்றி ஆதி தங்கள் வருகைக்கு...

சிவா.ஜி
21-01-2009, 02:38 PM
இனிய நினைவுகள். இனிப்பான தருணங்கள். காலம் கடந்துவிட்டது...நினைவுகளில் மட்டுமே தித்திப்பு தங்கிவிட்டது....நிஜத்தில்....கேள்விக்குறியாகிவிட்ட இளமை நினைவுகள்.

வசீயின் வசிய எழுத்து வசீகரிக்கிறது. என்னுடைய நினைவுகளையும் பின்னோக்கி பயணிக்க வைத்துவிட்டது. வாழ்த்துகள் வசீ.

சசிதரன்
21-01-2009, 04:24 PM
மிக இயல்பான வரிகள்... அழகான கவிதை நண்பரே...:)

செல்வா
21-01-2009, 09:37 PM
இனிய அனுபவங்கள்..... இன்ப நினைவுகள்....
என்றும் எந்நிலையிலும்.....
பலநேரம் சுமைதாங்கி
சில நேரம் சுமைஏற்றி....
வாழ்த்துக்கள் வசீ....

வசீகரன்
22-01-2009, 03:22 AM
வசீயின் வசிய எழுத்து வசீகரிக்கிறது. என்னுடைய நினைவுகளையும் பின்னோக்கி பயணிக்க வைத்துவிட்டது. வாழ்த்துகள் வசீ.

மிக்க நன்றி சிவாண்ணா...உங்கள் இளமை நினைவுகள் நினைவுக்கு
வந்தனவோ...!!! ரொம்பவே எனக்கு சந்தோசம் அண்ணா.
உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள் பல...
நினைவுகள் என்பது எவ்வளவு
இனிமையானது என்பதே எனது இந்த கவி... வாழ்த்தியமைக்கு நன்றி அண்ணா....

வசீகரன்
22-01-2009, 03:23 AM
மிக இயல்பான வரிகள்... அழகான கவிதை நண்பரே...:)

நன்றி சசி... தங்கள் பின்ணூட்டத்தை எதிர்பார்த்திருந்தேன்..
தங்கள் வருகைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி சசி...

வசீகரன்
22-01-2009, 03:27 AM
இனிய அனுபவங்கள்..... இன்ப நினைவுகள்....
என்றும் எந்நிலையிலும்.....
பலநேரம் சுமைதாங்கி
சில நேரம் சுமைஏற்றி....
வாழ்த்துக்கள் வசீ....


என்னை பொருத்தவரை என் நினைவுகள் என்றும் எனக்கு சுகமான சுமையாகத்தான்இருக்கிறது செல்வாண்ணா...
தங்கள் வருகைக்கும்
பின்னூட்டத்திற்க்கும் நன்றிகள் பல