PDA

View Full Version : ஏதோ நினைவுகள்...



Keelai Naadaan
20-01-2009, 04:13 PM
அன்பு நண்பர்களே, சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பி இந்த பதிவை பதிக்கிறேன்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு திருச்சி பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சியில் சேர்ந்திருந்தேன். அங்கே தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள வாழவந்தான்கோட்டையில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். எங்கள் அறையில் மூன்று பேர், பக்கத்து அறையில் மூன்று பேர், இன்னொரு அறையில் மூன்று பேர் தங்கியிருந்தோம்.

எல்லோருமே நல்ல நண்பர்கள். எங்கள் பக்கத்து அறையில் இருந்த நண்பர்களில் ஒருவர் இலங்கையிலிருந்து வந்தவர் நிர்மல்.
(நண்பர்களே, இந்த நடந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை மாற்றியுள்ளேன்.) அருகிலிருந்த அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர். அவருக்கு எப்படியோ பக்கத்து அறை நண்பருடன் (இம்மானுவேலுடன்) நட்பு ஏற்பட்டு அங்கு அடிக்கடி வரப்போக இருப்பார். இவர்களுடைய நட்பை பார்த்தால் யாருக்குமே
பொறாமை ஏற்படும். அதனால் தானோ என்னவோ அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. பிரிவு என்றால் மீண்டும் சந்திக்கவே இயலாத பிரிவு.

நிற்க. ஒருமுறை நானும் நிர்மலும் இம்மானுவேலும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கே, அகதிகள் முகாமில் தங்கியிருந்த பெண்மணி சிகிச்சை பெறுவதால் ரத்தம் கொடுக்க சென்றோம். அந்த பெண்மணியை பார்த்தவுடன் என்னால் பார்வையை திருப்ப இயலவில்லை. காரணம் சில வருடங்களுக்கு முன்னால் என் தாயார் எப்படி இருந்தார்களோ அதே போன்ற உடல் பருமன், அதே முகம் எல்லாமே அப்படியே. அசந்து போனேன். நிர்மலிடமும் சொன்னேன். அவர் அந்த பெண்மணியிடம் சொன்னார். அவர் அன்பாய் ஒரு பார்வை பார்த்தார். அன்று ஒரு நாள் தான் அவர் என்னை பார்த்தார். இன்னும் அவர் முகம் எனக்கு மனக்கண்ணில் தோன்றும். ஒரு வேளை என் தாயார் வடிவில் இருந்ததாலோ என்னவோ..? அவருக்கு அறுவை சிகிச்சை இன்றி மருந்து மாத்திரைகளால் குணப்படுத்தி விடலாம் என டாக்டர்கள் சொல்லி விட்டதால் ரத்தம் கொடுக்க வேண்டியதில்லாமல் போனது.

நிர்மலும் இம்மானுவேலும் எப்போதும் ஒன்றாகவே சுற்றுவார்கள். சம வயதினர் தான். நிர்மலுக்கு திருமணமாகி இரண்டு பெண்குழந்தைகள் உண்டு. நிர்மலின் மனைவியும் பிள்ளைகளும் முகாமில் தங்கியிருந்தனர். நானும் சிலமுறை முகாமுக்கு போயிருக்கிறேன். முகாமில் உள்ள அறைகள் ஆஸ்பெஸ்டாஸ் அமைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்த சிலருடனும் நட்பு ஏற்ப்பட்டது.

அந்த நண்பர்கள் பழக இனியவர்கள். அவர்கள் சுத்தமான தமிழில் அதிகம் பேசுவது போல் இருக்கும். அவர்களுடைய பேச்சை கேட்பதும் மிகவும் பிடிக்கும். ஒருமுறை நிர்மலிடம் அதை சொன்ன போது "இங்க தமிழ்நாட்டில யாரும் தமிழ்ல பேச மாட்டாங்களா..? நாங்க மதுரைக்கு ஒருமுறை போய் இருந்தப்ப ஒரு அட்ரஸ் கேட்டா அவங்க பேசினது எல்லாமே இங்லிஷ் கலந்து தான் இருந்தது" என ஆச்சர்யப்பட்டார்.

இப்போது ஆங்கிலம் கலக்காமல் ஒரு நிமிடம் பேசினால் பரிசுகள் தரும் நிகழ்ச்சிகள் நடத்துகின்றன சில தமிழக தொலைக்காட்சிகள்.

நிர்மல் இலங்கை சம்பந்தப்பட்ட விஷயங்களை நிறைய கூறுவார். இங்கே தமிழ்நாட்டில் மரணம் என்றால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் இலங்கையில் அதை சாதரணமாகத்தான் எடுத்துக்கொள்வார்கள் எனவும் சொன்னார். அந்த அளவுக்கு ராணுவத்தால் பிரச்னை என்றார். மேலும், அவர்கள் குடும்பத்தினர் எல்.டி.டி.இ-க்கு நகை மட்டும் 56 பவுன் கொடுத்திருப்பதாகவும் சொன்னார். அவரே, "எங்களுக்கு ஸ்ரீலங்கா கவர்மெண்டாலயும் நிம்மதியில்ல, எல்.டி.டி.இ-னாலயும் நிம்மதியில்ல, இங்கயும் நிம்மதியில்ல" என்றார்.
ஆனாலும் அவர் முகத்தில் நான் சோக ரேகையை பார்த்த நினைவில்லை. ஒரே ஒரு முறையை தவிர. அவர் அந்த அளவுக்கு மனப்பக்குவம் பெற்றவராயிருந்தார். சில பொது நல சேவைகள் செய்வதிலும் ஆர்வத்துடன் பங்கு பெற்றார்.

ஒரு இனிய பழக்கமுடையவர் அருகில் இருக்கும் அனைவரையும் கவர்கிறார். அது எல்லோருக்கும் வாய்ப்பதல்ல. நிர்மலுக்கு அப்படி ஒரு குணம் வாய்த்திருந்தது. அதனால் தானோ என்னவோ இம்மானுவேலுக்கு அவர் மேல் அதீதமான நட்பு-நேசம் ஏற்பட்டு விட்டது. சில நாட்களில் நிர்மல் இம்மானுவேல் அறையிலேயே இரவு தூங்கி விடுவது உண்டு. நிர்மலின் துனைவி அவ்வப்போது வந்து நிர்மலை கடிந்து கொள்வதுண்டு. இம்மானுவேல் ஊருக்கு செல்லும் சமயங்களில் நிர்மலின் குடும்பம் அங்கே தங்குவார்கள்.

ஒரு சமயத்தில் இம்மானுவேல் நிர்மலை விட்டு கொஞ்சம் கூட பிரியாத, பிரிய முடியாத நிலைக்கு ஆளானார். வீட்டுக்கு ஒருநாள் வராமல் இருந்தால் கூட கோபப்படுவார், தினமும் இரவு தூங்கும் போது வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பார். ஆனால் நிர்மலின் துனைவியோ பிள்ளைகளோடு தங்குவதற்கு முகாமுக்கு அழைப்பார். அவர்களுக்குள் சிற்சில வாய்சண்டைகள் நடக்கும்.

இம்மானுவேல் நல்ல உயரம் பருவமாயிருந்தார். சில சமயங்களில் அவரிடம் ஒரு மூர்க்கத்தனம் இருந்ததை போல் உணர்ந்தேன். ஒரிருமுறை இம்மானுவேல் அடித்ததும் உண்டு. நிர்மல் என்னிடம் இம்மானுவைப் பற்றி வருந்தி சொல்வதுண்டு. "நானும் கொஞ்ச கொஞ்சமா தள்ளியிருக்கனும்னு தான் பாக்கிறேன் ஆனா முடியல" சில சமயங்களில் அவரும் எடுத்து சொல்லியிருக்கிறார். நிர்மலின் மனைவியும் எடுத்து சொல்லியிருக்கிறார். எங்களுக்கு (தங்கியிருந்த மற்ற நண்பர்களுக்கு) இதெல்லாம் ஒருவித ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஒருநாள் மாலை வீட்டுக்கு வந்தபோது, இம்மானுவேல் தற்கொலை செய்து கொள்வதாக சொல்லி கொடைக்கானல் சென்றிருப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு போய் விட்டான். நிர்மலும் அவர் மனைவியும் இன்னொரு நண்பரும் கொடைக்கானல் சென்றிருப்பதாக சொன்னார்கள். நான் அறிந்தவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இமானுவேல் கோழையல்ல. நான் நம்பிக்கையுடன் இருந்தேன்.

இரண்டு மூன்று நாளானது. அப்போதெல்லாம் செல்போன் கிடையாது. அதனால் அவர்களை தொடர்பு கொள்ள இயலவில்லை.

சில தினங்களுக்கு பிறகு நிர்மல் வந்தார். இம்மானு சொன்னபடியே கொடைக்கானலில் தற்கொலைமுனை பகுதியில் மரத்தில் தான் கொண்டு சென்ற பையை மாட்டி விட்டு அங்கிருந்து கீழே குதித்து உயிரை விட்டிருக்கிறான். பிறகு அங்கே தற்கொலை செய்து கொள்பவர்களை பள்ளத்தில் இறங்கி தூக்கும் ஆட்களுக்கு பணம் கொடுத்து (ஆறாயிரமோ ஏழாயிரமோ) மேலே தூக்கி வந்தார்களாம். அது ஆயிரம் அடிக்கு மேற்பட்ட பள்ளமாம். உடல் சிதறியிருந்தால் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து இருந்தாலும், வேறு உடல்களை மாற்றி கொண்டு வந்தாலும் அந்த கேட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்பதாக பேசியிருந்தார்கள். இம்மானுவின் புகைப்படத்துடன் இறங்கியிருக்கிறார்கள்.
காலையில் இறங்கினவர்கள் மதியத்துக்கு மேலே ஏறி இருந்தார்களாம். ஆனால் உடலை காணவில்லையே என அவரில் ஒருவரிடம் நிர்மல் கேட்டபோது அங்கே அருகிலிருந்த ஒரு மூட்டையை காட்டி "அதோ இருக்கில்லப்பா" என்றார்களாம். எனக்கு "பக்" கின்னு தூக்கி போட்டது என்றார் நிர்மல்.

"அவனுக்கு உடம்பில எங்கயுமே அடிபடல, என ஆச்சர்யமாய் சொன்ன நிர்மல் என்ன எத்தன முற அடிச்சிருப்பான், எத்தன நாள் அவன் கையில தல வச்சு படுத்திருப்பேன், அந்த கை மணிக்கட்டு எலும்பு மட்டும் ஒடஞ்சு கொடக்குன்னு மடிஞ்சுது பாருங்க" என கண் கலங்கினார்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு இம்மானுவேலின் வீட்டிற்கு நண்பர்கள் எல்லாம் சென்று ஜெபம் போன்றவற்றில் கலந்து கொண்டோம்.
இம்மானுவேலின் அன்பு எந்த வகையான நட்பு என என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

சில மாதங்களுக்கு பிறகு இலங்கை செல்லும் கப்பல் அந்தமானிலிருந்து செல்கிறது என அதில் நிர்மல் செல்ல இருந்தார். அன்று அவர் அகதிகள் முகாமில் இருந்து புறப்படும் நேரத்தில் எங்களோடு இருந்த இன்னொரு நண்பன் வாய்விட்டு "ஓ.." என அழுதான். அன்று புறப்பட்டு போன நிர்மல் ஏதோ காரணத்தால் போகாமல் திரும்பி விட்டார். அந்த இன்னொரு நண்பன் அழுததை நிர்மல் சொல்ல, எல்லா நண்பர்களும் பரிகசித்து சிரித்தோம். நான் ஓராண்டு முடிந்து சென்னை திரும்பும் போதும் அந்த நண்பன் கண்ணை கசக்கி அழ ஆரம்பித்தான். ஏற்கனவே ஒருமுறை அனுபவம் இருந்ததால் மற்ற நண்பர்கள் அவனை அழைத்து சென்றனர்

சில மாதங்களுக்கு நிர்மலுடன் கடித போக்குவரத்து இருந்தது. ஒருமுறை நிர்மலின் குடும்பத்தினர் எங்கள் வீட்டுக்கு வந்து அன்று முழுவதும் எங்களோடு இருந்தனர். இலங்கையில் போர் சூழல் மாறிய பிறகு அங்கு வந்து தங்க வேண்டும் என எனக்கும் ஒரு ஆசை என பேசிக்கொண்டோம், பொன்னியின் செல்வன் கதையிலும், தில்லானா மோகனாம்பாள் கதையிலும், இலங்கையை பற்றிய பயணக்கட்டுரைகளையும் படித்ததில் இருந்து இலங்கைக்கு வந்து சில நாட்கள் தங்க வேண்டும் என மிக ஆவல்.

அதன் பிறகு நிர்மலை சந்திக்க இயலவில்லை. சமீபத்தில் மன்ற ஒன்று கூடும் விழாவின் போது அமரனோடு தொலைபேசியில் பேசும் போது
இலங்கை தமிழ் கேட்டு மகிழ்ந்தேன்.

நினைவு தெரிந்த நாள்முதலாய் இன்னமும் இலங்கை நிலை மாறவில்லை. எப்போது மாறும் எனவும் தெரியவில்லை.
மாறும். இதுவும் கடந்து போகும். ஆனால் எப்போது..?

இலங்கையில் அனைவரும் அமைதியாய் வாழும் அந்த நாளும் வந்திடாதோ.

தங்கவேல்
21-01-2009, 03:05 AM
மனசு கனக்க வைக்கும் பதிவு. அரசியல்வாதிகளின் கோர அரசியலில் சிக்கி சின்னாபின்னமாகும் தமிழினத்தைக் காப்பாற்ற யார் தான் வரப்போகிறார்களோ தெரியவில்லை.

சாராய முதலாளிகள் சம்பாதிக்க லைசென்ஸ் கொடுக்கும் அரசு, கள் இறக்க தடை போட்டிருக்கிறார்கள். கள் இறக்கும் தொழிலாளிகள் போராட்டத்தை அறிவிக்க அதைக் கேலிக்கூத்தாக்கும் கட்சியின் உண்ணாவிரத போராட்டம் அவர்களின் கோர அரசியல் முகத்தை வெளிப்படுகிறது. மக்கள் விரோத போக்கினை மிகவும் வெளிப்படையாக செய்து வரும் கட்சிகள் இந்தியா ஜன நாயக நாடு என்று சொல்லி வருவது ஜன நாயகம் எனும் வார்த்தையினை கேலிக்கூத்தாக்கும் செயல்.

உலகில் எங்கெங்கும் அடிபடுவன் தமிழன். அவனைக் காக்க எவரும் குரல் கொடுப்பதில்லை. காஷாவிற்காக குரல் கொடுக்கும் கட்சிகள் தமிழனின் மூலம் வாழ்வடைவதை வசதியாக மறந்து விட்டு தமிழன் அழிவதைப் பார்த்துக் கும்மாளமிடுகின்றன. அதற்கு தமிழர்களும் துணை போகிறார்கள் என்பது வேதனை.

சிவா.ஜி
21-01-2009, 02:16 PM
ஆச்சர்யமான நட்புதான் இம்மானுவேல் மற்றும் நிர்மலுடையது. அதிதீவிர அன்பே தற்கொலை வரை போக காரணமாய் இருந்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

கீழைநாடான் அவர்கள் விவரித்திருந்ததை வைத்து பார்க்கும்போது நிர்மல் அத்தனை நட்பு பாராட்டுமளவிற்கு இனியவராய் இருந்திருக்கிறார். ஆனால் இன்னும் அவர்கள் வாழ்வில் இனிமை வரவில்லையே என நினைத்தால் வேதனையேற்படுகிறது.

என்று விடியும்...?

நல்லதொரு பகிர்வு கீழைநாடான்.

ரங்கராஜன்
21-01-2009, 05:49 PM
நன்றி கீழை
இந்த மாதிரி நட்பு கூட இருக்குமா? என்று ஆச்சர்யபட வைத்துவிட்டீர்கள். நீங்கள் குறிப்பிட்ட அந்த கொடைகானல் தற்கொலைப் பாறையை நான் பார்த்து இருக்கிறேன். கண்டிப்பாக அதில் விழுந்தால் கீழே விழுவதற்குள் அதிர்ச்சியிலே உயிர் பிரிந்து விடும். கொடுமையான மரணம் தான் அது.

இளசு
21-01-2009, 10:22 PM
குடும்பம் தாண்டித்தான் நட்பு..
எல்லைகள் தளும்பியதால் விபரீத விளைவு..

இம்மானுவேலின் செயல் நியாயத்துக்குரியதன்று..

நண்பரை அடித்து உரிமை கேட்டதெல்லாம்
அன்பைத் தாண்டி ஆதிக்க, ஆக்கிரமிப்பு மனப்பான்மை..

பத்து வயது என்றால் ஒப்பலாம்..
பணிசெய்யும் வயதில்?

---------------------

ஈழத்தமிழர் வாழ்வுச் சிதையலின் ஓரங்கம் இப்பதிவு..
எல்லாம் நல்லபடி தீர்ந்து..
நம் மன்ற உறவுகளுடன், உங்களுடன் நானும் அவர்களின் சொந்தமண்ணில்
ஓர் சங்கமநிகழ்வில் இருக்க ஆவல்..

காத்திருப்போம் கீழைநாடான்..

Keelai Naadaan
22-01-2009, 04:12 PM
எல்லாம் நல்லபடி தீர்ந்து..
நம் மன்ற உறவுகளுடன், உங்களுடன் நானும் அவர்களின் சொந்தமண்ணில்
ஓர் சங்கமநிகழ்வில் இருக்க ஆவல்..

காத்திருப்போம் கீழைநாடான்..
தங்கள் நல்வாக்கு விரைவில் பலிக்கட்டும்.

இந்த பதிவை தயக்கத்துடன் தான் பதித்தேன்.
பின்னூட்டம் தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

ஓவியன்
24-01-2009, 08:58 AM
கிட்டத்தட்ட இதே போன்றதொரு நட்பினை(!) நானும் பார்த்துள்ளேன்...

இளசு அண்ணா கூறியது போல,
நட்புக்கும் வரையறைகள் அத்தியாவசியமானவை..

'அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாமே..!!'

இது போன்ற பிரச்சினைகளை உடையவர்கள்
நல்ல மனோதத்துவ நிபுணர்களை நாட வேண்டும்...
அப்படி நாடினால், இத்தகைய இழப்புக்கள் தவிர்க்கப் படலாம்..!!