PDA

View Full Version : என் இனிய எஜமானரே!எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-01-2009, 02:43 PM
இன்னுமின்னும் உரத்தேற்றுகிறாய்
உன் ஆளுமைகளை!
ஒவ்வொரு கணமும் உயர்ந்தவாறிருக்கின்றன
உயிர் கீறும் உன் உரத்தச் சப்தங்கள்

பலம் குன்றிய என் மந்த விரைவுகளிலும்
என் பாதம் மீறிய விரைவோட்டங்களிலும்
சொடுக்கியடியிருக்கும் உன் சாட்டைக்குண்டான அர்த்தம்
இன்னும் விளங்கவில்லை எனக்கு
நன்றாய் விரைகையில் தட்டிக் கொடுப்பதாகவும்
அது அல்லாத சமயங்களில் உன் உரிமைக் கோறலாகவும்
உன் மீதான விசுவாசம் காக்கிறேன் நான்

காடுகளற்ற கடைத்தெரு வழிகளில்
உன்னிதழ் பூத்துப் புன்னகைக்கிறாய்
ஏற்ற இடமென எண்ணிக் குதூகலிக்கிறாய்
பச்சைப் புல்வெளி வழிகளில்
இன்னும் சீற்றமெடுக்கிறது உன் சாட்டை
விழி எட்டி என் நாவெட்டாத
அப்பசுமை வெளிகளை
துறந்தபடி விரைகிறேன் நான்
உன் மீதான விசுவாசம் காத்தபடி

வெற்று குரைப்புகளன்றி வேறெதுவுமற்ற
வெண்குஷ்டத் தோல் போர்த்தி நிற்கும்
உன் வீடடு வெண் ஜாதி நாயுடன்
உன் தட்டுணவு பகிர்கையில்
கூரைக் கிழிந்த கொட்டகையில்
கொடுங்குளிர் சுமந்து
நீயிறைத்த எச்சில் தின்றபடி
உன் மீதான விசுவாசம் காக்கிறேன் நான்

உணர்வுகளும் ரசனைகளுமற்ற மிருகம்தானென்றாலும்
கட்டுண்டு உன் பணியேற்கும் உன் அடிமைதானென்றாலும்
எலும்பும் தோலுமேற்ற உன் உடல் வழியோடும்
உனக்குண்டான உன் உயிரின் அதே ஒரு மாதிரி
என் மூச்சிலும் நிறைந்திருக்கிறது என்பதையாச்சும்
ஏற்றுக் கொள்வீரா என் இனிய எஜமானரே.

இளசு
17-01-2009, 10:10 PM
வாழ்த்துகள் ஜூனைத்!

விமர்சனம் பிறகு தருகிறேன்..

அதற்குமுன் மன்றத்தோழர்களுக்கு ஒரு சின்ன புதிர் -

எஜமான் பெற்ற செல்வமே என்ற பழைய பாடல்
படத்தில் யார் பாடுவதாக அமைந்த பாடல்?

இதன் விடைக்கும் இக்கவிதைக்கும் தொடர்பு உண்டு!

Zakir Hussain
18-01-2009, 04:30 AM
வாழ்த்துக்கள் தோழரே

தொடரட்டும் உங்கள் துடிப்பான கவி முத்துக்கள்.

சிவா.ஜி
18-01-2009, 02:09 PM
அஃறிணையானாலும், அதற்கும் உணர்வுகளுண்டு என ஆழமாய் அதனுள் நோக்கி அதன் மொழி சொன்ன ஜுனைத்தின் வரிகள் வலிக்கின்றன.

சாட்டை சொடுக்குதலையும், எஜமானின் விருப்பமாக ஏற்றுக்கொண்டு விரைவைக் கூட்டும் உயிர்....தக்க நெருக்கம் தரப்படாத வலியில் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் வேதனை தெரிகிறது.

வித்தியாசமான கருவை சிந்தித்த ஜுனைத்துக்கு வாழ்த்துகள்.

சிவா.ஜி
18-01-2009, 02:16 PM
வாழ்த்துகள் ஜூனைத்!

விமர்சனம் பிறகு தருகிறேன்..

அதற்குமுன் மன்றத்தோழர்களுக்கு ஒரு சின்ன புதிர் -

எஜமான் பெற்ற செல்வமே என்ற பழைய பாடல்
படத்தில் யார் பாடுவதாக அமைந்த பாடல்?

இதன் விடைக்கும் இக்கவிதைக்கும் தொடர்பு உண்டு!

அல்லி பெற்ற பிள்ளை படத்தில் ஒரு குதிரை எஜமானின் குழந்தையை தொட்டில் கயிறு ஆட்டி தூங்கவைக்கும் காட்சியில் குதிரையின் மனவோட்டங்களாக பாடப்படும் அந்த பாடல். ஆமாதானே இளசு?

இளசு
19-01-2009, 06:59 AM
சபாஷ்! மிகச்சரி சிவா.. !

ஒரு குதிரையின் விசுவாசத்தைப் பறைசாற்றும் பாடல் அது!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-01-2009, 04:54 PM
மிக்க நன்றி இளசு அண்ணா உங்கள் பின்னூட்டத்திற்கு. நான் இன்னும் நீங்கள் சொன்ன அந்த பாடல் வரிகளை கேட்க வில்லை. இணைத்தில் தேடியும் கிடைக்கவில்லை.இயலுமென்றால் இணையத்தில் எங்காவது கிடைத்தால் அந்த சுட்டியை தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-01-2009, 04:56 PM
மிக்க நன்றி சிவாஜி அவர்களே உங்கள் பின்னூட்டத்திற்கு.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
19-01-2009, 04:57 PM
வெகு நாட்களுக்கு பிறகு மன்றம் வந்ததில் மகிழ்ச்சி ஜாகிர் அவர்களே.