PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 7



rambal
06-09-2003, 12:08 PM
வார்த்தைகள்..

எங்கும் வியாபித்திருக்கிறது வித விதமான வார்த்தைகள்.. வித்யாசமான பாஷைகளில் உலகமெங்கும் கொட்டிக்கிடக்கின்றன
குப்பைத் தொட்டியில் இருக்கும் குப்பையாய்..

சிகரெட் புகைப்பவனிடம் இருந்து பீடா மென்று துப்பி குளிர் பானமாய் அரசு அலுவலகங்களில் தூசு படிந்த கோப்பாய்
நடைவண்டியில் காய்கறி விற்பவனின் கூவலாய் சந்தையில் செத்தையாய் மேல் தட்டு வர்க்கத்தின் நளினமாய்
நாடக மேடையில் செயற்கையாய் போராட்டங்களில் ஆக்ரோஷமாய் மருத்துவமனைகளில் கவலையாய்
புகைவண்டி நிலையத்தில் அறிவிப்பாய் கட்சிமேடைகளில் பொய்யாய் தேர்தல் பிரச்சாரமாய் மாடு தின்னும் சுவரொட்டியில்
சவமாய் பாடல்களில் ராகத்தோடு இயைந்த ஒலியாய் மிருகங்களின் முணு முணுப்பாய் சிட்டுக் குருவியின் குக்கூவாய்
கவிஞர்களிடம் அண்டப் புளுகாய் கதையாசிரியர்களிடம் விதண்டாவாதமாய் மனைவிகளின் சிணுங்கலாய் போலீஸ் அதிகாரியின்
ஆணவமாய் பேருந்து நிலையத்தில் ஜொள்ளாய் அனல் தெறிக்கும் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவனின் கெஞ்சலாய்
மாமூல் கேட்கும் ரவுடியிடமிருந்து அதிரடியாய் குட்டி நாடுகளை நசுக்கப்பார்க்கும் சர்வாதிகார நாடுகளின் மிரட்டலாய்
காட்டிற்குள் இருந்து அரசுக்கு தூது அனுப்பும் ஒலிநாடாவில் பிளாக்மெயிலாய் எழவு வீட்டில் ஒப்பாரியாய் வக்கீல்களின் ஜாலமாய்
சர்ச்சில் பாதிரியிடம் கேட்கப்படும் பாவமன்னிப்பாய் குருக்களிடம் இருந்து மந்திரமாய் கொத்தவால் சாவடியில் பேரமாய்
பேருந்தில் சில்லறையாய் சனிக்கிழமை அலுவலகங்களில் அரட்டையாய் தனியார் தொலைக்காட்சிகளில் பொழுது போக்காய்
அரசு தொலைக்காட்சியில் விவரணப்படமாய் நடிகைகளின் பேட்டியாய் கொடியேற்றிவிட்டு உரையாற்றும் ஜனாதிபதியின்
வேண்டுகோளாய் சட்டசபைகளில் சபை கலைப்பிற்காய் மந்திரிகளின் ஆமாஞ்சாமியாய் உயிரோடு கொளுத்தப்பட்ட மாணவிகளின்
கதறலாய் அர்த்த ராத்திரி டாக்டரின் அந்தரங்க லோசனையாய் சிட்டுக்குருவி லேகியம் விற்பவனின் அழைப்பாய்
பலான புத்தகம் வாங்கும் இடத்தில் கிசு கிசுப்பாய் பார்களில் அர்த்தமற்ற சிலாகிப்பாய் அடிபட்டு செத்துக் கொண்டிருப்பவனைச்
சுற்றி நின்று பரிதாபமாய் பெண்கள் கல்லூரியில் சிரிப்பாய் டிஸ்கொத்தே கிளப்புகளில் பேரிரைச்சலாய்
ராக் பாடகனின் கத்தலாய் அநாதை ஆசிரமத்து உணவு நேர நன்றியாய் நீலப்படத்தில் வெள்ளைக்காரியின் ஈனஸ்வரமான முனகலாய்
விம்பிள்டன் கோப்பை கிடைத்ததில் ஆனந்தக்கண்ணீராய் படுக்கைக்கு அழைக்கும் உடைந்த சோவியத்தின் ஏதோ ஒரு
பகுதியில் இருந்து வந்தவளின் அழைப்பாய் ஏதோ ஒன்றை வரலாறாய் விவரிக்கும் கைடின் கைதேர்ந்த சிலாகிப்பாய்
புகை வண்டியின் உள்ளே பிச்சை கேட்பவனின் பழைய கண்ணதாசன் பாடலாய் டூ வீலர் ஓட்டியிடம் லஞ்சம் கேட்கும்
போலீஸ்காரரின் தலை சொறிவாய் எங்கெங்கும் கொட்டிக் கிடக்கின்றன வார்த்தைகள்..

என்னென்னவோ வார்த்தைகள்.. என்னென்னவோ பாஷைகள்.. மொழியின் சத்தில்லா வார்த்தைகள்..
சண்டைக்கழைக்கும் வார்த்தைகள்... காதல் மொழி பேசும் வார்த்தைகள்.. படுக்கைக்கு அழைக்கும் வார்த்தைகள்..
மரண வீட்டில் சோகமாய் வார்த்தைகள்...
ஒருவனுடைய உணர்வுகளை அடுத்தவனுக்கு தெரிவிப்பதற்கு ஒரு பாலமாய்...
இப்படியாகப்பட்ட வார்த்தைகளினால் இயங்குகிற உலகத்தில் ஏதோ கொஞ்சம் வார்த்தைகள் கொண்டு
இந்த நாவலை எழுத முயற்சிக்கையில் வார்த்தைகள் தலை மறைவாகி எங்கோ ஓடி ஒளிந்து விட்டன...

இறுதியாக நாவல் எழுத கதாபாத்திரங்களை விட வார்த்தைகளே முக்கியம் என்றும் வார்த்தைகள் இல்லாமல்
எழுத வேண்டுமென்றால் தி கால எகிப்தில் உபயோகப்படுத்திய அல்லது இப்போதும் புழக்கத்தில் இருக்கின்ற மங்கோலியர்கள்
வழி வந்தவர்கள் போல் படமாகத்தான் வரைந்து நாவலை கொண்டு வரமுடியும் என்றும் ஜடாமுனி சித்தர் கூறியதைத் தொடர்ந்து
யோசிக்க ரம்பித்தேன்..

வார்த்தைகள் இல்லாது நாவல் எப்படி எழுத?

ஜடாமுனி சித்தர் கூறியது போல் இன்னும் உலகமெங்கும் படம் வரைந்து விளக்கும் முறை உள்ளதே..
எந்த டாய்லெட் யாருக்குறியது என்பதற்கு கிராமங்களில் ஆண்கள் டாய்லெட்டிற்கு ரஜினி படமும் பெண்கள் டாய்லெட்டிற்கு
ஸ்ரீ தேவியின் படமும் மேலை நாடுகளில் மஞ்சள் நிற பேக்ரவுண்டில் கருப்பு நிறத்தில் பேண்ட் போட்டது ஆண்களுக்கென்றும்
குட்டைப்பாவாடை போட்டது பெண்களுக்கென்றும் படம் வரைந்துதான் விளக்குகிறார்கள். ஏன் அங்கெல்லாம்
வார்த்தைகள் மட்டும் போடக்கூடாது? அப்படியானால் இன்னும் இந்த உலகத்தில் எல்லா இடங்ஆகளிலும் படம் மூலம்
விளக்கும் முறை இருக்கையில் எனது இந்த நாவலை ஏன் படமாக கொடுக்கக்கூடாது என்று யோசனை வர
ஜடாமுனி சித்தர் என் மனதில் இருப்பதை படித்து விட்டு, ஹிக்கின் பாதம்ஸ்ஸிற்குப் போனால்
ஏகப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்கள் இருக்குமென்றும் அதில் லட்சோபலட்சம் வார்த்தைகள் ணி அடித்து
அறையப்பட்டுள்ளது எனவும் எனவே அங்கு சென்று வார்த்தைகளை திருடிக் கொண்டு வந்து உன் நாவலில்
சேர்த்துவிடு என்றும் அப்படி சேர்ப்பது யாருக்கும் தெரியவே தெரியாது என்றும் குறுக்கு வழியில் யோசனை கூற
அந்த யோசனை சரி என்று என் மனதில் தோன்ற ஹிக்கின் பாதம்ஸிற்குப் போனேன்..

தலினால், இந்த நாவலில் இருப்பதெல்லாம் ஏற்கனவே யார் யாரோ எங்கெங்கோ உபயோகப்படுத்திய
ஏதேதோ கதாபாத்திரங்கள் எந்த சந்தர்ப்பத்திலோ எதற்கோ பேசிய வார்த்தைகள், நாவலாசிரியரின் வர்ணணைகளில்
உபயோகப்படுத்திய வார்த்தைகள், தமிழ் அகராதியில் இருந்தும் கொஞ்சம் போல் வார்த்தைகள் எடுத்து எழுதுகிறேன்..

அதனால், இந்த நாவலில் நான் உபயோகப்படுத்தியிருப்பது ஏதும் புதிய வார்த்தைகள் அல்ல.. ஏற்கனவே, இந்த தமிழ் சமூகத்தில்
பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு நிலைகளில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள் எழுதிய வார்த்தைகளை உபயோகப்படுத்தியிருப்பதால்
இந்த நாவலில் இருக்கும் வார்த்தைகளுக்கு நான் உரிமைதாரர் அல்ல.. அப்படி உரிமை கொண்டாடவேண்டுமானால்
மொத்த தமிழ் மொழிக்கும் ஏக போக சொந்தக்காரன் என்று என்னை சொல்ல வேண்டும். அது போன்று ஏதாவது நடந்தால்
தமிழ் சமூகத்தில் எழுதிக்கொண்டிருக்கும் மற்ற எழுத்தாளர்கள் எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லாது போய்விடும் என்பதால்
அந்த உரிமையை கோரக் கூடாது என்றும் பாவம் தமிழ் எழுத்தாளர்கள் பிழைத்துவிட்டுப் போகட்டும் என்றும் ஜடாமுனி சித்தர்
கூறியதால் உரிமை கோரவில்லை..

இக்பால்
07-09-2003, 02:03 PM
போன அத்தியாயத்தோடு சில பேரை துரத்தி விட்டீர்களே!
இது ஒன்றும் அந்த அளவுக்கு இல்லையே! இப்பொழுது
அவர்களை இந்த அத்தியாயத்தை எப்படி படிக்க வைப்பது?

அன்புடன் இக்பால்.

இக்பால்
07-09-2003, 02:10 PM
நான் மட்டும் அங்கேயும் இங்கேயும் யாராவது பார்க்கிறார்களா
என உளவு பார்த்துவிட்டு இங்கே உள்ளே வந்து படிப்பது எப்படியோ
இருக்கிறது. இளசு அண்ணா கூட வருவது இல்லை போல இருக்கு.
பூ தம்பி சொல்லவே வேண்டாம். நல்ல பிள்ளை. சேரன்கயல்தம்பி,
அன்புத் தம்பி எல்லாம் நான் உள்ளே பதுங்கி பதுங்கி உள்ளே
வருவதைப் பார்த்து விட்டு நமக்கேன் வம்பு என அவர்கள் வெளியிலேயே
பதுங்கி விட்டனர். ராம்பால் தம்பி...இப்படி எல்லோரையும் என்னிடம்
இருந்து பிரித்து விட்டீர்களே!-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
07-09-2003, 03:24 PM
என்னவோ நான் எதிர்பார்க்காத திசையில் கொண்டுபோய் நிறுத்தி அசடு வழியவிட்டு பார்க்கப்போகிறது இந்த முடிவிலி...அது மட்டும் இப்போதைக்கு புரியத் துவங்கியிருக்கிறது...
எல்லா அத்தியாயங்களும் அறிமுக தோரணையில் தெரிகிறதாகவும் உணர்கிறேன்...என்றாலும்கூட...படைப்பின் முழுமையறியாது மேற்கொண்டு சொல்லவும் தயக்கம்...
தொடர்ந்து எழுதுங்கள் ராம்...ஆவல் கூடத் தொடங்கியுள்ளது...
(இக்பால் அண்ணா...வெளியே பதுங்கி நிற்கவில்லை...அறிமுகத்திலிருந்தே முடிவிலியை வாசித்து எனது கருத்தை பதித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...)

இளசு
08-09-2003, 12:13 AM
நான் பதிச்சவுடனே படிச்சிடறேன்...
ஏதாவது விளங்கினாத்தானே கருத்து சொல்ல...
இதைச் சொல்ல எனக்கு தயக்கமில்லை.
தெரியாததை தெரியாது எனப் பளிச்சென ஒத்துக்கறது
மன்றத்தில் கத்துக்கிட்ட பாடம்.
சினிமாப்பாட்டா ஏத்தி ஏத்தி பழகிப்போன சித்தாளு மண்டை இது..
ராம் தருவது மிக உயர்ந்த இலக்கியம்..
வாழ்த்து சொல்ல மட்டுமே தகுதி உண்டு..
அது வயதினால் (மட்டும்) வந்த தகுதி.

சேரன்கயல்
08-09-2003, 09:49 AM
இளசு...
உங்களின் தாழ்ச்சியும் பணிவும் என்னையும் பணியவைக்கிறது...
நீங்களே இப்படி சொன்னால், சுண்டைக்காய் பயல் நானென்னெல்லாம் எங்கே என்னை நிறுத்திப் பார்ப்பது...சினிமா பாடல்கள்கூட முழுதாய் தெரியாதே எனக்கு...புறநானூற்றை புதிதாய் புரியவைத்த புன்னியவானே இப்படி சொன்னால்...என்ன சொல்வது...

இக்பால்
09-09-2003, 04:14 AM
சேரன்கயல் தம்பி... ராம்பால் ஆறாவது அத்தியாயத்தில் பயமுறுத்தி
இருந்தார். அதனால்தான் அப்படி சொன்னேன். உங்கள் பெயரை
முன்னர் அனைத்து அத்தியாயத்திலும் பார்த்ததால்தான் உங்கள்
பெயரைக் குறிப்பிட்டு இருந்தேன்.-அன்புடன் அண்ணா.

rambal
09-09-2003, 02:20 PM
இந்த நாவல் சில சர்சைகள் பற்றி கொஞ்சம் தைர்யத்தோடு (அத்தனையும் உண்மை)
இனிமேல்தான் பேசப் போகிறது..
ஆதலால், இது வரை வந்தவை வெள்ளோட்டமே...
என்ன காரணத்தினாலோ 6வது அத்யாயத்திற்கு பயந்து யாரும் விமர்சணம் கொடுக்கவில்லை..
பலருக்கு அவர்கள் மனதிற்குள் பழைய வாழ்வோ அல்லது தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்
வாழ்வோ கண்முன் வந்து போயிருக்கலாம்..
அது மாதிரியான அற்புத கணங்கள் மீண்டும் படமாக்கப்படும்..
பாராட்டி ஊக்கமளிக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றி..

பாரதி
09-09-2003, 02:30 PM
உவமைகள் அதிகம் கையாளப்பட்டு இருக்கின்றன ராம்.

இக்பால்
09-09-2003, 04:55 PM
ஆறாவது அத்தியாயத்தில் விமர்சனங்கள் இல்லையா?
யார் சொன்னதுங்க! நீங்கதான் ஏனோ பதில் கொடுக்கவில்லை.
-அன்புடன் அண்ணா.