PDA

View Full Version : எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்



M.Rishan Shareef
15-01-2009, 07:24 AM
முடிவிலி

அடர்ந்த இருளின் கரங்களில்
இன்று நிலவில்லை
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றைப் பூவரசு
ஒற்றைக் கிணறு
தனித்த நான்

இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாச்
சில பிசாசுகளும் இருக்கக் கூடும்

நண்ப,
உயிர் பிரியும் வரை வலிகொடுத்த
குருதி கசிந்த ஒரு இரவின் பாடலை
ஒரு குறிப்பாக நீ
எழுதிவைத்திருந்ததைக் கண்ணுற்றேன்

எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்

ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்

இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

( யுகமாயினி - டிசம்பர், 2008 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதை )

shibly591
15-01-2009, 08:14 AM
நல்லதொரு கவிதை நண்பரே...

அழகான வரிகள் ஆழமான சிந்தனை..

தொடருங்கள்...

சிறுகதைகளும் கூட மன்றத்தில் பதிய முடியும்...

ஒரு முறை மன்றத்தை உலா வாருங்கள்...

வாழ்த்துக்கள்

M.Rishan Shareef
16-01-2009, 06:08 AM
அன்பின் ஷிப்லி,
//நல்லதொரு கவிதை நண்பரே...

அழகான வரிகள் ஆழமான சிந்தனை..

தொடருங்கள்...

சிறுகதைகளும் கூட மன்றத்தில் பதிய முடியும்...

ஒரு முறை மன்றத்தை உலா வாருங்கள்...

வாழ்த்துக்கள்//

நிச்சயமாக நண்பரே..வாழ்த்துக்களுக்கு நன்றி !

ஆதவா
17-01-2009, 06:46 AM
வணக்கம் ரிஷான் அவர்களே..

ஈழக்கவிதைகள் எத்தனை சிறப்புற படித்து மகிழ்ந்ததுண்டு. பல கவிதைகள் சலிப்பாகவும், பல கவிதைகள் வலிப்பாகவும் இருக்கும்.. ஈழசகோதரர்களின் நிலையை எண்ணியெண்ணி மனதுருகிட என்னால் சில கவிதைகளின் மூலம் முடியலாம்.. பெரும்பாலானவைகள் கோபத்தையே வரவழைக்கும்..

ஏளனப்படுத்துதல், அல்லது அதன் விளைவினால் ஏற்படும் அவமானம் குறித்த உங்கள் பார்வை,வித்தியாசமான கோணம்.

எழுதப்பட்ட சூழல், அல்லது வருணிக்கப்பட்ட சூழலின் கனம், தனித்தன்மை மிக்க சொல்லாளுமையால் இன்னும் கனமாகி நெஞ்சை சுடவைக்கின்றது. இருளெனும் இயற்கையை மெய்யாக்கி, கையாக்கி, நிலவைப் பொத்திய வரிகள் மிக அருமையானவை.

தனித்தமனத்தின் எண்ணப் பாய்ச்சலுக்கு ஒத்த வரிகளாக, பார்வைக்கெட்டா பிசாசுகள் நெளிந்துகொண்டிருக்கின்றன. அதற்கு தனி சபாஷ்.

நண்பன் விட்டுச் சென்ற பணி, குருதி முறுக்கத்தில் சுருக்கேறி, ரணப்பாடலின் ராகம் வழியே வெளியேற, சுண்டித் தெறித்த நாணயம் எப்பக்கம் வீழும் எனும் முடிவில்லாத வாழ்வுப்பக்கத்தைப் பாடிக்கொண்டிருக்கும்... சிலருக்கு மரணம் என்பது கொள்கை, சிலருக்கு அது வாழ்க்கை.


எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது

எல்லா எழுத்துக்களையும் எழுதி பாடல் முடிவுபெறுகிறதா இல்லையா? இன்று அதுதானே முக்கியம்.. சுரம் குறைந்த ஒலியை எந்த ரசிகனும் விரும்பாத நிலையில், முடிவில்லா பாடலைத்தான் காலம் எழுதப் பயணித்திருக்கிறதோ? வீழ்ச்சி என்பது மற்றொன்றின் எழுச்சி. அந்த மற்றொன்று வீழ்ச்சியின் அடிபாதத்தில் இருக்கவேண்டும்... இக்கவிதை நாயகனின் வீழ்ச்சி, நாளைய ஈழப்பிறப்பின் பின்புலம் முழுக்க நிறைந்திருக்கும்... மரணத்தில் நிம்மதி அங்கே முழுமையாகும்.

இறுதி வரிகளான ஏளனம், இருக்கவே செய்கிறது. ஒன்றை மிதித்து ஒன்று எழுவது ஆதிகாலம் தொட்டு பூமி காணும் வரலாறு. போராளிகள் உயிரை எனும் சொல்லை மெய்யிலிருந்து பிரிக்கிறார்கள் அதன் வலியை கவிஞர்கள் எழுத முனைகிறார்கள்.

வாழ்த்துக்கள் ரிஷான்...

சசிதரன்
18-01-2009, 04:25 PM
மிக அற்புதமான வரிகள்... மிக தெளிவான பின்னூட்டத்தை மிக அழகாக ஆதவா தந்துள்ளார்... தொடருங்கள் நண்பரே...:)

100 இ-பண அன்பளிப்பு கொடுத்து மகிழ்கிறேன்...

M.Rishan Shareef
27-01-2009, 05:41 AM
அன்பின் ஆதவா,

கவிதை குறித்து நீண்டதொரு வசன கவிதையாக உங்கள் தெளிவான கருத்தும், பார்வைக் கோணமும் என்னை மகிழ்விக்கின்றது. தொடர்ந்தும் எழுத ஊக்கப்படுத்துகிறது.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef
27-01-2009, 05:42 AM
அன்பின் சசிதரன்,
//மிக அற்புதமான வரிகள்... மிக தெளிவான பின்னூட்டத்தை மிக அழகாக ஆதவா தந்துள்ளார்... தொடருங்கள் நண்பரே...//
நிச்சயம் தொடர்கிறேன் நண்பரே.
அன்பான ஊக்குவிப்புக்கு நன்றி..!

அய்யா
27-01-2009, 06:05 AM
அன்பின் ரிஷானின் எழுத்துகள் எனக்கு ஆர்குட்டில் மிகப் பரிச்சயமானவை.

கவிதை மட்டுமின்றி மற்ற துறைகளிலும் வல்லவர் நண்பர் ரிஷான்.

மன்றத்துக்கு வரவேற்கிறேன் ரிஷான்!

அய்யா
27-01-2009, 06:05 AM
அன்பின் ரிஷானின் எழுத்துகள் எனக்கு ஆர்குட்டில் மிகப் பரிச்சயமானவை.

கவிதை மட்டுமின்றி மற்ற துறைகளிலும் வல்லவர் நண்பர் ரிஷான்.

மன்றத்துக்கு வரவேற்கிறேன் ரிஷான்!

M.Rishan Shareef
07-02-2009, 01:00 PM
அன்பின் திரு.அய்யா,
அன்பான வரவேற்புக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !