PDA

View Full Version : முகிலும் நானும்ஆதி
15-01-2009, 07:24 AM
மந்தாரமிட்டு பெய்த
பால்ய முகல்கள்
அறியும்
மழை மீதான
என் காதலை

பள்ளிப் போதுகளில்
பால்முகில் ஏதேனும்
சூல்கொண்டிருப்பதாய்
பாவனை செய்தாலும்
பரவசமாகிவிடும் மனம்.

இருப்பினும்
நனைதலுக்கான என் காத்திருப்பை
நசுக்கி ஏறியும் மழையாடையோடு
வந்திடுவாள் அம்மா..

பிற்பகல் ஒன்றில்
தாழ்வாரத்தில்
சரிந்திருந்த சரங்களுடன்
சரசமாடி கொண்டிருந்ததால்
சட்டுவத்தால் புடைக்கவும் செய்தாள்..

அடைமழை நாட்களில்
குடையை மறுதலிக்க முயல்கையில்
தன் அதட்டல் வேட்டால்
என் குதூகலக் கனவுகளை
அடியோடு தகர்த்திடுவார் அப்பா..

முற்றத்தில் பின்பொருநாள்
முடிப்பவிழ்த்த முகிலை
பொறுக்க முனையாமல்
புறக்கணித்துவிட்டேன் நானும்
தேர்வின் காரணமாய்..

இன்றோ
மறுக்கப்பட்ட மழைக்கும் சேர்த்து
முகிலாடி மகிழ்ந்தாலும்
மனதின் ஆழத்தில்
உலாவிக் கொண்டுதான் இருக்கிறது
நனைதல் பொருட்டான
என் முந்தைய ஏக்கங்கள்..

இளசு
15-01-2009, 07:55 PM
ஆதி,


முகில்களுக்கான ஆங்கிலச் சொற்கள் -

1 High-level clouds
1.1 Cirrus
1.2 Contrail

2 Medium-level clouds
2.1 Altostratus
2.2 Altocumulus
2.3 Nimbostratus

3 Low-level clouds
3.1 Stratocumulus
3.2 Stratus
3.3 Cumulus

4 Vertically developed clouds
4.1 Cumulonimbus

இதற்கான ஈடு நம் செந்தமிழில் இருக்கலாம்..
அறியா ஏக்கம் என்னில் உண்டு..

பால்முகில்,முடிச்சவிழ்ந்த முகில்,சரிந்த சரம் என்னும் புதுவீரியச் சொல்லழகால்
என் தாகம் கொஞ்சமேனும் தணிந்தேன்..

நன்றி + பாராட்டு!

ஆதி
18-01-2009, 02:53 PM
ஆதி,


முகில்களுக்கான ஆங்கிலச் சொற்கள் -

1 High-level clouds
1.1 Cirrus
1.2 Contrail

2 Medium-level clouds
2.1 Altostratus
2.2 Altocumulus
2.3 Nimbostratus

3 Low-level clouds
3.1 Stratocumulus
3.2 Stratus
3.3 Cumulus

4 Vertically developed clouds
4.1 Cumulonimbus

இதற்கான ஈடு நம் செந்தமிழில் இருக்கலாம்..
அறியா ஏக்கம் என்னில் உண்டு..

பால்முகில்,முடிச்சவிழ்ந்த முகில்,சரிந்த சரம் என்னும் புதுவீரியச் சொல்லழகால்
என் தாகம் கொஞ்சமேனும் தணிந்தேன்..

நன்றி + பாராட்டு!

இத்தனை பெயர்களா மேகத்திற்கு, உண்மையில் ஆட்சயர்மாக உள்ளது அண்ணா..

இவற்றுக்கான தமிழீடுகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்..

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிகள் அண்ணா..

சிவா.ஜி
18-01-2009, 03:54 PM
சிறுவராய் இருந்தபோது...மழைமுகில் பொழிவில், உடலோடு மனமும் நனைய ஆடிக்களித்த காலங்களும், அதற்க்கான பின் விளைவுகளாய் கிடைத்த காய்ந்த ரொட்டியும் பாலும், சில தட்டல்களும், கொட்டல்களும் நினைவில் வந்து போகின்றன.

”இருப்பினும்
நனைதலுக்கான என் காத்திருப்பை
நசுக்கி ஏறியும் மழையாடையோடு
வந்திடுவாள் அம்மா..”

இதை வாசிக்கும்போது, மழையாடை என்ற ஒன்று...பணம் உள்ளவர்களுக்குத்தானென ஏக்கமாய் பார்த்த நாட்கள் நினைவுக்கு வருகிறது....

இழந்த ஏக்கங்களை...இனிய கவியாக்கிய ஆதிக்கு என் வாழ்த்துகள்.

செல்வா
19-01-2009, 05:51 AM
மழையில் நனைவது எனது வாழ்வோடு ஒன்றிய ஒன்று.
ஜுன் மாதம் திருவிழா நேரத்தில் சாரல் மழையில் நனைந்தபடியே கைகளில் உருகி வழியும் ஐஸ் குச்சிகளை நக்கிக் கொண்டு ஊரைச்சுற்றிய பால்ய நினைவுகளைக் கிளறிவிட்டது உன் கவிதைகள்.
எங்கெங்கு சென்று குளித்தாலும் மழையில் நனைந்தபடி குளிக்கும் மழைநீரில் குளிக்கும் சுகத்திற்கு அளவேது...
உன்னளவிற்குக் கட்டுப்பாடுகள் இல்லை எனக்கு.
இரண்டே இரண்டு நிபந்தனைகள் தான்....
பல நாள் பெய்யாமல் பெய்யும் முதல் மழையிலும், குளிக்கும் அளவிற்கு குளிர்நீர் கொணரா சாரல் மழையிலும் நனைய அனுமதியில்லை எனக்கு.
மற்றபடி மழை என்றால் எங்கள் வீட்டைச் சுற்றியிருக்கும் சிறுவர்கள் அனைவரும் வீதியில் தான்....
இனிய கவிதையால் இதயம் நனைத்தாய் .... வாழிய நீ