PDA

View Full Version : இரயில் சிநேகம்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-01-2009, 04:17 PM
புத்தக இரவல் கோரல்களிலும்
அசௌகரியச் சூழ்நிலைச் சீர்கேட்டின் நொந்தல்களிலும்
முளையிட்டுத் தொடங்கும் இரயில் சிநேகம்

அடுத்துப் பின் பெயர் பரிமாற்றங்கள்
எங்கே எதற்காய் எப்பொழுதென்ற
ஒவ்வொருவருக்கான பயணப் பிரயாசைகள்
அப்படியா! அங்கேயா!
எதிர்பட்டவரின் தனக்குண்டான ஏரியாத் தொடர்புகளை
இழுத்து வளைத்து நுழைத்து
பேச்சிழுக்கும் கைங்கர்யங்கள்

பின் இருந்ததை விடுத்து இல்லாததை எடுக்கும்
சிறிய மற்றும் பெரிய தத்தமது உண்டி மாற்றங்கள்

வழிப்படும் வழிகளையும்
அப்பகுதி மொழிகளையும்
அவரவர் ஆய்வுகளில் நிறைதல்களும் குறைதல்களும்

நிறைந்து கிடக்கும் உறவுக் குவியல்களில்
புதியதோர் மாமா அத்தையை
மழலைக்குச் சொல்லிப் பின் கேட்டு
மகிழ்ச்சியில் மனங்கள் குதூகலிட்டு
கண்டிப்பாய் தன்னில்லம் வர வேண்டுமென்றும்
இயல்கையில் தானும் வருவதாகவும்
உறுதி மொழிகள் கூடிய முகவரிகள் மாற்றி
என்னதான் உறவுக் கீதமிசைத்தாலும்
சலவையில் சிக்குண்டுச் சீரழிந்த
அச்சிதிலத் துண்டுச்சிட்டு காண நேர்கையில்
நெற்றி சுளிக்கவே செய்கிறேன் யாரென்று!

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

இளசு
17-01-2009, 12:02 PM
அன்பு ஜூனைத்,

அசத்திவிட்டீர்கள் வழக்கம்போல்..
அன்றாட வாழ்வு நிகழ்வுக் குவியல்களில் இருந்து இவ்வகைப் பொக்கிஷங்கள் கண்டெடுப்பது
உங்கள் கைவந்த கலை! பாராட்டுகள்!

---------------------------------

மொத்த வாழ்வே ஒரு நீண்ட ரயில் பயணம்..
மொத்த உறவுநட்பே ஒரு பெரிய ரயில் சிநேகம்..

இல்லையா?

அக்னி
17-01-2009, 01:46 PM
இரயில் சிநேகம்..,
ஓரு கை கொடுத்து ஏற்றிவிட்ட போது,
ஓர் இடம் கொடுத்து அமரவைத்த போது,
ஓரு மழலையால் சிரித்த போது,
ஓர் மழலையைச் சிரிக்கவைத்த போது,
ஓரு அழகைப் பார்த்த போது,
ஓர் அழகு பார்த்த போது,
எனப் பலத் தொடக்கப்புள்ளிகளில் தொடங்கினாலும்,
நிறுத்துமிடத்தோடே நின்றுதான் போகின்றன.

சிறு நிகழ்வுப் பொறியில், ஒளிர்கின்றது கவித்தீபம்...
அண்மையில் ஏதேனும் காகிதங்கள் கிட்டியது போலிருக்கே...
பாராட்டுக்கள் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அவர்களே...

*****
சில நாட்களுக்கு முன்னர்,
எனது அலைபேசியின் தொடர்பாளர்கள் நினைவகத்தை மீள நிறுவுகையில்,
இந்நிலையில் நானிருந்தேன்.
ஆனால், இப்படிக் கவிதையாக்கலாம் எனத் தோன்றவில்லை.

*****
ஐந்து நட்சத்திரக் கௌரவிப்பும், 100 இ-பணப் பரிசுமளித்து மகிழ்கின்றேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-01-2009, 02:25 PM
மிக்க நன்றி இளசு அண்ணா. மொத்த வாழ்வே இரயில் பிரயாணம் என்ற கூற்று மிக்க சரி. நபிகளாரின் ஒரு கூற்றும் உண்டு. மனிதனைப் பார்த்து நீ இவ்வுலகில் அந்நியனைப் போன்றோ அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்றோ உன் வாழ்வை அமைத்துக்கொள் என்று நபிகளார் கூறியதாக படித்திருக்கிறேன்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-01-2009, 02:29 PM
அக்னி! உங்கள் பின்னூட்டக் கவிதை அருமைங்கோ. ஏகப்பட்ட பேப்பர் சைவசம் இருக்குங்க. யாரு எப்ப எதுக்கு தந்தாங்கன்னுதான் நியாபகம் இல்ல. அதுக்காக எனக்கு மறந்து போற வியாதி இருக்குன்னு நெனச்சிராதீங்கண்ணா.

சிவா.ஜி
18-01-2009, 04:06 PM
ரயில் பயணமென்பது சுவாரசியக்குறைவில்லாதது. வித்தியாச பாத்திரங்களை பயண வேளையில் அறிமுகப்படுத்தும் ரயில்பெட்டி மேடை.

சில அலட்டல்கள்
சில ஆதங்கங்கள்
சில அங்கலாய்ப்புகள்
சில அழுகைகள்
சட்டென்று தோன்றி மறையும்
எரி நட்சத்திரத்தைப் போன்ற
தாவணி சிரிப்புகள்...
இறங்கிய பிறகும்
இதயத்தில் இருக்கும்
இன்பமான பொழுதுகள்..
ஏறும்போது இருந்த வெள்ளைச்சட்டை
இறங்கும்போது பழுப்பாகி
துவைத்தலில் வெளுப்பதைப்போல
மறத்தலில் வெளுக்கும்
கொஞ்ச நேர உறவுகள்...

நிகழ்வுகளை வரிகளில் படம் பிடித்து, உணர்வுகளைக் கவிதையில் தூவிய ஜுனைத்தின் எழுத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

சசிதரன்
18-01-2009, 04:16 PM
மிக அருமையான கவிதை வரிகள் நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்...:)