PDA

View Full Version : ஆளில்லாத அநாதைகள்



சுகந்தப்ரீதன்
10-01-2009, 05:11 AM
அன்றைக்கு விடிந்ததா இல்லையா என்றுக்கூட எனக்கு தெரியாது. திடீரென்னு வயிறு வலிப்பதுபோல் இருந்ததால் தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டேன். எழுந்த பிறகுதான் முதல்நாள் இரவு அம்மாவிடம் பள்ளிக்கு கட்ட பணம் கேட்டது, அம்மா தற்போது தன்னிடம் இல்லை என்றது, அதனால் கோபித்துக்கொண்டு சாப்பிடாமல் படுத்துக்கொண்டது இப்படி ஒவ்வொன்றாக என்னோட நினைவுக்கு வந்தது. நான் சாப்பிடாமல் படுத்த பொழுதே அம்மா என்னிடம் கெஞ்சி கேட்டாள், "ராத்தியில வெறும் வயித்தோட படுக்கக்கூடாதுப்பா, சாப்பிடு படுப்பான்னு". நாந்தான் பிடிவாதமா அவளோட சொல்லை கேட்க மறுத்துவிட்டேன்.

'பசி வந்தா பத்தும் பறந்துடும்'ன்னு சொல்லுவாங்க. அதில் என்னோட பிடிவாதம் மட்டும் பிடிப்போட நிற்க்குமா..? வந்தது வயிற்றுவலி அல்ல வயிற்றுப்பசி என்றறிந்ததுமே எனக்குள்ளிருந்த பிடிவாதம் எங்கே சென்றதென்று தெரியவில்லை. எழுந்ததும் பல்துலக்கும் நல்ல பழக்கம்கூட அப்போதிருந்த பசியில் என்னிடம் இல்லாமல் போயிருந்தது.

நேராக எழுந்துசென்று மின்விளக்கைப் போட்டுவிட்டு, அடுப்படியில் இருந்த சோற்றுப்பானையை திறந்தால் ரெண்டுபேர் சாப்பிடும் அளவுக்கு சாப்பாடு அப்படியே தண்ணியில் ஊறிக்கொண்டிருந்தது. 'சோத்துப்பானையை சுத்தமா தொடைக்கக்கூடாது'ன்னு சொல்லி அம்மா கொஞ்சம் சாதத்தை எப்பவும் குண்டுல மிச்சம் வைத்திருப்பது வழக்கம். ஆனால் முதல்நாள் நான் சாப்பிடவில்லை என்றதும் அம்மாவும் சாப்பிடவில்லை போலிருக்கு. நானும் பலமுறை அம்மாவிடம் பாடிகாட்டி இருக்கேன் "தாயும் பிள்ளையும் ஆன போதிலும் வாயும் வயிறும் வேறடா"-ங்கிற கண்ணத்தாசனோட பாட்டை..!! இருந்தும் அம்மாவுடன் இருந்தவரைக்கும் நான் சாப்பிடவில்லை என்றறிந்த பிறகு அவள் சாப்பிட்டதாக நான் அறிந்ததில்லை.

எங்கள் வீட்டில் அப்பா, அம்மா, நான், எங்க அண்ணன் என்று மொத்தம் நால்வர் மட்டும்தான். அதிலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு அண்ணன் எதற்காகவோ வீட்டில் கோபித்துக்கொண்டு, பதிமூன்று வயதில் சென்னைக்கு சம்பாதிக்க சென்றபிறகு எங்கள் குடும்பம் இன்னும் சுருங்கிவிட்டது என்றே சொல்லலாம். அண்ணன் வருடத்துக்கு ஒருமுறை பொங்கலுக்கு மட்டும்தான் ஊருக்கு வருவான். ஒருவாரம்கூட என்னுடன் ஒன்றாய் இருக்காமல் உடனே திரும்பி சென்றுவிடுவான்.

ஓவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும், "என்னாலதான் படிக்க முடியாம போயிடுச்சி, நீயாவது நல்லாப்படிச்சிக்கடா தம்பி"ன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பான். எதற்காக அவன் அப்படி சொல்கிறானென்று அப்போதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் அவன் சொல்லைத் தட்டக்கூடாதென்று மட்டும் தோணும்.

இப்படி ஏதேதோ நினைத்தப்படி, தண்ணியில கிடந்த சாதத்தை தட்டில் எடுத்துப்போட்டு சுண்டிப்போன குழம்பை ஊற்றி சாப்பிடும்போது சத்தம்க்கேட்டு அம்மாவும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டாள். நான் பசியோட சாப்பிட்டு கொண்டிருப்பதை கண்டதும் அவளோட கண்கள் கலங்கிருச்சி. ஆனாலும் எங்கே நான் சாப்பிடுவதை நிறுத்தி விடுவனோ என்று பயந்து கண்டும் காணாத மாதிரி திரும்பி படுத்துக் கொண்டாள். அது ஒன்றும் எனக்கு முதல்தடவை இல்லையென்றாலும் என்னால்தான் அம்மா சாப்பிடவில்லை என்பதை நினைத்தப்போது குற்ற உணர்வு சற்றுக் கூடுதலாகி தலையை குனிந்தபடியே சாப்பிட்டு முடித்தேன்.

சாப்பிட்டு முடித்ததும் ஒன்னுக்கு வருகிறமாதிரி இருந்தது. தூக்கத்துல ஒன்னுக்கு வந்தா எழுந்து துணைக்கு அம்மாவையும் எழுப்பிவந்து திண்ணையில் உட்கார வைத்துவிட்டு தெருவில் சென்று ஒன்னுக்கு அடிப்பதுதான் என்னோட வழக்கம். ஏனோ அன்றைக்கு அம்மாவை எழுப்ப மனமில்லாததால் தனியாகவே வெளியே வந்துவிட்டேன். ஆனால் வந்த பிறகுதான் தெருவிலிருந்த இருட்டைக்கண்டு 'ஏன்டா தனியா வந்தோமென்று' எண்ணத்தோணியது எனக்கு. இருண்டு கிடந்த வீதியில் இருந்த ஒற்றை தெருவிளக்கும் அமிழ்ந்து அமிழ்ந்து எரிந்து எனக்கு மேலும் பயத்தை கூட்டியது. பயத்தில் ஒன்னுக்குவேறு முட்டிக்கொண்டு வந்துவிடும் போலிருந்ததால் ஓடிப்போய் வீட்டுக்கதவை திறந்து வைத்துவிட்டு வந்து, முற்றத்தில் தெரிந்த வெளிச்சத்தில் நின்று, சலத்தை தெருவில் தெளித்துவிட்டு திரும்பிப்போய் பாயில் படுத்துக்கொண்டேன்.

படுத்த கொஞ்ச நேரத்திலேயே நன்றாக உறங்கிவிட்டேன். காலையில் அம்மாதான் என்னை எழுப்பிவிட்டு டீயை கையில கொடுத்தாள். வழக்கமா நாந்தான் காலையில கடைக்குபோய் அம்மாவுக்கு டீ வாங்கி வந்து தருவேன். அம்மா அதுல எனக்கும் கொஞ்சம் பங்கு போட்டு தருவாள். அவளுக்கு அதுதான் காலை உணவென்றாலும் அதை பங்கிட்டு தருவதில் அவளுக்கும், அதை வாங்கி குடிப்பதில் எனக்கும் எப்போதுமே ஒருவித சந்தோசம் இருந்துக் கொண்டிருக்கும்.

டீயை குடித்தபிறகு, பக்கத்துவீட்டு பரமேசுடன் சேர்ந்து ஆத்தங்கரைக்கு சென்று காலைக்கடன்களை முடித்துவிட்டு, ஏரியில் குளித்துவிட்டு நான் வீட்டுக்கு திரும்பிய நேரம் மணி எட்டாகியிருந்தது. வீட்டுக்குள் வந்ததும் அம்மா சாதத்தை தட்டிலிட்டு என்னிடம் சாப்பிடக் கொடுத்தாள்.

நிதானமாக சாப்பிட்டு முடித்து, சீருடையை அணிந்துக்கொண்டு நான் பள்ளிக்கு புறப்படும்போது அம்மா என்னிடம், "கதிரு, உனக்கு பள்ளிக்கூடத்துக்கு கட்ட நானும் கம்மாத்தா ரெண்டு நாளைக்குன்னு சொல்லி நிறைய இடத்துல பணம் கேட்டுப்பார்த்தேம்பா.. எல்லோரும் இன்னிக்கு நாளைக்குன்னு சொல்லுறாங்களே தவிர யாருக்கிட்டயும் கிடைக்கலைப்பா... கடைசியா போனவாரம் மேலக்காட்டுக்கு கரும்புக்கட்ட போனக்கூலி நூத்திஅம்பது ரூவாயை இப்பத்தான் சின்னாயி கொண்டாந்து கொடுத்துட்டு போனாங்க.. இதை எடுத்துட்டுப்போயி இன்னிக்கு கட்டுப்பா.. மீதி நூறு ரூவாயை நீ பள்ளிக்கூடத்துலருந்து வரதுக்குள்ளாற யார்க்கிட்டயாவது கேட்டு வாங்கி வச்சிருக்கேன். அதை நீ நாளைக்கு கட்டிக்கலாம்" என்றாள். காலையில் எழுந்ததிலிருந்து இந்த விசயத்தை நான் சுத்தமாக மறந்துப் போயிருந்தேன். அம்மா சொன்ன பிறகுதான் எனக்கு மறுபடியும் நினைவுக்கு வந்தது.

கட்டடபீஸ் கட்ட அன்றுதான் கடைசிநாள் என்பதாலும் அம்மா கொடுத்த பணம் அதற்கு பத்தாதென்பதாலும் எனக்கு கோபமும் அழுகையும் ஒன்றுசேர்ந்து வந்தது. அழுதுக்கொண்டே அம்மாவிடம், "போ. எனக்கு பணமும் வேணாம் ஒன்னும் வேணாம்.. இன்னிக்கு பணம் கட்டலைன்னா வகுப்புக்குள்ளாற விடமாட்டாங்க.. நான் பள்ளிக்கூடத்துக்கும் போகலை. ஒன்னுத்துக்கும் போகலை போ" என்று கூறிவிட்டு கோபமாக திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டேன். நான் வேறு ஏதாவது காரணத்திற்க்காக பள்ளிக்கு போகமாட்டேன் என்று சொல்லியிருந்தால் அந்நேரம் அம்மாவிடம் இருந்து எனக்கு அடிவிழுந்திருக்கும்.

என் காரணம் நியாயமா இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை... என்னருகில் வந்து எந்தலையை கோதியபடி அம்மா என்னிடம், "கதிரு, அப்பா விருத்தாலம் சந்தைக்கு மாடு ஓட்டிக்கிட்டு போயி இன்னியோட மூனுநாளாச்சி.. நேத்து ராத்திரியே சந்தை முடிஞ்சிருக்கும்.. இன்னேரம் வீட்டுக்கு வந்துக்கிட்டு இருப்பாரு... அவரு வந்ததும் மாடு ஓட்டிக்கிட்டு போனக்கூலி மூனுநாளைக்கும் சேர்த்து நூத்துஅம்பது ரூவா கிடைக்கும்.. அதுல நூறுரூவாயை உனக்காக அம்மா நான் தனியா எடுத்து வச்சிருக்கேன்.. இப்ப நீ இதை எடுத்துக்கிட்டு போயி கட்டிட்டு, உங்க வாத்தியார்க்கிட்ட மீதியை நாளைக்கு கண்டிப்பா கட்டிடுறேன்னு சொல்லுப்பா. அவரு ஏத்துக்குவாரு." என்று ஆறுதலாக நம்பிக்கை ஊட்டினாள். சரியென்று நானும் அதை வாங்கி காம்பஸ் டப்பியின் அடியில் பத்திரப்படுத்திக் கொண்டு பள்ளிக்கு புறப்பட்டேன்.

எங்கள் பள்ளி இருக்கும் ஊருக்கும் எங்கள் ஊருக்கும் இடையே ஒரு அஞ்சுமைல் தூரம் இருக்கும். அந்த பாதையில் காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறையென்று ஒரேயொரு பேருந்துமட்டும் வந்துவிட்டு போகும். நாங்க பள்ளியை நோக்கி போகும்பொழுது அது ஊரை நோக்கி போகும்.. நாங்க பள்ளியைவிட்டு வருகையில் அதுவும் ஊரைவிட்டு வரும்..!! இப்படி அது எப்பவும் எங்களுக்கு எதிர்திசையில் இருந்ததால் அரசாங்கம் அளித்த இலவசபயணம் எங்களுக்கு எட்டாக்கனி ஆகிவிட்டது. எங்க ஊர் மக்களும் அந்த பேருந்தோட நேரத்தை பள்ளிக்குழந்தைகளுக்கு ஏத்தமாதிரி மாற்றியமைக்கச் சொல்லி அரசுக்கிட்ட கோரிக்கை வைத்தார்கள். ஆனால் இன்றுவரை எந்த அரசும் எங்க மக்களோட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை....!!

அதனால் அவரவர் தகுதிக்கு தகுந்தார்போல் மிதிவண்டியிலோ இல்லை நடந்தோதான் பள்ளிக்கு போக வேண்டியிருந்தது எங்க ஊர் பிள்ளைகளுக்கு. மிதிவண்டி மிதிக்க தெரியாத பன்னிரெண்டு வயது பாலகன், நான் எப்படி பள்ளிக்கு சென்றிருப்பேன் என்று உங்களுக்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமா..?!

(தொடரும்..)

அன்புரசிகன்
10-01-2009, 07:36 AM
கண்களை உருக்கும் கதையாக உள்ளது. தொடருங்கள்...

அமரன்
10-01-2009, 10:01 AM
மூர்த்தியிடம் நான் சொன்ந்தாகச் சொன்னார் "என்னைப் பாதிக்கும் படைப்புகளுக்கு நான் பின்னூட்டமிடுவதில்லை என்று. அது எந்தவகையில் உண்மை. எந்தப்படைப்பும் அமரனை பாதிக்காமல் சென்றதில்லை. சில படைப்புகள் மட்டுமே அமரனுக்குள் ஒளிந்திருக்கும் நிஜத்தை கீறுகிறது. அப்போது நான் படைப்பைப் பற்றி எதையும் எழுதுவதில்லை.

நிரன்
10-01-2009, 11:37 AM
இயல்பான வார்த்தைகளுடன் சென்று கொண்டிருக்கும் கதை பாசத்தின் பிணைப்பையும் ஏழையென் சில நியாயமான ஆசைகள் அதை நிறைவேற்ற முடியாத தருணங்களென நன்றாக இருக்கிறது சில இடங்களில் கதை நெஞ்சத்தை உருக்குகிறது. சில இடங்களில் நம்மை சிறுவயதிற்கு இழுத்துச் செல்கிறது அடம் பிடிக்கும் குணங்கள்..


நன்றாக உள்ளது... தொடர்ந்து தாருங்கள் சுபி அண்ணா!

சுகந்தப்ரீதன்
10-01-2009, 12:52 PM
சரியாக எட்டரை மணிக்கு ஊரிலிருந்து அரைமைல் தொலைவிலிருக்கும் ஆலமரத்திடமிருந்து நடந்து செல்லும் பள்ளிப் பிள்ளைங்களோட பயணம் ஆரம்பித்துவிடும். எட்டரை மணிக்கு முன்னால் அவ்விடத்தை அடைகிறவர்கள் அங்கேயே விளையாடிபடி மற்றவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். மணி எட்டரையை எட்டியதும் யார் வந்தாலும் வராவிட்டாலும் அங்கிருந்து பயணத்தை தொடங்கி விடுவார்கள். எல்லோரும் சேர்ந்து சென்றால் ஐந்துமைல் தூரம் அரைமைல் தூரமாக தெரியும் என்பதால்தான் அப்படியொரு வழக்கத்தை எங்களுக்குள் வைத்திருந்தோம். ஆனால் அன்று அம்மாவுடன் சமாதானமாகி நான் வீட்டைவிட்டு வரும்போதே மணி எட்டரையை தாண்டியிருந்தது. அதன்பின் ஓட்டமும் நடையுமாக நடந்தும், பள்ளிக்கு அருகில் சென்றுதான் என் கூட்டாளிகளை என்னால் பிடிக்க முடிந்தது.

பள்ளி பத்துமணிக்கு ஆரம்பித்தால் நாங்கள் பத்து நிமிடம் முன்பாகவே பள்ளியை அடைந்துவிடுவோம். சிலநாட்கள் மட்டும் தாமதமாகி நாங்கள் பள்ளியை அடையும்போது காலைவணக்கம் ஆரம்பித்திருக்கும். அப்பொழுதெல்லாம் பி.டி.மாஸ்டரிடமிருந்து பிரம்படியை கையில் வாங்கிக்கொண்டு வகுப்புக்கு செல்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் எங்கள் கோரிக்கையை அரசு உணராததால் அடியின் வலியை நாங்கள் உணர வேண்டியிருந்தது.

பள்ளி நுழைவாயிலில் அடியை வாங்கிக்கொண்டு அவரவர் வகுப்புக்கு பிரிந்து சென்றோம். என் வகுப்பின் நுழைவாயில் முன்பு தனியாளாய் சென்று நின்றேன் நான். என் வகுப்பாசிரியர் அவர் பங்குக்கு இரண்டு அடியை தந்து என்னை உள்ளே அனுமதித்தார். 'செய்யாத தப்புக்கு இரட்டை தண்டனையா' என்று எண்ணியபடி என் இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டேன்.

எப்போதும் வகுப்பு ஆரம்பிப்பதற்குமுன் வருகைபதிவை குறிக்கும் எங்கள் ஆசிரியர், அன்றைக்கு வருகைப்பதிவேடை திறக்காமலே வகுப்பை நோக்கி இன்னும் கட்டடபீஸ் கட்டாதவர்கள் எல்லோரும் எழுந்து நில்லுங்கள் என்றார். முதல்நாள் வரை என்னுடன் எழுந்து நின்ற எட்டுப்பேரில் அன்று ரெண்டுபேர் மட்டும்தான் மிஞ்சி இருந்தார்கள். நல்லவேளை 'நான் தனியாளாக இல்லை.. துணைக்கு ரெண்டுபேர் இருக்கிறார்கள்' என்று சந்தோசப்பட்டுக் கொண்டேன். எப்படி எப்படியெல்லாம் வாழ்க்கையில் சந்தோசப்பட வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா..??

ஆனால் என் சந்தோசம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அன்று கடைசிநாள் என்பதாலும் அவர்களுக்கான கட்டடதொகை எனக்கானதில் பாதிக்கும் குறைவு என்பதாலும் அதை அன்று அவர்களும் கட்டிவிட்டார்கள். குறைந்ததொகை என்றாலும் அதைக்கொடுக்க அவர்களது பெற்றோரும் அதிகம் கஸ்டப்பட்டிருக்க வேண்டும் என்பதை என்னால் உணர முடிந்தது. என்ன உணர்ந்து என்ன பயன்..? என்நிலையை உணர என் ஆசிரியர் தயாராய் இல்லையே..?! மீதியை நாளைக்கட்டி விடுவதாகக்கூறி நூற்றைம்பது ரூபாயை நான் அவரிடம் நீட்டியப்போதும் அதனை ஏற்க மறுத்து என்னை வகுப்பைவிட்டு வெளியேற்றி விட்டார்.

கடையேழு வள்ளல்களைப் பற்றி பாடம் நடத்திய அவரிடம் கருணை இருக்குமென்று நினைத்து நான் கெஞ்சியதுதான் மிச்சம். என்னை முழுப்பணம் கட்டாமல் வகுப்புக்குள் வரக்கூடாதென்று அவர் சொன்னதுக்கூட எனக்கு சுமையா தெரியவில்லை. காணாத வாத்தியார்மீது நம்பிக்கை வைத்து என்னை பள்ளிக்கு அனுப்பிய என் அன்னையின் நம்பிக்கை நைந்துப்போனதை நினைத்துதான் என் பிஞ்சுமனது வெம்பிப்போனது. ஆனாலும் என்ன செய்யமுடியும்..?

தேனென்று எழுதி நக்கிப்பார்த்து விட்டு இனிக்கவில்லை என்று சொல்வது போலத்தான் அன்று நான் கருணையை பற்றி சொல்லித் தந்தவர்க்கிட்ட கருணையை எதிர்பார்த்தேனென்று சொல்வதும். பணத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு, புத்தகப்பையைத் தோளுக்கு பின்னால் தூக்கிப்போட்டுக் கொண்டு வகுப்பைவிட்டு வெளியேறி பள்ளியிலிருந்து விலகி நடக்க ஆரம்பித்தேன். அப்போதெல்லாம் எனக்கு, "சுதந்திரமடைந்து அறுபது வருடங்களை கடந்தபிறகும் இன்னும் பள்ளிக்குழந்தைகளிடம் பணத்தை வாங்கி பள்ளிக்கூடம் கட்டுகிறார்களே அது ஏன்..?" என்பது தெரியாது.

போன்னு சொன்னதும் புறப்பட்டுவிட்டனே ஒழிய, எங்கே செல்வதென்று எனக்குள் எந்த தீர்மானமும் இல்லை. 'கழுதைக்கெட்டா குட்டிசுவரு'ன்னு சொல்லுற மாதிரி அப்போ நான் அறிந்ததெல்லாம் எங்க ஊரும், எங்கள் பள்ளியிருக்கும் ஊரும் மட்டும்தான்...!! அதனால் என்னையறியாமலே என்கால்கள் 'சேது சீயான்' கணக்கா எங்கள் ஊரைநோக்கி நடக்க ஆரம்பித்திருந்தது. ஏதேதோ எண்ணியப்படி ஊரைநோக்கி ஒருமைல் தூரம் கடந்திருந்த போதுதான் முத்துதாத்தாவின் மோட்டார் கொட்டகை என்னுடைய ஞாபகத்துக்கு வந்தது. அப்பொழுதே முடிவுசெய்து விட்டேன், "இன்னிக்கு சாயந்திரம் பள்ளிக் கலைந்து நம்பூரு பிள்ளைங்க திரும்பி வரவரைக்கும் முத்துதாத்தாவோட மோட்டார் கொட்டாயிலேயே முழுப்பொழுதையும் கழிக்கறதுன்னு".

அடுத்த அரைமைல் தொலைவில் முத்துதாத்தாவோட மோட்டார் கொட்டகை இருந்தது. வழக்கமா காலையிலேயும் மாலையிலேயும் எங்களோட நடைபயணத்தின் இடையில் தாகம் தீர்க்கும் தளங்களில் முத்துதாத்தாவின் மோட்டர் கொட்டகையும் ஒன்று. நான் அங்கே சென்றப்போது முத்துத்தாத்தா கொட்டகைக்கு வெளியில் கட்டிலில் அமர்ந்து வேப்பங்குச்சியால் பல் தேய்த்துக்கொண்டிருந்தார். நான் வேலிப்படலை திறந்த சத்தம்க்கேட்டு திரும்பியவர் என்னை பார்த்தவுடன் ஆச்சரியமாக, "என்ன சின்னத்துரை இந்த நேரத்துல பள்ளிக்கூடத்துலருந்து திரும்பி வந்துருக்கீங்க?" என்றார். உடனே நான், "தாத்தா என்பேரு சின்னத்துரை இல்லை.. கதிரவன் என்று எத்தனைவாட்டி உங்கக்கிட்ட சொல்றது?" என்றேன். அதற்கு அவர், "இதுக்கூடத்தான் என் மோட்டார் கொட்டாய் இல்லை.. ஆனாலும் நீங்க எல்லோரும் முத்துதாத்தா மோட்டார் கொட்டாய்ன்னுதான சொல்லுறீங்க.. அதுமாதிரிதான் எனக்கு என்னிக்குமே நீங்க சின்னத்துரைதான் சின்னத்துரை" என்றார் கிண்டலாக.

பின்னர் என்னை அழைத்து அருகில் அமரவைத்துக் கொண்டு பக்குவமாக என்னிடம், "ஏன் பள்ளியிலிருந்து இந்நேரத்தில் திரும்பி வந்தாய்?" என்று வினவினார். முதல் நாளிலிருந்து அக்கணம்வரை நிகழ்ந்த அத்தனையையும் உங்களிடம் கூறுவதைப்போலவே அவரிடமும் கூறினேன். அதையெல்லாம் கேட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை, "காவேரியில தண்ணி கரைப்புரண்டோடின காலத்துல முப்போகம் பயிரிட்டு எங்களுக்கெல்லாம் வேலைக்கொடுத்து, எத்தனையோ பேருக்கு சோறுப்போட்டவரு உங்க பாட்டன். ஆனா இன்னிக்கி காவேரியும் காஞ்சுபோயி, பருவமழையும் பொய்த்துப் போனதுல எப்படி இருந்த குடும்பமெல்லாம் எப்படியாகிட்டு இருக்கு பார்த்தியா.." என்றவர் சொல்லும்போதே நான் இடைமறித்து, "தாத்தா.. போதும்..போதும்.. உங்க பழைய புராணமெல்லாம்.. இன்னும் எத்தனை நாளைக்குதான் இதையே சொல்லிக்கிட்டு இருக்க போறீங்களோ..? பேசாம உங்க குடும்பத்துல பொறந்திருந்தாக்கூட இன்னிக்கு கவுரவமா நூறுரூவாயை கட்டிட்டு அம்பதுரூபாயை அப்படியே வூட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம்" என்றேன்.

முத்துதாத்தா அதன்பிறகு அதைப்பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டார். பின்னர் கட்டிலை எடுத்து கொட்டகைக்கு உள்ளேயிட்டு, அவரிடம் இருந்த கட்டைப்போட்ட ரேடியோவை என்னிடம் தந்து, "நீங்க பாட்டுக்கேட்டுக் கொண்டு இங்கேயே இருங்க... நான் போய் நாத்து நடவுறவங்களை ஒரெட்டு பார்த்துட்டு... அப்படியே கரும்புக்கும் தண்ணிக்காட்டிட்டு வந்துடுறேன்" என்றுக் கூறிவிட்டு சென்றார்.

காரைக்கால் வானொலியில் பாடலைக் கேட்டப்படி கட்டிலில் படுத்திருந்த நான், சற்றுநேரத்தில் அப்படியே நன்றாக உறங்கி போனேன். பணிரெண்டு மணிவாக்கில் பேச்சு சத்தம் கேட்டு, எழுந்து கொட்டகைக்கு வெளியே வந்துப் பார்த்தப்பொழுது நடவுநட வந்த ஆட்கள் வாய்க்காலில் கைகால்களை அலம்பிக் கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் அக்கறையுடன் 'யார்ப்பா நீ?' யாரை காண வந்த?..' என வரிவரியாக கேள்விகளைக் கேட்டு, இறுதியாக எங்க அப்பா பேரைச் சொல்லி, "ஓ நீ அவரோட பையனா..?" என்றவாறு திருப்தியடைந்து அங்கிருந்து புறப்பட்டுப் போனார்கள்.

அவர்கள் அங்கிருந்து சென்ற ஐந்தாவது நிமிடத்தில் முத்துதாத்தா என்னிடம் வந்து, "என்ன சின்னதுரை நல்லா தூங்குனீங்களா? முன்னாடியே வந்து பார்த்தேன்.. நல்லா தூங்கிட்டு இருந்தீங்க... அதான் எழுப்ப வேணாம்ன்னு ரேடியோவை மட்டும் நிறுத்திட்டு திரும்பவும் தண்ணிக்கட்ட போய்ட்டேன்" என்றார். தொடர்ந்து அவரே, "சின்னபிள்ளை பசித்தாங்க மாட்டீங்க.... அதனால நான் ஓடிப்போய் எங்க முதலாளி வீட்டுலருந்து சாப்பாடு வாங்கிக்கிட்டு வந்துடுறேன். பிறகு ரெண்டுபேரும் ஒன்னா உட்கார்ந்து இங்கயே சாப்பிடலாம் சரியா..?" என்றார். நானும், "சரி தாத்தா" என்று சம்மதித்தேன். பின்னர் நீரிரைத்துக் கொண்டிருந்த மோட்டரை நிறுத்திவிட்டு, என்னை கொட்டகைக்குள் இருக்கும் கட்டிலில் அமர்ந்திருக்குமாறுக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு போனார் முத்துதாத்தா.

முத்துதாத்தா சென்றபிறகு, சிறிதுநேரம் கொட்டகைக்குள் கட்டிலில் அமர்ந்து ரேடியோவில் கசிந்துக் கொண்டிருந்த தேசப்பக்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். பின்னர் தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்கலாமென்று கொட்டகைக்குள் இருந்த மண்பானையை சென்று திறந்து பார்த்தால் அதில் தண்ணீர் சுத்தமாக காலியாகி இருந்தது. 'முத்துதாத்தா தண்ணீர் பிடித்துவைக்க மறந்துவிட்டார் போலிருக்கு' என்று நினைத்தபடி வெளியில் வந்து மோட்டார் தொட்டியில் தண்ணியை குடிக்கலாமென்று பார்த்தால் அதுவும் கலங்கிக்கிடந்தது. "சரி அதனாலென்ன? கிணற்றில் இறங்கி குடித்துவிட்டு வருவோம்" என்று கிணற்றுப் படிகளில் இறங்க தொடங்கினேன்.

(தொடரும்...)

ஆதவா
10-01-2009, 01:39 PM
அந்தந்தச் சூழலுக்குள் ரசிகனை உள்ளிழுத்து இருக்கச் செய்ய வேண்டிய கடமை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் உண்டு. இக்கதையும் அப்படியானதொரு சூழ்நிலையை தோற்ற்விக்கிறது. ஒரு சிறுவனின் எண்ணங்களின் வழியே, ஒவ்வொரு நடையாக எடுத்தியம்புகிற இக்கதை இலக்கியப் பாதையில் நிழல்காட்டும் மரமாக நிற்கும் என்பது என் எண்ணம்.

சிறுவன் கதிரின் உரைத்தலில் சிறு சிறு குறைபாடுகள் , சோற்றில் இருக்கும் கற்களாக நெருடினாலும், ஒட்டுமொத்தமாக கதையின் போக்கு அத்தனையையும் மறைத்துவிடுகிறது.

அடுத்தடுத்த பாகங்களைக் காண ஆவலுடன்
ஆதவன்.

என்னவன் விஜய்
10-01-2009, 04:04 PM
சுகந்தா, அசத்துகிறாய்.

ஊரில் கதைப்பதை போலவே வசனம் அருமையாக இருக்கின்றது.

ஆதவனின் பின்னால் Q'வரிசை பிடித்து நிற்க்கும் விஜய்.

சுகந்தப்ரீதன்
11-01-2009, 08:31 AM
இறங்கும் பொழுது ஒவ்வொரு படியாக எண்ணிக்கொண்டே இறங்கினேன். "தாத்தாவோட காலத்துல பத்துபடி இறங்குனாவே தண்ணியை தொட்டுடலாம்"'ன்னு முத்துதாத்தா எப்பவோ சொல்லியிருந்தது அப்போது நினைவுக்கு வந்தது. அன்று கிணற்றிலிருந்து வயலுக்கு நீரிரைத்திருந்ததால் தண்ணீர் நாற்பது படிக்கும் கீழே சென்றுக் கிடந்தது. கிட்டத்தட்ட முப்பது படியை கடந்தபிறகு படியில் பாசம் படர்ந்திருந்ததால் என் பிடியை கிணற்று சுவற்றில் இருக்கமாக்கிக் கொண்டு இறங்கினேன். மெல்லமெல்ல ஒவ்வொருபடியாய் கடந்து தண்ணீரிருக்கும் படிக்கருகில் சென்றப்போது பாசம் சற்றுக் கூடுதலாக பசபசப்புடன் இருந்ததால் என்கால்கள் வழுக்கின. உடனே சுவற்றில் கையை அழுத்தி என்னை நான் சமன்செய்ய முயன்றப்போது அதுவும் என்னைக் கைவிட்டுவிட நிலைத்தடுமாறி நீருக்குள் விழுந்தேன் நான்.

பொதுவாக கிராமத்துக் குழந்தைகளுக்கு நீச்சல் தெரியும் என்றாலும் என்னை அதிகம் ஆத்துப்பக்கமோ ஏரிப்பக்கமோ அனுமதிக்காமல் பொத்தி பொத்தி வளர்த்துவிட்டாள் என்னுடைய அம்மா. பக்கத்தூருக்கு பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சம் ஏரியில் ஆழமில்லாத பகுதியில் துல்லாட்டாம் போட்டு குதிக்கவே ஆரம்பித்திருந்தேன் நான். ஆனால் அது கிணற்றில் நீந்துவதற்க்கு போதுமானதாக இல்லை. விழுந்த வேகத்திலும் அதிர்ச்சியிலும் என்னை அறியாமலே 'மொடக்' 'மொடக்' என்று தண்ணீரைக் குடித்தப்படி கைகால்களை அசைத்ததால், படியிலிருந்து விலகி கிணற்றின் மையப்பகுதிக்கே சென்றுவிட்டேன் நான். அதன்பிறகு என்னால் அதிகம் நீருடன் போராட முடியாததால் நீருக்குள் மூழ்க தொடங்கி விட்டேன்.

நான் கிணற்றில் விழுந்த பொழுது என்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகள் இரண்டும் எப்படியோ என் சட்டைப் பையிலிருந்து விலகியிருக்கும் போலிருக்கு. விலகிய அந்த ரூபாய் நோட்டுகளில் இருந்துபடி நான் மூழ்குவதைப் பார்த்துக்கொண்டு காந்திதாத்தாவும் அப்போது தண்ணீரில் தலைக்கீழாக மிதந்துக் கொண்டிருந்தார். அன்றைக்கே அவரோட தேசத்தை காணப்பிடிக்காது போனதால்தான், "இந்த கதிரவன் உயிர் பிரிந்ததற்க்கு சாட்சியா அந்த கதிரவனோட சேர்ந்து அவரும் அங்கே கவிழ்ந்து கிடந்தாரோ என்னவோ..??"

இப்படித்தான் அன்றைக்கு நான் என் உடலைவிட்டு பிரிந்து இங்கே உங்களிடம் வந்து சேர்ந்தேன். இன்றைக்கிங்கு வரும் பெரும்பாலான குழந்தைகளைப் போன்று பலவந்தமாகவெல்லாம் நான் அன்றைக்கு அனுப்பி வைக்கப்படவில்லைதான் என்றாலும் பதமாகத்தான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன். இன்றைக்கும் இப்படி எத்தனையோ குழந்தைகள் பூமி முழுவதிலுமிருந்து இங்கே வந்து பூத்த வண்ணம்தான் இருக்கிறார்கள் யாருக்குமே தெரியாமல்..!! இதில் தெரிந்தே நிகழும் படுக்கொலைகளையே கண்டும் கண்டிக்காத எங்கள் இந்திய அரசாங்கமா, தெரியாது நிகழும் எங்கள் சாவையெல்லாம் கண்டுக்கொள்ள போகிறதென்று நினைக்கிறீர்கள்..?!

என்ன மிஞ்சிப்போனால் ஒருமாதம்தான் இருக்கும்.. 'நாகர்கோவில் மத்திய பாடசாலையில் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களையும், கும்பகோணத்தில் கொளுத்தப்பட்ட குழந்தைகளையும், செஞ்சோலையில் சிதைக்கப்பட்ட சிறுமிகளையும்' மறந்தது போலவே என்னோட சாவையும் எல்லோரும் மறப்பதற்க்கு..!! இன்றைக்கும் மறக்காமல் நாலுபேர் என்னோட சாவை வைத்து பிழைத்துக் கொண்டிருக்க நானொன்றும் அரசியல் தலைவனில்லையே.. உங்களைப்போல அப்பாவித்தானே..?! அப்பாவி உயிர்களுக்கு மரியாதையும் அகிலத்தில் அவ்வளவுதானே..?!

இப்போதும் என்னோட அம்மா மட்டும்தான் உங்களோட அம்மாக்களைப் போலவே என்னை நினைத்து அப்பப்போ அழுதுக்கொண்டு இருக்கிறாள். மத்தவங்களைவிட பெத்தவளுக்குதானே தெரியும் பிள்ளையோட வலி..!! அதனால்தானோ என்னவோ தெரியலை இன்றைக்கு ஈழக்குழந்தைக்கு நேரும் இன்னல்களைக் கண்டு எங்கள் தமிழகத்தாய் மட்டும் தவித்துக் கொண்டிருக்கிறாள். ஆனால் எங்கள் இந்தியத்தாயோ இரக்கமே இல்லாமல் இருந்துக் கொண்டிருக்கிறாள்..!! இந்தியதாயின் இந்த மாறுப்பட்ட நிலைப்பாட்டால்தான் இன்றைக்கு, “தன் தாயென்றால் தன் தவிப்பை உணராது இருந்திருப்பாளா?” என்ற கேள்வி எங்கள் தமிழகத்தாய்க்குள்ளும் ஒலிக்க தொடங்கியிருக்கு.

பெத்தவளா..பிள்ளையா..என்றநிலை வந்தால்கூட எங்கள் நாட்டில் எந்த தாயும் பிள்ளையின் பக்கம்தான் சாய்வாள். ஏனென்றால் எங்கள் 'பாரதத்தின் பண்பாடு' அது. ஆனால் அப்படிப்பட்ட தன் பண்பாட்டைக்கூட இன்றைக்கு இழந்துவிட்டு, தன் பிள்ளைகளுக்கு எதிராக ஏகாதிப்பத்தியத்தின் கைகளில் சிக்குண்டு, சீரழிந்து நிற்கும் எங்கள் பாரதத்தாயின் பரிதாப நிலையை என்னவென்று நான் உங்களிடம் சொல்வது..?!

எங்கள் இந்தியத்தாயின் பண்பாடு பாழ்படாது இருந்திருந்தால், சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், தன்மக்களில் மூன்றில் ஒரு பாகத்தினரை வறுமைக்கோட்டுக்கு கீழே வைத்து வதைத்து கொண்டுதான் இருப்பாளா..? இல்லை ஒடுக்கப்பட்ட தன் மக்கள்மீது ஏவப்படும் மத, இன, மொழிவெறி தாக்குதல்களை ரசித்துக் கொண்டுதான் இருப்பாளா..? அஹிம்சையில் உதித்த தன்காலடியில் மனிதநேயம் மாண்டுப் போவதை கண்டும் காணாது காடையர்களுடன் கைக்கோர்த்துதான் நிற்பாளா..?? இல்லை குறைந்தப்பட்சம் தன் குடிமக்களின் உணர்வுகளை உணராது ஒடுக்கத்தான் நினைத்திருப்பாளா..?? இல்லை..கண்டிப்பாக இல்லை..!! ஏனெனில் இவை எதிலுமே எங்கள் இந்தியத்தாயின் பண்பாடு இல்லை.

இன்றைக்கு அவள் கையில் திணிக்கப்பட்டிருப்பதெல்லாம் அவளது பண்பாட்டை பாழ்ப்படுத்தி, அவளை சீரழித்து, அவளை ஆளத்துடிக்கும் அதிகார, ஆதிக்க வர்க்கத்தின் ஏகாதிப்பத்தியக் கொள்கைகள் மட்டும்தான்..!! அதனால்தான் குடிமக்களின் உணர்வுகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு, பச்சிளம் குழந்தையைக்கூட படுகொலை செய்யும் இனவாத அரசுகளுடன் உலகம் முழுக்க சத்தமில்லாமல் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள முடிகிறது எங்கள் இந்திய தாயால். இந்தியத்தாயின் இந்தக்கோலத்தை எல்லாம் காண சகிக்காதுதான் காந்திதாத்தாக்கூட அன்று என்னுடன் கிணற்றில் கவிழ்ந்துக் கிடந்தார் போலிருக்கு..!!

கவிழ்ந்தது காந்திதாத்தா மட்டுமென்றா நினைத்தீர்கள்..? இல்லை இல்லை எங்கள் தமிழக மக்களின் தன்மானமும் கூடத்தான்..!! தமிழக மக்களின் சுயமரியாதையில் சுடர்விட்டு வளர்ந்து இன்றைக்கு தங்களை மட்டும் வளர்த்துக்கொண்ட இயக்கங்கள் எல்லாம், தங்களுடைய சுயத்தையும் சுயமரியாதையையும் தொலைத்துவிட்டு, அவர்களின் சுயநலனுக்காக எட்டப்பன்களோடு இணைந்து ஏகாதிபத்தியவாதிகளிடம் கைக்கட்டி வாய்மூடி நிற்பதைக்கண்டு சிரிப்பதா? இல்லை அழுவதா? என்று தெரியாமல் சித்தம் கலங்கி நிற்கும் எங்கள் செந்தமிழ்நாட்டு மக்களை நீங்களே கொஞ்சம் குனிந்து பாருங்களேன்..!!

இதேநிலை தொடர்ந்து நீடிக்கும்பொழுது இந்திய ஏகாதிபத்தியவாதிகள்,


"இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்"

என்றிருக்கும் எங்கள் இந்திய பண்பாட்டினை மாற்றி,


"இண்டியன் என்பதில் பெருமிடம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல உயிர்களை கொல்வோம்"

என்று கொள்கை வகுத்தாலும், அதைக்கண்டு ஆச்சரியப்படுவதற்க்கோ இல்லை ஆட்சேபிப்பதற்க்கோ எங்கள் இந்திய மக்களுக்குதான் என்ன உரிமை இருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்..?!

ஒருவேளை எதிர்காலத்தில் அப்படியொரு நிலை வந்தால் தமிழக மக்கள், "இது எங்கள் பண்பாடல்ல" என்றுக்கூறி இந்திய அரசுக்கு எதிராகப் போராடினாலும் போராடலாம். அப்போது போராட்டங்களை முடக்கிவிட அரசு எட்டப்பன்களுடன் இணைந்து முயற்சிக்கூட மேற்கொள்ளலாம். முயற்சி கைக்கூடாத பட்சத்தில் போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, சிக்கியவர்களை சிறையில் அடைத்து சிரச்சேதமும் செய்யலாம். அடுத்து அமைதிப்படையை அனுப்பி அப்பாவி தமிழ் பெண்களின் கற்புகளையும் களவாடலாம். அம்மா என்றழைப்பதற்குள் சிசுக்களைக்கூட சிதைத்து புதைத்து விடலாம். கூடவே கருத்துரிமையையும் கழுத்தை நெறித்துக் கொன்று, அந்த பயங்கரவாதத்தை தொடங்கி வைத்ததும் தொடரவைப்பதும் தாந்தான் என்பதையும் திட்டமிட்டே மறைக்க முயலலாம். இறுதியாக இவை எல்லாவற்றையும் மூடிமறைத்துவிட்டு பயங்கரவாதத்திற்க்கு எதிரான யுத்தம் என்றுக்கூறி உலகநாடுகளிடம் பிச்சைக்கூட எடுக்கலாம். இப்படி இன்றைக்கு ஈழத்தில் நிகழும் எல்லாவற்றையும் நாளை தமிழகத்திலேயே நிகழ்த்தி தன்கொலைவெறி கொள்கையை கொண்டாடியும் மகிழலாம்.

ஏனெனில் அடித்தால் ஏனென்று கேட்பதற்க்குகூட "ஆளில்லாத அநாதைகள்"தானே அகிலத்தில் எம் தமிழ்மக்கள்..?!


***முற்றும்***

erode
13-01-2009, 10:31 AM
கதை மற்றும் படிப்பதுக்கு ஏற்ப்படும் சிரமம் எல்லாம் மிகவும் உருக்கமா இருக்கு
ஆனால் கடைசியா வந்த வரிகள் ஒத்துக்முடியாத வரிகளா இருக்கு

தாமரை
13-01-2009, 11:12 AM
கவிழ்ந்த காந்தி... பேசறாப்பில கருத்துக்களைச் சொல்லி இருந்தா பொருத்தமா இருந்திருக்கலாமோ என்னவோ சுகந்தா, ஸ்கூல் ஃபீஸ் கட்டாத 12 வயசு சின்னப் பையனோட எண்ணங்களுக்கும், கடைசி எண்ணங்களுக்கும் கொஞ்சம் ஒத்து வரலை.

கருத்து நல்ல கருத்து, அதை அந்த நூறு ரூபா நோட்டுல இருக்கற காந்தி சொல்லி இருந்தார்னா ஃபிட்டிங் பினிஷிங்கா இருந்திருக்கலாம்.

பலமுறை ஃபீஸ் கட்டமுடியாமல் நான் அவமானப்பட்டதுண்டு. ஆனால் அதெல்லாம் கல்லூரிக் காலம். ஸ்கூல் ஃபீஸ் கட்ட வேண்டிய அவசியமில்லாமல் 10 ரூபாய் ஃபீஸ் கட்டி எட்டாவது வரையும், 110 ரூபாய் கட்டி 10 ஆம் வகுப்பும் 220 ரூபாய் கட்டி பிளஸ் டூவும் அப்ப முடிச்சோம்.

மற்றவங்களுக்கு உபத்திரவமா இருந்தவங்களும், உபயோகமா இருந்தவங்களும் செத்தா நினைவில் வைத்திருக்கும் சமூகம்,

மற்றவற்றை ஒதுக்கியும், மறந்தும் அறியாதது போல நடிப்பதும் இப்ப மட்டுமில்லை.. பல காலங்களாகவே நடந்துகிட்டுதான் இருக்கு,

Keelai Naadaan
18-01-2009, 03:01 AM
என்னுடைய இளம் வயதிலும் பள்ளிக்கு பணம் கட்ட முடியாமல் பல அனுபவங்கள் பெற்றதுண்டு.
ஆதலால் கதையோடு ஒன்றி படிக்க முடிந்தது.
அழகான வர்ணனைகளுடன் இளம் வயது கால கட்டங்களை வர்ணித்தது அருமை
தாமரை அவர்கள் சுட்டிக்காட்டியது போல் இளம் வயது எண்ணங்களும் கடைசியில் அரசியல் பேசும் எண்ணங்களும் பொருந்துவதாய் இல்லை

இந்திய தாய், தமிழ்த்தாய் என்பதெல்லாம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் தான் சரி. ஒரே மாதிரியான கருத்தை கொண்ட தமிழர்களோ, ஒரே மாதிரியான கருத்தை கொண்ட இந்தியர்களோ ஏன் ஒரே மாதிரியான இலங்கை தமிழர்களோ கூட இருந்தது கிடையாது

ஆனாலும் இந்திய தாய் தமிழ் தாய் என்பதெல்லாம் நாம் இருக்கும் இடத்தின் மீது நமக்கிருக்கும் பற்றே தவிர மக்கள் அனைவரும் ஒரே கருத்துக்கள் கொண்டவர்கள் என்பதல்ல

நம் தாய் வயிற்றில் பிறந்த நம்முடைய உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் குணமும் நம்முடைய குணமுமே ஒத்து போவதில்லை. நம் பெற்றோர் குணத்துடன் நம் குணம் ஒத்து போவதில்லை. இதில் இந்திய தாய் தமிழ் தாய் என்பதெல்லாம் ...என்ன சொல்ல!!!

இந்தியாவில் எத்தனை உன்னதங்கள் உண்டோ அத்தனை மோசமும் உண்டு. அவற்றையெல்லாம் யாருமறியாததல்ல.

இந்தியாவைப் பற்றி தமிழத்தினர் உயர்வாக பேசினால் அவர்கள் எட்டப்பன்
இந்தியாவில் பிறந்து, இத்தனை காலமாய் வாழ்ந்து இந்தியாவை நேசிக்கும் தமிழர்கள் எட்டப்பன்கள்
ஒப்புக்கொள்ள வேண்டியது தான்
பலே சுகந்த ப்ரீதன்.:aktion033:

சுகந்தப்ரீதன்
18-01-2009, 04:22 AM
இந்தியாவைப் பற்றி தமிழத்தினர் உயர்வாக பேசினால் அவர்கள் எட்டப்பன் மன்னிக்கவும் கீழைநாடான் ஐயா அவர்களே.. தமிழர்களைப் பற்றி தாழ்வாக எண்ணுபவர்களைத்தான் எட்டப்பன் என்றுரைத்தேனே தவிர இந்தியாவைப் பற்றி உயர்வாக பேசுபவர்களை அல்ல.. ஆகையால் நீங்கள் வருந்த வேண்டாம்.. தங்களின் புரிதலுக்கு என் நன்றி..!!

ஆதவா
18-01-2009, 05:56 AM
முதல் பந்தியிலிருந்து அப்படியே தலைகீழாக சென்றுவிட்டது இரண்டாம் பந்தி. கருத்துக்கள் சரி... வெளிவந்த வாய் தான் சுமார்..

உங்கள் தேசப்பற்றுக்கு ஒரு சல்யூட்

இளசு
01-03-2009, 09:31 PM
எம் கோரிக்கையை அரசு உணராததால்
ஆசிரியர் அடியை என் கைகள் உணர்ந்தன -

தேனென்று எழுதி நக்கினால் இனிக்குமா?
கருணை பற்றி பாடம் சொன்னவர் கருணாமூர்த்தியா?

சொர்க்கம் சேர்ந்த சிறுவன் மற்ற சிறுவர்களுக்கு இக்கதையைச் சொல்வதால்
மதிவண்டி ஓட்டத் தெரியாத பாலகன் வாய்வழி மேதைமை பொருந்துகிறது..

சம்பவங்கள் - குறிப்பாய் மோட்டார் கொட்டகை - படு நேர்த்தி..
சுகந்தா, உன் கதை சொல்லும் திறனுக்கு இக்கதை மிக உயர்ந்த அத்தாட்சி..

பாராட்டுகள்!

--------------------------------------------

கதை சொல்லியின் பணி கதை சொல்லுவதோடு நின்றுவிடுவதாய் நான் நினைக்கிறேன்.
பிரசினைகளைப் பதிந்து நெஞ்சங்களைக் கிளறுவதோடு கதையின் பணி முடிகிறது..

தீர்வுகள் படிப்பவர் மனம் எழுப்பும் அலைகள்..சுவாலைகளாய் இருக்கட்டும்..

நேரிடைப் பிரச்சாரம் ஒரு கதைக்கட்டுக்குள் ஒன்றிட முடியாது என்பது என் கருத்து..

-----------------------------------------------------------

இரு பிரிவில் ஓரினம் இன்னொரு இனத்தை அழிக்க முனைந்ததும்
அதை எதிர்க்கத் துணிந்ததும் ஈழ வரலாறு...

அந்த செந்நீர் நிரம்பிய கதையே இன்னும் முடியவில்லை..
அது முடியவேண்டும் என்பதே எல்லார் விருப்பமும்..

அன்றி இன்னொரு குருதிக்கதை இந்தியாவிலும் எழுதப்படட்டும்
எனச் சீறும் பாலமேதையை வேண்டுகிறேன் -

தீயவை நிற்கட்டும் பாலகனே -
தீமை பரவுவது
தீர்வாகாது!