PDA

View Full Version : இருண்ட உலகம்சுகந்தப்ரீதன்
08-01-2009, 07:59 AM
தினம்தினம் தேடல்கள்...
பாலைவனப் பாதையிலிருந்து
சோலைவன சொர்க்கம்தேடி..!!

பாய்ந்துவரும் நதிவெள்ளத்தை
மதிவளத்தால் மட்டுப்படுத்தும்
மானிடப்பிறவிகளில்.....

தனியே பிரிந்தோடி
சமுத்திரத்தில் சங்கமிக்க
முயற்ச்சித்த வாய்க்காலாய்
முடம்பட்டு போனது வாழ்க்கை..!!

விருட்சமாக வேண்டிய
விதையெல்லாம் வீணானது
விடுதலையை விரும்பியதால்..!!

சோகங்களின் பிரமிடுகளோ
சொல்லாமல் எழுந்தன....
சுதந்திரம் பறிப்போகையில்...!!

தேடல்களின் முடிவில்
தெரிந்த சிறுஒளியும்
நெருங்கியதும் நின்றுப்போக...

இருள் கவ்வியது...
எங்களை இறுக்கமாக -
முன்பைவிட மூர்க்கமாக...!!

நேசம்
08-01-2009, 08:16 AM
படிக்கும் போது மனதிற்கு நெருடலாக இருந்தது.நம்பிக்கை இழக்க வேண்டாம்.எல்லாவற்றிக்கும் ஒரு காலமுண்டு

நாகரா
08-01-2009, 02:42 PM
தினம்தினம் தேடல்கள்...
பாலைவனப் பாதையிலிருந்து
சோலைவன சொர்க்கம்தேடி..!!

பாய்ந்துவரும் நதிவெள்ளத்தை
மதிவளத்தால் மட்டுப்படுத்தும்
மானிடப்பிறவிகளில்.....

தனியே பிரிந்தோடி
சமுத்திரத்தில் சங்கமிக்க
முயற்ச்சித்த வாய்க்காலாய்
முடம்பட்டு போனது வாழ்க்கை..!!

விருட்சமாக வேண்டிய
விதையெல்லாம் வீணானது
விடுதலையை விரும்பியதால்..!!

சோகங்களின் பிரமிடுகளோ
சொல்லாமல் எழுந்தன....
சுதந்திரம் பறிப்போகையில்...!!

தேடல்களின் முடிவில்
தெரிந்த சிறுஒளியும்
நெருங்கியதும் நின்றுப்போக...

இருள் கவ்வியது...
எங்களை இறுக்கமாக -
முன்பைவிட மூர்க்கமாக...!!

உலகின் வெளிச்சம் நானே!

எனக்கு வெளியே பாலைகளில்
திரிந்த தேடல்களை விட்டு
எனக்குள்ளே சோலைவனங்களில்
திடமான தீர்வுகள் கண்டேன்

மேலிருந்து வழியும்
அருள் வெள்ளத்தை
அனுமதிக்கும் மனவளத்தால்
மனிதத்தில் செம்மையுற்றேன்

மனித விதையாய் விழுந்தவன்
பரிணாமப் பாய்ச்சலில்
தேவ விருட்சமாய் எழுகிறேன்

அகத்தவ கிரி சிகரத்தில்
இரத்தின ஞானத்தைக் கண்டு
இறங்குகிறேன் அடிவாரம் நோக்கி
சோகங்கள் யாவும் வென்று
மகாயோகத்தில் நின்று
மெய்ப்போகம் காணும்
மார்க்கம் சொல்ல

அங்கும் இங்கும் எங்கும்
அலைந்து திரிந்த தேடல்கள் விட்டு
உங்கு என்னுள் கண்ட சிறு பொறியே
ஜோதியாய் எழ
இன்று இருண்ட உலகத்துக்கு
நான் வெளிச்சமாயிருக்கிறேன்

என் கோணத்தை வைக்க உதவிய உன் கோணத்துக்கு நன்றி சுகந்தத் தம்பி, ப்ரீதமாய் உன்னுள் சுடர் விடும் ஜோதி காண் பாய், இருண்ட உலகத்தின் வெளிச்சத் தீர்வாவாய், சிந்திக்க வைத்த உன் கவிதைக்கு நன்றியும் வாழ்த்தும் பாராட்டும்!

ஆதவா
09-01-2009, 01:44 PM
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு மன்றம் வந்த சுகந்தப்ரீதன் அவர்களுக்கு வரவேற்புகள்..

வாழும் சூழ்நிலையும், வாழ்க்கை செல்லும் பாதையுமே நம் சூழலுக்கான இறுக்கத்தை முடிவுபடுத்தும். தனிமை என்பது தாயின் கருவறையிலிருந்து, இறந்த பின் கல்லறைவரை நீண்டு இருக்கிறது, அதன் குறுகிய பாதையில் ஏற்படும் தொடர்புகளும், அதன் விளைவுகளான, இன்ப துன்பங்களும் தனிமையை விட்டு அகன்று விடுகின்றன என்ற ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

பிரிவு என்ற சொல் தனிமை என்ற சொல்லை உருவாக்கித் தரும். தாயின் பிரிவு அல்லது தாய்நாட்டுப் பிரிவு தனிமையை மேலும் அழுத்தலாம்... ஆனால்.... கிடைக்கக்கூடியது எவ்வளவோ... ஒரு பிரிவின் ஆரம்பம், மறு அனுபவத்தின் பிரதிபலிப்பு.. இங்கே விட்டதை அங்கே பெறும் முயற்சி.

பாலைவனங்களில் வாழ்வதாலேயே, இலைகள் எல்லாம் முட்களாக பரிணமித்து, செடிகள் கரட்டுத்தனமாக இருக்கின்றன. பாலைவனத்தில் வாழ்வதாலேயே, ஒட்டகங்கள், நீர்நிலைகளைப் பற்றி கவலைப்படுவதுமில்லை.... பாலைவனம் கூட ஒரு அழகுதான்.... பாலைகூட ஒரு அனுபவம்தான்.... உங்கள் அனுபவம், உங்கள் சந்ததியருக்கு ஏற்படுத்தித் தரக்கூடாது என்ற எண்ணத்தைத் தோற்றுவித்துத் தர்லாம் இல்லையா?? மேலும், இன்றைய மண், நாளைய கட்டிடம்... இருக்குமிடத்தையே சோலைவனமாக்குவது புத்திசாலித்தனம்..

நதிவெள்ளப் பாய்ச்சலை மட்டுப்படுத்துவது தவறல்லவே போல.... தனிமையில் பிரிந்து கடலில் சங்கமிப்பதும் தவறான ஒன்றல்ல.. நீங்கள் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, பல நண்பர்கள் இருந்திருப்பார்கள்,, அதன் வட்டாரம் மெல்ல சுருங்கி, ஆறாம் அல்லது பத்தாம் வகுப்பில் பிரியலாம் புதிய நண்பர்கள் விரியலாம்.... இன்னமும் சுருங்கி விரிந்து...... இறுதியில் நீங்கள் எத்தனை நட்புகளைத் தக்க வைத்திருப்பீர்கள்?? என்றாவது ஒருநாள் ஒவ்வொருவரிடமிருந்து பிரிந்தே ஆகவேண்டும்.. இது நியதி. பொருளீட்டுதற்காக பிரிவதும், ஏன் அப்படியானதொரு பிரிவு என்று நீங்கள் நினைக்கக் கூடாது?? இங்கே முடம்படுவதற்கு என்ன இருக்கிறது?

ஆரம்பித்த காரியங்கள், தோல்வியில் முடிந்தன. விதைகள் வீணாயின.. விடுதலையை விரும்புதலுக்கு முன்னர், அந்த சூழலுக்குள் உங்களைத் தள்ளியதும் நீங்கள் தானே??? தானே சிறையிட்டு தானே அகலுவதா?

முன்பே சொன்னதைப் போல... சூழலை நிர்ணயிப்பது நீங்களே..... வருத்தப்படுவதில் அர்த்தமில்லை...

உங்கள் கவிதைக்கு என் வாழ்த்துக்கள்.. தாய்நாட்டுப்பிரிவை வலியில்லாமல் அரங்கேற்றியிருக்கிறீர்கள்...

பிரமிடுகளின் எழுச்சி, ஒளி நின்றுபோதல் போன்ற சொற்களுக்கு சற்று மாற்று இருந்தால் கவிதையின் கட்டுமானம் பலமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து...

அன்புடன்
ஆதவன்.

வசீகரன்
11-01-2009, 06:12 AM
அற்புதமான கவிதை சுகந்தா... கவிதையின் நோக்கம் என்ன என்பது சரியாக புரியவில்லை எனினும்..
சாராம்சம் கவிதை வரிகள் நேர்த்தியான வடிவமைப்பு சுகந்தனின் கவி திறம் காட்டுகிறது... மிக ரசித்தேன் வெகு நாட்கள் கழித்து உன் கவிதையைடா பாராட்டுக்கள்...:icon_b::icon_b:


தொடர்ந்து எழுதவும்....

சுகந்தப்ரீதன்
11-01-2009, 01:28 PM
அவரவர் கோணத்தில் பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப்படுத்திய உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே..!!

இதை என்குரல் என்று மட்டுமல்லாது, உலகில் இருண்டுக் கொண்டிருக்கும் இனங்களின் குரலாகவும் நீங்கள் கொள்ளலாமே..?!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
17-01-2009, 03:02 PM
என் எண்ணங்களை உங்கள் வரிகளில் கண்டது போல் உள்ளது. நல்ல கவிதை.

இளசு
17-01-2009, 10:30 PM
கலங்கினேன் சுகந்தா..


அண்மை ஈழ இழப்புகளால்
இருக்கும் ஒளிக்கீற்றும் மங்கிய உள்ளம் வெம்பும் ஓசை..

கலங்க வேண்டாம் சொந்தங்களே..
சோதனைகள் முடிந்து வேதனைகள் தீர்ந்துவாழ
உங்களுக்கும் காலம் வரும்!

அதுவரை சோராமல் காத்திருக்க வேண்டியது மன உறுதியை!