PDA

View Full Version : சுஜாதாவின் விஞ்ஞான சிறுகதை தொகுப்பில் விடுப்பட்ட கதை



umakarthick
31-12-2008, 11:07 AM
முடிவு


--------------------------------------------------------------------------------





எம்.நடராஜன், 2-7-1982
187, பஜார் தெரு,
மோகனூர் 637015
சேலம் ஜில்லா

அன்புள்ள குங்குமம் ஆசிரியர் அவர்களூக்கு,
உடன் இணைக்கப்பட்டிருக்கும் 'முடிவு' என்கிற விஞ்ஞானச் சிறுகதையை உங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். படித்து அது குங்குமம் இதழில் பிரசுரத்துக்கு எற்றது எனில் அதை வெளியிட வேண்டுகிறேன். தகுதி இல்லையெனில் திருப்பி அனுப்புவதற்கு போதிய தபால் தலைகளை இணைத்திருக்கிறேன்.

இங்ஙனம்
எம்.நடராஜன்
மாடலன் (புனைப்பெயர்)


--------------------------------------------------------------------------------



குங்குமம் வார இதழ் 8-7-1982
93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34



அன்புள்ள திரு.நடராஜன் அவர்களுக்கு,
உங்கள் ஜூலை 7 தேதியிட்ட கடிதமும் 'முடிவு' என்கிற விஞ்ஞானக் கதையும் கிடைக்கப் பெற்றோம். கதையை பற்றி அபிப்பிராயம் சொல்லுவதற்கு, கதையை நீங்கள் முடிக்கவில்லை. பாதியில் நிற்கிறது.
எனவே, நீங்கள் முடிவுக்கு உரிய பக்கங்களை அனுப்பிவைத்தால் கதையை பற்றி மெற்கொண்டு நாங்கள் முடிவெடுக்க எளிதாக இருக்கும்.

உண்மையுடன்,
பராசக்தி
(ஆசிரியர்)


--------------------------------------------------------------------------------



எம்.நடராஜன், 12-7-1982
187, பஜார் தெரு,
மோகனூர் 637015
சேலம் ஜில்லா



அன்புள்ள பராசக்தி அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கிடைத்து மகிழ்ந்தேன்...
கதையின் முடிவுப் பக்கங்களை என்னை அனுப்பச் சொல்லியிருக்கிறீர்கள். அதுதான் முடியவில்லை. கதையை கொண்டு செல்ல முடிந்த எனக்கு அதை முடிக்க தெரியவில்லை. எனவே இந்த கதையை விஞ்ஞானக் கதைகளில் வல்லவர் என்று சொல்லிக்கொள்ளூம் திரு.சுஜாதா அவர்களூக்கு அனுப்பிவைத்து அவரால் இதை முடிக்க முடியுமா என்பதை அறிய முயற்ச்சிக்க வேண்டுகிறேன்.
அன்புடன்
மாடலன்.

பி.கு.1 கதைக்குரிய சன்மானத்தில் எனக்கு பாதி கொடுத்தால் போதுமானது.
பி.கு.2 ஜூலை 30 வரைதான் இந்த முகவரியில் இருப்பேன். அதற்குள் உங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.




--------------------------------------------------------------------------------



குங்குமம் வார இதழ் 16-7-1982
93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34



திரு. சுஜாதா அவர்களுக்கு,
உடன் இணைக்கப்பட்டிருக்கும் கடிதங்களும், கதையும் உங்களுக்கு வியப்பைத் தரலாம். திரு.நடராஜன் என்பவர் ஒரு விஞ்ஞானக் கதையை முடிக்க முடியாமல் உங்களை முடிக்க சொல்லி எழுதியிருக்கிறார். நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
வீட்டில் யாவரும் நலமா ?

பராசக்தி
(ஆசிரியர்)


--------------------------------------------------------------------------------



சுஜாதா, 21-7-1982
S.Rangarajan
D-9, BEL colony,
Bangalore - 560013



அன்புள்ள பராசக்தி,
உங்கள் கடிதமும் திரு. நடராஜன் என்பவர் பாதி எழுதிவிட்டிருக்கும் கதையும் கிடைக்கப்பெற்றேன். கொஞ்சம் வினோதமான விஷயம்தான்!. சொந்தமாக எழுதும் கதைகளையே முடிக்க தெரியாமல் திணறும்போது இது ஒரு புதிய திணறல்தான்!. கதையை படித்து. எப்படி முடிக்கலாம் என்று யோசித்து அனுப்புகிறேன்.
அன்புடன்
சுஜாதா




--------------------------------------------------------------------------------





குங்குமம் வார இதழ் 23-7-1982
93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 34

அன்புள்ள திரு.சுஜாதா அவர்களுக்கு,
உங்கள் கடிதம் கிடைத்தது. சந்தோஷம். சுதந்திரதினச் சிறப்பிதழில் தங்கள் கதை எழுதப் போவதாக அறிவிப்பு வைத்துவிட்டேன். வெள்ளிக்கிழமைக்குள் சிறுகதையை அவசியம் அனுப்பி வையுங்கள். இந்தக் கதையை முடிப்பதாக இருந்தாலும் புதுமையாக இருக்கும். ப்ளீஸ்!.
பராசக்தி
(ஆசிரியர்)


--------------------------------------------------------------------------------



S.RANGARAJAN D9 BEL COLONY BANGALORE
X 170 5 AP 1639 MADRAS 26 21



PLEASE SEND SHORT STORY URGENTLY STOP ANNOUNCEMENT ALREADY MADE IN THE CURRENT ISSUE - KUNGUMAM -

LM 191 AP 1637 7 9 13


--------------------------------------------------------------------------------



சுஜாதா, 28-7-1982
S.Rangarajan
D-9, BEL colony,
Bangalore - 560013



அன்புள்ள பராசக்தி,
உங்கள் கடிதமும் தந்தியும் கிடைத்தன.
திரு.நடராஜன் 'முடிவு' என்கிற கதை அவர் எழுதியிருக்கும் வரை படித்து பார்த்தும் கொஞ்சம் ஏமாற்றம்தான்!
அந்த கதையை அவர் விஞ்ஞான கதை என்று சொல்லியிராவிட்டால் ஒருவேளை அதை நாம் கொஞ்சம் திருத்தி , செப்பனிட்டு சாதாரணக் கதையாக வெளியிட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. திரு.நடராஜனுக்கு விஞ்ஞானக் கதை என்றால் என்ன என்பதைப்பற்றி கொஞ்சம் குழப்பம் இருப்பது தெரிகிறது.
விஞ்ஞானக் கதையில் விஞ்ஞானம், ராக்கேட், எதிர்காலம் எல்லாம் இருந்தாக வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பதாகப் பலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் விஞ்ஞானக் கதையில் இருக்கலாம். ஆனால் இவை இருந்தால் மட்டும் அது விஞ்ஞானக் கதையாகிவிட்டாது. அதேபோல் இவை எதுவும் இல்லாமலும் விஞ்ஞானக் கதை எழுத முடியும். அவ்வளவு தூரத்திற்கு இந்த கதை வடிவை மேல்நாட்டில் வளர்த்திருக்கிறார்கள்.
விஞ்ஞானக் கதைக்கு, நான் புரிந்துகொண்டவரை, முக்கியமான தேவை வாசகர்களை சம்பிரதாய கதை அமைப்பிலிருந்து விலகிப் போய் சிந்திக்க வைக்கவேண்டியது. கதையில்தான் விஞ்ஞானம் என்றில்லை! கதை எழுதும் விஞ்ஞானமும் இதில் அடங்குகிறது. இந்த முறையில் பற்பல உதாரணங்க்கதைகளை நாம் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம் வரும் போது உங்களுக்கு சொல்லமுடியும்.
எனவே திரு.நடராஜன் அவர்களின் கதையை முடிக்க இயலாமைக்கு வருந்துகிறேன். இத்துடன் கதையின் பகுதியை திருப்பி அனுப்பியுள்ளேன்.
அன்புடன்
சுஜாதா

பின்குறிப்பு:
யோசித்துப் பார்த்தால், திரு.நடராஜனின் 'முடிவு' என்கிற கதையைப் பற்றிய நம் இந்த கடிதப் போக்குவரத்தையே முழுவதும் உங்கள் குங்குமத்தில் பதிப்பித்துவிட்டால் என்ன என்று தோன்றுகிறது.
அப்படிப் பதிப்பிட்தால் உங்கள் வாசகர்களுக்கு இந்த சந்தேகம் எழும். கடிதங்கள் அத்தனையும் எழுதியது ஒருவரா, மூன்று பேரா ?
இது முழுவதும் கதையா? கதையை பற்றிய கதையா? இல்லை, கதையை பற்றிய உண்மையா ? இதுபோன்று வினாக்கள் எழும்போது இந்தக் கடித தொகுப்புக்கூட ஒரு விஞ்ஞானக் கதையாகிறது.

பா.ராஜேஷ்
16-03-2009, 06:50 AM
விந்தைதான் (இந்த திரிக்கு இதுவரை யாரும் விமர்சனம் செய்யாததையும் சேர்த்துத்தான் கூறுகிறேன்)!!.

ரங்கராஜன்
16-03-2009, 07:02 AM
நான் இப்பொழுது தான் இந்த திரியை பார்த்தேன், மார்கேட்டிங் விஷயத்தில் சுஜாதாவை அடித்துக் கொள்ள முடியாது, தன்னுடைய படைப்புகளிலே தன்னுடைய முந்தயை படைப்பை பற்றி அல்லது பின்னாடி வரப்போகும் படைப்பை பற்றி கொஞ்சம் சுவாரஸ்யமான விஷயங்களை பாதி எழுதி விட்டு விடுவார். வாசகன் கண்டிப்பாக அந்த தொகுப்பையும் வாங்கி படிப்பான் என்று நம்பிக்கையுடன். அவரின் நம்பிக்கை பல முறை வெற்றி பெற்று உள்ளது. நல்ல திரி கார்த்தி, இதை தோண்டி வெளியே எடுத்த ராஜேஷ்க்கு நன்றி

xavier_raja
07-04-2009, 12:05 PM
நானும் இந்த விஷயத்தை ஏற்கனவே கேள்விப்பட்டதுண்டு... வியப்பான விஷயம்தான்.. சுஜாதாவால் மட்டுமே இது சாத்தியம்...