PDA

View Full Version : முடிவிலி (Infinity) நாவல்.. அத்யாயம் 3rambal
03-09-2003, 06:44 AM
நான்...

இந்த நாவலில் வரும் நான் என்பது ராம்பால் ஆகிய என்னைக் குறிக்கிறது..
ஏகப்பட்ட பேர் சேர்ந்து நான் எனும் என்னை பிரதியெடுத்து இந்த நாவலை எழுத முயற்சித்திருக்கிறார்கள்..
ஏற்கனவே, நான் யார் எனும் கேள்விக்கு விடை தெரியாது நானே குழம்பிய மனநிலையில் இருக்க..

என்னை பிரதியெடுக்க முயலும் ஜடாமுனி சித்தரின் கிறுக்கத்தனமான யோசனைகள் என்னை
குழப்பத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது..

இதில், ஜடாமுனி சித்தரை குருவாகக் கொண்டிருக்கும்
சங்கரின் பைத்தியக்காரத்தனமான காதல் வேறு என்னை ஹிம்சிக்கிறது...

நெல்லை பரணி ஆற்றுத் தண்ணீரில் நீச்சல் பழகி, ராமநாதபுர மாவட்டத்தில் இருக்கும் சிறு கிராமத்தில்
பால்யத்தைக்கழித்து, மதுரை வைகையில் கல்லூரி வரை முடித்துவிட்டு இயற்கை எழில் கொஞ்சும் கிராமங்களில்
இயற்கையோடு வாழ்ந்துவிட்டு, திடீரென்று பேசன் டிசைன் படிக்க ஆவல் எழுந்து சென்னைக்கு வந்து,
சென்னையில் இருக்கும் செயற்கை, பெண்களின் ஸ்பர்சம், பெண்கள் சிகரெட் குடிப்பதை உள்ளுக்குள் ரசித்து மகிழ்ந்து
வெளியில் கோபம் காட்டி, நாகரீகத்தால் பாதிக்கப்பட்டு ஒரு வித குழப்பமான மனநிலையில் இருக்கும்
நந்தாவும் நானை பிரதியெடுக்க முயன்று குறிப்புகள் எழுதி என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறான்..

ரமேஷ், பெண்களை அளவிற்கதிகமாக நேசிக்கும் காதலன்..
சகட்டுமேனிக்கு பெண்களை காதலித்து தோற்றவன்..
தோற்பதற்காகவே காதலிக்கவேண்டும் என்ற மேலை நாட்டு பெயர் தெரியாத அறிஞரை குருவாகக் கொண்டவன்..
நல்ல கவிதைக்கு காதல் தோல்வி அவசியம் எனும் சித்தாந்தத்தோடு, வயது வித்யாசம் பாராமல்
முழுநேரக் காதலில் ஈடுபட்டவன்..
கவிதைகளில் வாசம் செய்தவன்.. இலக்கியம் என்பதை மூச்சாகக் கொண்டு இவன் எழுதிய
சர்ரியலிசக் கவிதைகள், பின் நவீனத்துவ கதைகள்...
தன்னை ஒரு போஸ்ட் மாடர்னிஸ்ட்டாக காட்டிக் கொள்ள விருப்பமுடையவனாக..
இவைகளோடு இவன் இறுதியாக உருகி உருகிக் காதலித்த சுஜாதா..
இவைகள் அத்தனையையும் சிறு சிறு குறிப்புகளாக எழுதி வைத்துள்ளான்..

இசை, கலை, ஓவியம், நடனம் என்று கலை மீது தீராத பற்று கொண்ட
கலைப்பித்தனான ராம், இலக்கியம் பற்றிய தனது கிறுக்குத்தனமான
கட்டுரைகளையும், தனது முடிவுகளையும், எக்ஸ்டென்சியலிசம் மேல் இருந்த அபரிமிதமான
பற்றிலும் இவைகளை குறிப்புகளாக எழுதி வைத்துள்ளான்..
இந்தக் குறிப்புகளின் வழியாக நானை கண்டுபிடிக்கும் இவனது முயற்சி என்னை மேலும்
ஆற்றில் இருக்கும் சுழியாய் எங்கோ அடித்துச் சென்று விட...

விகாஸ் சற்று ஆறுதலாக சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளான்..
இவனது குறிப்புகள் தெளிந்த நீரோடை போல் இருக்கின்றது..
கோவாவைப் பிண்ணணியாகக் கொண்ட பதினெட்டாம் நூற்றாண்டு காதல் ஒன்றை
எழுதும் முயற்சியில் ஈடுபட்டவன் அதில் வெற்றி காணாது போக,
எல்லாவற்றையும் குறிப்புகளாக எழுதி வைத்துவிட்டு சென்றுவிட்டான்..
இந்த குறிப்புகளின் மூலமாகவும் நானை கண்டு பிடிக்கும் முயற்சியில் நான் தோற்க..

மொத்தத்தில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் என்னை காலப்பெருவெளியில் தூக்கியெறிந்து
கடந்த காலம் எதிர்காலமாகி எதிர்காலம் நிகழ்காலமாகி நிகழ்காலம் கடந்தகாலமாக மாறி
என்னைக் காலக் குழப்பத்தில் தள்ளிவிட்டுவிட்டது. ஆகையால், இந்தக் குறிப்புகள் கொண்டு தொக்குக்கப்பட்டிருக்கும்
இந்த நாவல் சரியாக எந்த காலத்தைக் குறிக்கிறது என்பது எனக்குத் தெரியாது....

இப்படியாக கிடைக்கப்பெற்ற இந்தக் குறிப்புகள் அனைத்தும் ஒரு நாவல் எழுதும் சாத்தியமற்று இருக்கின்றன..
வெறும் வெட்டிப் போட்ட துண்டுத் துணிகளாக சிதறிக்கிடக்கின்றன வார்த்தைகள்..
இவைகள் கொண்டு நான் தைத்திருப்பது வெறும் லம்பாடி லுங்கியாகத்தான் இருக்குமே ஒழிய இலக்கியத்தரம் வாய்ந்த
நாவலாக இருக்காது.. இருந்த போதும் ஜடாமுனிசித்தரின் ஆலோசனைப் படி, இத்தனை குறிப்புகளையும்
கொண்டு நான் இதை நாவலாக தொகுத்திருக்கிறேன்..
இத்தனை நான்கள் என்னை சுற்றி குழப்பிக் கொண்டிருக்கையில் என் நானையும் ஆங்காங்கு சேர்த்து
உருமாறியிருக்கிறேன்... வாசகர்களாகிய நீங்களும் உங்கள் நானை இதோடு சேர்த்து உருமாறலாம்..

இப்படியாக அடிப்படையில் காதலையும், இலக்கியத்தையும், கலையையும் மையம் கொண்ட இவர்கள்
அனைவரின் குறிப்புகளும் என் அறையெங்கும் வார்த்தைகளாக சிதறிக்கிடக்கின்றன..
இவர்களின் பொது சாராம்சம் உலகம் முழுதும் ரத்தக்கறை படிந்திருக்கிறது..
இந்த ரத்தக்கறையை சுத்தம் செய்ய நல்ல இலக்கியத்தாலோ அல்லது காதலாலோதான் முடியும்
என்ற அசைக்க முடியா நம்பிக்கை கொண்டவர்கள்..
இதற்கு மேலும் படிக்க விருப்பமில்லாதவர்கள் இந்த நாவலின் இந்த வரியோடு படிப்பதை முடித்துக் கொள்ளுங்கள்..
இல்லையென்றால் தீராத குழப்பத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்... அதற்கு நான் பொறுப்பல்ல...

பாரதி
03-09-2003, 08:37 AM
ம்ம்ம்... கதை நீங்கள் சொன்னபடிதான் ஆகும் போல இருக்கிறது.. புரிகிறதா - இல்லையா என்பதை தெரிந்து கொள்ள கதையின் நீரோட்டத்தில் கலந்து நீந்த வேண்டும் போல... கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ராம்.

சேரன்கயல்
03-09-2003, 09:58 AM
என்னைப் பொறுத்தவரை...
இந்த அத்தியாயம் வரையிலான முடிவிலியே ஒரு குறுநாவல்தான்...
இலக்கணம் என்ன என்பது எனக்கு தெரியாது...ஆனால் கதை என ஒன்று சொல்ல புறப்பட்டு இங்கேயே நின்றுவிட்டாலும், கதை தனக்கே உரித்தான முழுமை பெறுகிறது...
ஆனால் தலைப்பே முடிவில் என்பதால்...முடிவென எதுவும் இல்லாது நானைத் தேடும் முயற்சியில் நானாகிய நீங்களும் நிங்களாகிய நானுமாய் தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கலாம்...இலக்கில்லாத தேடல் என்றெண்ணலாம்...இலக்கு தெரிந்து போனால் ஏது முடிவிலி...எனவே முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டேயும் இருக்கலாம்...
(நாவல் என்பதன் இலக்கணங்களுக்குள் நிற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றால்)

சேரன்கயல்
03-09-2003, 10:11 AM
முடிவிலியின் இந்த அத்தியாயத்தை பற்றி...

"Event Horizon" த் தாண்டி கறுப்பு பாழில் விழுந்தபின்பு அல்லது அங்கே எழுந்தபின்பு... மறுபடி மீண்டு வரமுடியுமா தெரியவில்லை ஆனால்...அங்கே நீங்கள் (கதையில்) குறிப்பிட்டுள்ள காலமும் (அதான் முக்காலமும் குழம்பியதாக சொல்லியிருக்கிறீர்களே) இடைவெளியும் வேறாக இருக்கும்...
இலக்கணம் வரையறை இதுதான் என்ற Event Horizon-ஐத் தாண்டிவிட்டாயிற்று என்றால்...முடிவிலிக்கு முற்றும் போடாமல் தொடர்ந்து கொண்டேயிருங்கள்...
நல்ல முயற்சி ராம்...பரதி குறிபிட்டது போல வித்தியாசமானதே...
பாராட்டுக்கள்...என்னென்ன இசங்களோ படித்த நினைவு...உங்கள் முடிவிலியை படித்ததிலிருந்து...

aren
06-09-2003, 04:32 PM
கதை நன்றாகச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறது. பாராட்டுக்கள்.