PDA

View Full Version : கெஞ்சுதல்கள்எஸ்.எம். சுனைத் ஹஸனீ
28-12-2008, 03:34 PM
ம்! தொடங்கு
நெற்றி சுளித்த பாசாங்கு வேண்டாம்
கன்னம் அரிந்த பாவனை போதும்
மலர்ந்து நிற்கும் வீட்டு ரோஜா பற்றி
வழியிலறுந்த வலது செருப்பு வார் பற்றி
சலனமற்றுக் கரைந்த வார விடுமுறை பற்றி
தலைப்பு முக்கியமல்ல
இதழோரம் வார்த்தை கரைந்தோட வேண்டுமென்பது
அதி முக்கியம் எனக்கு
செவி கீறும் தூரத்து மேளச் சப்தங்கள்
முழங்கிப் போகட்டும் பரவாயில்லை
அடுத்து அணைத்து அமர்ந்திருக்கும்
மீறிய வருங்காலத் தலைவனால்
மருகும் வருங்காலத் தலைவியின்
முக்கலும் திக்கலுமான கலவிச் சப்தங்கள்
பரவாயில்லை நீ போனதும் கவனிக்கிறேன்
ம்! சீக்கிரம்
வெற்று உளறல்களாயினும் சிரம் தாழ்த்துகிறேன்
வடகிழக்காயும் தென்மேற்காயும்
சுழன்றாட வேண்டும் உன்னடி நா
அதன் விசையழுத்தப்பட்ட உந்துதல்களில்
வட்டமாயும் சதுரமாயும் செவ்வகமாயும்
வடிவமேற்கவேண்டும் உன்னிதழ்
விரல் தீண்டா பரணி வயலினாய்
உன் வார்த்தையின் எச்சிலீரம் வேண்டி
என்னோடு காய்ந்து கிடக்கிறது காற்றும்
உன் நுனி நாக்குக் குழிப்பரப்பில்
சரி எனக்காய் இல்லாமலிருந்து போகட்டும்
அர்த்தமின்றி அவதானித்திருக்கும் அந்திப் பொழுதுகள்
அர்த்தமாகிப் போகட்டும்
பொதியாய் உன் வார்த்தைகள் சுமந்து
அவிழ்த்துப் போடு
உன் மௌன முடிச்சுகளை.

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

தமிழ்தாசன்
28-12-2008, 03:47 PM
ஆகா!
மௌனம் ?
அவிழாத முடிச்சாகியதால் வீழ்ந்தன வரிகள்!
கவி கண்டு நம் ஆழமனதவிழ்தலின் மனமௌன முடிச்சுக்கள்!
எப்படி? உங்கள் வரிகளுக்கு மட்டும் இவ்வளவு மொழி அழகு கூட்டுகிறது?
அருமையானவை... அள்ளித்தெளித்தவை!
வாழ்த்துக்கள்.

இரவின் மௌனம் அவ்வப்போதழகு!
கடலின் கவியலையழகு!
அவ்வப்போது கதறும் கரையலையழகு!
ஆனால் உள்ளத்துள்
உறங்கிமௌனித்துக் கிடக்கும்
குமுறல்கள் தனியழகு!
உலகில் அவரவருக்கு அவரவர் பார்வையில் அவையவையழகு!

சசிதரன்
29-12-2008, 03:58 AM
நல்ல வரிகள் நண்பரே...:)

சிவா.ஜி
29-12-2008, 06:31 AM
எத்தனை நேரம்தான் மௌனமாய் இருந்து பேசாமல் கொல்லுவாய்...ஏதேனும் சொல்லு வாய்....அக்கம் பக்கம் ஆயிரம் சத்தங்கள்....இரைச்சலாய் இருப்பினும், உன் வாய்ப்பேச்சில் அவை காற்றில் கரைந்துவிடும்....உன் மொழிக்கு என் செவி உறைந்துவிடும்...

அழகான வார்த்தைகளில் அவளின் மௌனம் கலைக்கச் சொல்லும் கவிதை மிக அருமை. வாழ்த்துகள் ஜுனைத்.

shibly591
29-12-2008, 08:35 AM
ம்ம்ம்.....

அழகாக வார்த்தைகள் கோர்க்கப்பட்டிருப்பது கண்டு வியக்கிறேன்..அருமையான கவிதை..பூவிதழ் அவிழச்சொல்லும் வணடின் ரீங்காரமாய் காதுகளை வட்டமிட்டு சுற்றிச்சுற்றி வருகிறது கவிதை வரிகள்..

பாராட்டுக்கள் நண்பரே......

அமரன்
03-01-2009, 06:28 AM
நான் மௌனமாக இருப்பதே எல்லாத்தையும் மறந்து நீ என்னைக் கவனிக்க வேண்டும் என்பதுக்காக என்பதை இன்னும் நீ அறியவில்லை எனும் போது ஒருபக்கம் சந்தோசமாகவும் இன்னொரு பக்கம் சோகமாகவும். இதோ இந்தக் கெஞ்சல்கள் கொஞ்சல்களை உன்னிடமிருந்து பெற்று விட்டதில் கடைசில் என்னிடம் மிஞ்சி இருப்பது என்னவோ சுகம்தான்.

சிற்சில சாடல்கள்.. ஆனல் ஆழமாய்.. அதி அற்புதமாய்.. பாராட்டுகள் ஜுனைத்.