PDA

View Full Version : முடிவிலி..(Infinity) நாவல்.. ஓர் அறிமுகம்..rambal
03-09-2003, 06:41 AM
முடிவிலி..(Infinity) நாவல்.. ஓர் அறிமுகம்..

நாவலுக்கு முன் சில வார்த்தைகள்:

எழுதுவதென்பது பரவச நிலை..
எழுத்தை சில சமயங்களில் நான் எழுதுகிறேன்..
அப்போதெல்லாம், சத்தில்லா எழுத்துக்களை எழுதுவதாக மொழி என்னோடு சண்டை போட்டுக் கொள்ளும்..
பல சமயங்களில் எழுத்து என்னை வைத்து தன்னை எழுதிக் கொள்கிறது...
பல சமயங்களில் மொழியின் வலிமை எழுத்தில் தெரிந்தாலும்,
சில சமயங்களில் அது தெரியாது போகும் கணங்களில் ஏதோ ஒன்று
கத்தியில் படிந்த துருவாய் மனதில் உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது..

எழுதுவதென்பது
ஏதோ ஒரு புள்ளி முடியும் கடைசி கணத்திலும்..
ஒரு புள்ளி ஆரம்பிக்கும் முதல் கணத்திலும்..
இந்த கணங்களின் இடையில் ஒரு நொடியில் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு அற்புத நிலை...

முதல் நாள் போரில் தந்தையையும், அடுத்த நாள் போரில் கணவனையும் இழந்த பிறகு...
மூன்றாம் நாள் போருக்கு விளையாடிக் கொண்டிருந்த மகனை தயார் செய்து அனுப்பிய சங்க காலத் தாயின்
மனநிலையைப் போன்ற பரவச நிலை..

இந்த நாவல் என்னால் அரங்கேறி இருப்பது என்பது தற்செயல் நிகழ்வே ஒழிய, எனக்கும் இதற்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை..
இந்த நாவலை இலக்கியம் அல்லது நல்ல தரமுடைய படைப்பு என்று எடுத்துக் கொள்வதும் அல்லது குப்பையென்று ஒதுக்குவதும்
உங்களுடைய பிரச்சினையே அன்றி என்னுடையது அல்ல..

முடிவிலி.. பூஜ்யத்தை எண் ஒன்றால் வகுக்க கிடைக்கப் பெறும் விடை முடிவிலி..
முடிவே இல்லாது ஓடிக் கொண்டிருக்கும் பலரது வாழ்க்கையும் முடிவிலிதான்..
விடைதேடி ஓடி விடை கிட்டாது போய் முடிவிலி எனும் விடையை அடைகின்றனர்..
அப்படி ஒரு முடிவிலியைப் பற்றிய நாவல் இது..

ஏதோ என் அறிவிற்கு எட்டியவரை நாவல் என்ற கோட்பாடுகளைக் கொண்டு நாவல் எழுதும் முயற்சி இது..
என் பார்வையில், தமிழில் இன்னும் நாவல் எழுதப்படவில்லை.. அதற்குண்டான முயற்சிகள்தாம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன..
அந்த வகையில் இந்த நாவலும் அந்த வகை முயற்சி..

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் லத்தீன் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டு பின் வழக்கொழிந்து போன
தொடர்ச்சியற்ற முறையில் (Non-Linear) எழுதுதல் எனும் அமைப்பில் இந்த நாவலை முயற்சித்திருக்கிறேன்..
சாதாரண வாசிப்புகளை படிக்கும் உங்களுக்கு இந்த நாவல் முயற்சி ஒரு வித்யாசமான வாசிப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன்..
கொஞ்சம் முயற்சி செய்தால் இந்த வாசிப்பை எளிதில் கை கொள்ளலாம்..
மற்றபடி இந்த நாவல் முயற்சி, மேலோட்டமான வாசிப்பு உடையவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்..
புரிந்து கொள்ளல் கொஞ்சம் கடினம்..
இந்த நாவலை தொகுத்து வரிசை கிரகமாக்கி படிக்கலாம் என்று முயற்சி செய்தாலும் குழப்பம்தான் மிஞ்சும்..
ஏனெனில், இது தொடர்ச்சியற்ற முறையில் எழுதப்பட்டது..

நன்றி..

உங்கள்..
ராம்பால்..

பாரதி
03-09-2003, 08:31 AM
எல்லாவற்றையும் எங்கள் தலைமேலேயே கட்டிவிட்டீர்கள்..ம்ம்.. பார்ப்போமே... மீண்டும் உங்கள் தொடரை ஆரம்பித்ததற்கு நன்றி.

சேரன்கயல்
03-09-2003, 09:32 AM
நல்ல அறிமுகம்தான்...
பொடி வைத்து பேசுவதுபோலவும் குழப்பத்தில் பேசுவது போலவும் குழப்புவதற்காக பேசுவது போலவும் தொனித்தாலும்... முன்னெச்சரிக்கை விடுக்கும் வார்த்தைகளில் முடிவு என்னைக் கட்டுப்படுத்தாது என்பதாக கூறியுள்ள வார்த்தைகளில் கம்பீரம் தெரிகிறது...
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி என்று பாண்டிய மன்னனின் சந்தேகம் நீங்க பாட்டெழுதி தருமியிடம் கொடுத்த பரமனுடைய குரலில் இந்த அறிமுகம் வாசித்தால் பொருத்தமாக இருக்கும்...

(நக்கீரர்...பாட்டில் குறை இருப்பதை கூறக்கூடாதோ என்று கேட்கும்போது..."கூறும் கூறும் கூறிப்பாரும்"...என்று கர்ஜிக்கும் வசனம் காதுகளில் கேட்கிறது)

இளசு
03-09-2003, 10:37 PM
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே...
முடிவிலி என்னும் சொல்லை
முதல் முறைக் கேட்டது
கவிஞர் தாமரை தந்த இந்த திரைப்பாடலில்தான்..

"அட" என சட்டென நிமிரவைத்த சொல் அது.
அந்த அர்த்தம் பொதிந்த தலைப்பில்
அறிவாளர் ராமின் அரிய படைப்பு இது.

ராமின் இப்பெருமுயற்சி
வெற்றி பெற்று முடிய வாழ்த்துகிறேன்.

rambal
04-09-2003, 10:40 AM
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே...
முடிவிலி என்னும் சொல்லை
முதல் முறைக் கேட்டது
கவிஞர் தாமரை தந்த இந்த திரைப்பாடலில்தான்..

"அட" என சட்டென நிமிரவைத்த சொல் அது.
அந்த அர்த்தம் பொதிந்த தலைப்பில்
அறிவாளர் ராமின் அரிய படைப்பு இது.

ராமின் இப்பெருமுயற்சி
வெற்றி பெற்று முடிய வாழ்த்துகிறேன்.

நான் தாமரையின் பாடலைக் கேட்டதில்லை..
கணிதத்தில் உபயோகப்படுத்தும் சொல் இது..
உண்மையைச் சொன்னால் இந்த நாவலுக்கு
0/1 என்றுதான் தலைப்பு வைப்பதாக இருந்தேன்..
ஆனால், அது பலருக்கு புரியாது போய்விடும் என்பதால்
முடிவிலி என்று வைத்துவிட்டேன்..

rambal
04-09-2003, 10:42 AM
(நக்கீரர்...பாட்டில் குறை இருப்பதை கூறக்கூடாதோ என்று கேட்கும்போது..."கூறும் கூறும் கூறிப்பாரும்"...என்று கர்ஜிக்கும் வசனம் காதுகளில் கேட்கிறது)

இது என்ன கலாட்டா?

சேரன்கயல்
04-09-2003, 04:18 PM
சே சே...கலாட்டாவெல்லாம் இல்லை நண்பரே...

முத்து
24-09-2003, 08:05 PM
அட ... ஏனோ அடிக்கடி இப்படி நடந்துவிடுகிறது..
முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்று பழமொழி உண்டு.... முழுப்பலாப்பழம் சோற்றுத் தட்டில் விழுந்தும் அதைக் கவனியாமல் சாப்பிட்டு கைகழுவுவர்கள் உண்டா.... இல்லையென்றுதான் சொல்வீர்கள்.. ஆனாலும் நடந்திருக்கிறது... அப்படியும் சொல்லிவிடமுடியாது.. ஏனென்றால் தினமும் தட்டில் விழுந்து கொண்டிருந்த பலாப்பழத்தை கடைசியில் கவனித்துவிட்டானல்லவா... எது எப்படியோ இவ்வளவு பெரிய பலாப்பழம் கிடைத்ததில் இவனுக்கு(எனக்கு) மகிழ்ச்சிதான் .....

rambal
13-04-2004, 05:09 PM
இது எனது முதல் நாவல் முயற்சி.. இதை எழுதியதற்கும் இன்று இதே நாவலை வேறு மாதிரி எழுதுவதற்கும் நிறைய வித்யாசங்கள்.. இது பின் நவீனத்துவம் முறையில் எழுதிப் பார்த்தது. இப்போது எழுதிக் கொண்டிருப்பது எதனொடும் சேராது வேறு வகை. இலக்கணம் தெரிந்தால்தானே அதை உடைக்க முடியும். எதன் கட்டுக்குள்ளும் இல்லாது தனது தனிப் பாணியில் நாவல் பயனிக்கிறது. விரைவில் மன்றத்திற்கு...