PDA

View Full Version : தூரலின் ஓவியம்



kulirthazhal
28-12-2008, 03:00 AM
தூரலின் ஓவியம்

முடிவைக்கொன்று எல்லைசெய்த
வின்வெளியில்
ஓடிவிளையாடுகின்ற நீர்த்துளியே!
உயிரினால்
உலகினை உயிர்ப்பிக்கும்
உனக்கோர்
உருவம்செய்து கடவுள்தோற்றான்.

உனக்குள்
ஏதோ ஒரு மோகம்,
மேகமாகிறாய்.
ஏதோ ஒரு தேடல்,
பயணிக்கிறாய்.
ஏதோ ஒரு கற்பனை,
ஓவியமாகிறாய்.
ஏதோ ஒரு வெட்கம்,
மின்னலாய் நானுகிறாய்.
ஏதோ ஒரு பொறாமை,
நிலவினை மறைக்கிறாய்.
ஏதோ ஒரு கோபம்,
இடியென முழங்குகிறாய்.
ஏதோ ஒரு பந்தம்,
வெண்முகிலோடு கலக்கிறாய்.
ஏதோ ஒரு போராட்டம்,
புயலோடு களம்கான்கிறாய்.
ஏதோ ஒரு நட்பு,
சிட்டுக்களுடன் சிரிக்கிறாய்.
ஏதோ ஒரு சோகம்,
கண்ணீர் வடிக்கிறாய்.

கதிரோடு
காதலாடும் கனத்தினில்
ஆடம்பரமாய் அணிந்த
அத்தனை நிறங்களையும்
என் இந்திய மண்ணில்
இழந்துவிட்டே சங்கமிக்கிறாய்.
வேற்றுமையை மறந்து
சங்கமிக்கும்
இந்திய சித்தாந்தம்
இயற்கை வரைந்ததாய்,
தோல்வியை தீண்டாது.

காமம்கொண்ட தென்றலோடு
சலனத்தால்
சங்கமித்த அழகில்
உலகின் உயிரோட்டமே
புதிதாய் பிறக்கிறது.

நீ உருகி உதிர்ந்தவேளையிலே
இன்பங்களை
வண்ணங்களாய்க்கொண்டு
கற்பனை வடித்த ஓவியமாய்
புவிப்பெண்
புதிதாய் பொலிவுறுகிறாள்.

ஏதோ ஒரு உயிரின்
உணர்வுகளையெல்லாம்
கைக்கொண்டு கிடக்கிறாய்,
உலகினில்
உயிர்களின் பிறப்பிற்கு
உத்தரவிடுகிறாய்,
உன் ஓட்டத்தின்
எல்லா நொடிகளையும்
அழகோடு வடிக்கிறாய்,
காதலின்
எல்லா பிரதிபளிப்பையும்
கண்முன்னே காட்டுகிறாய்,
உனக்காக ஏங்கவைத்து
ஆக்கமும்
அழிவும் செய்கிறாய்.

உறுதியாய்
உன்னை
ஓர் உருவமாய் காண்கிறேன்,
நீயும்
பெண்தான்.......

-குளிர்தழல்.

shibly591
28-12-2008, 03:06 AM
கவிதை சிறப்பாக வந்திருக்கிறது...

கவிதை முடியும் கடைசி வரிகள் முத்தாய்ப்பாய் ஜொலிக்கிறது...

வாழ்த்துக்கள்

சசிதரன்
28-12-2008, 04:03 AM
நல்ல கவிதை குளிர்தழல்... வாழ்த்துக்கள்...:)

Narathar
28-12-2008, 04:07 AM
குளிர்தழல் கொஞ்சகாலமாக உங்களை மன்றப்பக்கம் காணவில்லை...........
இப்போது அந்த குறைதீர்க்க ஒரு அற்புதமான கவியோடு வந்திருக்கின்றீர்கள்

வாழ்த்துக்கள்

தொடர்ந்து எழுதுங்கள்......... முடிந்தால் நிழலுக்கு உயிர் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்கள்

சிவா.ஜி
28-12-2008, 04:31 AM
நீண்ட கவிதையானாலும் சலிப்பின்றி வாசிக்க வைக்கும் வார்த்தையாடல்கள். வானில் நிகழும் அனைத்துக்கும் வித்தியாச விளக்கமளித்த விதமும், உறுதியான உருவம் நீ..பெண்தான் என முடித்த விதமும் அற்புதம்.

நெஞ்சையள்ளும் கவிதை தந்த குளிர்தழலுக்கு மனம்நிறைந்த பாராட்டுக்கள்.

poornima
28-12-2008, 04:38 AM
தூரலின் = தூறலின் ..?

மேகமாய் வந்து போகிறாய் என்று பெண்ணைப் பார்த்துதான் கவிஞர்கள்
பாடுவது வழக்கம்.. மேகத்தையே பெண்ணாகப் பார்க்கும் விதம் கொஞ்சம்
வித்தியாசமாகத் தான் இருக்கிறது..

மழையை கருப்பொருளாகக் கொண்டு அனேக கவிஞர்கள் திரைப்பாடல் எழுதியிருக்கிறார்கள்.. கவிதைகள் செய்திருக்கிறார்கள்.. அந்த வரிசையில்
இந்த கவிதையை இன்னும் கொஞ்சம் மாறுதலாய் சிந்தித்திருக்கும் விதத்திற்கு
பாராட்டுகள் குளிர்தழல்..

நனைந்தேன் சாரலில்..
தொடரட்டும் தூறல்கள்..

தீபா
28-12-2008, 05:11 AM
அமர்க்களம்......

தூரல் - தூறல்?
வின்வெளி - விண்வெளி..

முடிவைக் கொன்று எல்லை செய்த என்று ஆரம்பித்த வரிகளே பிரமாதம்...

பெண்ணை இப்படியெல்லாமா பாடுவது.... பாட்டுக்கு ஏற்றபடி பாடம் நடத்தப்படுகிறதா உலகில்? ம்ஹூம்..

மேகமும் பெண்தான்..
அதன் மென்மையில்

மேகமும் பெண்ணின் மனம்தான்
அது கலைந்து போகையில்...

ஹிஹி.... இது சும்மா..

kulirthazhal
03-01-2009, 04:22 PM
அமர்க்களம்......

தூரல் - தூறல்?
வின்வெளி - விண்வெளி..

முடிவைக் கொன்று எல்லை செய்த என்று ஆரம்பித்த வரிகளே பிரமாதம்...

பெண்ணை இப்படியெல்லாமா பாடுவது.... பாட்டுக்கு ஏற்றபடி பாடம் நடத்தப்படுகிறதா உலகில்? ம்ஹூம்..

மேகமும் பெண்தான்..
அதன் மென்மையில்

மேகமும் பெண்ணின் மனம்தான்
அது கலைந்து போகையில்...

ஹிஹி.... இது சும்மா..

சில எழுத்துப்பிழைகள் வந்ததற்கு வருத்தப்படுகிறேன்.
விமர்சனத்திற்கு நன்றி! திருத்திக்கொள்கிறேன்.