PDA

View Full Version : வாழ்க்கை வாழ்வதற்கே (சிறுகதை)

ரங்கராஜன்
25-12-2008, 12:40 PM
வாழ்க்கை வாழ்வதற்கே

பெசன் நகர் கடற்கரை
மாலை 5.35
மிதமான வெளிச்சம்
வியாழன்
கூட்டம் இல்லை.

கண்ணன் கடலை வெறித்த படி பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் மனதில் அவனுடைய 22 வருட கால வாழ்க்கையும் ஓடிக்கொண்டு இருந்தது.

கிழிந்த பனியன், கிழியப் போகும் காலுறை, பரட்டை முடி. முன் பாக்கெட்டில் ஒரு பாட்டில். இன்னும் கொஞ்சம் இருள் வரட்டும் என்று காத்துக் கொண்டு இருந்தான். அந்த பெரிய கடற்கரையில் மொத்தமே 15 பேர் தான் இருப்பார்கள். உப்பு காற்றாக இருந்தாலும், மீன் வாடை காற்றாக இருந்தாலும், அந்த காற்றில் இருந்த குளிர்ச்சி அனைத்தையும் மறக்க செய்தது. இருள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்தில் கலந்தது. கண்ணன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த பாட்டிலை எடுத்தான், மூடியை கழற்றினான். வாயில் ஊத்தும் சமயம், பின்னாடி இருந்து ஒரு குரல்

"தம்பி தீப்பெட்டி இருக்கா" என்றது.

கண்ணன் அதிர்ந்தவாரே திரும்பினான். நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் வாயில் சிகரெட்டுடன் நின்றுக் கொண்டு இருந்தார். அந்த இருட்டிலும் வெள்ளையாக தெரிந்தார். நெற்றியில் திருசூரனம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து வந்த வாசனை, அந்த கவுச்சிக் கடலையே மல்லிப்பூ தோட்டமாக மாற்றியது.

"இ....இல்...இல்லாங்க"

"உன்கிட்டயும் இல்லையா, சுத்தம். சரி இங்க பக்கத்துல எதாவது கடை இருக்கா" என்றார் அவர்.

"தெரியாதுங்க, வேற யார்கிட்டனா கேளுங்க"

"உனக்கு கண் தெரியாத தம்பி, சுத்திப்பார் நம்ம இரண்டு பேரை தவிர யாரும் இந்த பக்கம் இல்லை. அதோ பார் ஒரு கிலோ மீட்டர் தள்ளி கொஞ்சம் பேர் நிக்குறாங்க, சரி எனக்கு ஒரு உதவி பண்ணு தம்பி
அதோ தெரியுது பார் அந்த கடையில போய் ஒரு தீப்பெட்டி வாங்கினு வரீயா. எனக்கு கடலுக்கு வந்த தம்மடிக்காமல் இருக்க முடியாது. ப்ளீஸ் டா"

கண்ணன் அமைதியாக நின்றுக் கொண்டு இருந்தான். அவர் அவனை பார்த்தபடி

"என்னடா தம்பி போமாட்டியா, இந்தா பத்து ரூபாய் போய்டுவா". அவன் அப்பவும் சும்மா நின்றுக் கொண்டு இருந்தான்.

"சரி இந்தா இருப...முப்பது ரூபா போய்டுவா" என்றார். கண்ணன் எதோ யோசித்தவனாக காசை வாங்கிக் கொண்டு, ஓடிப்போய் தீப்பெட்டியை வாங்கிக் கொண்டு வந்தான். அதை அவன் தரும் முன் அவனிடம்
இருந்து பிடிங்கி, சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து அந்த புகையை குடல் வரை இழுத்து அனுபவித்து வெளியே விட்டார். கண்ணன் அவன் வந்த வேலையை மறந்து அவரின் செயல்களை பார்த்துக் கொண்டு நின்றான்.

"என்னடா தம்பி அப்படி பார்க்குற, நான் எப்பவும் கடலுக்கு வந்தால் தம் அடிப்பேன். இன்னிக்கு எதோ டென்சன்ல தீப்பெட்டி வாங்க மறந்துட்டேன், நல்லவேளை நீ தான் கடவுள் மாதிரி வந்த"

முதல் முறையாக கண்ணன் சிரித்தான், அவனை இதுவரை யாரும் புகழ்ந்தது இல்லை, உண்மையில் யாரும் அவனுக்கு இல்லை

"சார் என்ன சார் இது, சாதாரண தீப்பெட்டி வாங்கி கொடுத்ததுக்கு என்னை கடவுள் ஆக்கிட்டீங்க"

பெரியவர் சத்தமாக சிரித்தார் "அப்படி இல்லடா தம்பி, தேவையான இடத்துல உதவி செய்தவர்கள் எல்லாரும் கடவுள் தான், அது தீப்பெட்டி வாங்கி தந்தாலும் சரி, தீயில் இருந்து காப்பாற்றினாலும் சரி" என்று புகையை இழுத்து விட்டார்.

கண்ணனுக்கு சந்தோஷம் அதிகமானது. நன்றாக இருட்டி இருந்தது, சோலார் வெளிச்சத்தில் பூச்சிகள் சந்தோஷமாக வட்டமிட்டது. அவனுடைய பாக்கெட்டில் இருந்து வந்த பாட்டில் சத்தத்தை கேட்டுவிட்டு

"என்ன தம்பி தண்ணி அடிக்க வந்தீயா" என்றார் அவன் தோளை தொட்டு. அவன் பதில் சொல்லாமல் நின்றுக் கொண்டு இருந்தான், கொஞ்ச நேரம் பொறுத்து

"இல்ல சார், நீங்க நினைக்கிற மாதிரி இது சாராயம் இல்ல சார், விஷம்..... பூச்சி மருந்து" என்றான்.

அவர் எந்த வித சலனமும் காட்டாமல் "என்னப்பா தோட்டத்துக்கு வாங்கினு போறீயா" என்றார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன் கண்களில் கண்ணீருடன்

"இல்ல சார் நான் குடிக்க போறேன், சாவப்போறேன்" என்றான்.

"ஓ.................................(நீண்ட இடைவேளைக்கு பிறகு) ஏன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" என்றார்.

"...................... நான் சின்ன வயதில் இருந்து அனாதை இல்லத்தில் வளர்ந்தேன். இரண்டு வருஷம் முன்னாடி எனக்கு வயசு ஆயிடுச்சினு வெளியே அனுப்பிட்டாங்க. என் கையில் காசு இல்ல சார், என்னால இந்த உலகத்துல வாழ முடியில"

"ஆமாப்பா ரொம்ப கஷ்டம் தான், நீ இந்த முடிவ முன்னாடியே எடுத்து இருக்கனும்பா. இவ்வளவு நாள் வேஸ்டு பண்ணிட்டியே" என்றார் பெரியவர். கண்ணன் இதை எதிர்பார்க்கவில்லை. பெரியவர் தொடர்ந்தார்.

"சரி தம்பி நான் கிளம்புறேன், ஆ அப்புறம் சொல்ல மறந்துட்டேன், அந்த பூச்சி மருந்து கான்சண்ட்ரேட்டடா, எங்க வாங்கின"

".......................நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரியலை,............... இதை நான் வாங்கல சார், கடையில் இருந்து திருடினேன்"

"ஓ அப்படியா, ஏன் கேக்குறனா. என் நண்பன் ஒருத்தன் சின்ன வயசுல இப்படி தான் பூச்சு மருந்தை குடித்து விட்டான். ஆனால் சாகல கண் பார்வை போயிடுச்சி, குடல் வெந்து போச்சு, பாவம் தண்ணி கூட குடிக்க
முடியாம இரண்டு வருஷம் நரக வேதனை பட்டு செத்தான். அதனால தான் கேட்டேன் தம்பி, சரி நான் வரேன்"

"அய்யய்யோ அப்படியா..................................... இப்ப என்ன சார் பண்றது, ஆ நீங்க கொடுத்த காசுக்கு எதாவது விஷம் வாங்கி சாப்பிடுவேன், அதற்க்காக தான் உங்ககிட்ட இருந்து நான் காசு வாங்கினேன்." என்றான் சோகமாக. பெரியவர் அவனின் தோளில் கையை போட்டபடி

"தம்பி நீ இந்த உலகத்தில் பிறந்தது இந்த கடல்கரையில் அனாதையாக சாவதற்க்கு இல்லை. நீ பிறக்கும் பொழுது அனாதையாக இருந்து இருக்கலாம். ஆனால் நீ சாகும் பொழுது அனாதையாக சாவக்கூடாது. அதைவிட ஒரு மனிதனுக்கு அவமானம் ஏதும் இல்லை. உன்னுடைய வாழ்க்கையில் வரும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நீ தான் காரணம். ஒட்டப்பந்தையத்தில் ஒருத்தன் ஒட ஆரம்பிக்கும் பொழுதே அவன் ஜெயிப்பான இல்லையான்னு அவனுக்கு தெரியும். அதுபோல இந்த இரண்டு வருடத்தில நீ என்ன நிஜமா உழைச்சனு உனக்கு நல்ல தெரியும் தம்பி. ஒரு பத்து வருஷம் கழித்து நீ கண்டிப்பா உன் மனைவி, குழந்தைகள் கூட இந்த கடற்கரைக்கு வந்து இப்போ எடுத்த முடிவுக்காக சிரிப்ப பார். நான் வரேன் தம்பி" என்று நடந்தார்.

கண்ணனுக்கு கண்ணீர் மல்க சிரிப்பு வந்தது, அவனுடைய சின்ன பையன் வந்து கண்ணனின் காலை பிடித்து இழுத்து

"டாடி வாங்க டாடி தண்ணியில இறங்கலாம், வாங்க டாடி"

"வேண்டாம் சுப்பு செல்லம் மம்மி திட்டுவாங்க டா" என்று குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவியுடன் கண்ணன் தன்னுடைய காரை நோக்கி நடந்தான்..............................................

கண்ணனிடம் பேசி விட்டு பெரியவர் வேகமாக நடந்தார், கண்ணன் கொஞ்ச நேரம் அவர் போவதையே பார்த்தபடி நின்றான், பின் உடைந்த குரலில்

"சார் ரொம்ப தாங்கஸ் சார். என் பேரு கண்ணன் உங்க பேரு என்ன சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று கத்தினான் தூரத்தில் போகும் பெரியவரை பார்த்து.

"என் பேருருருருருருரு...... சுப்பிரமணிணிணிணிணிணிணிணி................" என்று நடந்து அப்படியே இருட்டில் மறைந்தார் கண்ணனின் வாழ்க்கை விளக்கை ஏற்றி விட்டு.

நிரன்
25-12-2008, 01:42 PM
சூப்பரா முடிச்சீங்க தக்ஸ் கதையை :icon_b:

நன்றாக இருக்கிறது கதை வாழ்கையில் சோர்ந்து போவேருக்கும்
வாழ்க்கையை முடிக்க நினைப்பவருக்கும் இது ஒரு ஊக்க மருந்து
:icon_b:

வாழ்த்துக்கள் சிறுகதை சிறுகதையா தந்து கலக்கிறீங்க:icon_b:

சசிதரன்
25-12-2008, 02:01 PM
நல்ல சிறுகதை மூர்த்தி அவர்களே... தன்னம்பிக்கை மனிதனுக்கு மிகவும் அவசியமானது... சில நேரங்களில் ஆயுதமாகவும்... பல நேரங்களில் கேடயமாகவும்... தன்னம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்க்கை போரில் வெற்றி பெற முடியாது... நல்ல கதைக்கு பாராட்டுக்கள் நண்பரே...:)

மதி
25-12-2008, 04:02 PM
தக்ஸ்....
சில நேரங்களில் அவசரத்தில் நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளிலிருந்து மீட்க சுப்ரமணி மாதிரி பல கேரக்டர்கள் இன்னுமிருக்கின்றனர்.
தன்னம்பிக்கை வளர்க்கும் கதைக்கு வாழ்த்துகள்.

ஒரு சின்ன குறை..
கதையோட்டத்தில் கண்ணன் குழந்தையுடன் நிற்பதாக இருக்கிறது. என் கணிப்பு சரியாயின் இது பத்து வருடம் கழித்து அவன் நினைத்துப் பார்ப்பதேயாகும். இறுதிவரி மீண்டும் பழைய காலத்துக்குப் போகிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் வேறுபடுத்திக்காட்ட நடுவில் ஒரு கோடு போட்டீர்களானால் சற்று புரிய வசதியாயிருக்கும். இல்லையேல் கொஞ்சம் குழப்பமாயிருக்கும்.

ரங்கராஜன்
25-12-2008, 04:24 PM

நன்றி மதி
நீங்கள் கூறுவது போல இது 10 வருடம் கழித்து நினைத்து பார்க்கும் கதை தான் என்றாலும், அவன் காரை நோக்கி நடந்தான் என்பதோடு நிகழ்கால கதை முடிகிறது. பெரியவர் என்றதும் அது கடந்தகாலம் என்று வாசகர்கள் புரிந்துக் கொள்வார்கள் என்று எண்ணினேன் மதி. கதையை ரொம்ப எளிமை படுத்த வேண்டாம் என்று பார்த்தேன். நன்றி

arun
25-12-2008, 04:37 PM
உண்மையில் நல்ல சிறுகதை தக்ஸ்

வாழ்க்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே என்ற தன்னம்பிக்கையின் பரிசு தான் கண்ணனுக்கு கிடைத்து இருக்கிறது

சூப்பர் சிறுகதை பாராட்டுக்கள்

ரங்கராஜன்
25-12-2008, 04:39 PM
உண்மையில் நல்ல சிறுகதை தக்ஸ்

வாழ்க்கையை வாழ்ந்து தான் பார்ப்போமே என்ற தன்னம்பிக்கையின் பரிசு தான் கண்ணனுக்கு கிடைத்து இருக்கிறது

சூப்பர் சிறுகதை பாராட்டுக்கள்

மிக்க நன்றி அருண், தொடர்ந்து உங்கள் விமர்சனங்களால் என் எழுத்தை சீர்படுத்துங்கள், நன்றி

ரங்கராஜன்
26-12-2008, 07:28 AM
சூப்பரா முடிச்சீங்க தக்ஸ் கதையை :icon_b:

நன்றாக இருக்கிறது கதை வாழ்கையில் சோர்ந்து போவேருக்கும்
வாழ்க்கையை முடிக்க நினைப்பவருக்கும் இது ஒரு ஊக்க மருந்து
:icon_b:

வாழ்த்துக்கள் சிறுகதை சிறுகதையா தந்து கலக்கிறீங்க:icon_b:

நன்றி நிரஞ்சன்
அப்ப என் எல்லா கதையையும் படிக்கறீங்க, ரொம்ப சந்தோஷம். நிரஞ்சன் தொடருங்கள்

Narathar
26-12-2008, 07:56 AM
மிக அருமையான கதை......
வாசிக்க ஆரம்பித்ததுமே முடிவை தெரிந்து கொண்டேன்
ஆனால் அதை நீங்கள் சொன்ன விதம் நன்றாக இருந்தது!

Keelai Naadaan
26-12-2008, 03:51 PM
தக்ஸ்....
சில நேரங்களில் அவசரத்தில் நாம் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகளிலிருந்து மீட்க சுப்ரமணி மாதிரி பல கேரக்டர்கள் இன்னுமிருக்கின்றனர்.
தன்னம்பிக்கை வளர்க்கும் கதைக்கு வாழ்த்துகள்.

ஒரு சின்ன குறை..
கதையோட்டத்தில் கண்ணன் குழந்தையுடன் நிற்பதாக இருக்கிறது. என் கணிப்பு சரியாயின் இது பத்து வருடம் கழித்து அவன் நினைத்துப் பார்ப்பதேயாகும். இறுதிவரி மீண்டும் பழைய காலத்துக்குப் போகிறது. கடந்த காலமும் நிகழ்காலமும் வேறுபடுத்திக்காட்ட நடுவில் ஒரு கோடு போட்டீர்களானால் சற்று புரிய வசதியாயிருக்கும். இல்லையேல் கொஞ்சம் குழப்பமாயிருக்கும்.
இதுவே என்னுடைய அபிப்ராயமும்.

நல்ல கருத்தை சொல்லும் கதை:icon_b::icon_b:

தீபா
26-12-2008, 04:51 PM
வாழ்த்துக்கள் திரு.மூர்த்தி (அ) டக்ஸ் (Ducks?)

சிறுகதையின் உத்திகளை நன்கு தெரிந்து தெளிந்து கொண்டீர்கள். அதன் விளைவு, கருக்கள் வெட்டுகின்றன கதைகள் கொட்டுகின்றன...

வாழ்க்கை வாழ்வதற்கே... உங்கள் தலைப்பே சொல்லிவிடுகிறது முழுகதையின் வீரியத்தை. இடம், நேரம், காலநிலை என்று அக்காட்சி விரிப்பில் நாம் அமர்ந்து கொள்ளும் அளவுக்கு கதையை விரிக்கிறீர்கள்.

ஆங்காங்கே, வழக்குத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் தகிடுதத்தம்.. ஒன்றையொன்று முட்டிச் சாகின்றன.. கொஞ்சம் களையெடுத்தால் எதார்த்தமான பாங்கு கதைக்குள் நுழையும். ஆனால்.... இந்தமாதிரி புளித்த கருவுக்கு பிரயத்தனம் படாதீர்கள்.. இது என் அறிவுரை.

அன்புடன்
தென்றல்.

மதுரை மைந்தன்
26-12-2008, 06:53 PM
உங்கள் கதை எனக்கு பலே பாண்டியா என்ற சிவாஜி நடித்த படத்தில் வரும்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்

என்ற பாட்டை நினைவு படுத்துகிறது. நல்ல கதை. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
27-12-2008, 04:01 AM
கருத்தை சொல்வதிலும் பல உத்திகள் உள்ளன...தக்ஸ் கையாண்ட உத்தி பலே.
அனாதையாய் வாழ்ந்தது அவன் குற்றமல்ல...அனாதையாய் சாக நினைத்ததுதான் அவன் குற்றம்.

வருவது வரட்டும் வாழ்ந்துதான் பார்ப்போமே என நினைப்பவர்களுக்கு..வாழ்க்கை ஒரு போராட்டமல்ல.

வாழ்த்துகள் தக்ஸ்.

Mano.G.
27-12-2008, 05:49 AM
நான் புது பேனா வாங்கினால் எழுதி பார்ப்பதற்கு
எழுதுவது இரண்டு எழுத்துக்கள்
ஒன்று எனது பெயர்
இரண்டாவது "வாழ்க்கை வாழ்வதற்கே"

நான் எழுதும் அந்த சொல்லில் கதை எழுதியுள்ள
தம்பி தாக்ஸுக்கு வாழ்த்துக்கள், பெரியவர்கள் சொல்லியுள்ளது போல்
சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என எழுத எழுத
உங்கள் கதை செம்மைப்படும்.

மனோ.ஜி

ரங்கராஜன்
27-12-2008, 02:15 PM
வாழ்த்துக்கள் திரு.மூர்த்தி (அ) டக்ஸ் (Ducks?)

சிறுகதையின் உத்திகளை நன்கு தெரிந்து தெளிந்து கொண்டீர்கள். அதன் விளைவு, கருக்கள் வெட்டுகின்றன கதைகள் கொட்டுகின்றன...

வாழ்க்கை வாழ்வதற்கே... உங்கள் தலைப்பே சொல்லிவிடுகிறது முழுகதையின் வீரியத்தை. இடம், நேரம், காலநிலை என்று அக்காட்சி விரிப்பில் நாம் அமர்ந்து கொள்ளும் அளவுக்கு கதையை விரிக்கிறீர்கள்.

ஆங்காங்கே, வழக்குத் தமிழுக்கும் எழுத்துத் தமிழுக்கும் தகிடுதத்தம்.. ஒன்றையொன்று முட்டிச் சாகின்றன.. கொஞ்சம் களையெடுத்தால் எதார்த்தமான பாங்கு கதைக்குள் நுழையும். ஆனால்.... இந்தமாதிரி புளித்த கருவுக்கு பிரயத்தனம் படாதீர்கள்.. இது என் அறிவுரை.

அன்புடன்
தென்றல்.

இந்த வரிகளைச் சொல்ல, ஆரம்பத்தில் நிறைய வார்த்தைகளை வீண் செய்து இருக்கிறீர்கள், இதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம். வார்த்தையில் உண்மையும் இருக்க தான் செய்கிறது. நன்றி.

தீபா
27-12-2008, 02:31 PM
இந்த வரிகளைச் சொல்ல, ஆரம்பத்தில் நிறைய வார்த்தைகளை வீண் செய்து இருக்கிறீர்கள், இதை நேரடியாகவே சொல்லி இருக்கலாம். வார்த்தையில் உண்மையும் இருக்க தான் செய்கிறது. நன்றி.

நெற்றிப் பொட்டில்
சற்று அழுத்தி அடிப்பது
முற்றிலும் தவறென்று நினைப்பவள்..

நேரடியாகச் சொல்லுவது, முகத்தில் அறைந்ததைப் போன்று இருப்பதால்
மறைமுகமாகச் சொல்ல நேரிட்டது திரு.மூர்த்தி.

என் வார்த்தைகள் வீண் விரயம் செய்ய முனைவதில்லை. அன்றி முற்பட்டால் அது எழுத்துக்களில்லை.

உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள்..

அன்புடன்
தென்றல் (எ) ஸ்டெபானி

ரங்கராஜன்
27-12-2008, 03:15 PM
பெரியவர்கள் சொல்லியுள்ளது போல்
சித்திரமும் கைபழக்கம், செந்தமிழும் நா பழக்கம் என எழுத எழுத
உங்கள் கதை செம்மைப்படும்.
மனோ.ஜி

நன்றி மனோ.ஜீ அண்ணா
முதல் முறையாக என்னுடைய கதைக்கு விமர்சனம் செய்த அண்ணாவுக்கு என் நன்றிகள். அடுத்து கண்டிப்பாக செம்மையான ஒரு கருவை வைத்து, செம்மையான ஒரு கதையை எழுதி உங்களிடம் இருந்து ஒரு செம்மையான விமர்சனத்தை பெறுவேன் என்று உறுதி கூறுகிறேன், நன்றி.

MURALINITHISH
29-12-2008, 08:35 AM
வாழ்க்கை வாழ்வதற்கே எத்தனையோ பேர் துன்பங்களில் விழ்ந்து கிடக்கா உனக்கேன் தற்கொலை எண்ணம் என்று சரியான நேரத்தில் சரியான தருணத்தில் சொல்லிய சுப்பிரமணிக்கள் இருப்பதால்தான் நாடு பல வெற்றியாளர்கள் வைத்திருக்கிறது

ரங்கராஜன்
24-01-2009, 06:53 PM
தற்கொலை என்பது எவ்வளவு கோழை தனமான செயல் என்பதை உங்கள் அனைவரின் பின்னூட்டத்தில் இருந்து தெரிகிறது. அனைவருக்கும் நன்றி